இரா. கலையரசியின் கவிதைகள்
உடைந்த பாத்திரம்.
************************
மழை மத்தளம்
வாசித்தபடி, இடி
மின்னலை அழைத்து வர
பணித்து இருந்தது.
அரிசி பொரியாய்
ஒட்டிக் கொண்டிருந்த
மணமக்கள் “ஃப்ளக்ஸ்”
அந்த வீட்டில்
தன் உயிரைத் துறக்கக்
காத்திருக்கிறது.
குட்டி போட்ட பூனை
தன் குட்டிகளை
அழுத்திப் பிடிக்க,
மண்தரையில் சகதியும்
சேறும் மெல்ல
எட்டிப் பார்த்தன.
எப்போதாவது கிடைக்கும்
கஞ்சியை அமிர்தமாய்
பருக வைத்திருந்த
வாய் இளித்த வட்டி
மழையை அடைகாக்குமென
எடுத்துப் பார்க்க,
வறட்சியில் வறண்ட நிலமாய்
வரிவரியாக உடைந்து
இறந்து போயிருந்தது.
பூனை குடும்பமும்
அந்த ஒற்றை மனிதனும்
உடையப் போகும்
உயிருக்காகக் காத்திருந்தனர்.

பெருத்த வயிறு
*******************
இளவட்டக் கல்லைப் பார்த்து
இளித்தபடிச் செல்கிறது
இறங்க வழி தெரியாமல்.

தட்டையாய் விரிந்து இருக்கும்
வாழை இலைகளில்
முட்டிக் கொண்டு வரும்
பெருத்த வயிற்றினைப் பார்த்துக்
கிண்டலடிக்கின்றன இலைகள்.

சட்டையுடன் தினமும்
சண்டையிடும் உன்னை
தினமும் சாந்தப்படுத்தி
பொத்தானுக்குள் அழுத்தி
வெளியே எட்டிப் பாராமல்
அடைத்து வைக்கிறேன்.

கட்டை விரலைக் காணத்
துடிக்கும் கண்களை
அதட்டியபடிக் கடக்க
முயன்ற நாட்களின் நீட்சி
தினசரிக் காட்சி.

முந்தி அடித்து நகரும்
உன்னைத் தடுக்க முடியாத
காவலனாய் செய்வதறியாது
முழிக்கும் மனதைக்
கட்டுபடுத்த முடியவில்லை.

பேருந்துக் கம்பிகளில் அழுந்தி
இரட்டை பிள்ளைகளாக
நீ விரியும் அழகைப்
பார்த்து இருப்பாரா எவரும்.?

ஒவ்வொரு முறை குனியும் போதும்
பல கிலோக்களை சரித்து
மீண்டும் அதே இடத்திவ்
நிலைநிறுத்தும் பணியை
ஒரு போதும் தவறவிட்டதில்லை
இடுப்பு.

அகன்ற தெருக்களில் நடக்க
வழி விடும் சாலைகள்
சிறிய இருக்கைகளில்
சிறைப்படும் தொந்தியுன்
வலிகளை எவரும்
கண்டு கொள்தில்லை.

மூன்று இட்டலிகளைக் கடந்து
நான்காவது இட்டலியைப் பார்க்க….
காளியின் கண்களாய்ச்
சிவக்கும் மனைவியின்
பார்வைக்கு மதிப்பளித்து
நிறுத்திக் கொள்கிறேன்.

பெருத்த வயிற்றில் ஏறி
குதித்து ஆடும் குழந்தைகளுக்காக
உன்னை அனுமதிக்கிறேன்…
இருந்து விட்டு போ….
மழலைகள் மனம் மகிழ

– இரா.கலையரசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.