கவிதைகளில்
சேவலின் கொண்டைபோல்
சிவப்பு.
தங்கத் தகடு நாக்கானது போல்
தமிழன்பன் உச்சரிப்பு…
கவிதை வாசிப்பு
செவிக்குச் செவிப்பறை
மூளைக்கு முத்தம்.
கைத்தட்டியவர்களுக்கெல்லாம்
கட்டாயம் ஞாபகம் வரும்….
ஒரு காலத்தில்
கவியரங்கக் காட்டில்
ஒரு சிங்கம்
ஒரு புலி
ஒரு யானை போல
ஒரு அப்துல் ரகுமான்
ஒரு தமிழன்பன்
ஒரு மேத்தா….
நீ ‘ஊர் சுற்றி வந்த ஓசை’
இன்னும்
காது மடல்களில்
கவிதையின் ரீங்காரம்.
இன்று
“திரும்பி வந்த தேர்வலம்”
இன்னும்
வடக்கயிற்றில் வாலிபம்!
‘தோணி வருகிறது’
இன்றும் தொண்டையில்
“அந்த நந்தனை எரித்த
நெருப்பின் மிச்சம்”
பாரதி
பாரதி தாசன்
பாப்லோ நெரூடா
மூவருக்கும்
தமிழன்பன் வீடுதான்
தபால் அலுவலகம்!
“செய்திகள் வாசிப்பது“ என்று
யார் சொன்னாலும்
“கவிதைகள் வாசிப்பது” என்றுதான்
காதுகளில் விழுகிறது…
இந்தத் தொல்லையே
நீ
தொலைக்காட்சியில்
தோன்றிய பிறகுதான்!
“உன் தொகுப்புகளில்
உன் எல்லாக் கவிதைகளும்
அடங்கிவிடாது!
எஞ்சி, நான்.”
உங்கள் மாணவன்
ய.மணிகண்டன் எழுதிய கவிதை
எங்களுக்கும் பொருந்துகிறது!