கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 10 – நா.வே.அருள்எனது வசியம்

*****************

உன்னைப் பற்றித்தான்
முதல் கவிதை எழுதுவேன் என்று
நினைத்துக்கூடப் பார்த்ததில்லை

நீயொரு தொலைதூர தேவதை
அருகில் கூட வரமுடியாத
அந்தகாரத்தில் நான்
இருந்தும் உன்னைக் காதலிக்கிறேன்

ஒரு விவசாயி
மண்ணைக் காதலிப்பதுபோல
நான் உன்னைக் காதலிக்கிறேன்.

என் காதலைச் சொல்ல முடியாததற்கு
எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்
ஆனால்
உன்னைக் காதலிக்காமல்
இருக்கவே முடியாது என்னால்.

முதலில்
நீ அவ்வளவு அழகாய் இருக்கிறாய்
வேறெவரொருவரின் அழகையும்
ஒரு மின்மினிப் பூச்சியாக்கிவிடும்
நட்சத்திரம் நீ!

அடுத்து
நீ ஒரு கவிதை எழுதும் கவிதை
எப்படித் திருப்பினாலும்
உன் திசையில் ஈர்க்கிற
வடபுலம் நீ!

மூன்றாவதாக
உனது வார்த்தைகளின் வசியம்
அதிகாலையில் எனது அன்றாடப் பயணத்திற்கான
சமிக்ஞை நீ!

உன் வார்த்தைகளுக்குள்
ஒரு முயல் குட்டியைப்போல
ஒளிந்துகொள்ள விரும்புகிறேன்
எந்தவொரு உலோகத்தாலான இதயத்தையும்
ஈர்த்துவிடுகிற காந்தம் நீ!

ஒரு விவசாயியின் கலப்பையைப் போல
கரம்பாய்க் கிடக்கும்
எந்தவொரு நிலத்தையும்
உழுதுவிடுகிற
கலப்பை நீ!

ஒரு விவசாயியின் தலைப்பாகையைவிட
உயர்ந்த ஆடை
உலகத்தில் வேறெது இருக்க முடியும் கண்ணே
காதலியின் முந்தானையைப்போல
அவ்வளவு பரிசுத்தமானது!

வா போவோம்
உன் உள்ளங்கையில் பொதிந்து வைத்திருக்கும்
உனது கவிதை
நடுங்கும் குளிரில் போராடும் அவர்களுக்கு
ஒரு போர்வையாகலாம்.

உன் கண்ணிமைகளில் வழியும்
கனவுகள்
அவர்களின் ஒருவேளை உணவாகலாம்
நம் இருவரின் வெது வெதுப்பையும்
ஓர் உயர்தர விருந்தினைப்போல பரிமாறுவோம்
நடுங்கும் குளிர் அவர்கள்
போராடுவதற்கான வெப்ப மண்டலமாகலாம்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்