கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 13 – நா.வே.அருள்கல்லறைக்காரன்
**************************

ஒரு கல்லறைக்காரனிடமிருந்து தப்பிப்பதுதான்
அவ்வளவு கடினம்.

அவன் உயிர்களுக்கு
விலை குறிப்பவனாக இருக்கிறான்.

அவன் வார்த்தைகளில்
பிசின் தடவுகிறான்.

விதைக்காமலே அறுவடை செய்கிறவனை
விவசாயியாக அறிவிக்கிறான்.

ஒரு புல்டோசரைவிட மோசமான அவனது நாக்கு
எத்தனை உயிர்களைப் புரட்டிப் போட்டுவிடுகிறது!

விவசாயிகளுக்கோ
நம்பிக்கை துரோகம் என்பது
ஒரு புதியப் பதச் சேர்க்கை.

அவர்கள் கைகளுக்கு விதைப்பதும்
விதைத்தபின் வளர்ப்பதும்
வளர்த்தபின் அறுவடை செய்வதும்தான் வழக்கம்.

கல்லறைக்காரனோ
சவப்பெட்டி செய்வதில் சமர்த்தனாக இருக்கிறான்.

சவப்பெட்டிக்கு
சடல உண்டியல் என்று
பெயர் சூட்டுவிழா நடத்துகிறான்.

இதுவரையிலும் இருநூறு முதல் முந்நூறு சடலங்களை
சத்தம் தராத நாணயத்தைப்போல
ஒன்றன்பின் ஒன்றாக
மனதின் குரலாகப் போட்டிருக்கிறான்.

கடவுள்களைப்
பலிபீடக் காவல்காரர்களாக்கிவிடுகிறான்.

விவசாயிகளிடம்
வேறெதுவுமேயில்லை
அவர்களிடம் இருப்பதெல்லாம் விதைகள்
வெறும் விதைகள்
போர்க்களங்களைக் கூட வயல்களாக மாற்றும்
ரசவாதம் தெரிந்த விதைகள்!!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)