கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 5 – நா.வே.அருள்



விவசாயமும் அரசியல் சாயமும்

****************************************

அடுப்பங்கரையில்
பெண்களின் கசங்கிய கண்ணீர்த் துளிகளில்தான்
தட்டுப்படுகிறது
சுதந்திரத்தின் முகவரி.

வாணலி எண்ணெயின்
கொதிப்பிலிருந்துதான்
சுடச் சுடக் கிடைக்கும் சுதந்திரம்.

விடியலின் சூரியனை
அரச கஜானாவில்
அடைத்து வைக்க முடியாது.
அது அஞ்சறைப் பெட்டிகளில்
தத்தித் தரிகிட தாளிப்பாகிறது.

பெண்கள்
சுதந்திரத்தைப் பிரசவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

கோலத்தில் கூட குறிப்புகள் எழுதுகிறார்கள்.

பெண்கள்
தெருவாசல்களை
ஆயுதக் கிடங்குகளாக மாற்றிவிடுகிறார்கள்.

துப்பாக்கி ரவைகளை விட
ஆபத்தானவை
கோல மாவின் தூள்கள்!
அவை
பெண்களின் ஓவிய உசுப்பல்கள்.

ஆண்களை விட
பெண்களின் ஆயுதங்கள் மென்மையானவை
ஆனால்
தாக்குவதில் வலிமை வாய்ந்தவையும்
வழி பிசகாதவையுமாகும்!

மருத்துவமனைகள்
அறுவை சிகிச்சையை அனுமதிக்காத போது
சொந்தமாகப் பிரசவம் பார்க்கச்
சூளுரைத்துக் கிளம்பிவிட்டார்கள் பெண்களின்
கணவர்களும்.

விவசாயக் கணவன்மார்கள்
விரைவு ரயில்களைப்போல
அவ்வளவு வேகமாகப் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

வயிற்றோடு சம்பந்தப்பட்டிருப்பதால்
அடுப்பங்கரையில் மையங் கொண்டிருக்கிறது
புரட்சியின் புயல்

ஒரு தாயின் அடிவயிற்றில்தான்
புரட்சியின் சிசு அசைகிறது

ஒரு விவசாயிதான்
புரட்சியின் மையக் கதாபாத்திரம்
உணவு மேசைதான்
ஒரு நாட்டின் ஒப்பந்த மேசையைத்
தீர்மானிக்கிறது!!

கவிதை – நா.வே.அருள்

ஓவியம் – கார்த்திகேயன்