கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 6 – நா.வே.அருள்



தேரா மன்னா

*****************

விறைத்துப்போன விவசாயிகளின் சடலங்களை
விரைவாக நல்லடக்கம் செய்தாயிற்று
இல்லையெனில்
அவை தீக்குச்சிகளைப்போல
கனல ஆரம்பித்திருக்கும்!

அந்தத் தீயை அவ்வளவு இலகுவாக
அணைத்துவிடவும் முடியாது.
அது மூலாதாரத்திலிருந்து மூண்டெழுகிற
ஆதித் தீ

போராட்டத்தில் மரித்துப் போனவர்களின் எலும்புகள்
மந்திரத் தன்மையாக மாறிவிடுகின்றன.
அவ்வெலும்பு மஜ்ஜைகளில்தாம்
அமைச்சக மௌனங்களுக்கு
வாய்க்கரிசி தயாரிக்கப்படுகின்றன.
அவை மேலும்
கொரோனாக்களின் குடியிருப்பைப் போல
மாறியிருக்கும் அரச பீடங்களில்
சூனிய பில்லைகளாகி விடுகின்றன.

மன்னனின் சோற்றுத் தட்டில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த முந்நூற்றுக்கும் அதிகமான
முகம் வீங்கிய பூசணிகளும்
சடலங்களாகத் துருத்திக் கொள்கின்றன.

போராட்டங்களின் தாழ்வாரங்களில் கிடத்தப்பட்ட
விவசாயி தியாகிகளை இறுதியாய்ச் சுமந்து செல்ல
தேசியக் கொடியின் அசோகச் சக்கரம்
மௌனமாய் உருள்கின்றன.

ஒப்பந்தத்தின் குச்சியில் சுற்றப்பட்ட
நெய்ப்பந்தங்களுடன்
பிணங்களைச் சுற்றிவர
பேரன்கள் தயாராகிவிட்டார்கள்.

ஒவ்வொரு நெய்ப்பந்தமும்
எரிமலையில் சுற்றப்பட்டத் தலைப்பாகைபோல
தீப்பந்த ஜோதியில் மின்னுகின்றன.

ஒரு விதையைப்போல ஊன்றி வைக்கப்பட்ட
ஒவ்வொரு தியாகியின் உடலும்
கீறி வெளிவருகையில்
உங்கள் கிடங்குகளின் வயிறுகள் கிழிந்துவிடும்.

 

கவிதை – நா.வே.அருள்

ஓவியம் – கார்த்திகேயன்