கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 7 – நா.வே.அருள்“ஜன கண மன”

*******************

தேசிய கீதத்தின் பெயர் சூட்டப்பட்ட
அவர்களின் நாற்காலிகள்
உறக்கத்தில் கூட நின்றுகொண்டிருக்கின்றன.

பெருச்சாளிகளின் கர்ப்பப்பை
மரத்தால் இழைத்துத்தான்
செய்யப்பட்டிருந்தது!

தேச வரைபடத்தைக்
கொறித்துக் கொண்டேயிருப்பதுதான்
பெருச்சாளிகளின் பொழுதுபோக்கு.

சர்வ சுதந்திரமாய்க்
கோட்டைகளில் நடமாடும் பெருச்சாளிகளுக்குப்
பறக்கவும் தெரியும்!

உருகாத உலோகங்களாலான
தானியக் கிடங்குகளில்
வரிசை வரிசையாகக் கிடத்தப்பட்டிருந்தன
வயல்களின் கல்லறைகள்.

பெருநிறுவனங்களின் தேவைக்காகப்
பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும்
சவத்துணி சால்வைகள்

எதையெடுத்தாலும் பத்து ரூபாய் போல
திருவிழாவில் விற்கும் பிளாஸ்டிக் பொருள்களாய்
தெருவுக்குத் தெரு
மலிவு விலை சடலங்கள்.

விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்
நிலைய வித்வான்கள்
இன்னும்
வயலின்களைப் பட்டி பார்த்து
வண்ணம் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

சேமிப்புக் கிடங்குகளில்
தள்ளப்பட்ட
குளிரில் விறைத்துப் போன சடலங்களின் மீது
அரசாங்க முத்திரை குத்தியாயிற்று

இனி சுங்க வரி இல்லாமல் இறுதி ஊர்வலம் நடத்தலாம்

எலிகளையெல்லாம் தன் இசைக் கருவியால்
ஈர்த்து வந்த பைடு பைப்பர்
தனது இறுதி இசை நிகழ்ச்சிக்கு
ஆயத்தமாகிவிட்டார்.
அவர் தன் இசைக் கோர்வையை ஆரம்பிக்கும் முன்
ஒரு சுண்டெலி ஒரு கவிதை வாசித்ததன் மூலம்
தேசத் துரோகியாக மாறிப்போனது:-
“எவ்வளவுதான் விலையுயர்ந்ததாய் இருந்தாலும்
அது சவப்பெட்டிதான்
அதில் வாழமுடியாது
சாகத்தான் முடியும்.”

 

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்