கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 8 – நா.வே.அருள்



மறதிகளின் குப்பைத் தொட்டி

**************************************

தியாகிகளை இப்படியும் அழைக்கலாம்……
அநாதைகள்!

புன்னகைகளுக்கு மத்தியில்
யாரும் கண்ணீர்த் துளியைக் காண விரும்புவதில்லை

கொண்டாட்டங்களுக்கு நடுவில்
யாரும் துயரத்தை நினைத்துப் பார்ப்பதில்லை

மகிழ்ச்சியான தருணங்களின் போது
யாரும் துன்பத்தை யோசிப்பதேயில்லை

எல்லோரும்
புத்தாண்டைக் கொண்டாடுவதில்
மும்மரமாக இருக்கிறோம்
பழைய ஆண்டில் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்றோ
எவ்வளவு கண்ணீர் வடித்தோம் என்றோ
என்னென்ன வகையில் புலம்பினோம் என்றோ
நினைவில் வைத்துக் கொள்வதில்லை

புத்தாண்டை வரவேற்க
நள்ளிரவில்
சைலன்டர் பிடுங்கிய பைக்கில்
ஊர் சுற்றத் தொடங்குகிறோம்.

டெல்லியில்
ஒரு நாட்டின் விவசாயத்திற்காகப்
போரிடும் விவசாயிகளின் நினைவே
கொண்டாடும் மனநிலையைக் கொன்றுவிடுவதாய்
உள்ளுக்குள் குமைந்து போகிறோம்.

கொரோனா காலத்திலும்
நடுங்கும் குளிரிலும்
அவர்களின் போராட்டம்
நமது புத்தாண்டுக் கேக்கில் தென்படும்
கரப்பான் பூச்சியைப்போலத் தொந்தரவு செய்கிறது
அவ்வளவுதான்…அதற்குமேல் ஒன்றுமேயில்லை!

 

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்