குருஷேத்திரம்
*********************
நமது முனகல்கள் தொந்தரவுப் படுத்தக்கூடியவை
ஆயினும் செவிட்டுக் கரப்பான் பூச்சிகளின்
செவிகள் பழுதுபட்டுவிட்டன
கலப்பைச் சிலுவையில் அறையப்பட்டவர்கள்
கம்பீரமானவர்கள்
சவப் பெட்டிகளுடன் காத்திருப்பவர்கள்
பிணவறையின் காப்பாளர்கள்
விறைத்துப் போன கள்ள மௌனத்தின்
தொளதொளப்பு ஆடைகளில்
அதிகார போதை நெடியடிக்கிறது
நாயொன்றின் நள்ளிரவுக் கேவல்போலவோ
சுவர்க்கோழியின் மழைராத்திரி இரைச்சல் போலவோ
தூரத்து ஒலியாகத் தேய்ந்து போகலாம்.
விவசாயிகளுக்கான நமது முகநூல் முத்தம்
விதையைப் போன்றது
ஓரிரவிலேயே வனமாகலாம்!
போர்க்களத்தில்
தனிநபரின் யுத்த சங்கீதம்கூட
மரணத்தை முன்னறிவிக்கக் கூடியது
விவசாயிகளுக்கான நமது கவிதைகளின் சொற்கள்
தானியங்களாக மாறிவிடுகின்றன
விவசாயிகளுக்காக
உயர்த்தப்படும் ஒவ்வொரு எழுதுகோலும்
ஒரு போர்க் கொடி
விவசாயிகளுக்காக
எழுதப்படும் முகநூலின் ஒவ்வொரு பக்கமும்
ஒரு குருஷேத்திரம்!
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
Leave a Reply
View Comments