கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
இசை வாழ்க
*****************
ஒரு மன்னர் பிடில் வாசிப்பது
அவ்வளவு பிரம்மாண்டமான இசை அனுபவம்
அவரது விரல்களில் நகக்கண்கள்
இசையில் கொடி கட்டிப் பறக்க வேண்டும்.
அவர் தாடியை நீவி விடும்போதெல்லாம்
ஒரு ராகம் உதிர்ந்தாக வேண்டும்
ஒரு பிரத்தியேகமான பிடில் வடிவமைப்பாளனிடம்
செய்யப்பட்ட பிடில்தான்
மன்னரின் ஆலாபனையை வெளிப்படுத்தவல்லது.
மன்னர் கைகள் இரண்டையும் வீசி வீசிப் பாடுகையில்
மேடை முழுதும் மென்காந்தம் பரவி
கேட்கும் செவிகள்
உலோக திரவமாக உருக வேண்டும்.
கவனம்.
மன்னரின் கவனம் சிதறவே கூடாது
சிதறாத கவனத்தில்தான்
சிந்தனை திரளும்
மோனம் முறிந்தால்
இசை சிதறும்.
அந்நிய நாட்டினரின் ஒற்றர்களால்
அவரது ஆலாபனையைச் சிதைக்கும் முயற்சியை
முறியடித்தாக வேண்டும்.
வேண்டுமென்றே பிரஜைகள்
கோரிக்கை மனுக்களுடன்
ஆராய்ச்சி மணியை அடிக்க ஆரம்பிப்பார்கள்
மன்னரது இதயத்தை ஒரு கருங்கல் பாறையைப்போல
இறுக்கிக் கொள்ள வேண்டும்.
இருநூறு பேருக்கும் மேல் இறந்தவர்களின் சிதையில்
தேசமே பற்றி எரிந்து கொண்டிருந்தாலும்
புகழ் பெற்ற நீரோ மன்னனைப் போல
பிடில் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
–நா.வே.அருள்
Leave a Reply
View Comments