கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் முன்னுரை – நா.வே.அருள்உங்கள் வாசலில் உலகப் போர் நடந்து கொண்டிருக்கிறது. இனியும் நீங்கள் ஒதுங்கியிருக்க முடியாது. கண்ணை மூடிக் கொண்டால் வீட்டை ஜப்தி செய்ய வந்தவனை விரட்டியடிக்க முடியுமா? டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பரவியிருக்கும் இந்த விவசாயப் போராட்டம் விவசாயிகளுக்கான வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமல்ல. நம் அனைவருக்குமாக அவர்கள் நடத்துகிற ஜீவாதாரப் போர்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா இப்படியான வேலையைச் செய்தது. இன்று அதன் நிலவரம் என்ன? முன்னாள் ஐஐடியின் ஆய்வு மாணவரும் நாசா விஞ்ஞானியுமான பெடா பிரதா பெயின் என்ன சொல்கிறார்? அமெரிக்காவில் பத்தாயிரம் கிலோ மீட்டர் அளவுக்குப் பயணம் செய்து ஆய்வு செய்தவரின் அவதானிப்பு என்ன?

“இந்தியாவைப் போலவே அமெரிக்க வேளாண் நிலப்பரப்பிலும் சிறு விவசாயிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதை அறிந்த போது நாங்கள் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு போனோம். ஒட்டுமொத்த பண்ணைகளில் தொன்னூறு சதவீதம் சிறு விவசாயிகளால் நடத்தப்படுவதாக இருந்தாலும், அவர்களால் சந்தை மதிப்பில் இருபத்தைந்து சதவீதம் என்ற அளவிற்கு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. (இதுதான் நவீன விவசாயத்தின் அசல் முகம்) அதுவே அமெரிக்காவின் கிராமப்புற நெருக்கடி குறித்து எங்களுக்குக் கிடைத்த முதல் துப்பாக இருந்தது. ஆய்வின் தொடக்கத்தில் இப்படிச் சொன்னவரின் வாக்குமூலம் மேலும் மேலும் பலப்பல அதிர்ச்சிகளை நமக்காக வைத்திருக்கிறது.

1865 இல் அமெரிக்க உள்நாட்டுப் போரில் இருந்த விவசாய விலைகள்தான் இன்றும் இருக்கின்றன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் கோதுமையின் உற்பத்திச் செலவு மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த விசித்திரத்தின் சூட்சுமம் என்ன? அதாவது அமெரிக்கப் பெரும் பண்ணைகள் சிறு பண்ணைகளை விரட்டியடிப்பதற்கான விவசாய ஏற்பாடு. நாற்பது ஆண்டுகளுக்கு முன் “விவசாயத்தைப் பெரிய நிறுவனங்களுக்குத் திறந்துவிடுவதாக” அறிவித்த ரீகன் கண்ட கனவுகளின் காட்சிகள் இத்துடன் நின்றுவிடவில்லை. இன்னும் பாருங்கள்….1) எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்ட ஒரு வீட்டின் சமையலைறையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் ஒரு விவசாயி தற்கொலை ஹெல்ப்லைனுக்குப் போன் பண்ணுகிறான்….

2) கிட்டத்தட்ட எண்பது சதவீத கிராமப்புற மாவட்டங்களில் மக்கள் தொகை சரிந்துகொண்டே இருக்கிறது.

3) தனக்கு அருகிலுள்ள கைவிடப்பட வீடுகளை அயோவாவில் உள்ள தானிய விவசாயியான ஜார்ஜ் நெய்லர் எங்களிடம் காட்டினார். விவசாயம் குறைந்து கொண்டே வருவதால் விதை விற்பனை நிலையங்கள், தானியக் களஞ்சியங்கள், பழுதுபார்க்கும் கடைகள் போன்ற உள்ளூர் வணிகங்கள் மட்டுமல்லாமல் மருத்துவமனைகளும் காணாமல் போக ஆரம்பித்துள்ளன.

4) இன்றைக்கு ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் கிராமப்புற மாவட்டங்களில் உள்ள சுமார் ஆயிரம் பள்ளிகள் மூடப்படுகின்றன.

5) கிட்டத்தட்ட நாங்கள் பேசிய விவசாயிகள் அனைவருமே ரீகன் காலத்தில் விவசாயம் ‘திறந்து’ விடப்பட்டதால் ‘பெரு விவசாயங்கள்’ அதிகரித்தது என்று கூறினர்.

6) தங்களுடைய அவல நிலைக்கு இப்போது அமெரிக்க விவசாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற பிரம்மாண்டமான வேளாண் வணிக நிறுவனங்களே காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.இந்த நிலையைத்தான் இன்றைய ஆட்சியாளர்கள் இங்கே தொடங்கியிருக்கிறார்கள். இன்றைய அமெரிக்காவின் நிலைதான் நாளைய இந்தியாவின் நிலை. பாதிப்பு என்று எடுத்துக் கொண்டால் அமெரிக்காவை விடப் படு மோசமான பாதிப்பை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும்.

“தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக உலகெங்கிலும் உள்ள விவசாயிகள் போராடி வருகின்றனர். நியாயமற்ற விலைகள், தகிடுதத்த சந்தைகள் என்று பாதிக்கப்பட்டுள்ள இந்த விவசாயிகள் உணவு விநியோகச் சங்கிலி நிறுவனங்களால் இரக்கமற்ற சுரண்டலுக்கு ஆளாகியிருக்கின்றனர். ‘அமெரிக்க விவசாயிகளுக்கென்று இருந்து வந்த ஆதார விலையை கடந்த பல ஆண்டுகளாகவே அரசு கொள்கை வகுப்பாளர்கள் பலவீனப்படுத்தியுள்ளனர். அதன் விளைவாக ஒருபோதும் முடிவடையவே செய்யாத அதிக உற்பத்தி – குறைந்த விலை என்ற சுழற்சி உருவாகியுள்ளது. அது பல்லாயிரக்கணக்கான சிறு, நடுத்தர வேளாண் பண்ணைகளை வேளாண் வணிகத்திலிருந்து வெளியேற்றியிருக்கிறது’ என்று குறிப்பிட்டு அமெரிக்க தேசிய உழவர் சங்கமும் அதனை ஒப்புக் கொண்டிருக்கிறது……. உத்தரவாத விலையை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல நாடுகளில் விவசாயிகளின் போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருப்பதில் ஆச்சரியமடைய எதுவுமில்லை.” என்று தேவிந்தர் சர்மா குறிப்பிடுகிறார்.

மேலும் அவரே குறிப்பிடுகிறார்….‘உணவு விநியோகச் சங்கிலியில் விலையைக் குறைப்பது’ என்ற செயல்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்காக உற்பத்திச் செலவை உள்ளடக்கிய விலைக்கு உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் – உலகெங்கிலும் உள்ள அரசியல் தலைமைகள் இதுகுறித்து திட்டவட்டமான முடிவுகளை மேற்கொள்ளாமல் தவிர்த்து விட்ட போதும் – அதனைச் சட்டப்பூர்வமாக்கிக் கொடுத்து உலக நாடுகளில் ஸ்பெயின் முன்னிலை எடுத்திருக்கிறது. இதுவரையிலும் விவசாயிகளைக் காவு கொடுத்து நுகர்வோர்களை (தொழில்துறையையும்) பாதுகாப்பதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பல ஆண்டுகளாக நுகர்வோர்களுக்கும், பெருநிறுவனங்களுக்கும் விவசாயிகள்தான் மானியம் வழங்கி வந்திருக்கின்றனர் எனலாம். இந்த நிலைமை அவசியம் மாற வேண்டும்.”

நாம் அவநம்பிக்கை கொள்வதற்கு ஏதுமில்லை. ஸ்பெயின் நாட்டு மக்கள் இப்படியான விவசாய நெருக்கடிகளை எதிர்கொண்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பது ஆறுதலான செய்தி.

தாய்ப்பால் ஒரு தாயின் மார்பிலிருந்து சுரக்கிறது. அது இதயத்தின் அருகிலிருந்து சுரப்பதால் அதற்கு அவ்வளவு மகத்தான சக்தி போலும்! இந்தப் பூமிக்குத் தாய்ப்பாலைக் கையளிக்கும் சக்திதான் விவசாயி. இயற்கையின் தலைப்பிள்ளை விவசாயி.வேறு தொழில்களில் நடப்பது இப்போது விவசாயத்தில் நடைபெற ஆரம்பித்துவிட்டது. சின்ன மீன்களைத் தின்று தின்று பெரிய மீன்கள்… அப் பெரிய மீன்களைத் தின்று தின்று இன்னும் பெரிய மீன்கள்…. இப்படி கடலே கார்ப்பரேட் மயமாகிவிட்டது. சுறாக்கள் மட்டும்தான் வாழ வேண்டுமென்றும் சின்னச் சின்ன மீன்கள் ஜீவிக்கவே கூடாது என்றும் கடல் கட்டளையிடுவதில்லை. ஆனால் மனிதன் இயற்கைக்கு விரோதமாக அரசு என்கிற எந்திரத்தின் மூலமாக ஆட்டிப் படைக்கிறான். நாளடைவில் அரசால் வளர்ந்தவர்கள் அரசையே ஆட்டிப் படைக்கிறார்கள்.

யாரோ ஒருசிலர் வீட்டின் சமையலறையில் பர்க்கருக்காக வெட்டி இணைக்கப்பட்ட இரண்டு துண்டுகள் அல்ல இந்த. பிரம்மாண்டமான பூமி

அதனால்தான் விவசாயிகள் போராடுகிறார்கள். இது உள்ளூர்ப் பிரச்சனை அல்ல; உலகப் பிரச்சனை. இது தற்காலிகப் பிரச்சனை அல்ல; தத்துவப் பிரச்சனை. இது பண்ணையடிமைத் தனத்துக்கு எதிரான பழைய போர் அல்ல. முதலாளித்துவப் போர்வை போட்டுவரும் நவீன நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போர்.

ஆனாலிது விசித்திரமான போர்க்களம். போர் வீரர்களைக் குழப்புகிற புதிய போர்க்களம். வார்த்தைகளால் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்ட வக்கிரமான போர்க்களம்.. யுத்த நியமங்களை மீறி பின்புறத்திலிருந்து தாக்குகிற பித்தலாட்டப் போர்க்களம். போர் வீரர்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்லிக் கொண்டே பயங்கரவாதத்தால் வடிவமைக்கப்பட்ட பதுங்குகுழிகளில்தான் அரசாங்கம் தன் கஜானாவை நிரப்பிக் கொள்கிறது.

நாம் விவசாயிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் விவசாயிகளின் பிள்ளைகள். குறைந்த பட்சம் அவர்களுக்காகப் பேனா எடுத்த காகித விவசாயி நான். இந்தப் போர்க்களத்தில் தூரிகை துருப்புடன் வருகிறவர் என் தம்பி ஓவியர் கார்த்திகேயன். விவசாயிகளுக்காக யுத்த கீதங்கள் என்கிற கவிதைத் தொடரினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இலக்கிய உழவின் எழுத்துப் போர்க்களத்திற்கு உங்கள் ஆதரவை விரும்புறோம். எழுத்துப் போர்க்களம் அமைக்க இடம் அளித்திருக்கும் புக் டே இணைய இதழுக்கு நன்றிகள்.

இப்படிக்கு

கவிஞர் நா.வே.அருள்

ஓவியர் கார்த்திகேயன்