Kaviyoviyathodar Yuthageethangal - Pattapoochiyin siragugalum vettukiliyin kalgalum 34 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர் யுத்தகீதங்கள்- பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும் 34




பட்டாம் பூச்சியின் சிறகுகளும் வெட்டுக்கிளியின் கால்களும்
********************************************************************
கடவுளின் தலையை
ஞானி பொருத்திக் கொள்கிறபோது
அவனது பெயர் விவசாயி.

விவசாயியின் இதயம்
எப்போதும் தரிசாய் இருப்பதில்லை
அது
நாற்காலிகளை மரங்களாக்கிவிடுகிறது
மரங்களைத் தோப்பாக்கிவிடுகிறது
தோப்புகளை வனமாக்கிவிடுகிறது.

உலகத்திலேயே தனக்குப் பிடித்தமான ஒன்றை
இடச்சொல்லி
விவசாயியிடம் ஓர் உண்டியலைக் கொடுத்தால்
அவன் ஒரு விதையைத்தான் தேர்ந்தெடுப்பான்.

அவன் வளர்த்த அட்டைகள்
அவனது வயலில்
அறுவடைகளை உறிஞ்சத் தொடங்கிய பின்புதான்
அவனது உடலின் குருதி குறைய ஆரம்பித்தது.

அவனது கவலையெல்லாம்
விளைச்சலில் இறங்கும் பூச்சிகள் அல்ல
அவனது வயலில் இறங்கிய
திசையெல்லாம் பறந்துகொண்டிருக்கும்
பட்டாம் பூச்சியின் சிறகுகளும்
வெட்டுக்கிளியின் கால்களும் கொண்ட
புதிய விலங்குகள்!
அவை விநோத மொழி பேசுகின்றன
அவை
பாசனத்திற்கான தாகத்தின் கடலைப்
பருகிவிடுகின்றன.

அவனது கூரையின் வானமும்
தரையின் மண்ணும் களவாடப்படுகின்றன.

அவன் மீது மரணம்
ஒரு மலிவான பொருளைப்போலத் திணிக்கப்படுகிறது.

சாணம் பூச மறந்த விதை
கெட்டுப் போவதைப்போல
எதிரிகளின் மூளை செயலற்றுவிடுகிறது.

விவசாயிகளை வெல்ல நினைப்பவன்
முதலில் ஆயுதங்களைக் கீழே எறிந்தாக வேண்டும்
விவசாயிகள் முன் நிராயுதபாணியாக
நிற்க வேண்டும்!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *