வியூகங்கள்
******************
காட்டுப் பன்றிகள்
வயலில் இறங்குவதைப் பார்த்த விவசாயிகளால்
அமைதியாக உறங்க முடியவில்லை.
இப்போது காட்டுப் பன்றிகள்
யானைகளைப்போலப் பருத்துவிட்டன
அவை
வயல்களை விழுங்கி விடுகின்றன
விவசாயிகளின் கிணறுகளைக்
குருதியால் நிரப்பிவிடுகின்றன.
அவை
முதலில் விவசாயிகளைக் கொன்றுவிட்டு
பிறகு வயல்களைத் தின்றுவிடுகின்றன.
அவை
நாற்காலிகளின் கீழே
சூழ்ச்சிகளின் புதர்களில் வசிக்கின்றன.
அரண்மனையின் முன் கட்டப்பட்டிருந்த
ஆராய்ச்சி மணிகளின் நாவுகளைக் கொறித்துவிடுகின்றன.
ஒரு கடுங்குளிரில்
பனிப் போர்வையின் வெடவெடப்பில்
விவசாயிகள் குப்புற விழுந்த போதுதான்
பின்னாலிருந்து
ஓநாய்களைப்போலத்
தனித்தும் பின் கூட்டமாகவும்
யுத்தத் தந்திரங்களால்
வியூகம் வகுக்கின்றன.
சில நேரங்களில்
காட்டுப் பன்றிகள் இறங்கிய வயல்களில்
விவசாயிகள்
செயலிழந்து தலைகவிழ்ந்து நிற்க நேரிடுவது
நம் காலத்து மிகப் பெரிய அபத்தம்தான்!
கவிதை – நா. வே. அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.