கயல் கவிதைகள்

1
இரைப்பையின் நிர்வாணத்தை
மறைக்க பட்டுத் துகிலால்
முடிவதில்லை.
*****
2
ஒரு பூவை வலிக்காமல் கிள்ளுவது அவ்வளவு எளிதல்ல என்று
மரகதக் கிளிகள் பேசுவதை ஒட்டுக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தது 
பவழமல்லி.
சிறு மகளொருத்தி பாவாடையை விரித்துப் பிடித்து மரத்தை அண்ணாந்து ஏக்கத்துடன் பார்த்த நொடி முத்தமிட்டுக் கொண்ட கிளிகளின் இதழ்ச் சிவப்புடன் உதிர்ந்தன சில மலர்கள்.
****
3
காதருகில் வைத்தால் மட்டுமே 
கடல் ஒலிக்கும் சங்கு 
உனது அன்பு.
புறக்கணிப்பின் நகக் கணுக்களால்
எவ்வளவு குத்தியும் அழிந்திடாத
மச்சம் என் பரிவு.
****
4
காலம் விடாது கதவைத் தட்டுகிற
நோய்மையுற்ற இரவொன்றில் 
உன் அன்பின் கதகதப்பில்
உறங்குவதாக நடித்துக் கொண்டிருப்பேன்.
எட்டிப் பார்த்துச் சிறிது ஒத்திப் போட்ட அது தொடர்ந்து வந்தபடி இருக்கிறது
நிலவாக.
******
5
துள்ளித் துள்ளி 
உடலெங்கும் துளிகள் தழுவ
அள்ளி ஆசையாய் மனங் குளிர
ஆடை நனைகிற அச்சமின்றி
உயிரின் ஆழம் வரை தீரக் குடித்து
வாழ்நாளுக்கும்
பெண் பரவசத்தில் ஒசிந்தாடாத நீருக்கு மழையென்றும் பெயர்.
******
6
பிறந்த சிசுவின் பாலினம் அறியக் கேட்டதும் பூப் பந்தெனக் கைகளில் ஏந்தி
மீச் சிறு அரையாடை நீக்க 
பரவசத்தில் நெக்குருகி உங்கள் விழிகள் பார்த்த செவிலியின் மகவாகவும் இருக்கலாம்
நீங்கள் ஆடை நீக்கி உறுதிப்படுத்தி உங்கள் இறைவனைக் கூப்பிடச் சொல்லிப் பிறகு கல்லால் அடித்துக் கொன்றவரில் பலர்.
*****
7
தாமரை இலைக் கோழியாக
மாறிவிட ஆசை என்று சொல்லிக் கொண்டிருந்தாள் குட்டிம்மா
மயிலைப் பார்க்கும் வரை.
ஆலங்கட்டி மழைக்குத் தாழைப் பூக்களின் மணம் தான்; 
அடம் பிடிப்பாள்.
கடற்கரை மணற்துகள் 
காய்ந்து போன நுரை;
அலையிடம் கேள் என்பாள்.
நேர்ச்சை ஆடு தலையசைத்ததும்
வெட்டப்படுமெனில் அது அசையாம 
பிடிக்காதது பேருமா சாமி; வியப்பாள்
முதன்முதலில் யாசகன் ஒருவனைப்
பார்த்த பின்னிரவில் கேட்டாள்
பசியென்பது வயிற்றுவலியாம்மா? 
*****
8
முதிர்ந்த வளர்ப்பு நாய் மரணத்தின் 
கால்களைக் கட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் முன் கடைசியாக என்னைப் பார்த்ததே 
அது போலிருக்கிறது 
உன்னுடைய இந்த மௌனம்.
****
9
மின்சாரமற்ற மழையிரவில் விளக்குடன் நடந்து வருகிறாய்
ஒளிரும் செம்போத்தாக.
தோளணைத்து சொக்குமொரு குரலில் நீ பாடத் துவங்குகையில்
நிலவின் கீற்று மலையைத் தழுவியது.
பிறகு எப்படியோ விடிந்துவிட்டிருக்கிறது.
மலை கொஞ்சம் வெட்கப்பட்டு சடுதியில் கதிர் ஆடை உடுத்திய கதையை  பூமியெங்கும் பகல் முழுக்கப் பேசிக் கிடந்தன மேகங்கள்.
****
10
தாலமசைத்துத் தந்தங்கள் ஒளிர
திக்குகளதிர முற்றிய மூங்கில் ஒடித்துத் துவைத்து 
இருளின் திரளெனக் 
கனவினில் வரும் காட்டுயிரை   
அடையாளமறியாது தவிக்கிறது 
அலங்காரமாய் வாசலில் நிற்கும்
கோயில் யானை. 
*****
11
சாமத்தின் திரி கொளுத்தி
பன்னீர்க் கொய்யாப் பழங்களில்
வைத்து 
ஒய்யாரமாய்ச் சோம்பல் முறித்த இரவு 
கொம்பன் ஆந்தைக் கண்களின் ஒளித்
துணுக்குகளால் பதைத்து 
நிலவை அழைத்து 
நேரம் சரிபார்த்தது.
கயல்