கயிறு – நூலறிமுகம்
நூலின் தகவல்கள்
நூல் : ‘கயிறு’ – ‘மண்மீது மனிதனுக்கிருந்த நேசம்’
ஆசிரியர் : தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் : சி ஏ பாலன்
வெளியீடு : சாகித்ய அகாடமி வெளியீடு
பக்கங்கள் : 1504
மனிதனின் லெளகீக விருப்புகளில் மண் மீதான அவனது மோகத்திற்கு முக்கிய இடமுண்டு. தனக்கென சிறு இடமொன்று தேடுவதில் துவங்கி, நீளத்துவங்கும் எல்லையற்ற பிரயாசைகள் அவனைப் பெரும் சங்கடங்களுக்கு இட்டுச்செல்லும் சாத்தியங்களும் உண்டு.
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் கேரளத்தின் குட்டநாடு பகுதிக்கு ‘கிளாசிப்பேர்’ என்றழைக்கப்படும் ‘Classifier’ கொச்சுப்பிள்ளை மன்னரின் சார்பாக ‘கண்டெழுத்து’ பணிக்கு நியமிக்கப்படுகிறார்.
கண்டு எழுதுவதால் அப்பணி ‘கண்டெழுத்து’ என அழைக்கப்படுகிறது. நிலப்பகுதிகளை அடையாளமிட்டு அப்பகுதியில் குறிப்பிடத்தகுந்த பிரதிநிதிகளாக விளங்கும் கோந்நோத்து, கோடாந்திர, சீரட்ட உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கண்டெழுத்து தரப்படுகிறது.
‘எருமத்ர மடம்’ கிளாசிப்பேரும் அவரது மனைவி குஞ்சு லட்சுமியம்மாவும் தங்குவதற்கு ஆரம்ப எதிர்ப்புகளை மீறி வழங்கப்படுகிறது.
மக்களுக்கு ராஜாங்க செய்திகளை அறிவிக்கும் பணியில் ‘முல்லக்காரன்’ என்று அழைக்கப்படும் நபர் ஈடுபடுகிறார். அவன் மீதான அச்சமொன்று மக்களிடையே நிலவியும் வருகிறது.
குஞ்சு லட்சுமியம்மா கிளாசிப்பேருக்கான காணிக்கைகளை பெறுவதில் பெரும் முனைப்பு காட்டுகிறாள்.
அரசுக்கான வரியை நெல்லாகவே செலுத்தும் வழக்கம் இருந்த அந்நாட்களில், இயற்கை வஞ்சித்துவிடும் பருவங்களில், வரியை செலுத்த முடியாமல் தவிப்பவர்களை முல்லக்காரன் கடுமையாக நடத்துகிறான்.
சக்கர சுவாசம் எனப்படும் தண்டனைமுறை வாசிக்கையில் பெரும் அச்சமூட்டுகிறது.
‘சர்வாதிகாரியக்காரர்’ எனப்படும் கிளாசிப்பேரைக் காட்டிலும் உயர்நிலை அதிகாரிக்கு கிடைக்கும் மரியாதையும், காணிக்கைகளும் குஞ்சு லட்சுமியம்மாவிற்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது.
மணமுடித்தல், ‘புடவை கொடுத்தல்’ என்ற வார்த்தைகளாக அறியப்படுகிறது. கோடாந்திர இல்லத்தில் கந்தர்வனாக நுழைந்துவிடும் கொச்சுப்பிள்ளை, சேஷையனைக் கொண்டு அப்பெண்ணுக்கு புடவை கொடுக்க வழி செய்கிறார்.
சேஷையன் பணிப்பெண் சக்கியிடம் வரம்பு மீறுவதை குறைந்த அளவு சொற்களிலேயே உணர்த்திச் செல்கிறார் ‘தகழி’.
தனது இச்சையின்பாற்பட்ட செயலுக்கு பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ளும் தந்திரங்கள் இயல்பாகவே நடைபெற்று விடுகின்றன.
மங்கலச்சேரி குடும்பத்தினரின் தலைவராக விளங்கும் ரவி பிள்ளை தனது இளவல் மாதுப்பிள்ளையிடம் நுட்பமான எதிர்ப்புகளை தொடர்ச்சியாக சந்தித்து, தனக்குரிய ஸ்தானத்தையும் இழந்துவிட நேர்கிறது.
கல்யாணியம்மாவின் தோற்றம் குறித்த விவரிப்புகள், அவள் மீதான மற்ற ஆண்களின் பாலியல் விழைவுகள், பொருந்தாத இணையைத் துண்டித்துக் கொள்ளும் எளிய வகையான ‘பாய் தலையனையை வெளியே தூக்கி வீசுதல்’, மலையாள பெண்சமூகம் குறித்த புரிதல்களுக்கு இட்டுச் செல்பவை.
கணபதி அய்யரிடம் குத்தகைக்காக நிலங்களை பெறும் ஔத மாப்பிள, ஒரு கட்டத்தில் அவரை மோசம் செய்து சொத்துக்களை அடைகிறான். அச்செயல் அவனுக்கு எவ்வித வருத்தமும் அளிக்கவில்லை. நிலங்களின் மீதான உரிமைகள், பரிமாற்றங்கள், வெறும் வாய்ச்சொற்களாகவே நடைமுறையில் நீடித்த நாட்களின் நிகழ்வுகள் அவை.
நாவல் முழுவதும் வண்ணமயமான மனிதர்கள் தொடர்ச்சியாக தமது தனித்தன்மையான குணாதிசயங்களுடன் அணிவகுக்கிறார்கள்.
கல்யாணியம்மாவின் மகன் கேசவன்பிள்ளை ஈழவர்களுக்கான பள்ளியொன்று நடத்த முற்படுகிறான். பள்ளிக்கு வரவிரும்பும் ஒரேயொரு குழந்தை ‘திருவன்’, ஊர்க்காரர்களால் தாக்கப்படுகிறான்.
எல்லா சமூகங்களுக்குமான கல்வி பயிலும் அடிப்படை உரிமை கருணையின்றி மறுக்கப்படுகிறது.
ஒடுக்கப்பட்ட சாதியினர் மதமாற்றத்திற்கு விழைகின்றனர். பள்ளிக் கட்டிடம் எரிக்கப்படுகிறது. கேசவன் பிள்ளை பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
ஸ்ரீ பத்மநாபனின் 10 சக்கரம் ஊதியமாக கிடைக்கப்பெறும் சாதகம், நாவலில் பல இடங்களில் குறியீடாகவே இடம்பெறுகிறது.
தந்திரமாக நிலங்களை அபகரித்த அவுத மாப்பிள மனநிலை பாதிக்கப்பட்டு இறக்கிறார்.
மதம் மாறினாலும் சாதிய நிழல் ஒடுக்கப்பட்ட இனத்தினரிடம் நீடிப்பதை அறியமுடிகிறது.
கல்யாணியம்மாவின் அவமானங்கள், பீருக்கண்ணு முதலாளியிடம் கணக்குப் பிள்ளையாக பணியாற்ற வேண்டிய நிலைக்கு செல்லும் கேசவன் பிள்ளை, வட்டத்தான், பரீதாக மாறுதல், சேந்நன் மனைவியரின் சுய மரணங்கள் நாவலின் விறுவிறுப்பான பக்கங்கள்.
வாசகனின் புறச்சூழலை முற்றிலும் அறுத்து, தனது எழுத்துக்களினூடே அசாதாரண வேகத்தில் பயணிக்க வைக்கிறார் தகழி.
ஊர் முழுவதும் அறியப்பட்ட ஸ்தானிகள் வீழ்ச்சியடைய, கேசவபிள்ளை காசிக்கு கிளம்புகிறார்.
பாலத்தோள் இல்லத்தில் கிருஷ்ணரு திருமேனி மூத்தவராக இருப்பினும் இரண்டாமவர் கணபதியே முக்கியத்துவம் பெறுகிறார். இளையவர்கள் நாராயணன், தம்பான் இருவரும் ஓரிரு சொற்களில் தமது கருத்துக்களை தெரிவிப்பதுடன் நின்று விடுகின்றனர்.
தேவஸ்தானத்துக்கு செல்லவேண்டிய குத்தகை நெல்லை, தனது இல்லத்திற்கு வர வேண்டிய பங்கினை நேர்செய்ய கணபதி திருமேனி தந்திரமாக செயல்படுவதை ஊரார் அறிந்துவிடுகின்றனர்.
தந்தையின் சொத்துக்களில் தனயனுக்கு உரிமையற்ற நிலை, அம்மாவன் எனப்படும் தாய்மாமன் ஸ்தானத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவங்கள், பல குடும்பத்தினரின் நிலைகளை முற்றிலுமாக மாற்றியமைத்து விடுவதை அறியமுடிகிறது.
பிரேதத்தை தகனம் செய்வதன் மூலம் சொத்துக்களின் மீதான உரிமையை உறுதி செய்து கொள்கின்றனர்.
ஈச்சரப்பிள்ளையின் பிரேதத்தை பெற்றுச் செல்ல அவரது சகோதரி மகன் செய்யும் சண்டித்தனம், அம்மாவன் என்ற உரிமையை நிலைநாட்டுவதைத்தாண்டி சொத்துக்களின் மீதான அவனது மோகத்தையே எடுத்துக்காட்டுகிறது.
ஈச்சரப்பிள்ளையின் மருமகன் ஆகிவிடும் குஞ்சு நாயர், பெரும் தந்திரங்களில் ஈடுபட்டு சொத்துக்களை இரு குடும்பத்தினருக்கும் ஈட்டித் தருகிறார்.
இளமையிலேயே சுய மதிப்புடன் விளங்கும் குஞ்சன் நாயர், இடதுசாரி சிந்தனையுடன் செயல்படுவதை அறியமுடிகிறது.
பெரும் ஆவலுடன் அவர் முன்னெடுக்கும் அஞ்சல் நிலையம் புறக்கணிப்புக்கு ஆளாகிறது. கடிதம் எழுதுதல் என்ற நடைமுறை அவரது தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் சாத்தியமாகிறது.
கணபதி திருமேனியின் நடைமுறைகளால் அதிருப்தி அடைபவர்கள் தேவஸ்தானத்தை மக்கள் கையில் கொண்டு செல்ல முடிவெடுக்கின்றனர்.
தலையெண்ணிப்பங்கு நடைமுறைக்கு வருகையில், குஞ்சு நாயரின் வாழ்நாள் சேகரிப்புகள் பகிரப்பட்டு, பெரும் வீழ்ச்சியை சந்திக்கிறார் அவர்.
அவரது மனைவி குஞ்சு மாளுவம்மா, மகன் மணிகண்டன், மகள் கௌரிக்குட்டி நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
சமையலர் பணியில் ஈடுபட்டு, உழைத்து பரமேஸ்வரனுக்கு கல்வியளிக்கும் நாணுக்குறுப்பு, அவனது உயர்ந்த நிலைக்குப் பிறகு தனக்கு ஏற்படும் அவமதிப்பைகூட பொருட்படுத்த மறுக்கிறார். அப்புறக்கணிப்பை இயல்பாக ஏற்றுக்கொண்டு விடும் அவர், அதை நியாயப்படுத்தவும் செய்கிறார்.
வைக்கம் போராட்டம் பற்றிய குறிப்புகள் நாவலில் விரிவாக இடம்பெறுகிறது. அப்பகுதி இளைஞர்கள் எழுச்சியுடன் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமடைகின்றனர்.
நாராயணகுரு உன்னத தலைவராக இளைஞர்களால் கருதப்படுகிறார். அம்மாவன் சொத்துகளுக்கு உரிமை கோருதல் வழக்கப்படி, ராகவன் பிள்ளை தந்திரமாகக் காய்களை நகர்த்துகிறார்.
குஞ்சுமாளுவம்மாவின் நகைகளை மோசடி வார்த்தைகளைக் கூறி பறித்துவிடுகிறார்.
உண்மையில் உள்நோக்கம் அற்றவர்கள் ஒருவித கறார்த் தன்மையுடன் வார்த்தைகளை வெளிப்படுத்தி வெறுப்புக்கு ஆளாகி விடுகின்றனர்.
பிரத்தியேகமான சுயலாப கணக்குடன் உறவுகளை அணுகுபவர்கள் முதல் கட்டமாக வாஞ்சையுடன் சிறுஉதவிகளைச் செய்து, அதன் தொடர்ச்சியாக தமது பெரும் நோக்கங்களை சுலபமாக நிறைவேற்றிக் கொண்டு விடுகிறார்கள்.
அவர்தம் சூழ்ச்சி புத்திக்கு எட்டிவிடும் போதிலும், மனது அவர்களை மன்னித்து விடுகிறது. காணாத போது தோன்றும் வெறுப்பும், கோபமும், நேரில் கண்டதும் இன்முகம், இனிய சொற்களின் ஒருங்கிணைப்பால் சூழலை ஒரேயடியாக புரட்டிப் போட்டுவிடுகிறது.
ராகவன் பிள்ளை அத்தகைய புத்திசாலியான நபராக இருக்கிறார்.
மணிகண்டன் பள்ளியில் பெரும் இன்னல்களை அனுபவிக்க நேர்கிறது. அவனது கவிதை பாடும் திறன் மதிக்கப்படாமலும், கணக்கு போடும் திறனின்மை தண்டிக்கப்பட்டும், மகிழ்ச்சியற்ற நாட்களாக அவனது பள்ளிவாழ்வு நீடிக்கிறது.
குஞ்சன் நாயர் உள்ளூர் இளைஞர்களின் ஆதர்ச நாயகனாகவும், அவரது இல்லம் அனைவரும் நாடிச்செல்லும் காந்தி ஆசிரமமாகவும் உருமாறுகிறது.
ஆசிரமத்தில் அவருடன் இளைஞர்கள் துணிச்சலான வாக்குவாதத்தில் ஈடுபடத் தவறுவதில்லை.
மணிகண்டனின் பதின்மவயது தேடல்களும், மேற்படிப்பு படிக்கும் அவனது ஆர்வமும், ராகவன் பிள்ளையிடம் அவனை இட்டுச் செல்கின்றன.
மேற்படிப்புக்கான சாத்தியங்களை மறுக்கும் அவர், மணிகண்டனின் தாய் தந்தையரை சுரண்டிப் பெற்ற தோட்டத்தில் அமர்ந்து கொண்டு அறிவுரைகள் கூறி அவனை வழியனுப்புகிறார்.
கல்லூரியில் அவனது கவிதை வாசிப்பு பாராட்டுகளை அளிப்பதற்கு பதிலாக, எச்சரிக்கைகள் வழங்குவதாக அமைந்துவிடுகின்றது.
சுரேந்திரனின் நட்பு அவனை ஆறுதல் கொள்ளச் செய்கிறது. சுரேந்திரன் தந்தையின் பலதார வாழ்வு பெரும் நகைப்புக்குரியது.
‘மூழ்கிச் செத்துவிடும் நேரத்தில் குடிக்கிற நீர் நல்லதா, கெட்டதா என பார்ப்பதுண்டா?’ தகழியின் மேதமைக்கு மேற்கண்ட வரி ஒரு சிறு எடுத்துக்காட்டாக அமைகிறது.
குஞ்சன் நாயரின் காந்தி ஆசிரமம் நாளடைவில் தனது வரவேற்பினை இழக்கிறது. இளைஞர்கள் முன்புபோல் இப்போது அங்கு வருவதில்லை.
மூன்று பக்கங்களும் நீரால் சூழப்பட்டதொரு பகுதியில் சம்மேளனம் நடத்த தீர்மானமாகிறது. ஒற்றர்பிரிவு போலீசார் தொடர்ச்சியாக நிகழ்வுகளை கண்காணிக்கின்றனர்.
மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணியில் வட்டத்ர கிரிகரி ஈடுபடுகிறார். படகுகளில் அப்பகுதிக்கு விரையும் போலீசார் கூடியிருப்பவர்களை தடியடி நடத்தி கைது செய்கின்றனர்.
குஞ்சன் நாயர் சிறை செல்கிறார். கார்த்தியாயினி என்ற பெண்ணுடனான அவரது தொடர்பு நாவலில் நேரடியாக சொல்லப்படவில்லை எனினும், பிரம்மச்சரிய விரதம் பூண்டவராகவே அறியப்படும் அவர், இயல்பான தனது மனவெழுச்சியால் ஆட்கொள்ளப்படுகிறார்.
ஆசிரமம் அமைந்திருக்கும் தனக்கு சொந்தமான இல்லத்தினை கார்த்தியாயினி பெயருக்கு எழுதி வைத்துவிட்டு சுய மரணமடைகிறார் அவர். கார்த்தியாயனி அச்சமயம் கர்ப்பமாக இருக்கிறாள்.
மணிகண்டனின் தந்தைக்கு பாப்பியம்மா என்ற பெண்ணுடன் நட்பு இருந்திருக்கிறது.
மலேசியாவில் பணியாற்றும் தனது மகன் கோபாலகிருஷ்ண நாயரின் பணத்தை வட்டிக்கு கடனாக அளித்து பெருக்குகிறார் பாப்பியம்மா.
குஞ்சு நாயரிடமும் கறாராக நடந்து கொள்ளத் தவறுவதில்லை அவள்.
நிலத்தின் பேரில் கடன் பெறும் விவசாயிகள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போய்விட, ஜப்தி செய்யும் நடைமுறை சட்டத்தின் மூலம் தடுக்கப்படுகிறது.
குஞ்சன் நாயர் என்ற சேந்நாடன் தனது மகனுக்கு நீண்ட கடிதம் ஒன்று எழுதுகிறார். நண்பன் விசுவநாதனால் ‘கோழை’ என்று கண்டிக்கப்படுகிறான் மணிகண்டன்.
விஸ்வநாதனின் துணிச்சலான செயல்கள் போலீஸ் அவனை தேடுவதற்கு ஏதுவாகின்றன. பிற்காலத்தில் சுதந்திரம் அடைந்துவிட்ட நாட்டில் அவர் மந்திரியாகி விடுவதுடன் நட்பை மறக்காமல், மனநலம் குன்றிவிட்ட மணிகண்டனுக்கு விழாவிற்கான அழைப்பும் விடுக்கிறார்.
ஊரின் தபால்காரர் ஆதரவற்ற கவுரி குஞ்சம்மாவிடம் நட்புடன் இருக்கிறார். அவளது இரு மகன்கள் ராணுவத்தில் அடுத்தடுத்து இறந்து விட அத்தகவல்களை அவளிடமிருந்து மறைத்துவிட்டு அவர்கள் பெயரிலிருந்து பணவிடைகள் வந்ததாக கூறி தனது பணத்தை செலவிட்டு கௌரி துயரடையாமல் பாதுகாக்கிறார் அவர்.
‘பொல்லாத சந்ததியைவிட இல்லாத சந்ததியே மேல்’, ‘புத்தியால் அன்றி கண்ணினால் வாசித்தல்’, ‘நினைக்கவில்லை என்பது நிந்தனை அன்று’ போன்ற வரிகளுக்காக தகழிக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும், தமிழ் வாசகன் நன்றி கூறவேண்டும்.
பறையர், புலையர்,ஈழவர் போன்ற ஒடுக்கப்பட்டவர் வீடுகளில் மீனும், கிழங்கும் உண்ணுதலை ‘டீ கிளாஸ் பண்ணுதல்’ என்ற வார்த்தை பிரயோகம் மூலம் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் நடைமுறைப் படுத்துகின்றனர்.
சுரேந்திரன் துடிப்பாக கட்சி பணியாற்றுகிறான். அவனது செல்வாக்கு கட்சிக்கு அச்சமேற்படுத்தி கட்சியில் இருந்து அவனை வெளியேற்றும் அளவுக்கு செல்கிறது.
குஞ்சு நாயரும், குஞ்சு மாளுவம்மாவும் ஏககாலத்தில் மரணிக்கிறார்கள். ஒருவரை விட்டு ஒருவர் வாழ இயலாத அவர்தம் கையறு நிலை, மனப் போராட்டங்களாக அவர்களிடம் நீடித்து மரணத்தில் முடிவடைகிறது.
மணிகண்டன் கற்பனையான போராட்டங்களில் ஈடுபடுகிறான். உள்ளார்ந்த விருப்புகள், போராட்டங்கள் சார்ந்தும், இயலாமைகள் நிதர்சனங்களாகவும் அவனது வாழ்வில் அமைந்துவிடுகின்றன.
நாடு சுதந்திரம் அடைகிறது. விசுவநாதன் போராட்டங்களில் முழுமையாக ஈடுபடுகிறான்.
சுதந்திர நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே மட்டுமே நேரடி வலுவான போட்டி ஏற்படுகிறது.
விவசாயிகள் காங்கிரசுடனும், கூலிகள் கம்யூனிஸ்ட்களுடனும் இணைகின்றனர். கம்யூனிஸ்ட் வேட்பாளராகக் களமிறங்கும் சுரேந்திரனுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுகின்றன.
மனித நேயத்துடன் அவன் ஆற்றிட நேரும் நம்பமுடியாத உதவிகள் மக்களின் கேலிகளுக்கு ஆளாகின்றன.
அவனது மனைவி பொன்னம்மா அவனை முழுமையாக நம்புகிறாள். சுரேந்திரன் பொது நலத்திலும், கட்சிக்காக உழைப்பதிலும் உறுதியாக இருக்கிறான்.
பஞ்சாயத்து தலைவராகி, மருத்துவமனை, பள்ளிக்கூடம், சாலை வசதி போன்றவற்றை ஊருக்கு ஏற்படுத்தி தருவதுடன் தனது நிலையை ஆச்சரியமளிக்கும் வகையில் மேம்படுத்திக் கொள்கிறான் அவன்.
கூலி உயர்வு போராட்டங்களின்போது மடையைத் திறந்து விட்ட அவனது அசட்டுத் துணிச்சல், பிற்காலத்திய அவனது செயல்பாடுகளுடன் உற்று நோக்குகையில் வாசகனுக்கு அவனது ஆளுமையின் முரண்கள் சற்று விளங்கக்கூடும்.
சுரேந்திரன், விசுவநாதனின் வளர்ச்சிகளுக்கு மாறாக மணிகண்டன் மிகவும் பரிதாப நிலையை அடைகிறான்.
தனது சுய மகிழ்வுக்காகவே கவிதை பாடுவதாகக் குறிப்பிடுகிறான். ஆளில்லாத அறைகளில் குடியிருக்கும் அவன், சமையல் அறையில் படுத்துறங்கவும் தயங்குவதில்லை.
தேநீர் கடையொன்றில் தொடர்ச்சியாக அவன் டீ அருந்துவதும், அங்கு அவனுக்கு கிடைக்கும் உபசரிப்புகளும், மேதை ஒருவனுக்கு சமூகம் அளிக்கும் குறைந்தபட்ச கவனிப்பாக அமைந்துவிடுகிறது.
கிரிகரி நேருக்கு நேர் நின்று தன்னை முதலாளி என்று அழைத்துவிட்ட ஒரே காரணத்திற்காக தனது வேலையாள் ‘கறுத்த’ என்பவனைக் கொன்று ஆற்றில் மிதக்கவிடுகிறான்.
கறுத்தவின் தந்தை, இச்செயல் அறியாத நிலையில், தொடர்ந்து கிரிகரியிடம் விசுவாசத்துடன் பணிபுரிய,கிரிகரியின் மனசாட்சி தடுமாறுகிறது.
ஊராருக்கு நடைபெற்ற கொலை தெரிந்துவிட, கறுத்தவின் தந்தைக்கு உதவ நினைக்கும் கிரிகரி பெரும் அச்சமடைகிறான்.
ஊருக்கே கடன் கொடுத்த பாலத்தோள் இல்லம், நம்ப முடியாத வீழ்ச்சியினை அடைகிறது.
இறந்தவர்கள் திரும்பி வருவது போன்ற கற்பனைகள் நாவலில் இடம் பெறுகின்றன. சமகால நிகழ்வுகளை காணும் கோடாந்திர,கோந்நோத்து, சீரட்ட இல்லத்து ஸ்தானிகள் வியப்படைகிறார்கள்.
‘பழமை பற்றியெரிந்து சாம்பலாகிறது’, காலமாற்றம் இளைய தலைமுறையினர், பெற்றோரிடம் முரண்களை உண்டாக்கி, துணிச்சலான புதிய செயல்களுக்கு இட்டுச் செல்கிறது. ‘ரோசிக்குட்டி-மது’ திருமணமும் அவற்றுள் அடங்குகிறது.
நிலச் சீர்த்திருத்த சட்டம் அமலுக்கு வருகிறது. அதன்படி ஒரு குடும்பம் 15 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை சொந்தமாக வைத்திருத்தல் தடை செய்யப்படுகிறது.
விசுவாசிகளின் பெயர்களில் நிலங்களை எழுதிவைக்கும் நிலை ஏற்படுகிறது. நிலங்களை பெற்றவர்கள் திருப்பித்தர கோரப்படும் தருணங்களில், சிறிதும் தயக்கமின்றி, உறுதியாக, மறுதலிக்கவும் செய்கின்றனர்.
வறுமை நிலையை அடையும் பாலத்தோள் இல்லத்தில், வாசுதேவன் விழுமியங்களை உறுதியுடன் பின்பற்றுகிறார். மகன் கிருஷ்ணன் இடதுசாரி சிந்தனை உடையவனாக இருப்பினும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்திக் கொள்ள எண்ணுகிறான்.
வாசுதேவரின் கடும் எதிர்ப்பையும் மீறி அவனது செயல்பாடுகள் அமைந்துவிட, ஆற்றாமையுடன் மரணிக்கிறார் தந்தை. சில நாட்களில் சுய மரணத்தை நாடும் நிலைக்கு சென்று விடுகிறான் கிருஷ்ணன்.
வளர்ச்சியடைந்த சுரேந்திரன் ‘வர்க்க எதிரி’ என்ற பெயரை அடைகிறான். அவனது மகன் சலீல் அவனை உறுதியாக எதிர்க்கிறான்.
எவ்வித எதிர்பார்ப்புமின்றி, ஓய்வின்றி, உழைத்த சுரேந்திரன் அனைவராலும் வெறுக்கப்படும் நிலைக்கு செல்லுதலும் பெரும் முரண்.
‘மனிதனுடைய வரலாறு அவன் பூமி மீது கொண்ட பேராசை மற்றும் தாகமோகங்களின் சரித்திரம்தான்’ என்கிறார் ‘தகழி’.
குறிப்பிட்டதொரு நிலப்பகுதி மக்களின் மூன்று நூற்றாண்டுகால வாழ்வினையும், அம்மனிதர்களின் வெற்றிகள், வீழ்ச்சிகளையும் விரிவாக முன்வைக்கிறது ‘கயிறு’.
கதைமாந்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பினும் வாசகனுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் அழகியல் மிகுந்தநடை தகழியுடையது.
தமிழில் மொழிபெயர்த்திருக்கும் சி ஏ பாலன், வெளியிட்டிருக்கும் சாகித்ய அகாடமி, அறிமுகம் செய்த எழுத்தாளர் கே.என் செந்தில், வாசிக்கும் நூல் குறித்த விரிவான பதிவினை எழுத என்றும் எனக்கு ஊக்கம் அளிக்கும் எனது ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்!
அறிமுகம் எழுதியவர்
சரவணன் சுப்பிரமணியன்
கணித ஆசிரியர் மதுராந்தகம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.