இன்று ஐம்பதுகளில் இருக்கும் ஒரு ஆண், காமத்தைப் பற்றி அறிந்து கொண்டது
புத்தகங்களிலிருந்தும், மறைந்து பார்த்த திரைப்படங்களின் துண்டுக் காட்சிகளிலிருந்தும், வீடியோ கேசட்டுகளிலிருந்தும், துணிச்சலான நண்பர்களிடமிருந்தும்தான்.இதற்கு நானும் விதிவிலக்கல்ல.
பெண்களைப் பொறுத்தவரை,நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான் என்று எல்.ஆர். ஈஸ்வரியின் பாடலுக்கு வாயசைத்தவர்கள்தான்.காமத்தைப் பொறுத்தவரை,மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு, இதோ,வைகை தெரிகிறதா?அதோ, மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் தெரிகிறதா? அவ்வளவு தான் மதுரை என்று கணவன் சொன்னால் நம்பினார்கள். கோரிப்பாளையம் இருக்கிறது. மாட்டுத்தாவணி இருக்கிறது.
மாரியம்மன் தெப்பக்குளம் இருக்கிறது என்பதையெல்லாம் அவர்கள் அறிந்ததே இல்லை.அல்லது அறிய விரும்பியது இல்லை.ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை காமம்,இருளில் நிகழும் ஒரு சம்பிரதாயக் கடமை,அவ்வளவுதான்.
சென்ற தலைமுறை பெண்களைப் பொறுத்தவரை திருமண வாழ்வில் குழந்தைகள் பிறந்த பிறகு, குடும்பத்தை, கணவனை, பிள்ளைகளை கவனிப்பது, அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவது என்பதிலேயே அவர்களின் கவனமும், பெரும்பாலான நேரமும் செலவழிந்து விடுவதால், காமம் அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருந்ததில்லை என்று நினைக்கிறேன்.மீறிப் பேசினால்,அடங்காம அலையறா என்று ஆண்களும் சில பெண்களும் பேசி விடுவார்கள் என்ற அச்சமும் காரணமாக இருந்திருக்கலாம்.
பாத்திரம் எல்லாம் வெளக்காம அப்படியே போட்டு வச்சிருக்கேன். மணி
பதினொன்னாகுது.காலைல நான் நேரத்திலே எந்திரிக்கணும். கொழந்தைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ணணும்.சமைக்கணும்.எனக்கு வேலை இருக்கு.ஒங்களுக்கு வேணும்னா எப்பவும் போல இருந்துட்டு தூங்குங்க.இங்க வந்து அந்த யோகம் பண்றேன். இந்த யோகம் பண்றேனெல்லாம் உசுரை வாங்கக் கூடாது.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஓஷோ சொன்ன தாந்ரீக யோகத்தை உறவின் போது செய்து பார்க்கலாம் என்று சொன்ன கணவனிடம் மனைவி சொன்ன பதில் இது.
ஆணோ,பெண்ணோ,இன்றைய தலைமுறைக்கு இருக்கவே இருக்கிறது
இணையம்.கோடிக்கணக்கில் கொட்டி கிடக்கின்ற காணொளிகள் அவர்களுக்கு எல்லாவற்றையும் திகட்டத் திகட்டக் கற்றுத் தருகின்றன.
ஆனால் அது மட்டுமே காமம் அல்ல என்பது அவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இரண்டு உடல்களும், இரண்டு மனங்களும் ஒரு கலவியின் போது இணைகின்ற அற்புதம்தான் காமத்தின் உச்சம். அது மிகவும் அரிதாகத்தான் நிகழ்கிறது. அம்மா வந்தாளில் தி.ஜா.காட்டுகிற, மொட்டை மாடியில் அலங்காரத்தம்மாளுக்கும் அவரது கணவருக்குமான உறவைப் போல.
காமத்தைக் குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது. வாலை இளநீரை வாய்விழியால்
வாரிப் பருகும் இவர்கள் இளமை கொடுக்கும் துணிவில் இடித்துக் களிக்கும் இவர்கள்
வயது வழங்கிய வாய்ப்பில் அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள் இருவரைக் கட்டிலேற்ற ஊதி முழக்கி ஊர் கூட்டும் இவர்கள் இருளில் ரகசியமாய் வெட்கி மருவி மயங்கும் இவர்கள் பிறகு தவழ விட்டு ஊரெல்லாம் பெருமை உரைக்கும் இவர்கள் எல்லாம் இவர்கள்தான் – வேறு யார் சொல்வார்கள்? கூடாதாம்; பச்சையாம்!
சி.மணியின் இந்தக் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
நடனத்துக்கு,ஓவியத்துக்கு எழுதியதைப் போல,காமத்திற்கும் சாஸ்திரம் எழுதிய தேசத்தில் இது எப்போது,எவ்வாறு நிகழ்ந்தது? பொதுவெளியில் அதிகம் விவாதிக்கப்படாத அல்லது விவாதிக்கக் கூடாதென்ற
பொதுப்புத்தியைக் கொண்ட சமூகத்தில்,காமத்தைப் பற்றி இத்தனை விரிவாக அதுவும் ஒரு பெண் பேசுகிறார் என்பது பலருக்கு வியப்பாகத்தான் இருக்கும்.
ஒரே ஒருமுறை, தற்செயலாக காமம் குறித்துப் பேசிய அன்றிரவே தொலைபேசியில் அழைத்து என்னுடன் கலவி கொள்வாயா என்று கேட்கிற நண்பன்,மறுத்ததும் அத்தனை நெருங்கிய நட்பைத் துண்டித்த நண்பன், ஒரு பெண் பொதுவாக காமத்தை பற்றி ஏன் பேசுவதில்லை என்பதற்கான பதிலாக இருக்கிறான்.கிரேட் இந்தியன் கிச்சனில் முன் விளையாட்டுகள் செய்த பிறகு உறவு கொள்ளலாமா? என்று தயங்கித் தயங்கி மனைவி கேட்டதும் கணவனின் எதிர் வினையைக் கவனித்திருப்பீர்கள் தானே? இந்தப் புத்தகம், நன்றாகக் கலவி கொள்வதற்கான வழிமுறைகளையோ, சந்தோசமாக வாழ்வதற்கான குறிப்புகளையோ பற்றியதானதல்ல. நம் சமுதாயத்தில் காமத்தை எந்தப் பார்வை கொண்டு பார்க்கிறோம்.
அதை எப்படிக் கையாள்கிறோம். அந்த வார்த்தையை எப்படி தவறான
வார்த்தையாகச் செய்து விட்டோம் என்பதைப் பற்றிய ஒரு அலசலை முன்வைக்கும் முயற்சியே இந்தப் புத்தகம் என்று முன்னுரையில் தெளிவாகச் சொல்லி விடுகிறார்.
தகாத வார்த்தை, திருமணம் தாண்டிய உறவுகள், தன்பால் உறவு, சுய இன்பம், ஈர உரையாடல்கள், பாலியல் கல்வி,பெண்களின் உடலுறவு குறித்த ஆர்வமின்மை, நல்லுறவிற்கான சில விதிமுறைகள், குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறையில் பெற்றோர்களின் பங்கு, ஆண் அகந்தை,இப்போதைய தேவையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையும் என்பது போன்ற தலைப்புகளில்,32 அத்தியாயங்களில் நாம் பொது வெளியில் பேசத் தயங்குகிற அத்தனை விஷயங்களையும் விரிவாக பேசுகிறார்.
ஏன் பல பெண்கள் உச்சம் பெறாமலே கணவனிடம், உச்சம் அடைந்து விட்டது போல் நடிக்கிறார்கள் என்பதற்கான காரணங்களை படித்து பாருங்கள். ஆச்சரியப்படுவீர்கள். நம் நட்பில் இருக்கும் ஒருவர் எத்தனையோ பேருடன் நட்பில் இருந்தாலும் வராத பொறாமையும் கோபமும், நாம் காதலிக்கும் ஒருவர் இன்னொருவர் மீது அன்பு செலுத்தினால் வருவது ஏன் என்பதையும் விரிவாக பேசுகிறார்.
இயந்திரங்களை போல இயங்கிக் கொண்டிருக்கும் திருமண வாழ்வில் எத்தகைய மாற்றங்களை நாம் கொண்டுவர வேண்டும் என்பதையும் பேசுகிறார். கலவி என்பது வெறும் உடல்கள் சம்பந்தப்பட்டது அல்ல என்பதை உணரும் போது மட்டுமே இந்த சமுதாயத்தின் பாலியல் குற்றங்கள் குறையும் என்கிறார். அதை நாம் எப்படி மறுக்க முடியும்? நம்முடைய பிள்ளைகள் பாலுறவில் ஈடுபடுவதற்கு முன் அது குறித்து நுட்பமான தகவல்களை, நம்மை எத்தனை பேர் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க எண்ணுகிறோம் என்ற அவரது கேள்விக்கான பதில் உங்களிடம் இருக்கிறதா? எனக்கு அதைச் செய்ய முடியாத மனத்தடை இருக்கிறது.
காதல் மற்றும் காமம் குறித்த கட்டுக் கதைகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் பெற்றோர்களின் பங்கு இரண்டும் மிக முக்கியமான கட்டுரைகள்.
அவர் சொல்லும் எல்லாக் கருத்துகளையும் நம்மால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.
உதாரணத்திற்கு இதைப் பாருங்கள். உடன் பணிபுரியும் ஒருவர்.திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் அவரது மனைவியின் கண்களில் அவர் கணவன் மீதான காதலைப் பார்த்து வியந்து அதற்கான காரணத்தை கேட்கிறார். என் மனைவிக்கு ஒரு தூரத்து சொந்தக்காரரிடம் உறவு உள்ளது. அவள் வருடம் ஒரு முறை அவரைப் போய் பார்த்து அவருடன் நேரம் செலவழித்து விட்டு வருவாள். வருடத்துக்கு முறை அவனைப் பார்ப்பதிலும் அவனோடு சில நாட்களை கழிப்பதிலும் அவள் மகிழ்ச்சி அடைகிறாள்.
அந்த மகிழ்ச்சி அதுவாக எங்கள் வீட்டிலும் பரவுகிறது என்று சொல்வதை, இறுகிய ஆண்மனங்கள் எப்படி ஏற்றுக் கொள்ளும்? இதில் உள்ள அத்தனை கருத்துக்களும் அனைவருக்கும் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாதவனவற்றைக் குறித்து இன்னும் ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். அப்படியும் ஏற்புடையதாக இல்லை விவாதிப்போம். விளங்கிக் கொள்வோம் என்று முடிக்கிறார்.
பெருவாரியான ஆண்களுக்கு படுக்கையில் பெண் என்பவள் தன்னை போல் உணர்வுகள் கொண்ட ஒரு இணையரில்லை.அவள் அவர்களின் கழிவறை இருக்கை மட்டுமே. அவனுக்கு தன் விந்துவை உந்நிதத் தள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அவசரம் அதற்கொரு துவாரம் வேண்டும் அதற்காகவே தன் காதலியோ,மனைவியோ பிறவி எடுத்துக் காத்திருப்பதாக ஒரு எண்ணம். ஆக அவனைப் பொறுத்தவரை அவன் அமர்ந்து விந்துவை வெளியேற்ற அவள் ஒரு கழிவறை இருக்கை.
இப்படி வாசிக்கையில் பல அதிர்வுகளையும் உண்டாக்கி,நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள வைக்கும் செய்திகள் நிறைந்த புத்தகம்.
நூல்: கழிவறை இருக்கை
ஆசிரியர்: லதா
வெளியீடு: நோராப் இம்ப்ரிண்ட்ஸ்
பக்கம்: 224
விலை: ரூ.225

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

