ஒரு நூலை வாசிப்பதற்கு நூல் ஆசிரியரைப் பற்றிய அறிமுகமோ நூல் தலைப்பைப் பற்றிய எண்ணமோ இல்லாமல் திறந்த மனதுடன் விசாலமான புரிதலுடனும் எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாகவும் வாசித்தல் சிறப்பாக அமையும். முன் முடிவுகளற்ற மன திறப்பின் ஊடாக நாம் வாசிக்கும் நூலின் வழியாக புதிய புதிய அறிவுத் தேடல்களும் அதன் வழியே புதிய புதிய சிந்தனைகளும் நமக்குள் உதயமாகலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கான சட்ட திட்டங்களும் பெண்ணுக்கான சட்டத்திட்டங்களும் ஏட்டளவில் ஒன்றாய் இருந்தாலும் வீட்டளவிலும் நாட்டளவிலும் பெண்ணை நாம் இன்னும் ஒரு படி கீழாகத்தான் வைத்துப் பார்க்கிறோம். அப்படியான பெண் இனம் சில விஷயங்களை பேசுதல் என்பது அவரது குலத்திற்கே இழுக்கு என்ற காலம் காலமாக எழுதப்பட்ட பொதுப் புத்தியில் நாமும் அதை பதிந்து வைத்திருக்கிறோம். குடும்ப அமைப்பிலும் பொதுவெளியிலும் பேசக்கூடாத பொருள் என யாருக்கும் எதுவும் விதிகள் அமைக்கப்படுவதில்லை. ஆயினும் உடலுறவு சம்பந்தமாகவும் குடும்ப அமைப்பில் கணவன் மனைவி இடையிலான இல்லறம் தொடர்பாகவும் ஒரு பெண் பொதுவெளியில் பேசத் தொடங்கினால் அவளை சமூகம் பார்க்கும் பார்வை எப்படி இருக்கும் என்பது நமது சிந்தனைக்கு விடப்படுகிறது.
பேசாப் பொருளைப் பேசத் துணியும் இன்றைய பெண்களின் மனத் திறப்பிற்கு இந்த நூல் ஒரு மிகப்பெரிய பாதையைக் காட்டி இருக்கிறது. நூலாசிரியர் இதில் யாரும் பேசத் துணியாத கருப்பொருட்களை எல்லோரும் உணர்ந்து கொள்ளும்படியும் யாரும் பேசாத கோணத்திலும் எழுதி இருக்கிறார்.
நூலின் தலைப்பை வாசிக்கையிலும் 32 கட்டுரைகளில் தலைப்புகளை பார்க்கும் போதும் இது அதிகப்படியான விரசம் நிறைந்த ஆபாசமான நூலாகக் கருதப்பட் வாய்ப்பிருப்பினும் அப்படியான எந்தவிதமான முன் முடிவுகளுக்கும் வர முடியாமல் நம்மை நுட்பமான புள்ளிகள் வழியாக கற்றுக்கொள்ள இழுத்துச் செல்கிறார் நூல் ஆசிரியர்.
மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளாக உணவு உடை இருப்பிடம் என்ற வரிசையில் உணவிற்கு அடுத்ததாக காமம் என்ற பதத்தையும் தொடர்பு படுத்த வேண்டும் என்று நூலாசிரியர் நூலின் வழியாக கோடிட்டு காட்டுகிறார். பெண்ணும் சமூகமும் என்பது பொதுவெளியில் பேசக்கூடாத விஷயங்களை பேசுவதற்கான அனுமதியைக் கூட வேண்டி நிற்கும் பெண்ணாகவே இன்றைக்கும் கட்டமைப்பில் பெண் உழன்று கொண்டிருக்கிறாள்.
ஒரு ஆண் தனது உடல் பசியை பெண்ணின் விருப்பமின்றியோ முழு மனதுடன் பெண் சம்மதம் இன்றியோ நிறைவேற்றிவிட்டு செல்லும் எத்தனையோ குடும்பங்கள் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தனக்கான இச்சையை பெண்ணின் மேல் திணித்துவிட்டு அதை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு கழிவறை இருக்கையாகவே பெண்ணை இந்த சமூகம் பார்க்கிறது என்ற அடிப்படையில் இந்நூலில் உள்ள கட்டுரைகள் கோடிட்டு காட்டும் வேளையில் பெண்களின் மனதை முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்பதே அதன் அடிப்படை வேண்டுகோளாக உணர்த்தப்படுகிறது.
ஆனாதிக்கும் நிறைந்த சமூகத்தில் பெண்கள் அதிகமாக அடிமைப்பட்டு வாழ்க்கையை நடத்த வேண்டிய தருணத்தில் காமம் மீதான அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் உடலுறவு தொடர்பான அவர்களின் ஆசைகளையும் இந்த சமூகம் முழுமையாக காது கொடுத்து கேட்கிறதா என்ற மிகப்பெரிய வினாவை எழுப்பி அதன் வழியே பெண்ணைப் புரிந்து கொள்ளுங்கள் என்று ஆண்களுக்கு உணர்த்துகிறது நூல்.
நூலின் தகவல்கள்
நூல் : கழிவறை இருக்கை
நூலாசிரியர் : லதா
விலை : ரூ. 225/-
வெளியீடு : நோராப் இம்ப்ரிண்ட்ஸ்
முதல் பதிப்பு : நவம்பர் 2020
தொடர்புக்கு : 9790919982
பக்கங்கள் : 168
எழுதியவர்
இளையவன் சிவா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

