விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத் தோழர்களுக்கு வங்கத்தின் புரட்சிக் கவிஞர் காஜி நஜ்ரூல் இஸ்லாம் எழுதிய கடிதம்
தமிழில்: ஞா.சத்தீஸ்வரன்
என் அன்பிற்கினிய மய்மன்சிங் பகுதியின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் சகோதரர்களே,
என் நெஞ்சார்ந்த வணக்கங்களையும் வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களிடையே வர வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம் எனக்கிருந்தது. உங்களின் இந்தப் புத்தெழுச்சியின் மத்தியில் என்னை நான் புனிதப்படுத்திக் கொண்டு பாக்கியவானாக வேண்டும் என நினைத்தேன். ஆனால், விதி அதற்கு மாறாக இருந்ததால் எனது அந்த ஆசை நிறைவேறவில்லை. என் உடல் இன்னமும் மிகவும் பலவீனமாக உள்ளது; ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் சக்தியே எனக்கில்லை. எனது இந்த விருப்பமற்ற இயலாமையை நீங்கள் அனைவரும் பொறுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். இந்த மய்மன்சிங் எனக்குப் புதிதல்ல. இந்த மய்மன்சிங் மாவட்டத்திடம் நான் அளவற்ற கடன்பட்டவன். எனது பால்யகாலத்தின் பல நாட்கள் இம்மண்ணில்தான் கழிந்தன. இங்கே தங்கி சில காலம் கல்வியும் கற்றேன். அந்த இனிய நினைவுகள் இன்னும் என் மனதில் ஒளிவீசி நிற்கின்றன. என் சிறுவயது அறிந்த இந்தப் பூமியின் புனித மண்ணைத் தலைமேல் சுமந்து பாக்கியவானாக வேண்டும் என்றும், மய்மன்சிங் மக்களின் பெருந்தன்மைமிக்க இதயத்தின் தொட்டிலால் என் இரும்பு மனதைப் பொன்னாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் அது நிகழவில்லை – இது எனது துரதிர்ஷ்டம்! எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் செய்து எனக்கு மீண்டும் உடல்நலத்தைக் கொடுத்தால், உங்களின் கஃபர்காவ் நிகில் பங்கிய பிரஜாசம்மேளனத்தில் (மாநில மாநாட்டில்) கலந்து கொண்டு உங்களை நேரில் சந்திக்கும் நற்பேறு எனக்குக் கிடைக்கும்.
நீங்கள்தான் தேசத்தின் உயிர், தேசத்தின் நம்பிக்கை, தேசத்தின் எதிர்காலம். மண்ணின் மீது கொண்ட அன்பு உங்கள் இதயங்களின் ஒவ்வொரு மூலையையும் நிரப்பியுள்ளது. நீங்கள் தான் இந்த மண்ணின் உண்மையான பிள்ளைகள். வெயிலில் கருகியும் மழையில் நனைந்தும், பகல் இரவு பாராமல் படைப்பின் முதல் நாளிலிருந்தே இந்த மண்ணுலகை அன்புக் குழந்தையைப் போல நீங்கள் தான் சீராட்டி வளர்த்துப் பாதுகாத்து வந்தீர்கள், பாதுகாத்து வருகிறீர்கள், பாதுகாப்பீர்கள். உங்கள் நிலத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை யாரேனும் எடுக்க வந்தால்கூட, அதற்காக நீங்கள் உங்கள் தலையை கொடுக்கவும், அவர்களது தலையை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். இவ்வளவு அன்பில் நனைந்த மண், இவ்வளவு இரத்தத்தில் செழித்த பச்சை வயல்கள் – என் விவசாய சகோதரர்களைத் தவிர இதற்கு வேறு உரிமையாளர் யாருமில்லை. என் இந்த விவசாயச் சகோதரர்களின் அழைப்புக்கே மழைக்கால வானம் மேகத்தால் நிரம்புகிறது. அவர்களது நெஞ்சத்தின் பாசவெள்ளத்தைப் போலவே நிலங்களும் குளங்களும் நிறைந்து வழிகின்றன. எனது சகோதரர்களின் அன்பு அரவணைப்பினால் வயல்வெளிகள், பள்ளிகள், பயிர்கள் அனைத்தும் பசுமை நிறைந்து செழித்து நிற்கின்றன.
எனதிந்த விவசாயச் சகோதரர்களின் மனைவியரின் பிரார்த்தனைகளால் பச்சை நெல் பொன் நிறம் பெறுகிறது. இந்த வயல்களையே கேளுங்கள்; அதன் எதிரொலி இவ்வாறாக உங்களுக்குக் கேட்கும்:
“இந்த வயல் உழுபவனின் வயல், இந்த மண் உழுபவனின் மண்; இதில் விளையும் பூக்களும் கனிகளும் உழவனின் மனைவிக்குரியது.”
அதேபோல் என் தொழிலாளர் சகோதரர்களே — தங்கள் இரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் கொடுத்து எஜமானர்களின் மாளிகைகளைச் சிவப்பாக்குகிறவர்கள் நீங்கள்! உங்கள் எலும்பையும் மஜ்ஜையையும் உருக்கி வெள்ளிக்காசுகள் வடிக்கப்படுகின்றன. உங்கள் கண்ணீர் கடலில் விழுந்து முத்துகளாக மாறுகின்றன. ஆனால், இன்று நீங்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பசியால் வாடுபவர்கள். உங்களுக்குக் கல்வியில்லை, பயிற்சியில்லை; பசி தீர உணவும் கிடைக்கவில்லை; உடுத்தத் துணியுமில்லை.
அய்யோ சுயநலக்காரர்களே! அய்யோ அரக்க மனமுடைய மனிதர்களே! இன்று விவசாயியின் துயரமும் தொழிலாளியின் வேதனையும் உலகையே அதிரச் செய்திருக்கிறது. இப்போது நமக்கான நாள் வந்து விட்டது. நீங்கள் மிகுந்த துன்பம் அனுபவித்துவிட்டீர்கள் சகோதரர்களே! இப்போது அதற்கான தீர்வின் தேவதூதன் வருகிறான். உங்கள் கலப்பையும் மண்வெட்டியுமே அவனுடைய ஆயுதங்கள். உங்கள் குடிசையே அவனது வீடு. உங்கள் கிழிந்து நைந்த அழுக்கு உடையே அவனுடைய கொடி. நீங்கள் தான் அவனுடைய தந்தையும் தாயும்! உங்களிடையே வரவிருக்கும் அந்த மாமனிதனின் நற்செய்தி வருகையை எதிர்நோக்கி, உங்கள் புத்தெழுச்சிக்கு சலாம் செய்து, நான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன் – இதோ, புதிய சூரியன் உதயமாகிறது!
இப்படிக்கு,
காஜி நஜ்ரூல் இஸ்லாம்
குறிப்பு:
1926 ஆம் ஆண்டு ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தற்போதைய வங்கதேசத்தின் மய்மன்சிங் நகரில் மய்மன்சிங் மாவட்ட விவசாயிகள்–தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த நிகழ்வை முன்னிட்டு வங்கத்தின் புரட்சிக்கவிஞர் காஜி நஜ்ரூல் இஸ்லாம் கிருஷ்ணநகரிலிருந்து எழுதிய கடிதம் இது. தொழிற்சங்கத் தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஹேமந்தகுமார் சர்க்கார் அதை மாநாட்டில் வாசித்தார். இது பின்னர் நஜ்ரூலின் ‘லாங்கோல்’ இதழில் வெளியாகியுள்ளது.
📚 எழுதியவர்:
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

