கெடை காடு - ஏக்நாத் - டிஸ்கவரி புக் பேலஸ் | Kedai kaadu

ஏக்நாத் எழுதிய “கெடைக்காடு” – நூலறிமுகம்

முகநூலில் தங்கவேல் ராஜேந்திரன் எனும் நான், நாவல் வாசிப்பில் மிகவும் விருப்பமுடையவன். கவிதை, சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை விடவும் அதிகம் விரும்புவேன். அப்படி ஒரு நிலையில் தங்களின் கெடைக்காடு நாவலினைத் தற்போது படிக்க வாய்ப்புக் கிடைத்து, படித்துவிட்டேன். படித்தேன் என்பது பத்தோடு பதினொன்று என்று ஆகிவிடும்; அதைவிட, கதையோட்டிகள் உச்சி, தவிட்டான், கந்தையா போன்றவர்கள் மலையை விட்டு இறங்கிவிட்டாலும் நான் இன்னும் குள்ராட்டி மலையிலிருந்து இறங்கவேயில்லை. தாமதமாக வாசித்ததில் வருத்தம்தான் தோழர்!

நான் சென்னையிலிருந்து எனது சொந்த ஊரான வந்தவாசி அடுத்த சேத்துப்பட்டில், தாத்தாவின் கிராமமான கங்கை சூடாமணிக்கு அடிக்கடி செல்வதுண்டு, அவரது வீட்டை அடுத்து, சற்றுத் தள்ளி விவசாய நிலங்கள் இருந்தன. அதில் தாத்தாவுக்கும் ஒரு சிறிய அளவில் நிலம் இருந்தது. அந்த நிலங்களுக்கு அப்பால் ஒரு ஏரியும் உயரம் குறைந்த குன்றும் சிறு குகை அமைப்போடு இருந்தது. அவ்விடத்தில் கிராமத்துப் பிள்ளைகளுடன், சில நாட்கள் அவர்கள் இல்லாமலும் தினமும் மாலை நேரம் துவங்கி, இரவு எட்டு மணிவரை பொழுதைக் கழிப்பேன். அந்த ஒரு இனிமையான தருணம் இனிவருமா?

தாத்தாவின் அந்தத் துண்டு நிலத்தில் கிடை மடக்க வேண்டும்; கீதாரி இன்னும் சரியான நாளைச் சொல்லவில்லை; இன்னைக்கு நாளைக்கு என்று நாட்களைக் கடத்துகிறான் என்று புலம்பிக் கொண்டிருந்தார். அது என்ன கிடை மடக்குதல்? அறுவடை முடிந்து காய்ந்து கொண்டிருந்த நிலத்தில் உழவைத் துவங்குவதற்கு முன்பு, ஆடுகளின் இருத்தல் மூலம் அதன் கழிவுகள், அதாவது ஆட்டின் புழுக்கை மற்றும் மூத்திரத்தை அதிக அளவில் உரமாகப் பெறுவதே. நாமும் அதைப் பார்க்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தேன். ஒரு நாள் மாலை கீதாரி தனது பட்டியில் உள்ள மொத்த ஆடுகளையும் தாத்தாவின் நிலத்தில் இறக்கி, மந்தைகள் பக்கத்து நிலங்களுக்குச் செல்லாமல் தடுப்புகளைச் சரிப்படுத்தினார். இரவு எட்டு மணியளவில் பாட்டி, எனக்கும் தாத்தாவுக்கும் மற்றும் கீதாரி அவரது ஆட்களுக்கும் சேர்த்து இரவு உணவினைக் கொண்டுவந்தார். நல்ல நிலவு வெளிச்சம்; அருமையான சாப்பாடு. அன்றிரவு கண்விழிப்பு; தாத்தா பாட்டியின் கதைகளும் கீதாரியின் அனுபவங்களும் இரவு இரண்டு மணி வரை சென்றது; அங்கும் நரிகள் வரும் என்ற பயம் வேறு. நான் எப்போது உறங்கினேன் எனத் தெரியாது. காலையில் பார்த்தபோது கலைந்து போன சந்தையைப்போல நாற்றமும் சேறுமாக நிலத் துண்டு இருந்தது. பின்பு தாத்தா உழவு ஓட்டத் தொடங்கினார். மேய்ச்சலோ கிடை மடக்குதலோ அது ஒன்று மட்டுமே எனது அனுபவம். அதன் பின்பு நான் அண்ணி என அன்போடு அழைக்கும் சு. தமிழ்ச் செல்வி அவர்களின்

‘கீதாரி’ எனும் நாவல் மிகுந்த சோகத்துடன் கலந்த அனுபவத்தைத் தந்தது. இவைகளிலிருந்து வெகுதூரம் தள்ளி வந்து, மேய்ச்சல் பக்கத்தை கதையாகச் சொல்வது மாறுபட்ட, நேர்த்தியான ஒன்று.அண்மையில் படித்த புத்தகம் : கெடை காடு(நாவல்) - வா. நேரு

விலங்குகள் நிறைந்த காட்டுக்குள் கால்நடைகளை ஓட்டிச் சென்று, அவைகளை மேய்ச்சலுக்கு உட்படுத்துவது சாதாரண காரியமல்ல. அந்த ஊரின் குறைந்த வளத்தையும் அம்மக்களின் வாழ்நிலையையும் காட்டி, கால்நடைகளின் உணவுக்காக, அதற்கான மாற்று ஏற்பாடாக, மந்தைகளை மலையில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு இடப்பெயர்ச்சி செய்து உணவுடன் அவற்றுக்கு ஒரு புத்துணச்சியையும் அளிப்பது ஒரு பக்கம். அதனுள் கலந்து வரும் அந்தக் கிராமத்தின் மனிதர்களை – அவர்களின் வெள்ளந்தியான மனநிலை மற்றும் சிலரது குணக்கேடல்களையும் கொண்டாட்டங்களையும் எடுத்துக் காட்டுவது ஒரு பக்கம்; கிராமத்துக்கே உரித்தான நக்கல் நய்யாண்டி நுணுக்கமான குத்தலுடன் கேலியும், இவற்றின் கலவையாக இந்நாவல் செல்கிறது; அதே சமயம் அதன் ஒட்டு மொத்த சுவையைக் கூட்டுவது, நாவலின் பாத்திரங்கள்தான். உச்சிமாகாளி இதில் உச்சம் பெற்றவன்; இவன் ஒருதலை நாயகன். அளவற்றக் காதலுடன் நிகரற்ற அனுபவம் உள்ளவன். அட்டகத்தி திரைப்பட நாயகனைப் போல காதலில் பல தோல்விகள் வந்தாலும் அதிலேயே கிடந்து உழலாமல், அடுத்ததைத் தேடிக் கடப்பதைப்போல, இது போனால் போகட்டும் போடா… அடுத்தது வரும்; அதுவும் போனால்தான் என்ன? என வாழ்க்கையை தன் புரிதலின் வழியே கடத்துகிறான். அடுத்து அதிகம் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட கந்தைய்யாவின் குடிப்பழக்கம் என் உறவினரில் ஒருவரை நேரடியாகக் கண்டது போல இருந்தது. ஊரில் என் உறவினர் ஒருவர் அதிகம் செலவு செய்பவரல்ல இருந்தாலும், என்னைப் பார்த்தவுடன் நலம் விசாரித்துவிட்டு, “வாராத ஆளு வந்திருக்க; எங்கிட்ட காசு குறைவா இருக்கு; கடைக்குப் போக பத்தாது” என்பார். அருகில் இருப்பவர்கள் “உனக்கு எப்பதான் காசு இருந்தது? இருக்கத எடு, செலவப் பாத்துக்கிடுவோம்” என்றவுடன், மதுக்கடைக்கு வரச் சம்மதிப்பார்; இருக்கும் காசுக்குத் தக்கபடி அரை பாட்டில் மது வாங்கிக் குடிப்போம். பத்து நிமிடங்கள் கழித்து எங்கள் நால்வரில் ஒருவர் அப்போது மெதுவாக எனது உறவினரிடம், “இந்த சரக்கு நாலு பேருக்கு எப்படிய்யா போதும்? அண்ணன் வேற ஊரில் இருந்து வந்திருக்கிறார். இன்னும் ஏதாவது தேருமான்னு பாருங்க, ஒரு கால் பாட்டிலாவது வாங்கலாம்” என்பார். அப்போது நான் என்னிடம் ஐம்பது ரூபாய் உள்ளது எம்பேன்; அடுத்து ஒருவர் என்னிடமும் ஐம்பது ரூபாய் இருக்குது என்பார்; உடனே எனது உறவுக்காரர் “அப்ப சரி மிச்சக் காசை நான் தரேன்; இன்னொரு அரை பாட்டில் வாங்கலாம்” என்பார்.

இப்படியே அதிகம் அவரே செலவிட்டுவிட்டுப் பின்பு, போதையில் தொடர்ந்து சிரித்தபடியும் காறித் துப்பிக் கொண்டும் இருப்பார். வீட்டு வாசல் வரையில்தான் துப்பலும் கேலியும், அதன் பின் அவரது மனைவி பொறுப்பேற்றுக் கொள்வார். ராம சுப்பு இல்லாத ஊர்களோ கிராமங்களோ இல்லை; ஊரின் சங்கத்திலும் நொடிஞ்சான் போன்றவர்களின் வாழ்விலும் வழி மறிப்பதே அவன் வேலை. கேசரி, தவிட்டான், ஊர் என்ன என்னை ஒதுக்கி வைப்பது? நான் ஊரை விட்டு ஒதுங்கிக் கொள்கிறேன் எனும் கல்யாணி இப்படிப் பல பாத்திரங்கள் கதையின் நடத்தலுக்கு பொறுப்பேற்கின்றனர். கெடைக் காடு: இந்த நாவல் வாசிப்பவர்களை வாசிப்பு எனும் கிடையில் தள்ளுகிறது! இதை மேய்ந்த வாசகர்களுக்குப் போதுமான தீனியும் இதில் கிடைத்தது. நன்றி தோழர்!

நூலின் தகவல்கள்  

நூல் : கெடைக்காடு

ஆசிரியர் : ஏக்நாத் 

விலை : ரூ.100

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

 

எழுதியவர் 

தங்கவேல் ராஜேந்திரன்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 


 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *