கீழடியும் – கார்பன் நானோ குழாய்களும் | ஜோசப் பிரபாகர்

கீழடியும் – கார்பன் நானோ குழாய்களும் | ஜோசப் பிரபாகர்கடந்த இரண்டு ஆண்டுகளாகவே “கீழடி” என்ற சொல் தமிழகத்தில் மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியிலும், வரலாற்று ஆசிரியர்களாலும் அதிகம் உச்சரிக்கப்படும் சொல்லாக மாறியிருக்கிறது. அங்கு நடந்த தொல்லியல் ஆய்வின் முடிவுகள் தமிழினத்தை மேலும் கொஞ்சம் கர்வப்பட வைத்துள்ளன. தவறான பல வரலாற்று ஊகங்களை மாற்றியிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் கீழடி மண்ணுக்கு அடியில் புதைந்து கிடக்கும் மாபெரும் தமிழ் நாகரீகத்தின் துருப்புச் சீட்டு. தோண்டத் தோண்ட ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் ஆச்சரியமான இன்னொரு தகவல் ஒன்று கிடைத்தது. புகழ்பெற்ற நேச்சர் (Nature) அறிவியல் ஆராய்ச்சி இதழ் குழுமம் வெளியிடும் சயின்டிஃபிக் ரிப்போர்ட் (scientific report) என்ற ஆராய்ச்சி இதழில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி கீழடியைப் பற்றிய ஒரு அறிவியல் கட்டுரை வெளியாகியுள்ளது. அக்கட்டுரை சொல்லும் செய்தி: கீழடியில் கிடைத்த பானை ஓடுகளின் உட்புறத்தை வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி பார்த்தபோது அதில் இருக்கும் கருப்பு வண்ணப்பூச்சில் கார்பன் நானோகுழாய்கள் (Carbon Nano Tubes) இருக்கின்றன என்பதுதான்.

இந்தக் கட்டுரையை வெளியிட்டவர்கள் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் விஜயானந்த் சந்திரசேகர், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் நாகபூபதி மோகன், எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக பேராசிரியர் சுரேஷ் பெருமாள் மற்றும் இவரது குழுவினர்.

கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் தமிழி எழுத்துக்கள் இருப்பது ஏற்கனவே ஆச்சரியமாக பார்க்கப்படும் பொழுது, இந்த பானை ஓடுகளில் இருக்கும் கருப்பு வண்ணப்பூச்சில் கார்பன் நானோகுழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

எதற்காக பானை ஓடுகளை வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தினார்கள்?

கீழடியில் கிடைத்த பானை ஓடுகளின் உட்புறச் சுவரில் பூசப்பட்டிருக்கும் கருப்பு வண்ணம் பளபளப்புத்தன்மை குறையாமலும், சிதையாமலும் இருந்தது. கீழே உள்ள படத்தை பார்க்கும்போது உங்களுக்குப் புரியும்.

Source: Discovery of carbon nanotubes in sixth century BC potteries from keeladi, india, Scientific reports, 10, Article number 19786(2020), Vijayanand Chandrasekaran, Nagaboopathy Mohan, et.,al

இந்த பானை ஓடுகளின் வயது ஏறத்தாழ 2400 ஆண்டுகள். இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் பளபளப்புத்தன்மை மங்காமலும், சிதையாமலும்  இருப்பதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோதுதான் இந்த கார்பன் நானோ குழாய்கள் கண்டுபிடிப்பு வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.

இவ்வளவு காலம் இந்த கருப்புவண்ணம் சிதையாமல் இருப்பதற்கும், அதில் இருக்கும் கார்பன் நானோ குழாய்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? அப்படியென்ன கார்பன் நானோ குழாய்களில் இருக்கின்றன?

முதலில் நானோ தொழில் நுட்பம் பற்றி சில அடிப்படையான விஷயங்களைப் பற்றி புரிந்து கொள்வோம்.

நானோ தொழில்நுட்பம் வளர்ந்து வரும் ஒரு மிக முக்கியமான ஆராய்ச்சித்துறை. மிக மிகச் சிறிய அளவில் (நானோ மீட்டர் அளவில்) நமக்கு ஏற்றவாறு பொருட்களையோ, கருவிகளை உருவாக்குவது ஆகும். ஒரு நானோ மீட்டர் (1 nm) என்பது 0.000000001 மீட்டர். அதாவது ஒரு மீட்டரை நூறு கோடி பாகமாக பிரித்தால், அதில் வரும் ஒரு பாகத்தின் நீளம்தான் ஒரு நானோ மீட்டர். இந்த நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் கருவிகள் கணினி துறை, விண்வெளித்துறை, மருத்துவத்துறை என பல துறைகளிலும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால் இந்த நானோ தொழில்நுட்பம் இயற்கையிலேயே இருக்கிறது. தாமரை இலையில் ஏன் தண்ணீர் ஒட்டுவதில்லை? காரணம் அத்தாமரை இலையில் நானோ அளவில் இருக்கும் முட்கள் போன்ற அமைப்பு. கிட்டத்தட்ட பலாப்பழத்தின் தோலில் இருப்பது போல. ஒரு பந்தை அந்த பலா பழத்தின் மீது வைத்தால் பந்து முட்களால் எப்படி தாங்கப்படுகிறதோ அதுபோல தண்ணீர்த் துளிகளை தாமரை இலையில் இருக்கும் நானோ முட்கள் தாங்கிக்கொள்கின்றன. இதனால் அது இலையோடு ஒட்டாமல் இருப்பதுபோல் தெரிகிறது.

இதே போல் நானோ தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கையாக ஒரு துணியின் பரப்பில் நானோ அளவில் முட்களை உருவாக்கி தண்ணீர் ஒட்டா ஆடைகளை தயாரிக்க ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அது விற்பனைக்கு வரலாம். அப்படி வந்து விட்டால் மழை பெய்யும்போது சட்டை நனைந்துவிடுமே என்று கவலைப்படத் தேவையில்லை. மருத்துவத்துறையிலும், கணினித்துறையிலும் நானோ தொழில்நுட்பம் பயன்பாடு பற்றி தனிபுத்தகமே எழுதலாம். அந்தளவுக்கு இத்தொழில்நுட்பம் முக்கியத்துவம் வாய்ந்தது.

நானோ தொழில்நுட்பத்தில் கார்பன் அணு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் கார்பன் அணு சிறப்பான பண்புகளை கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் பெரும்பாலான பொருட்கள் கார்பன் சார்ந்த சேர்மங்களால் ஆக்கப்பட்டிருக்கின்றன. இந்த பூமியில் உயிர் உருவாவதற்கு கார்பன் அணு மிக இன்றியமையாயது.

அதுமட்டுமல்லாமல், தனிம வரிசை அட்டவணையில் உள்ள மற்ற அணுக்களோடு கார்பன் அணு மிக வலுவான பிணைப்பை ஏற்படுத்துகிறது. மற்றெந்த அணுவும் இந்த மாதிரியான வலுவான பிணைப்பை ஏற்படுத்துவதில்லை. எடுத்துக்காட்டாக ஹைட்ரஜன்-ஹைட்ரஜன் அணுப்பிணைப்பு மற்றும், ஆக்சிஜன்- ஆக்சிஜன் அணுப்பிணைப்பை விட கார்பன்-கார்பன் பிணைப்பு வலிமையானது. இதை வேதியியலில் “சகப்பிணைப்பு (Covalent bond)” என்றழைப்பார்கள். அதிலும் குறிப்பாக “sp2 சகப்பிணைப்பு”. ஒரு கார்பன் அணுவின் இணைதிறன் பட்டையில் (valence band) உள்ள எலக்ட்ரானும் இன்னொரு கார்பன் அணுவின் இணைதிறன் பட்டையில் உள்ள எலக்ட்ரானும் இணைந்து இந்த சகப்பிணைப்பு உருவாக்கப்படுகிறது. இந்த இணைப்பில் இரண்டு எலக்ட்ரான்களும் சமமாக பங்கேற்கிறது. அதனால்தான் இதன் பெயர் சகப்பிணைப்பு. வைரம் மிக உறுதியானது என்பதை அனைவரும் அறிவர். கார்பன் அணுக்களால் ஆன வைரத்தின் உறுதித்தன்மைக்கு காரணம் இந்த சகப்பிணைப்புதான்.

அடுத்ததாக கிராபீன் (Graphene) எனப்படும் கார்பன் மூலக்கூறு பற்றி அறிந்து கொள்வோம். ஏனென்றால் கார்பன் நானோ குழாய்கள் இந்த கிராபீன் மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டிருக்கின்றன. கிராபீன் மூலக்கூறு என்பது அறுங்கோண வடிவில் (hexagonal)  பிணைக்கப்பட்ட கார்பன் அணுக்களால் ஆன ஒற்றை அடுக்கு (single layer) அல்லது படலம் போன்ற அமைப்பு. கீழே உள்ள படத்தில் இது காட்டப்பட்டுள்ளது.

கிராபீன் மூலக்கூறு

இந்த கிராபீன் மூலக்கூறில் உள்ள ஒவ்வொரு கார்பன் அணுவும் தன்னை சுற்றி மூன்று கார்பன் அணுக்களோடு சகப்பிணைப்பில் இணைந்திருக்கும். இந்த கிராபீன் படலத்தை பாயை சுருட்டுவது போல் சுருட்டினால் கார்பன் நானோ குழாய்கள் கிடைக்கின்றன. இந்த உருளை வடிவ குழாய்களின் விட்டம் சராசரியாக 1 நானோ மீட்டர். கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம். நீளம் கிட்டத்தட்ட நூறு நானோ மீட்டர்.

இரு விதமான கார்பன் நானோ குழாய்கள் இருக்கின்றன. ஒன்று ஒற்றைச்சுவர் கார்பன் நானோ குழாய்கள் (Single Wall Carbon Nano Tubes – SWNT). அதாவது ஒரு சுவர் மட்டும் கொண்டது. இன்னொன்று பல்சுவர் கார்பன் நானோ குழாய்கள் (Multi Wall Carbon Nano Tubes – SWNT). இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட நானோ குழாய்கள் ஒன்றின் மேல் ஒன்று சுருட்டியது போல இருக்கும். கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.  இதன் விட்டம் 1 முதல் 100 நானோமீட்டருக்குள் இருக்கும்.

இந்தக் கார்பன் நானோ குழாய்கள் மிகச்சிறப்பான பண்புகள் கொண்டவை. சில பண்புகளை நாம் பார்ப்போம்.

மிக முக்கியமான ஒரு பண்பு இந்த கார்பன் நானோ குழாய்களின் உறுதித்தன்மை. இயற்பியலில் இதை “இழுவலிமை (tensile strength)” என்ற அளவீட்டால் அளப்பார்கள். ஒரு பொருளின் இழுவலிமை என்பது அப்பொருள் ஒரு விசையால் இழுக்கப்படும்போது அறுந்துபோகாமல் தாக்குப்பிடிக்கும் அளவைக் குறிக்கிறது. அதிக இழுவலிமை கொண்ட பொருட்கள் மிக அதிக அளவு இழுவிசையைத் தாங்கக்கூடியவை.

தற்போது இருப்பதிலேயே எஃகு தான் அதிக இழுவலிமை கொண்ட பொருள். அதனால்தான் அதை கடினமான வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். இப்போது ஒரு நானோ மீட்டர் அளவுள்ள எஃகு இழை மற்றும் ஒரு நானோ மீட்டர் விட்டம் உள்ள கார்பன் நானோ குழாயை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டின் இழுவலிமையை அளவிட்டால் கார்பன் நானோ குழாய்களின் இழுவலிமை எஃகை விட நூறு மடங்கு அதிகம். அதாவது எஃகை விட நூறு மடங்கு அதிக விசையைத் தாங்கும் தன்மை கொண்டது.

சரி. எப்படி இந்த உறுதித்தன்மை கார்பன் நானோ குழாய்களுக்கு வருகிறது?

கார்பன் நானோகுழாய் என்பது உருளை வடிவிலான ஒரு கிராபீன் மூலக்கூறு. ஒரே விதமான அணுக்களின் சகப்பிணைப்பு இதில் உள்ளது. ஆனால் எஃகு என்பது இரும்பு அணுவும், கார்பன் அணுவும் சேர்ந்த ஒரு பொருள். இந்த எஃகில் இருக்கும் படிக எல்லைகள் (crystalline boundaries) இன்னொரு படிக எல்லையோடு குறைந்த வலிமையோடு இணைக்கப்பட்டுள்ளன. இழுவிசையை அளிக்கும்போது இந்த படிக எல்லைகளில் முதலில் உடைப்பு ஏற்படும். இந்த மாதிரியான படிக எல்லைகள் ஏதும் கார்பன் நானோ குழாயில் இல்லை. எனவே அது எஃகை விட உறுதியானதாக இருக்கிறது. இப்போது புரிந்திருக்கும் ஏன் இரண்டாயிரம் வருடம் கழித்தும் பானை ஓடுகளில் இருக்கும் கருப்பு வண்ணப்பூச்சு சிதையாமல் இருக்கிறதென்று. மண்ணுக்கு அடியில் பல நூறு வருடம் கிடந்தாலும் அதில் இருந்த கார்பன் நானோகுழாய்களின் உறுதித்தன்மையால் சிதையாமல் இருக்கிறது.

குண்டு துளைக்காத ஆடை, குண்டு துளைக்காத கார் தயாரிப்பதில் கார்பன் நானோ குழாய்கள் பயன்படுத்துவது குறித்து தீவிர ஆராய்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கார்பன் நானோ குழாய்களின் இன்னொரு பண்பு அதன் மீட்சித்தன்மை (elasticity). அதாவது ஒரு பொருள் விசையால் வளைக்கப்பட்டு திரும்ப விடப்படும் போது அப்பொருள் எந்த அளவுக்கு தனது முந்தைய நிலையை அடைகிறது என்பதுதான் மீட்சித்தன்மை. இதை யங் குணகத்தால் (young’s modulus) அளவிடுவார்கள். கார்பன் நானோ குழாய்களின் யங் குணகம் எஃகை விட 5 மடங்கு அதிகம். அந்தளவுக்கு மீட்சித்தன்மை உடையது.

இன்னொரு சிறப்பு பண்பு இதன் அடர்த்தி. கார்பன் நானோ குழாய்களின் அடர்த்தி எஃகின் அடர்த்தியில் நான்கில் ஒருபகுதிதான். அதாவது எஃகை விட லேசானது. அதே போல் இதன் மின்கடத்தும் தன்மை, வெப்பம் கடத்தும் தன்மை இரண்டுமே உலோகங்களை விட (உதாரணத்திற்கு தாமிரத்தை விட) அதிகம். இதனால் கணிணித்துறையில் இன்னும் திறன் வாய்ந்த எலக்ட்ரானிக் சுற்றுகளை ஏற்படுத்த நானோ குழாய்கள் பயன்படுகின்றன.

இது மட்டுமில்லாமல் கார்பன் நானோ குழாய்கள் மற்ற அணுக்களோடு மிக எளிதில் பிணைப்பை ஏற்படுத்தும். இந்தப் பண்பினால் காற்றில் கலந்துள்ள நச்சு வாயுக்களின் அளவை துல்லியமாக அளவிட பயன்படுகிறது.

கேன்சர் செல்களில் துல்லியமாக மருந்தை செலுத்த கார்பன் நானோ குழாய்கள் மிகச்சிறந்த அளவில் பயன்படப்போகின்றன. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. கார்பன் நானோ குழாய்களால் செய்யப்பட்ட டிரான்சிஸ்டர் நாம் நடைமுறையில் பயன்படுத்தும் டிரான்சிஸ்டரை விட பல மடங்கு திறன் வாய்ந்தவை. இப்படி கார்பன் நானோ குழாய்களின் சிறப்பைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்போது நாம் கீழடிக்கு வருவோம். கீழடியில் எடுக்கப்பட்ட பானை ஓடுகளில்  ஒற்றைச்சுவர் நானோ குழாய்கள், பல்சுவர் நானோ குழாய்கள் என இரண்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு ஆராய்ச்சியாளர்கள் நிறமாலையியலின் மூன்று வழிமுறையை பயன்படுத்தி இருக்கிறார்கள். ராமன் நிறமாலையியல் (Raman spectroscopy), x-கதிர் ஒளிஎலக்ட்ரான் நிறமாலையியல் (X-ray photoelectron spectroscopy) மற்றும் கடத்து எலக்ட்ரான் நுண்ணோக்கி (transmission electron microscope).

கார்பன் நானோ குழாய்களை கண்களால் பார்க்கமுடியாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளபடி மாவு பொடி போலத்தான் நமக்கு தெரியும்.

கார்பன் நானோ குழாய்களை கடத்து எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் மட்டுமே காணமுடியும். கடத்து எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கார்பன் நானோ குழாய்கள் தெளிவாகத் தெரிகிறது.

Source: Discovery of carbon nanotubes in sixth century BC potteries from keeladi, india, Scientific reports, 10, Article number 19786(2020), Vijayanand Chandrasekaran, Nagaboopathy Mohan, et.,al

கீழடியில் கண்டறியப்பட்ட ஒற்றைச்சுவர் கார்பன் நானோ குழாய்களின் விட்டம் 0.6 நானோ மீட்டர். இதில் சிறப்பு என்னவென்றால் 0.4 நானோ மீட்டர்தான் இயற்பியல் விதிகள் படி சாத்தியம். அதற்கு மிகச்சிறியது சாத்தியமில்லை. கீழடியில் கண்டறிப்பட்டது கிட்டத்தட்ட அந்த எல்லைக்கு அருகில் இருக்கிறது. அதே போல் பல் சுவர் நானோ குழாய்களின் உள் விட்டம் 3 நானோ மீட்டர்.

தொல்லியல் அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களில் கார்பன் நானோ குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டது இது முதல் முறையல்ல. மத்திய தரைக்கடல் பகுதிகளில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களில் கார்பன் நானோ துகள்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அதே போல் டமாஸ்கஸ் எஃகிலும் பல் சுவர் கார்பன் நானோ குழாய்கள் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நானோ குழாய்கள் கி.பி 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இதற்கு பழையது இதுவரை கண்டறியப்பட்டதில்லை. ஆனால் தற்போது கீழடியில் கண்டறியப்பட்ட கார்பன் நானோகுழாய்கள் 2400 வருடங்களுக்கு முந்தியது. அப்படி பார்க்கும்போது கீழடி நானோ குழாய்கள்தான் இப்போது உலகிலேயே மிகவும் பழமையானது. இதுவே அனைவரின் ஆச்சரியத்திற்கு காரணம்.

இப்போது நமக்கு இருக்கும் அடுத்த கேள்வி. இந்த நானோ குழாய்கள் அக்காலத்திலேயே எப்படி உருவாக்கப்பட்டிருக்கூடும் என்பதுதான்.

தற்போது கார்பன் நானோ குழாய்கள் உருவாக்க மூன்று அல்லது நான்கு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று கார்பன் சார்ந்த ஏதேனும் ஒரு சேர்மத்தை எடுத்து குறிப்பிட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றி மிக உயர்வெப்ப நிலையில் அதாவது 1200 செல்சியஸ் அளவுக்கு சூடுபடுத்தினால் கார்பன் நானோ குழாய்கள் உருவாகும். மற்ற முறைகள் அனைத்துக்கும் நவீன வேதியியல் தொழில்நுட்பமுறைகள் தேவை. எனவே மிக உயர்வெப்பநிலையில் சூடாக்குவதன் மூலம்தான் அக்காலத்து மக்கள் இதை சாத்தியப்படுத்தியிருக்க முடியும்.

உடனே சில அரைகுறை அறிவாளிகள் “தமிழர்களுக்கு 2000 வருடங்களுக்கு முன்பே நானோ தொழில்நுட்பம் பற்றி அறிந்திருந்தார்கள். அணுவைப் பற்றி அறிந்திருந்தார்கள்” என்று யூடியுபில் வீடியோ போட ஆரம்பித்து விடுவார்கள். இது தவறானது. இந்த கண்டுபிடிப்பை எப்படி புரிந்து கொள்வது?

சங்ககாலத் தமிழர்கள் இரும்பு உருக்குவதிலும், பானை சுடுவதில் மிகச் சிறந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பானை சுடும்போது அதில் வெவ்வேறு வண்ணங்கள் பூசுவது இன்றும் வழக்கமாக இருக்கிறது. அப்படி பூசும் வண்ணங்கள் சிதையாமலும், மங்காமலும் இருக்க வேண்டுமென்றால் எவ்வளவு வெப்பநிலை வரை பானைகளை சுட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அக்காலத்தில் தாவரம், மரம் செடி கொடிகளிருந்து வண்ணம் தயாரித்திருப்பார்கள். தாவர பொருட்களில் கார்பன் சார்ந்த சேர்மங்கள் நிறைய இருக்கின்றன. இப்படி வண்ணம் பூசப்பட்ட பானைகள்  உயர்வெப்ப நிலையில் சுடப்படும்போது கார்பன் நானோ குழாய்கள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் இது நானோ குழாய்கள் என்று அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதே போல் அவர்கள் என்ன மாதிரியான கார்பன் சேர்மங்களை இந்த வண்ணப்பூச்சில் பயன்படுத்தினார்கள் என்பது இன்னமும் முழுதாக அறியப்படவில்லை. எதிர்காலத்தில் இதற்கு விடை கிடைக்கலாம்.

ஒன்று நிச்சயமாக சொல்லலாம். குறிப்பிட்ட உயர்வெப்ப நிலையில் பானை சுடப்பட்டால் அதில் பூசப்படும் வண்ணப்பூச்சு சிதையாமல் இருக்கும் என்ற பட்டறிவு (empirical knowledge) தமிழர்களுக்கு இருந்திருக்கிறது. அதுவும் 2400 ஆண்டுகளுக்கு முன்னரே.

ஒரு நாகரீகமடைந்த சமூகத்தில்தான் இந்த மாதிரி பட்டறிவு உருவாகும். அது மட்டுமல்ல அங்கு கிடைத்த பானை ஓடுகளில் பெயர்கள் எழுதப்பட்டிருந்திருக்கிறது. அப்படி என்றால் அக்காலத்திலேயே பானை செய்பவர் கூட எழுத்தறிவோடு இருந்திருக்கிறார் என்பதைத்தான் இது உணர்த்துகிறது. எழுத்தறிவு அனைவரிடமும் பரவலாக இருந்திருக்கும் போதுதான் இவ்வாறு நடந்திருக்க முடியும்.

ஒரு பானை ஓடு போதும். தமிழ்ச் சமூகம் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே நாகரீகமடைந்த சமூகமாக இருந்திருக்கிறது என்று சொல்வதற்கு. இன்னும் எவ்வளவோ தொல்லியல் இடங்கள் அகழ்வாய்வு செய்யப்படாமல் இருக்கின்றன. அங்கும் இது போல் ஆராய்ச்சி செய்யப்பட்டால் இன்னும் பல வரலாற்று உண்மைகள் வெளிவரும்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் திரு.விஜயானந்த் சந்திரசேகரன், திரு. நாகபூபதி மோகன், சுரேஷ் பெருமாள் மற்றும் அவர்களது குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். தொல்தமிழ் பண்பாட்டை அறிவியல்பூர்வமாக நிலைநிறுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல் தொல்லியல்துறை ஆணையர் திரு. உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களின் பணி அளப்பரியது. கீழடியின் நடந்த தொல்லியல் ஆராய்ச்சியில் நிறைய அறிவியல் முறைகளை பயன்படுத்த முயற்சி எடுத்தவர். கீழடியை ஒரு தொல்லியல் சுற்றுலா தளமாக மாற்றியவர்.

கீழடி பற்றி விழிப்புணர்வை இளைய தலைமுறைக்கு ஏற்படுத்தும் வகையில் தற்போது இருக்கும் 12 ஆம் வகுப்பு புதிய இயற்பியல் பாடப்புத்தகங்களில் கீழடியில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் முறைகள் குறித்த தகவல்கள் மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.

எதிர்காலத்தில் கீழடி இன்னும் பல ஆச்சரியங்களை நமக்கு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. கீழடி மட்டுமல்ல கொடுமணல், ஆதிச்ச நல்லூர், பூம்புகார், கொந்தகை என பல ஊர்களிலும் தமிழனின் வரலாறு உறங்கிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு இந்த தொல்லியல் ஆய்வுகளுக்கு முழு ஒத்துழைப்பும், நிதி உதவியும் கொடுக்க வேண்டும். தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களில் பணிபுரியும் தமிழ்ச்சொந்தங்கள் தாம் பெற்ற அறிவியல் அறிவை தொல்லியல் ஆய்வில் எப்படி பயன்படுத்தலாம் என்று யோசிக்க வேண்டும். ஏனென்றால் அறிவியல் முறைப்படி நிரூபிக்கப்படும் வரலாறுதான் சரியான வரலாறு. உண்மையான வரலாறு.

நன்றி – காக்கைச்சிறகினிலே, 2020, டிசம்பர் மாத இதழ்

கட்டுரை எழுத உதவியவை:

  1. Discovery of carbon nanotubes in sixth century BC potteries from keeladi, india, Scientific reports, 10, Article number 19786(2020), Vijayanand Chandrasekaran, Nagaboopathy Mohan, et.,al

  2. Nanotechnology for dummies – Richard Booker, Earl Boysen

  3. Nano technology- Understanding small systems, Ben Rogers, Jesse Adams, Sumita Pennathur

கட்டுரையாசிரியர்

ஜோசப் பிரபாகர், 

உதவி பேராசிரியர், இயற்பியல் துறை,

லயோலா கல்லூரி, சென்னை.

மின்னஞ்சல்: [email protected]Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *