KEEPING UP A GOOD FIGHT - போராட்டம் தொடர்கிறது | பிரபீர் புர்காயஸ்தாவின் கீப்பிங் அப் த குட் ஃபைட்

நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி விட்டது. இரண்டு கட்டங்கள் முடிந்தும் விட்டது. யார் ஆட்சிக்கு வரப் போகிறார்கள் எனப் பல ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. யார் வந்தால் என்ன ஆபத்து வரும் என்பதும் விவாதிக்கப்படுகிறது. அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருப்பதாகவும் பல அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இருக்கட்டும். தற்போது அக்டோபர் 3, 2023 அன்று மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் நியூஸ் கிளிக்க்கின் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா தனது நெருக்கடி கால சிறை வாழ்க்கை குறித்து எழுதிய புத்தகமான ‘தொடரும் போராட்டம்’ குறித்துப் பார்ப்போம்.

ஒரு வங்காளியாகப் பிறந்தாலும் பல ஊர்களில் வளர்ந்தவர் பிரபீர். முதலில் பொறியியல் படித்து விட்டுப் பிறகு உயர்கல்விக்காக ஜவஹர்லால் நேரு பலகலைக்கழகத்தில் சேர்ந்தார் பிரபீர். அப்போதுதான் முதன்முறையாக அங்கு கணினி அறிவியல் படிப்பு தொடங்கியிருந்தது. முன்பே படிக்கும் காலத்திலேயே இடதுசாரி வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர் அவர். கேப்டன் லஷ்மி, கேப்டன் செகால், அவர்களது புதல்வி தோழர் சுபாஷினி ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். கான்பூரில்தான் அவர் அரசியல் தொண்டராக முகிழ்த்தார். பிரபீர் கேப்டன் லஷ்மியால் பல வகைகளில் உத்வேகம் பெற்றார்.

கான்பூரில் பிரபீர் சிபிஎம்.மின் கேடராகப் பணி புரிந்தார். அங்கிருந்த தலைவர்கள் அவரை நேரடியாக வளர்த்தெடுக்கும் வாய்ப்பையும் பெற்றார். மேலும் அங்கு பெற்ற அனுபவம் குறித்து பிரபீர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒருவரது அரசியலை ஏற்பது மட்டும் போதாது; பெரும் அரசியல் இயக்கத்தில் அவரது பங்கையும் நாம் பார்க்க வேண்டும்”. அவர்கள் உண்மையில் எந்த வர்க்க அரசியலைச் சேர்ந்தவர்கள்? இவ்வாறு அவர் பெற்ற அனுபவங்கள் பின்னால் அவரது அறிவியல் இயக்கச் செயல்பாடுகளில் முக்கியமான பங்கை வகித்தன என்பதைப் பதிவு செய்கிறார் பிரபீர். கான்பூரில் இடதுசாரி மனோபாவம் கொண்ட ஆசிரியர்கள் பட்ட பாட்டையும் விவரிக்கிறார் பிரபீர். அவர்களை இடதுசாரி மாணவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்கிறார்.

கான்பூருக்குப் பின்னர் அலகாபாதில் மோதிலால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்புக்காக இயந்திரப் பொறியியல் படிப்பில் சேர்ந்தார் அவர். அங்குதான் அவர் முதன்முதலில் சாதி அரசியலை எதிர்கொண்டார். ’சோட்டேலோக்’, ‘பத்ரலோக்’ போன்ற வார்த்தைகளில் முன்பு அவருக்குப் பரிச்சியமில்லை. அந்த சாதி மோதல்கள் வன்முறை நிறைந்தவை. உயர்சாதியினர் நிலங்களைத் தமது பிடிக்குள் வைத்திருந்தனர். இரண்டு மேல்சாதியினருக்கிடையிலான அரசியல் போராட்டமாகவே அது இருந்தது. பொறியியல் கல்லூரிக்கு பதில் அலகாபாத் பல்கலைக்கழக அரசியலில் ஈடுபட முடிவு செய்தார் பிரபீர். இந்திய மாணவர் சங்கம் பெயரளவுக்குத்தான் அங்கு இருந்தது. உ.பிரதேசம், பஞ்சாப் இரண்டு அணிகளுக்கும் இடையில் வங்காளியான பிரபீர் தலைவராக ஏற்கப்பட்டார். அங்கு மாணவர் தலைவராக உருவெடுத்தார். அங்கு மாணவர் தலைவராக இருந்த திரிபாதி இந்திய மாணவர் சங்கத் தலைவராகவும், சிபிஐ(எம்) உறுப்பினராகவும் இருந்தார். பின்னர் ஜவஹர்லால் நேரு பல்கலையிலும் அவர் தலைவராகத் தொடர்ந்தார். எனினும் பின்னர் அவர் இறக்கும்போது காங்கிரஸ் தலைவராக இருந்தார். கணினித் துறையில் அங்குதான் அவருக்கு மேலும் ஆர்வம் அதிகரித்தது. அந்தக் காலத்தில் கணினித்துறை குழந்தைப் பருவத்தில் இருந்தது. அதில் புரோகிராம் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம். இப்போது இருப்பது போல் கிடையாது.

அங்கு அவருக்கு மிகவும் சோர்வு ஏற்பட்டது. ஏற்கனவே திரிபாதி ஜே.என்.யூ.வில் சேர்ந்திருந்த நிலையில் தாமும் அங்கு சென்றார் பிரபீர்.

ஜே.என்.யூ.வில்தான் அவரது முதல் காதல் தோன்றியது. அவரது மனதை வென்றவர் தோழர் அசோக் லதா ஜெயின். தோழர் பிரகாஷ் காரத், தோழர் யெச்சூரி, தோழர் பிருந்தா காரத் எனப் பலரும் பிரபீருக்கு நெருக்கமானார்கள். கட்சியின் முழு நேர ஊழியராகப் பின்னர் உருவெடுத்த தோழர் லதா அகில இந்திய மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். துரதிர்ஷ்டவசமாக தமது இளம் வயதிலேயே பிரபீரைத் தவிக்க விட்டு விட்டு, ஒரு குழந்தையையும் கொடுத்து விட்டு மரணமுற்றார் லதா.

ஜே.என்.யூ.வில் பிரபீர் சேர்ந்தபோதுதான் இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவிக்கிறார். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தோழர் லதா சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அதை எதிர்த்து வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். மாணவர் தலைவர் திரிபாதியைக் கைது செய்ய வந்த போலீஸ் தவறாக பிரபீரைக் ‘கடத்திச்’ சென்று மிசாவில் வைக்கிறது. காரணம்? அவர் மேனகா காந்தி வகுப்புக்குச் செல்வதைத் தடுத்தார் என்று கதை விட்டது போலீஸ்.

முழுக்கதையையும் சொல்கிறேனோ? சரி. விவரம் என்னவென்றால் அப்போது தவறாகக் கைது செய்யப்பட்ட பிரபீர் ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். அவர் நெருக்கடி நிலை எப்படி இருக்கும், அதில் தான் சந்தித்த பிரச்சனைகள் என்பதையெல்லாம் நேரடியாக விவரிக்கிறார். அவற்றை அறிவது நமக்குச் சில விழிப்புணர்வுகளைக் கொடுக்கும். இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பது என்ற நமது, இந்தியக் குடிமக்களின் உறுதிப்பாட்டுக்கு உத்வேகம் கொடுக்கும். அந்த வகையில் நாம் இந்தப் புத்தகத்தைப் படிப்பது என்பது முக்கியமானது. இப்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறதா என்று சில அறிஞர்கள் கூறுவது உண்மையா என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டு நீங்களே முடிவுக்கு வரவும்.

”Keeping up the Good Fight” என்று லெஃப்ட்வேர்ட் ஆங்கிலத்தில் வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை தோழர் சுப்பாரவ் செய்திருக்கிறார். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. விலை.ரூ.250/-.

ஒரே ஒரு ரகசியம். ஆனால் அதை அனைவருக்கும் சொல்லி விடுங்கள். மே தினத்தை ஒட்டி பாரதி புத்தகாலயம் 50% தள்ளுபடியை மே 1 அன்று அறிவித்திருக்கிறது. இந்த ரகசியத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு பல புத்தகங்களுடன் இந்தப் புத்தகத்தையும் வாங்கித் ’தவறாமல் படித்து விடுங்கள்’.

 

நூலின் தகவல்கள் 

நூல் : KEEPING UP A GOOD FIGHT – போராட்டம் தொடர்கிறது

ஆசிரியர் : பிரபீர் புர்காயஸ்தா

விலை  : ரூ 340

 

எழுதியவர் 

கி.ரமேஷ்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *