சு தமிழ்ச்செல்வி எழுதிய கீதாரி - நூல் அறிமுகம் | Keethari - S.Thamizh Selvi Novel -BookReview - BookDay - https://bookday.in/

கீதாரி – நூல் அறிமுகம்

கீதாரி – நூல் அறிமுகம்

 

 

நூலின் தகவல்கள் : 

நூல் : கீதாரி

ஆசிரியர் : சு தமிழ்ச்செல்வி

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்

பக்கம் : 180

விலை : ரூபாய் 115

முதல் பதிப்பு : டிசம்பர் 2008

 

ஆடுகளுடன் வெட்ட வெளியில் வாழ்க்கை நடத்தும் ஆடு மேய்ப்பவர்கள் கீதாரி என அழைக்கப்படுவார்கள். அவர்களின் வாழ்க்கைப் பாட்டையும் வறுமை நிலையையும் கண்ணீர்க் கதையாக எடுத்துச் சொல்கிறது இந்த நாவல். நம் கண் முன்னே மனிதர்கள் வாழ்ந்து அவர்களால் ஒரு யதார்த்த உலகம் படைத்துக் காட்டப்படுகிறது இந்த நாவலில்.

அறுவடையான வயல்களில் செம்மறி ஆட்டுக் கிடை கட்டும் ஆட்டுக்காரர்களின் மனநிலை தன் வயிறு காய்ந்தாலும் கூட ஆடுகள் குட்டிகளின் வயிறு எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்று எண்ணும் ஒரு பெண்ணின் மனநிலை, மனநிலை பாதிக்கப்பட்ட அனாதைப் பெண்ணுக்கு மனமிறங்கி பிரசவம் பார்த்த பெண்ணின் இளகிய மனம், பிறந்த இரண்டு பெண் பிள்ளைகளையும் யாரும் எடுத்து வளர்க்க முன்வராத நிலையில் வறுமையோடு சேர்ந்து அவர்களை நாமே வளர்ப்போம் என்று துணிந்த கணவன் மனைவியின் கருணை உள்ளம், ஆடுகளையே சொத்தாக நினைத்து வெறும் தரையில் சாக்குக்குள் கால் நுழைத்து படுத்துத் தூங்கும் பரிதாப நிலை போன்ற ஆடு மேய்ப்பவர்களின் அவலம் நாவலில் மிகப் பெரியதொரு கதைக்குள் அழகாக பின்னப்பட்டுள்ளன.

சு.தமிழ்ச்செல்வி - Tamil Wiki
        ஆசிரியர் : சு தமிழ்ச்செல்வி

தனது தாய் இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதைப் பார்த்து தந்தை அவளையும் அவளது குழந்தையையும் அடித்துக் கொன்றுவிட்டு தானும் தூக்கில் மாட்டிச் செத்துப் போக அவனது இரு ஆண் பிள்ளைகளும் அடிமையாக ஆடு மேய்க்கும் தொழிலுக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள். மனித மனம் பணம் என்று வரும்போது உறவுகளையும் தன்னை நம்பி வந்தவர்களையும் கைவிட்டு பணத்தின் பின்னே ஓடிப் போகும் என்ற இழி நிலையையும் இந்த நாவல் எடுத்துக்கூறுகிறது

தனக்குத் தெரிந்த ஒருவனுடன் சிரித்துப் பேசியதற்காக இளம் பெண்ணை அவளது அண்ணனும் அப்பாவும் சேர்ந்து அடித்துக் கொன்று குளத்தில் தண்ணீருக்குள் அமுக்கி புதைத்து வைத்த கொடூரம் பெண்ணின் சுதந்திரத்தைக் குழி தோண்டி புதைத்து அவர்களை வாழ வழி விடாமல் செய்வதையும் நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது.

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதில் ஈடுபடும் ஆண்களை விட அவர்களுக்கு உதவி புரியும் பெண்களின் பாடு அளவிடற்கரியது. அதுவும் நிறைய ஆடுகளை மேய்ச்சல் வெளியில் ஓட்டிச் சென்று ஒரு நிலையான இடமில்லாமல் அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் வாழும் கீதாரிகளின் வாழ்வில் குடும்பம் குழந்தைகள் என்ற அமைப்பும் கூடவே பயணிக்கின்றன அடிக்கடி இடம் மாறும் சூழலால் அவர்களது குழந்தைகள் கல்வியின் வாசனையை மறந்து விடுகிறார்கள் பள்ளிக்கூடம் இருக்கும் பக்கமே அவர்கள் திரும்பிப் போக முடியாமல் தவிக்கிறார்கள் இத்தகு சூழலில் இக்கதையின் நாயகி தனது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்றத் துடிக்கிறாள். ஆனால் காலம் அவளது கனவை சிதைத்து விடுகிறது.

வயதான சூழலிலும் தனது குழந்தைகளையும் தனது பேரப்பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கும் வைராக்கியத்தை வைத்திருக்கும் ராமு கீதாரி கதையின் வழியே மிகப் பறந்து பட்ட கீதாரிகளின் அவல நிலையையும் அலங்கோலங்களையும் சிக்கல்களையும் பின்னல்களையும் நம்மால் அறிய முடிகிறது.

மனித மனம் அன்பால் நிறைந்திருக்கையில் பணம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல வீடு அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல வெட்ட வெளியிலும் ஆனந்தமாகவும் மன நிம்மதியுடனும் வாழ்வை ஆடுகளுக்கு இடையே நடத்தி விட முடியும் என்பதை இந்த நாவலின் கதாநாயகி நிரூபித்துக் காட்டுகிறார். ஆனால் பணம் சேரச் சேர மனித மனங்களுக்குள் நுழையும் கொடூரமும் பழிவாங்கும் எண்ணமும் சதித் திட்டங்களும் துரோகச் சிந்தனைகளும் மனித மனங்களில் பிளவை ஏற்படுத்தி குடும்பத்தையே சிதைக்கத் தொடங்குகின்றன என்பதையும் நாவல் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது.

மூன்று தலைமுறை பந்தத்தைத் தொடரும் ஆடுகளின் வழியேயும் நகரும் வறுமையின் வழியேயும் அடுத்தடுத்த காலச் சூழ்நிலைகள் மாறும் போதும் கீதாரிகள் மாறாமல் ஆடுகளின் பின்னே அலைந்து கொண்டிருப்பதை தெளிவுறுத்தும் நாவல் ஒருவன் முன்னேறவும் தனது நிலை என்ன என்பதை உணர்ந்து கொள்ளவும் கல்வி மிகச் சிறந்த பயனை விளைவிக்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டிச் செல்கிறது.

நூல் அறிமுகம் எழுதியவர் : 

| https://bookday.in/

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) அன்பு மொழி(2024) என நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *