1986 – 87 திருவண்ணாமலையில் என் கல்லூரி வாழ்க்கைதான், என்னை பலப்பல
விடயங்களின்பால் மடைமாற்றி சென்னை வருவதற்கு முழுக் காரணமாக மாற்றியது..
ஒருநாள் மாலை திருவண்ணாமலை  டேனிஷ் மிஷின் பள்ளி இருக்கும் சாலையில் அமைந்த சி.ஐ.டி.யூ.அலுவலகத்தில் கருணா, பவா, காளிதாஸ், சி.ஐ.டி.யூ.வின் தலைவர்கள் என்.வெங்கடேசன், புரட்சி நடராஜன், கஜேந்திரன் உள்ளிடவர்களோடு அமர்ந்திருக்கிறேன்.. ” தோழர்களே, நாளை வெண்மணி தினம், காலை சரியாக 7 மணிக்கெல்லாம் வந்திடுங்க.. சைக்கிளில் பல கிராமங்களுக்கு சென்று  செங்கொடியேற்றி அஞ்சலி செலுத்துகிறோம் என்று வெங்கடேசன் கூறினார்.  “வெண்மணி” என்கிற பெயர் எனக்கு அப்போதுதான் அறிமுகமானது.
கருணாவிடம் “அதென்ன கருணா வெண்மணி என்கிறேன்.. அதற்கு அவர் “ வெண்மணி பற்றி உனக்குத் தெரியாதா..!?
நீ இருக்கறதே வேஸ்ட்.. போடா.. நாளை காலை வா.. தெரிந்திடுவாய் என்று சோமாசிபாடிக்கு பஸ் ஏற்றிவிட்டார். மறு நாள் ஒவ்வொருவரின் சைக்கிளில், செங்கொடி பறக்க கிராமங்கள் நோக்கி பயணம் தொடங்கினோம்.. முதல் கிராமத்தில் எனக்கு அறிமுகமில்லாத பலர் கூடி இருக்கிறார்கள்.. அத்தனைபேரும் விவசாயிகள்.. தோளில் சிவப்பத் துண்டோடு வரவேற்கிறார்கள்..
செங்கொடி ஏற்றப் படுகிறது..
வீரவணக்கம்..
வீரவணக்கம்.. வெண்மணி தீயில்
உயிர் நீத்த.. தீயாகிகளுக்கெங்கள்
வீரவணக்கம்..!
தீயில் கருகிய வெண்மணி.. இப்படியாகத்தன் என் உசுருக்குள் நுழைந்தது.
கீழ் வெண்மணி படுகொலை நினைவிடம்
கீழ் வெண்மணி படுகொலை நினைவிடம்
தஞ்சை என்றதும் நம் பொதுப்புத்தியில்,  கவனத்தில் ஓடுவதென்னவோ கரைபுரண்டோடும் காவிரியும், அதன் கொள்ளிடமும்.. கரிகால் சோழனும்..  தஞ்சை பெரிய கோவிலும்.. நந்தியும்..
கரையோர கிராமங்களின் அலையலையாக அசைந்து கிடக்கும் பச்சைப் பயிர் வெளியும் மட்டுமே.. இதைத்தான் பள்ளியின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் நமக்கு தொடக்கம் முதலே சொல்லி வந்திருக்கிறது. அந்தப் பசுமைக்கு பின்னால் தூர்ந்திருக்கும், ஆண்டைகளின் புளியஞ்சிமிர் சாட்டையடிகளும், வழிந்து பரவிக்கிடக்கும் உழைக்கும் மக்களின்  பச்சைரத்தச் சகதியும் எவர் அறிவார்கள்?
கீழ் வெண்மணி எரிக்கப்பட்டதால் இன்று அது குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். அது கூட செங்கொடி இயக்கத்தோடு தொடர்பு கொண்டவர்களால் மட்டுமே. பெருவெளியில் அந்தப் பெயர் அனைவராலும் உச்சரிக்கப்படாமல் மறைத்து வைத்திருப்பதின் சூட்சுமம் என்ன? மறைக்கும் அந்தக் கைகள் எங்கிருந்தெல்லாம் வளர்ந்து..வளர்ந்து நீண்டு வருகிறது.? இன்றளவும் வெவ்வேறு அரசியலோடு பிணைந்து வெண்மணி நினைவு நாளோடு மட்டும் நினைவுப் பயணங்களாக நின்று போனதின் தவறை யோசிக்க வேண்டிய கட்டாயத்தை; இன்று கொரோனா காலத்தில் ஊரோடு ஒத்துப் போய் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நம்மை யோசிக்க வைத்திருக்கிறது, அரசு அறிவித்திடும் அனைத்தும் ஹம்பக் என்றாலும் எதிர் கருத்தை வலுவாக மக்களை திரட்டி பேசமுடியாக இடத்தில் நம்மை நாமும் ஒரு டிசைனுக்குள் வைத்துக் கொண்டோமோ என்கிற எண்ணமே மேலோங்கி வருகிறது.
காலாகாலமாகவே அந்தக் கைகள் வெவ்வேறு முகமெடுத்து பின் தொடர்ந்தே வந்தது; தற்போது அதன் பின்னோக்கி நம்மை இழுத்துப் போகிறதோ.! நம்மை நாமே சுரண்டிப் பார்த்து மேலழும்பத் தேவை ஏற்பட்டிருக்கிறது நமக்கு.
மேலெழுவோம்.. “கீழைத் தீ” யின்
வெளிச்சத்திலிருந்து.
“கீழைத் தீ’
கீழ் வெண்மணி.
ஆண்டைகளால் உழைப்புக் கொடுமையும்
சாதிக் கொடுமையும் தலைவிரித்தாடிட,
சவுக்கடியும்.. சாணிப்பாலுமாக கிடந்த
அந்த பள்ளு பறையர்களின் வாழ்வதனில்;
கல்யாணமென்றாலும் ஆண்டைகளின்
அனுமதிக்காக ஒவ்வொரு வீடாக
சென்ற உழைப்பாளிகளின் சுய மரியாதைக்குள்;  ” அடித்தால் திருப்பி அடி” என்கிற முழக்கத்தோடு கம்யூனிஸ்டுகளின் செங்கொடி சங்கம் உழைப்பாளிகளின் இடுப்பில் இருந்த துண்டை தோளுக்கு ஏற்றியது.. ஆண்டைகளைப் பார்த்து அடங்கி ஒடுங்கிக் கிடந்தவர்கள் நெஞ்சு நிமிர்த்தி கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தினார்கள், கூலி உயர்த்தித் தராதபோது நிலத்தில் இறங்க மறுத்துச் செங்கொடியேந்திப் போராடினார்கள்.
ஒரு ஊழியனின் குரல்: ரீசார்ஜ் செய்து ...
காலடியில் அடிமையாகக் கிடந்தவர்கள் தற்போது நிமிர்ந்து நிற்பதை விரும்பாதது ஆண்டைத் திமிர். தற்போது தலை நிமிர்த்தி அடிமைகள்  கைகள் உயர்த்தி பேசுவதை ஏற்குமா.? நாயுடு தலைமையில் சதித்திட்டம் தீட்டி டிசம்பர் 25அன்று கீழ் வெண்மணியில் இரண்டு பெண் குழந்தைகள் உட்பட 44 மனித உயிர்களை தீயிட்டு கொளுத்தினார்கள் என்பதை நிஜசாட்சியாக உலாவரும் நந்தன் வழியாக  வெண்மணி மக்களின் வலியான வாழ்க்கையை; அவர்களின் தீரம்மிக்க போராட்டத்தை, ஆண்டையின் வீட்டிற்குள் நுழைந்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த தம் தோழர்களை மீட்டுவருதலை அப்படியே நம் கண் முன் கொண்டுவந்திருப்பார் நாவலாசிரியர் பாட்டாளி.
44 உயிர்களை தீயிட்டு பொசுக்கிய நாயுடு சில மாதங்களிலே வெளியே வர எப்படி
எப்படி முடிந்தது..? அதன் புறச் சூழலுக்கான காரணத்திற்குள் போகாமல்;. வெளியே வந்த நாயுடு, மீண்டும் தன் திமிர்த்தனத்தோடு வெண்மணியில்; அதன் சுற்றுப் புற பகுதிகளில் தன் தடாலடி பஞ்சாயத்தில் இருந்து தொடங்கி, நல்லதொரு விளைச்சலில்  விதைப்பவனின் உழைப்பையெல்லாம் உறிஞ்சிக் களையாக வளர்ந்திருக்கும் களையை எப்படி பிடிங்கி
அழித்தொழிப்பானோ விவசாயி,  அப்படி ஒரு அழித்தொழிப்பு வேலையை; உழைப்பவர்கள், பறையர்கள், பள்ளர்கள் இப்படி அனைவரின் வாழ்வதனை சூறையாடி, உச்சமாக எதிர்த்துக் கேட்டார்கள் தன் அடிமைகள் என்பதற்காக 44 மனித உயிர்களை தீயிட்டு கொளுத்திய
நாயுடுவை அழித்தொழிப்பார்கள் கம்யூனிஸ்ட்டுகள். “இதுதான் கீழைத் தீ” உள்ளடக்கம்.
இதனை மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் நடைமுறை தந்திரத்தின்  திட்டமிடுதல் வழியாக நடத்தி இருப்பார். படிப்படியாக துவங்குவதை விட பாய்ச்சலில் இருந்து துவங்குவதுதான் மிக அதிக வெற்றியை அள்ளிட முடியுமென்பார் நாவலில் வரக்கூடிய எம்.எல்.தோழர் ஆரோக்கியம்.  சி.பி.எம். தோழர் சின்னராசுவை சந்தித்து எப்படி இந்திய கம்யூனிஸ்டுகள் பாராளுமன்ற ஜனநாயகத்தின்பால் நம்பிக்கை வைத்து தன் புரட்சிகர குணாம்சத்தை விட்டொழித்து
இருக்கும் முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டுவைத்து வருகின்றனர் என்றும், ஆனால் எம்.எல். குழு  எவருக்கும் தெரியாமல் வெளிப்படை நடவடிக்கைகளை ஒழித்து புரட்சிகர நடவடிக்கைகளில் புரட்சிக்கான திட்டம் வைத்திருக்கிறது என்பதை பல உரையாடல்கள் வழியாக முருகனிடமும், சின்னராசுவிடமும் பேசி இருப்பார் நாவலின் ஆசிரியர் படைப்பாளி.
வெண்மணி நினைவு தினமும் நூல் ...
தங்களை உயர்வு படுத்திக் கொள்வதற்காக மற்ற கம்யூனிஸ்டுகளை குறை சொல்ல எந்த கீழ் நிலைக்கும் செல்வார்கள் என்பதற்கு உதாரணம்; நாயுடுவை கொலை செய்ய
மதுரையில் இருந்து 4 மார்க்சிஸ்ட் தோழர்கள் வந்து 4 மாதமாக தங்கி இருந்து
வெண்மணியில் இருப்பவர்களின் ஒவ்வொரு வீட்டிலுக் கறி, மீனாக தின்று
உடம்பை தேத்திக் கொண்டு கடைசியில் தங்களால் முடியாது என்று மதுரைக்கே ஓடினார்கள் என்று நந்தன் வாய்வழியாக படைப்பாளி பேசி இருபார்.  இது அபத்தமாகவே தெரிகிறது.
மார்க்சிஸ்ட் தோழர்களின், தலைவர்களின் தொடர் போராட்டத்தை தஞ்சை மக்கள் அறிவார்கள்.. பறையர்கள் கட்சி என்றுதான் இன்றளவும் மார்க்சிஸ்டுகளை சொல்லி வருகிறார்கள். காரணம், தொடக்கம் முதலே அம்மக்களின் கூலி உயர்வு போராட்டமாகட்டும் பன்பாட்டு நடவடிக்கை போராட்டமாகட்டும் எல்லாவற்றிலும் முன் நின்றதே மார்க்சிஸ்ட் கட்சிதான். அடித்தால் திருப்பி அடி என்றதாகட்டும்.. அரசின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டதாகட்டும் எல்லாவிதமான போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வந்திருக்கிறார்கள் எக்காலமும். இவைகள் நாவலாசிரியர் அவர்களுக்குத் தெரியாமல் எல்லாம் இருந்திருக்க வாய்ப்பிருக்காது.
மற்ற கம்யூனிஸ்டுகளின் தரம் தாழ்த்திட மெனக்கெடும் நாவலாசிரியர் வெண்மணியில் ஒரு அழித்தொழிப்பை நடத்தி முடித்ததும்; அழித்தொழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்சிக் கூட்டமொன்றிற்கு அழைத்துச் செல்வார் நாவலாசிரியர், அங்கே “அழித்தொழிப்பு, அறுவடையைக் கைப்பற்றுதல், தலைமறைவு என இருந்த நம் கட்சி பொதுவெளியில் மக்களை திரட்டி போராடிடும் கட்சியாக இனி இருக்கும்” என  ஒரு பக்கத்தில் மட்டுமே வெகு சுறுக்கமாக சொல்லி முடிப்பார்.
கொள்கை ஒன்றாகயிருந்தாலும், அதை நிறைவேற்றிடும் திட்டமும்.. நடை முறை தந்திரங்களும் மாறியே வரும் தன் லட்சியத்தை அடையும் வரை.. எதுவரை என்றால் எதிராளிகளின் செயல்பாடு; நம்மை வளரவிடாமல் அவர்களின் குயுக்தியை, முயற்சிகளையடக்கியதே என்பதை ஆசிரியர்  சொல்ல வந்ததாகவே நான் உணர்கிறேன்.
நாவலில் படைபாளி அவர்கள் சொந்த சாதிக்கு துரோகமிழைப்பதை வெங்கிட், ஜோதி காதல் திருமணம்.. அத்தகைய சாதி ஒழிப்பில் தன் உயிரையும் கொடுப்பதில் முன் நிற்கத் தயங்காதவர்கள்தான் கம்யூனிஸ்ட்டுகள் என்பதை போலீஸ் காவலில்  மரணமடையும்
எகேட்டியின்  தியாகத்தில் சொல்லி இருப்பார்.
ஒரு பக்கம் ஆண்டைகளாலும்… இன்னொருபுறம் ஏழைமக்களின் இல்லாமையை பயன்படுத்தி மந்திரவாதிகளும், சாமியார்களும் எப்படியெல்லாம் ஏமாற்றி வாழ்கிறார்கள் என்பதை வீரப்பட்டி சாமியாரின் கயாவாளித்தனத்தில் இருந்து சொல்லி இருப்பார் நாவலாசிரியர்.
“கீழைத் தீ” நாவல் முழுவதிலும் வெண்மணியை சுற்றி உள்ள கிராமங்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற கூலி உயர்வு போராட்டங்களும்.. 44 மனித உயிர்களின் தியாகத்திற்குப் பிறகும் அங்கு ஆண்டைகளால் நடைபெற்ற  கூலி உயர்வு மறுப்பு குயுக்திகளும் அதில் தங்களை இணைத்துக் கொள்ளும் மற்ற முதலாளித்துவ கட்சித் தலைமைகளின் வஞ்சகமும் பதிவு செய்து.. நாயுடுவின் அழித்தொழிப்பில் போராளிகளின் பங்கேற்பையும் நிஜங்களின் வழியாக
நாவலாக்கி இருப்பார்.
நாவலாசிரியர் படைபாளி அவர்களுக்கும்..
இரண்டாவது பதிப்பை கொண்டு வந்த
புலம் பதிப்பகம் லோகநாதன் அவர்களுக்கும்; மூன்றாவது பதிப்பை கொண்டுவந்த பொன்னுலகம் பதிப்பகத்தின்  குணாவிற்கும்
பேரன்பின் வாழ்த்துகள்.
“கீழைத் தீ”
ஒவ்வொருவர் இருதயத்திற்குள்ளும்
எரிந்து கொண்டிருக்க வேண்டியது.
வாசியுங்கள்.
கருப்பு அன்பரசன்.
கீழைத் தீ
பாட்டாளி
புலம்பதிப்பகம் இரண்டாம் பதிப்பு
பொன்னுலகம் பதிப்பகம்
மூன்றாவது பதிப்பில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *