"கேள்வி கேட்டுப் பழகு" - கி.ரமேஷ்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூல் அறிமுகம் – “கேள்வி கேட்டுப் பழகு” – கி.ரமேஷ்

 

 

 

“ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை” என்ற எம்.ஜி.ஆர். பாடலைக் கேட்டு வளர்ந்தது முந்தைய தலைமுறைகள். அதில், ‘பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே’. என்று ஒரு வரி வரும். கேள்வி கேட்பது என்பது மனித வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை அந்தப் பாடல் உணர்த்தும்.

நம் வாழ்க்கைக்கு வருவோமானால், குழந்தைகள் கேள்வி கேட்பதை நாம் எத்தனை பேர் ரசிக்கிறோம், பதில் சொல்கிறோம்? முதல் இரண்டு, மூன்று வருடங்களுக்கு அவர்களது மழலையை ரசித்துக் கொஞ்சம் பதில் சொன்னாலும், பிறகு நமது அணுகுமுறை மாறி விடுகிறது. அதெல்லாம் அப்படித்தான். போய் வேலையை பாரு, டிஸ்டர்ப் பண்ணாதே என்று பலரும் சொல்லி விடுவோம். அதற்கு அந்தக் கேள்விக்கு பதில் தெரியாது என்பதும் ஒரு காரணமாக இருக்கும்.

அடுத்து, கடவுள் நம்பிக்கை. ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக் கூடாது. மதம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே நம்ப வேண்டும். அதைக் கேள்வி கேட்டால் அவ்வளவுதான்.

அடுத்து, பள்ளியில் என்ன நிலை? சத்தமே போடக் கூடாது என்பதுதான் முதல் விதி. ஆசிரியர் என்ன சொல்லித் தருகிறாரோ, அதைப் படிக்க வேண்டும், நம்ப வேண்டும். அவரிடம் கேள்வி கேட்டால், மாணவரும் தொலைந்தார், பெற்றோரும் தொலைந்தார்கள். ஆக, கேள்வி கேட்பது என்பதே அந்தக் குழந்தையிடம் இல்லாமல் செய்து விடுகிறோம்.

இந்தச் சூழலில்தான் சக.முத்துக்கண்னனும், ச.முத்துக்குமாரியும், ‘கேள்வி கேட்டுப் பழகு’ என்ற தலைப்பில் மூடநம்பிக்கைக்கு எதிராக குழந்தைகளைக் கெள்வி கேட்கத் தூண்டும் ஒரு சிறுநூலை எழுதி நமக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கிறார்கள்.

‘வேப்பரமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க, அந்த வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க’ என்று பட்டுக்கோட்டையார் பாட்டைக் கேட்டிருப்போம். அந்தக் குழந்தை ஏன், எப்படி என்று கேள்வி கேட்டால், அந்தப் பேய் என்பதே கட்டுக்கதை என்பதைப் புரிந்து கொண்டிருக்கும். ஆனால் அப்படியே நம்பினால் வாழ்க்கை முழுவதும் அச்சம்தான்.

13 அத்தியாயங்களில் இரண்டு ஆசிரியர்களும் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். இன்று வாட்சப்பில் எது வந்தாலும், அதை சரி பார்க்காமலேயே அப்படியே நம்புவது, ஷேர் செய்வது என்பது பலருக்கும் வழக்கமாகி இருக்கிறது. அப்படிப் பரவும் வதந்திகள் பெரும் நாசத்தையே கொண்டு வருகின்றன. சில அரசியல் கட்சிகளுக்கு இப்படிப்பட்ட பொய்களைத் திரிப்பதற்கு ஐ.டி. விங்கே செயல்படுகிறது. அப்படி ஒரு செய்தி வரும்பொழுது, இது சரியா என்ற ஒரு கேள்வி கேட்டால் போதும், 99% பொய்கள் அம்பலப்பட்டு விடும். ஆனால் நாம் கேள்வி கேட்க மறுக்கிறோம்!

இந்தக் கேள்வியில் தொடங்கி, கிரகணம், பேய், கனவு, போலி அறிவியல், ராசிபலன் என்று பல தளங்களில் குழந்தைகளிடம் நேரடியாகப் பேசிக் கேள்வி கேட்கத் தூண்டுகிறது இந்த நூல்.

கடைசியில் ஒரு அத்தியாயத்தைப் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் ஒதுக்கி இருப்பது சிறப்பு.

எனக்கு ’ஆயிஷா’ சிறுகதை நினைவுக்கு வந்தது. கேள்வி கேட்பதாலேயே பல ஆசிரியர்களின் வெறுப்புக்கு ஆளாவதும், கேள்வி கேட்டதனாலேயே ஒரு ஆசிரியை தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்வதும், ஆயிஷா லட்சக்கணக்கானோரின் கண்களைத் திறந்திருக்கிறாள், கண்ணீர் சொரிய வைத்திருக்கிறாள். அந்த ஒரு தூண்டலைத் தூண்டி விட்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

இடையில் மூட நம்பிக்கையைக் கெள்விக்குள்ளாக்கிய சிலர் குறித்த ஒரு குறிப்பு வேறு.

எனக்கு ஆசிரியர்களிடம் சில கேள்விகள்:

1. ஏன் முத்துக்குமாரி பெயர் முதலில் வந்திருக்கலாமே?

2. பேய் என்பது கற்பனையே என்று முதலில் இரண்டு அத்தியாயங்கள் எழுதி விட்டு, அடுத்த அத்தியாயம் பேயுடன் பேசுவதாக இருப்பது நெருடுகிறதே?

3. ‘மூத்தவங்க சொன்னா கேட்கணுமா?’ என்ற கேள்வி சற்று நெருடுகிறது. மூத்தவர்கள் என்ன சொன்னாலும் கேட்டு விட வேண்டும் என்பது இல்லைதான். ஆனால் அவர்களுக்குப் பட்டறிவு இருக்கிறதே பாஸ். படிப்பறிவு கை கொடுக்காத பல இடங்களில் பட்டறிவு கைகொடுக்குமே! அதேபோல் சிறியவர்கள் சொன்னால் கேட்க வேண்டியது இல்லை என்பதும் தவறுதானே? அவர்களும் சரியாகச் சொல்லலாமே! ஆகவே, இந்த அத்தியாயத்தின் தலைப்பு, ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்..” என்ற வள்ளுவன் வரியாக இருந்திருக்கலாம் என்பது என்னுடைய சிறு கருத்து.

கேள்வி கேட்பதே தவறு என்ற நிலை நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, கேள்வி கேட்க வேண்டும் என்ற தலைப்பில் புத்தகத்தை உருவாக்கி நமக்குக் கொடுத்திருக்கும் தோழர் முத்துக்குமாரிக்கும், முத்துக்கண்ணனுக்கும் வாழ்த்துகள். பெற்றோரே, ஆசிரியர்களே, புத்தகத்தை வாங்கிப் படியுங்கள், குழந்தைகளை படிக்க வையுங்கள், கேள்வி கேட்கும் பகுத்தறிவை வளருங்கள்.

கி.ரமேஷ்


வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம். https://thamizhbooks.com/product/kelvi-kettu-pazagu/

பக்கம்: 47
விலை: ரூ.50/-

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *