மூன்று வயது சமர், எங்கள் குட்டிச் செல்லத்தைப் பள்ளியில் சேர்த்து மூன்று வாரங்களே ஆனது. அதாவது எங்களுக்கு வீட்டுப் பாடம் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகி விட்டது!
முதலில் தமிழ் எழுத்துகள் கற்றுக் கொள்கிறோம் அவளோடு சேர்ந்து. அ ஆ இ ஈ என்று நாங்களும் அவளைப் போலவே குறிலுக்கு ஒரு மாதிரியாகவும் நெடிலுக்கு வேறு மாதிரியும் தலையை ஆட்டிச் சொல்லப் பழகிக் கொண்டோம். அடுத்து ஆங்கில எழுத்துகள். ABCD என்று போகும் ஆங்கில அகர வரிசையில் நான் A என்றால் அடுத்து B சொல்லணும் என்றால், சமர் முடியாது என்று சொல்லிவிட்டாள். எ ஏ, பி பீ, சி சி, டி டீ என்று தமிழில் உயிரெழுத்து வரிசை குறில் நெடில் போல் ராகம் போட்டுச் சொல்ல ஆரம்பித்தாள்.
சரியாப் போச்சு உன்னோட என்று சிரித்துத் தலையில் அடித்துக் கொண்டு, ABCD சொல்லிக் கொடுக்க ஒரு வழியாக மேடம் சமாதானம் ஆகித் திரும்பச் சொல்லிப் பழக ஆரம்பித்தார்கள்.
நடுவே நடுவே இதென்ன, அதென்ன, இது ஏன் இப்படி வளைஞ்சிருக்கு…. இது ஏன் இப்படி சாஞ்சிருக்கு…இது ஏன் ரெண்டு பக்கமும் கை நீட்டி நிக்குது..என்று கேள்விகள் வேறு…
எல்லாம் ஒழுங்காய்த் தான் போய்க் கொண்டிருந்தது, ஒரு நாள் நல்ல வேளை நான் தப்பித்தேன், என் மனைவி சிக்கிக் கொண்டாள்.
“இதென்ன எழுத்து மா?” என்று கேட்டாள் சமர்.
‘இது எம், அது டபிள்யு’ என்றாள் சமரின் அம்மா.
“ஏம்மா இது ரெண்டும் ஒரே மாதிரி தானே இருக்கு….ஏம்மா நீ எம், டபிள்யு ன்னு மாத்தி மாத்தித் தப்புத் தப்பா சொல்றே?” என்று கலகல என்று சிரித்துக் கொண்டே கேட்க, என் மனைவி என்னைப் பார்த்து சிரிக்க, நானும் சிரித்துக் கொண்டே சமருக்கு முத்தமிட்டுக் கை கொடுத்து மகிழ்ந்தேன்.
கேள்விகள் கேட்கப்பட வேண்டும் கேள்விகள் கேட்கப் பட்டால்தான். அதற்கான பதில் கிடைக்கும். சமர் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் உண்டா இல்லையா என்று என் கேள்விக்கும் பதில் தாருங்கள்.
– வெ.நரேஷ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.