கோள்களின் நீள் வட்டப் பாதைகளைக் கண்டறிந்த ஹோஹன்னஸ் கெப்லர் (Johannes Kepler) - நூல் அறிமுகம்| Science Book - https://bookday.in/

கோள்களின் நீள் வட்டப் பாதைகளைக் கண்டறிந்த ஹோஹன்னஸ் கெப்லர் – நூல் அறிமுகம்

கோள்களின் நீள் வட்டப் பாதைகளைக் கண்டறிந்த ஹோஹன்னஸ் கெப்லர் (Johannes Kepler) – நூல் அறிமுகம்

நாட்டின் வளமான எதிர்காலத்தை உருவாக்க அவசியமான அம்சம் அறிவியல் மனப்பான்மை. அறிவியல் மனப்பான்மையின் வழியே புதிய புதிய கருவிகளை கண்டறிவது மட்டுமல்லாமல் உலகில் நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படைகளை உணர்வதும் அவசியமே. மாணவச் செல்வங்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதன் அவசியத்தை ஒவ்வொரு துறையினரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அறிவியலின் வழியே உண்மை எது பொய் எது என்பதையும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் காரண காரியங்களை பகுத்தாய்வதும் இன்றைய அறிவியல் யுகத்தின் தலையாய பணியாக அமைகிறது. அந்த வகையில் இந்த நூல் மாணவர்களிடையே நல்லதொரு அறிவியல் மனப்பான்மையை விதைப்பதற்கு பாதை காட்டுகிறது.

சூரிய மண்டலம் அதனைச் சுற்றியுள்ள கோள்கள் என நாம் படிக்கும் பாடத்தின் அடிப்படை எது என்பதையும் சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என்பதையும் தனது விடாமுயற்சியாலும் பல்வேறு இடர்பாடுகளைச் சமாளித்தும் கண்டறிந்த கெப்லர் அவர்களின் வாழ்க்கை வரலாறு அருமையாக விவரிக்கப்பட்டுள்ளது.

மத நூல்களில் உள்ள கருத்துக்களின் வழியே பூமியே வானவியலின் ஆதாரம் என்றும் மற்ற கோள்கள் சூரியன் உட்பட அதனையே சுற்றி வருகின்றன என்பதையும் உலகம் நம்பிய காலம் அது. அத்தகையதொரு நம்பிக்கையை பொய்யாக்கி அதற்கு நேர் எதிராக அறிவியல் ரீதியாக ஆய்வுகள் செய்து சோதனைகளின் வழியே சூரிய மையக் கோட்பாட்டை வெளியிட்ட கெப்லர் அவர்களின் துணிச்சலும் உழைப்பும் இந்த நூலில் அழகாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

நூல் முழுக்க வரைபடங்களும் விளக்கப் படங்களும் என அறிவியல் உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. கெப்லரின் வாழ்க்கை இளமைக்காலம் தொடங்கி அவருடைய மறைவிற்குப்பின் உலகம் அவரை எப்படிப் பார்க்கிறது என்பது வரை அவருடைய ஒவ்வொரு அறிவியல் வேலைகளையும் எந்தவித விடுபடுதலும் இன்றி தொகுத்தளித்திருக்கும் ஆசிரியரின் உழைப்பு வெகுவாகப் பாராட்டப்படக்கூடியது

இன்று நாம் தொலைநோக்கி உட்பட புதிய கருவிகளைக் கொண்டு கோள்களின் இயக்கத்தையும் பூமியில் இருந்து அவை எவ்வளவு தூரத்தில் உள்ளன என்பதையும் துல்லியமாக அளந்திட முடிகிறது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வானியலில் இதுபோன்ற எந்தவித கருவிகளும் இல்லாமல் தனக்கு கிடைத்த கருத்துகளின் அடிப்படையில் அறிஞர்களின் கொள்கைகளின் அடிப்படையில் தன்னிடம் உள்ள கருவிகளை வைத்துக்கொண்டே கோள்களின் சுற்றுப்பாதையை கண்டறிந்தவர் கெப்லர் .

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள கோள்களை ஆய்வு செய்தால் எது கோள்களின் சுற்றுப்பாதையின் மையத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். கோள்களின் அளவை தொலைநோக்கின் வழியே பகுத்து ஆராயவும் முடியும் வெறுமனே நேர்க்காட்சி பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு பூமியை கோள்கள் சுற்றி வருகின்றன என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் அவற்றின் உண்மையான இருப்பிடத்தையும் அமைப்பையும் கெப்லர் துல்லியமாக கண்டறிகிறார்.

மத நூல்களில் உள்ள கருத்துக்களை ஒதுக்கி காலம் காலமாக நம்பி வந்த கருத்துக்களை கேள்விகளுக்கு உட்படுத்தி அறிவியலின் வழியே ஆய்வுகளின் அடிப்படையில் கோள்களின் சுற்றுப்பாதையின் மையம் சூரியனே என்பதையும் கெப்லர் சிறப்பாக நிறுவுகிறார்

பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த வானவியலாளர்கள் டைகோ பிராக்கி கலிலியோ கலிலி மற்றும் ஹோஹன்னஸ் கெப்லர் (Johannes Kepler) இவர்கள் வானியலுக்காற்றிய பங்கு அளப்பரியது. கலிலியோவின் கொள்கை அடிப்படையிலேயே கெப்லரும் தனது கொள்கைகளை வெளியிடுகிறார்

கெப்லர் வாழ்ந்த காலம் மத மோதல்கள் அதிகமாக இருந்த காலங்களில் ஒன்று. கிறிஸ்துவ மதத்திற்குள் காணப்படும் உட்பிரிவுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் அதிகமாகி இருந்த அன்றைய ஜெர்மனியில் அடுத்தடுத்த ஆண்ட மூன்று ரோமானிய கத்தோலிக்க பேரரசர்களிடம் அரசு கணிதவியலாளராக பணியாற்றிய கெப்லர் மத அடிப்படை விவாதத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு தனது வானியல் பணியை திறம்பட செய்து முடித்தவர். மத வேற்றுமைகளை வெறுத்ததன் அடிப்படையில் ஒரு குடிமகனாக தனது குடும்பத்தாருடன் கடுமையாக பாதிக்கப்பட்டவர். திருச்சபையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர். ஆயினும் அத்தகைய மத அரசியல் கொந்தளிப்புகளுக்கு நடுவேயிலும் தனது பணியை திறம்பட செய்து சூரிய மையக் கோட்பாட்டை நிறுவியவர்.

இந்த நூலில் கெப்லர் அவர்களது ஆரம்பம் முதல் இறுதி வரையிலான ஒவ்வொரு நகர்வும் துல்லியமாக பதிவு செய்யப்படுகிறது. அவரது கொள்கைகள் எவ்விதம் உருவாகின என்பதையும் அவர் சிறு சிறு கருவிகளைக் கொண்டு எவ்விதம் மாபெரும் கோட்பாட்டை நிறுவினார் என்பதையும் அவர் எந்தெந்த அறிஞர்களின் கருத்துக்களை பகுத்தாய்ந்தார் என்பதையும் முழுமையாக பதிவு செய்கிறது நூல்.

நண்பர் ஒருவர் பெற்ற கடனுக்கு பிணையாக இருந்த ஹென்ரிச் கெப்லர் தனது அனைத்து சொத்துகளையும் விற்றும் கடனை செலுத்த முடியாதுபோக ராணுவத்திற்கு செல்கிறார் அப்போது அவரது மனைவி கர்ப்பமான நிலையில் 7 மாத முடிவில் ஹோஹன்னஸ் கெப்ளரை பிரசவிக்கிறார். மூன்று வயதாக இருக்கும்போது பெரிய அம்மை நோயால் இறக்கும் தருவாய்க்கு நிலைக்கு செல்லப்படுகிறார். மிகக் கடுமையான பாதிப்பால் அவரது கல்வி முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது அனைத்து அறிவு சார் நடவடிக்கையில் இருந்தும் தடுக்கப்பட்ட அவர் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து பிறகு பள்ளிக்குச் செல்கிறார். எண் கணிதம் மற்றும் வடிவியலில் நல்ல அடித்தளமும் ஈடுபாடும் இருந்ததால் கெப்லர் வானியல் கோட்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு எளிமையாக வானவியல் கொள்கைகளை உணர்ந்து கொள்ள முடிந்தது.

இந்த நூலின் சிறப்பு என குறிக்கப்பட வேண்டியது கெப்லரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்க எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் அவர் ஆய்வுக்கு உட்படுத்திய ஒவ்வொரு அறிஞர்களின் புகைப்படங்களும் அந்த அறிஞர்கள் அறிவியல் துறைக்கு எவ்வித சாதனைகளை செய்தார்கள் என்பது தொடர்பான கருத்துகளும் தொகுக்கப்பட்டுள்ளன. சுமார் 50க்கும் மேற்பட்ட வானியல் அறிஞர்களின் வரலாறுகளை இந்த ஒரே நூலுக்குள் நம்மால் உணர்ந்து கொள்ள முடிவது நூலாசிரியரின் சிறப்பானதொரு உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகச் சொல்லலாம்.

இந்த நூல் வழியே ஒரு வானவியல் அறிஞரின் வாழ்க்கை வரலாற்றுக்குள் நுழைந்து நூறு அறிஞர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடிந்தது.

நூலின் தகவல்கள் : 

நூல் : கோள்களின் நீள் வட்டப் பாதைகளைக் கண்டறிந்த ஹோஹன்னஸ் கெப்லர் (Johannes Kepler)
ஆசிரியர் : ரிஷி சரவணன்
வெளியீடு : அறிவியல் வெளியீடு சென்னை
முதல் பதிப்பு :  ஜனவரி 2025
பக்கம் : 112
விலை :  ரூ 120

நூல் அறிமுகம் எழுதியவர் :

இளையவன் சிவா 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *