உள்நோக்குத் தேடல் என்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. வாரம்தோறும் நமது தலைவர்களை நான் விமர்சித்து வருகிறேன். இது சரிதானா? பெரும்பான்மையான குடிமக்களின் ஆதரவைக் கொண்டு அதிகாரத்தில் அவர்கள் அமர்ந்திருக்கின்ற போது, நான் அவர்களை விரும்பவில்லை என்றால் மிகச் சிறுபான்மையினருக்குளாக நான் இருப்பதாகவே அது பொருள்படும். பெரும்பான்மையினரிடம் சிறுபான்மையினர் அடிபணிய வேண்டும் என்பதே இன்றைய இந்திய ஜனநாயகமாக இருக்கிறது. அதாவது என்னிடமுள்ள சிறுபான்மை பார்வையை நான் தொலைத்து விட்டு பெரும்பான்மை பார்வையிடம் அடிபணிந்திட வேண்டும்.
ஆனாலும் இங்கே சிறுபான்மை கருத்துக்களுக்கும் இடம் இருக்க வேண்டும் என்று நான் கருதுவதாலேயே ஆனந்தவள்ளி என்ற துப்புரவுப் பணியாளர் கேரளாவில் பத்தனாபுரம் பஞ்சாயத்துத் தலைவராகியிருப்பதை நான் மிகவும் நல்ல விதமாகவே உணர்கின்றேன். ‘தற்காலிகத் துப்புரவாளர்’ என்பதே ஆனந்தவள்ளியின் அதிகாரப்பூர்வ பதவியாகும். மிகச்சாதாரண துப்புரவாளரான அவர் அந்தப் பஞ்சாயத்தின் தலைவரான போது அவரை ஏற்றுக் கொள்வதில் உள்ளூர் அதிகாரிகள் அதிகம் சிரமப்பட்டனர். ஆனாலும் தங்களுடைய நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதையும், துப்புரவாளர் ஆனந்தவள்ளி பஞ்சாயத்து தலைவர் ஆனந்தவள்ளியாக ஆகியிருப்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய வாழ்வின் உண்மையாக இருப்பதையும் உணர்ந்து கொள்ள அந்த அதிகாரிகளுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த வகையான யதார்த்தம் யோகி ஆதித்யநாத்தின் ஆளுகைக்குள் இருக்கின்ற நிலப்பரப்பில் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகும். வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து இருந்து வருகின்ற சாதி அமைப்பின் ஆதிக்கம் வடக்கிற்கே உரித்தானதாக இருக்கின்றது. வரலாற்றுக்கு முந்தைய சாதி வேறுபாடுகள் இன்னும் நிலவி வருகின்ற இடங்கள் தமிழ்நாட்டிலும் இருக்கின்றதென்னவோ உண்மைதான் என்றாலும் அதைக் கொண்டு வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே இருக்கின்ற வேறுபாடுகள் எதுவுமில்லை என்று முழுமையாகப் புறக்கணித்து விடுவதற்கான காரணம் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. துப்புரவுப் பணியாளர் ஒருவர் பஞ்சாயத்து தலைவராக ஆகியிருக்கின்ற நிகழ்வை யோகி ஆதித்யநாத்தின் இந்தியாவால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
ஆனால் வடக்கே உள்ள இடங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற தரநிலைகள் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன. சிறிது காலத்திற்கு முன்பு உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வேலைகள் துப்புரவாளர்களிடமும், வார்டு பையன்களிடமும் தரப்பட்டன. அதிகாரிகள் அதைப் பார்த்திருந்த வழியை நாம் ஏற்றுக் கொள்வோம் என்றால், அது நமக்கு மிகவும் முறையான சீரமைப்பாகவே தோன்றும். ஊழியர்களின் பற்றாக்குறை இருப்பதாலேயே துப்புரவாளர்கள், வார்டு பையன்களிடம் பொறுப்புகளை அவ்வாறு மாற்றி ஒப்படைத்ததாக மாவட்டத் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அன்றைய தினம் மருத்துவர் வரவில்லையென்றால், வார்டு பையனே இதய மாற்று அறுவை சிகிச்சையைச் செய்யலாம். தன்னுடைய வாழ்வின் அடிப்படைக் கொள்கையாக ‘அது போகட்டும்’ என்ற மனப்பான்மையை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கின்ற இந்தியா மென்மேலும் தனது பலத்திற்கு வலிமை சேர்த்துக் கொண்டே வளர்ந்து வருகிறது.
2009இல் மத்திய பிரதேச மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதையும் இப்போது நினைவுபடுத்திப் பாருங்கள். சாகரில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஒன்றில் ராம் சரண் பால்மீகி என்பவர் துப்புரவாளராக இருந்து வந்தார். பால்மீகி ஒரு நாள் அங்கே கழுத்தில் பிரச்சனையுடன் வந்த மூன்று வயது குழந்தைக்கு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார். தான் அவ்வாறு மருத்துவரின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டதாக பால்மீகி கூறினார். ஆனால் அந்த மருத்துவரோ அறுவைச் சிகிச்சைக்கு தயார் செய்யுமாறு மட்டுமே பால்மீகியை தான் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். தற்போது எந்தப் பிரச்சனையும் இல்லை, அனைத்தும் சரியாகவே இருக்கிறது என்று கூறிய குழந்தையின் பெற்றோர் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகின்றதோ என்ற கவலையுடனே இருந்தனர். ஒருவேளை ஏதேனும் தவறு நடந்தால், அந்த நேரத்தில் குழந்தையைக் கவனித்துக் கொள்ள துப்புரவாளர் அல்லது காவலாளி போன்றவர்கள் இல்லாமல் மருத்துவர் இருப்பதை உறுதி செய்து கொண்டு தங்கள் குழந்தையை அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டியிருக்கும். இந்தியாவில் இவ்வாறு நாம் நம்முடைய கவனத்தில் வைத்திருக்க வேண்டிய விவரங்கள் நம்மை வியக்க வைக்கவே செய்கின்றன.
எனவே நான் நம்முடைய தலைவர்களை விமர்சிக்க வைப்பதாக இல்லாமல், மகிழ்ச்சியாக என்னை உணர வைக்கக் கூடியவற்றைத் தேடிக் கொண்டே நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். புகழ்ந்து உரைக்கக்கூடிய ஏதாவதொன்றை நான் தேடிக் கொண்டே இருக்கிறேன். நமது தலைவர்களிடம் இருக்கின்ற அறிவு, தொலைநோக்குப் பார்வை, தேசபக்தி, விவேகம் குறித்து புகழ்ந்து பாடுவதற்கான எந்தவொரு சிறிய வாய்ப்பையும் நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றேன். நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். கவனித்துக் கொண்டே இருப்பேன்.
எது நடந்தாலும் அதில் நல்லதைக் காண்பதே மகிழ்ச்சிக்கான திறவுகோலாக இருக்கும். நடைபெறுகின்ற அனைத்திலும் நம்மால் நகைச்சுவையைக் காண முடியுமென்றால் அது இன்னும் சிறந்ததாகவே இருக்கும். தங்களுடைய அரசவைக் கோமாளிகளை நியமனம் செய்த பழைய ஆட்சியாளர்களிடையே அந்த அறிவு நிச்சயம் இருந்திருக்க வேண்டும். நவீன காலங்களிலும்கூட நகைச்சுவையூட்டுவதே எந்தவொரு ஆட்சிமன்றத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ரொனால்ட் ரீகனும்கூட அதைப் புரிந்து கொண்டவராகவே இருந்தார். அறுவைச் சிகிச்சை மேடையில் படுத்திருந்த போது அவர் தன்னைச் சுற்றிலும் இருந்த மருத்துவர்களைப் பார்த்து ‘நீங்கள் அனைவரும் குடியரசுக் கட்சியினர் என்றே நம்புகிறேன்’ என்றார்.
சமீபத்தில் நமது கலாச்சார அமைச்சகம் செய்ததை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டால் அது நம்மில் பெரும்பாலோரைக் கவலையடையவே செய்யும். ஆனால் அதையே நகைச்சுவையாக எடுத்துக் கொண்டால், அதை எல்லோராலும் ரசிக்க முடியும். ‘ஆழ்ந்த சிந்தனையாளர் எம்.எஸ்.கோல்வல்கருக்கு அவரது பிறந்த நாளில் அஞ்சலி’ – இதுவே அந்த அமைச்சகம் வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிக்கையாகும். ‘அவருடைய எண்ணங்கள் நமக்கான உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கின்றன. நமது தலைமுறைகளுக்கு அவை தொடர்ந்து வழிகாட்டும்’ என்று அந்த அறிக்கை மிகவும் முக்கியமான ஒன்றை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இருந்தது. ‘இது ஒரு சுதந்திர நாடு, இங்கே நீங்கள் எதையும் சொல்லலாம். ஜே.என்.யு ஒரு துக்டே-துக்டே கும்பல், காஷ்மீரிகள் பயங்கரவாதிகள், முஸ்லீம்கள் துரோகிகள், தாராளவாதிகள் கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் தேச விரோதிகள் என்று… இன்னும் இதுபோல பலவற்றையும் நீங்கள் சொல்லலாம்’ என்று மிதாலி சரண் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘பானையில் உள்ள ஒட்டுமொத்த பிரியாணியையும் மஞ்சள் நிறமாக்குவதற்கு மிகச் சிறிய அளவிலான குங்குமப்பூ இழைகள் மட்டுமே போதுமானவை… அரைகுறையான ஆனாலும் பன்மைத்துவ ஜனநாயகத்திலிருந்து நாம் இப்போது முற்றிலும் அபாயகரமான தங்களைக் குறித்து தற்பெருமை கொண்டிருக்கின்ற நம்பிக்கை கொள்ள முடியாத அரசை நோக்கி சென்றுள்ளோம்’ என்று இதையும் கடைசியாகச் சேர்த்து அவர் சொல்லியிருக்கலாம் என்றே நினைக்கிறேன்.
நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 2021 பிப்ரவரி 28
தமிழில்: தா.சந்திரகுரு