12-08-2024 அன்று ஏசியன் இதழியல் கல்லூரி வளாகத்தில் இந்தியாவில் ஒன்றிய – மாநில நிதி உறவுகள் தொடர்பான சவால்கள் மற்றும் முன்னோக்கிய பாதை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முன்னாள் கேரள நிதி அமைச்சர் டாக்டர். தாமஸ் ஐசக் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்வை ஏசியன் இதழியல் கல்லூரியும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வழங்கினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்து திரு N.ராம் அவர்கள், பொருளாதார நிபுணர் திரு.வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர். ஏசியன் இதழியல் கல்லூரி இதழியல் துறைத்தலைவர் திரு.சசி குமார் வரவேற்புரை வழங்கினார். பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாளர் திரு.நாகராஜ் நன்றியுரை ஆற்றினார்.
முன்னாள் கேரள நிதி அமைச்சர் டாக்டர். தாமஸ் ஐசக் பேசியதாவது:
எந்தவொரு நாடு பரப்பளவில் பெரியதாய் உள்ளதோ, அந்நாட்டிற்கு வலுவான ஒன்றிய அரசு தேவைப்படுகிறது. இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரங்களையும், தேசிய இனங்களையும் கொண்ட நாட்டில் வளர்ச்சி என்பது அனைத்து பிரதேச நலன்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
குஜராத் போன்ற மாநிலங்கள் தொழில்துறை வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. ஆனால் கேரளா சமூகக் கட்டமைப்பு மேம்பாட்டில் சிறந்து விளங்குகிறது. அதேபோல் தமிழ்நாடு தொழில்மயமாதலில் கவனம் செலுத்தினாலும், மாநில அரசு சமூக நலத்திட்டங்களில் முன்னணி வகிக்கிறது.
நிர்வாகத்தில் சிறந்த மாநிலம் குறித்த முடிவுக்கு நான் வரவில்லை. ஆனால் முக்கிய முடிவுகள் ஒட்டுமொத்த பிரதேச மக்களின் விருப்பத்திற்கிணங்க இருத்தலே முக்கியம். ஏனெனில் மாநில வளர்ச்சியில் மக்களின் பங்கேற்பு அவசியமாகிறது. ஆனால் கூட்டாட்சியில் மாநில மக்களின் முடிவுக்கு எதிராக ஒன்றிய நிர்வாக அமைப்பு செயல்படுகிறது.
நம் நாடு Quasi federation என்றழைக்கப்படும் பகுதியளவு நிர்வாக முறை நடைமுறையில் உள்ளது என்பதை மாற்றுக் கருத்தின்றி பெரும்பான்மையோர் ஏற்றுக்கொள்வார்கள். அதாவது அரசின் ஆளுகையில், தனிப்பட்ட முறையில் நிர்வாகம் செயல்படுகிறது.
ஒன்றிய அரசு மற்றும் மாநிலம் சார்ந்த உறவுகளில் நிதி நிர்வாகத்தில் தனி கவனம் செலுத்துகிறது. அதிலும் நிதி தொடர்பான உறவுகளில் கூடுதல் அதிகாரத்தை தன் வசம் வைத்துள்ளது. நடைமுறை நிர்வாகப் பொறுப்புகளை நிறைவு செய்யவேண்டிய கட்டாய நிலையில் மாநிலங்கள் உள்ளன என்பதே உண்மை.
மாநில அரசுகள் 60% வளர்ச்சி மற்றும் செலவினங்களை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் மாநில அரசுகளிடம் 40% நிதியே கைவசமுள்ளது. இதைப்போன்ற சிக்கல்களை சரி செய்யவே நமது அரசியலமைப்பு நிதி கமிஷனை தோற்றுவித்தது.
நிதி கமிஷன், ஒன்றிய மற்றும் மாநில அரசுக்களுக்கிடையே வரிகள், வருமானங்களைப் பகிர்ந்தளிப்பதில் இன்றியமையாத பங்கு வகித்தது. இவ்வமைப்பு நிதி பகிர்மானங்கள் குறித்த விதிமுறைகளை நிர்ணயித்தது. நிதி கமிஷன் அமைப்பு ரீதியாகவே மாநில அரசுகளுக்கு தங்கள் தரப்பை எடுத்துரைக்க வாய்ப்பு வழங்கியது.
இதேபோன்று தேசிய திட்டங்களை உருவாக்கப்பட்ட மற்றொரு சட்டபூர்வமான அமைப்பு திட்ட கமிஷன். இந்த அமைப்பிலும் மாநிலங்கள் கூறும் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. பொருத்தமானவை பரீசிலிக்கப்பட்டு, தேசிய வளர்ச்சி கவுன்சில் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டன.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 282ன் படி, ஒன்றிய அரசு, எந்தவிதமான கட்டுப்பாடுகளுமின்றி, அரசின் முடிவின் பேரில் நிதி அளிக்க அதிகாரமளிக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கு நலன் விளைவித்த திட்ட கமிஷன் போன்ற அமைப்புகள் ஒன்றிய அரசால் கலைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு திட்டங்களை வகுப்பது மட்டுமின்றி, திட்டங்களுக்கு கடனும் வழங்கியது. ஆனால் வரம்பற்ற நிதி நல்கை அதிகாரத்தை மட்டும் ஒன்றிய அரசு தன்வசம் கொண்டுள்ளது.
14வது நிதி கமிஷன் காலகட்டத்தில், அப்போதைய குஜராத் முதலமைச்சராக திரு.நரேந்திர மோடி பதவி வகித்தார். அவர் நாட்டின் வருவாயில் 50% மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் தற்போதைய ஒன்றிய அரசு தன்போக்கில் பாரபட்சமான நிதி பகிர்ந்தளிப்பு கொள்கையை கடைபிடிக்கிறது.
ஒன்றிய அரசு தாக்கல் செய்த 2024-2025 நிதிநிலை அறிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பீகார் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற தங்கள் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களுக்குமிகுதியான அளவில் நிதி வாரி தரப்பட்டுள்ளது. இந்த அப்பட்டமான அரசியல் சார்புடைய நடவடிக்கையாகும். இதுவரை எந்த அரசும் செய்யத் துணியாத செயலை ஒன்றிய அரசு செய்யத் துணிந்துள்ளது.
16வது நிதி கமிஷன் திட்டத்தின் படி, மாநில அரசுகளுக்கான வரிகளை உயர்த்த திட்டமிட்டுள்ளது. தனது நிதி ஆதாரங்களுக்கு பல்வேறு வகையான வழிவகைகளைக் கொண்டுள்ளது ஒன்றிய அரசு. இத்தனை நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தாமல் மாநில அரசுகளின் வருவாயைப் பறிக்க நினைக்கிறது.
மாநிலங்களிடமிருந்து பெறப்படும் வரி வருமானங்கள், மாநில அரசுகளுக்கு சரியான அளவில் பகிர்ந்தளிக்கப்படும் முறையை பற்றி சிந்திக்க வேண்டும். சத்தீஸ்கர், ஜார்கண்ட், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் இருமடங்கு வருவாயை ஒன்றிய அரசிடமிருந்து பெறுகின்றன. இவற்றையெல்லாம் விட பீகார் ஏழு மடங்கு வருவாயை திரும்ப பெறுகிறது.
இந்த மறுபகிர்ந்தளிப்பு முறையானதுநாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகளை உருவாக்குகிறது.நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கான முழு உரிமைபெற்றவர்களாவர். சமத்துவமின்மை பெருகிக்கொண்டே வருவது இதன் மூலம் புரிய வருகிறது.
1991ஆம் ஆண்டில் நாட்டின் தனி நபர் வருமானம் 56% இருந்தது. 2021ஆம் ஆண்டில் 29% ஆக குறைந்துள்ளது. மாநில வாரியாக கணக்கிட்டாலும் தனி நபர் வருமானம் பின்தங்கிய மாநிலங்களிலும் வெகுவாக குறைந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய குத்தகைகள் குஜராத்,மகாராஷ்டிரா போன்ற மாநில குத்தகைதாரர்களுக்கே விடப்படுகிறது. இதேபோல் சந்தை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளும் பொருளாதாரத்தை பாதிக்க காரணமாகின்றன.
சந்தையை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாதலால் முதலீடுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அரசின் கொள்கை மாற்றங்களே மொத்தமாக நாட்டின் வர்த்தகத்தை பாதிக்கின்றன.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளா தனித்தன்மையான அளவில் வேறுபடுகிறது. சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு தன் வருவாயை பயன்படுத்துகிறது. இதனால் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டாலும், கேரளா அரசு தனியார் நிறுவனங்களை எதிர்பாராமல் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளை சமூக முன்னேற்றத்திற்காக தன் வருவாயின் பெரும் பகுதியை ஒதுக்கீடு செய்கிறது.
மாநில அரசுகள் தமது வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு திட்டங்களுக்காக மிகுதியான அளவில் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசின் தலையீட்டால் வரிகளின் மூலம் வரும் வருவாய் குறைகிறது.
மிகச் சிறந்த முறையில் நிதியை நிர்வகிப்பதில் கேரளா அரசு இந்தியாவிற்கே முன்னோடி ஆக விளங்குகிறது. தனது மாநிலத்தின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தை அமைத்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் இந்நிறுவனம் இருப்பதால் இதன் வழியாக கேரளா அரசு தனது வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி தொடர்பான பற்றாக்குறையை ஈடு செய்ய முடிகிறது. ஒன்றிய அரசும் இது போன்றதொரு அமைப்பை நிறுவ வேண்டும்.
அவ்வமைப்பு மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசுகளின் இடையே இருக்கும் நிதி பகிர்மான சிக்கல்களை தீர்த்திட வழிவகுக்கும்.
மாநில அரசுகள் கடன் பெறும் வரம்புகள் மிகக் குறைவான அளவில் உள்ளது. 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் கடன்களை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசு இதிலும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு நீண்டகால கடன்களை அளித்தல் வேண்டும். மாநிலங்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு அந்நிதி ஏதுவாக இருக்கும்.
தற்போதைய ஆட்சியில் இருக்கும் ஒன்றிய அரசு சில மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு கேரளா அரசுகள் இடையே சுமூகமான உறவைப் பேணவில்லை. இதற்கெல்லாம் சிறந்த தீர்வாக கூட்டாட்சி முறையே அமையும். இதன் அடிப்படையில் மாநில அரசுகளின் உரிமை காக்கப்பட வேண்டும்.
திரு.இந்து ராம் அவர்கள் பேசியதாவது:
இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து அடக்குமுறையை சந்தித்து வருகின்றன. குறிப்பாக மாநிலங்களை எதிர்கொள்ளும் அடக்குமுறை பற்றி சொல்லவேண்டும்.
கவர்னர்கள் ஒன்றிய அரசின் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர். அதற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில கவர்னர்களின் நடவடிக்கைகள் மிக மோசமான முன்னுதாரணங்களாகும்.
மிகவும் புதிய வழிகளில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவிகள் நிறுத்தப்படுகின்றன. நாட்டின் மதச்சார்பற்ற தன்மை சோதிக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பே கூட்டாட்சி முறைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆட்சிமுறையில் சர்வாதிகாரப் போக்கு அதிகரித்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகு, பதவியேற்றுள்ள சர்வாதிகார அரசு முன்பை விட பலவீனமாக உள்ளது.
நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளின் நிர்வாகத்தில் அதிகார சக்திகள் தலையீட தொடங்கியுள்ளன.
மோடி அரசு கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் போன்ற உரிமைகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. பத்திரிகையாளர்கள், மாணவர்கள், விமர்சகர்கள் சமூகப்போராளிகள் காரணங்களின்றி சிறை வைக்கப்படுகின்றனர். அவர்கள் சிறையிலிருந்து வெளியேற பிணை மறுக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. மதச்சிறுபான்மையினர் பல்வேறு விதமான வழிகளில் அச்சுறுத்தப்படுகின்றனர். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வரிகள் மற்றும் வருவாய் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை.
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை இதற்கு வெட்கக்கேடான உதாரணமாகச் சொல்லலாம். எனவே ஒன்றிய அரசின் நிதி பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளில் ஏற்றத்தாழ்வுகளை களைய, சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.
திரு. வெங்கடேஷ் ஆத்ரேயா பேசியதாவது:
திரு. தாமஸ் ஐசக் அவர்கள் கேரள உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் தனக்குள்ள அறிவாற்றலுக்கு சாட்சியாக மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் நேர்த்தியான படைப்புகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மக்கள்தொகையை அளவீட்டாக கொண்டால், ஒப்பீட்டளவில் பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளை ஒத்துக் காணப்படுகிறது. இம்மாநிலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிர்வகிக்கப்படுகிறது. மக்கள் பங்கேற்புடைய அரசுக்கு வரிகள் விதிக்க உரிமைகள் இல்லை. குறிப்பிட்ட அரசு வரிகள் மூலம் தன்னை பிரதிநிதித்துவப்படுத்தவும் வாய்ப்புகள் வழங்கப்படுவதும் இல்லை.
சரக்கு மற்றும் சேவை வரிகள் (GST) அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு மாநிலங்களுக்கு எதிரான நிலைமை ஏற்பட்டுள்ளது. வரிகள் மூலம் வரும் வருவாய் ஒரு பக்கச்சார்பு நிலையை அடைந்துள்ளது. மாநிலங்கள் பெரும்பகுதி வரிகளைப் பெறுவதற்கு வருவாய் இனங்களாக பெட்ரோல்/டீசல், புகையிலை, மது ஆகியவற்றையே சார்ந்துள்ளது.
இந்தியாவில் தாரளமயமாக்கல் தொடங்கி பண மதிப்பிழப்பு வரை மிகுதியான அளவில், மாநில அரசுகள் தொடங்கி சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வரை பாதிப்படைந்துள்ளனர். கார்பரேட் கம்பெனிகளுக்கான வரி விகிதம் 30% இருந்து 22% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி நிலை காலகட்டத்திற்கு முன்பு வரை கல்வித்துறை மாநில பட்டியலில் இருந்தது. தற்போதைய நிலையில் பொதுப்பட்டியலில் உள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசு கல்வித்துறையை கைப்பற்ற நினைக்கிறது. இந்திய அரசியலமைப்பின்படி இந்தியா மாநிலங்களின் ஒன்றியமேயாகும். எனவே ஒவ்வொரு மாநிலமும் பங்கேற்பது அவசியமாகிறது.
நிருபர் – கார்த்திக் மாரிமுத்து
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.