மூன்றரை கோடி மக்களுக்கும், புலம் பெயர்ந்தவர்களுக்கும் கேரளா திறமையாக உணவளித்து வருகிறது – ஆண்டோ  டி ஜோசப் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

மூன்றரை கோடி மக்களுக்கும், புலம் பெயர்ந்தவர்களுக்கும் கேரளா திறமையாக உணவளித்து வருகிறது – ஆண்டோ  டி ஜோசப் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் தூங்கி வழிகின்ற கிராமமான முல்லூர்கராவில் இருக்கின்ற நியாயவிலைக் கடை ஒன்றின் உரிமையாளரான அப்துல் நாசர்,  வழக்கத்திற்கு மாறாக  தற்போது சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறார். தனது கடைக்கும், பக்கத்தில் இருக்கின்ற ரேஷன் கடைக்கும் இடையில் தனது நேரத்தைப் பிரித்துக் கொண்டு அவர் செயல்பட வேண்டியிருப்பதால், தினமும் அவரது கடைக்கு வெளியே வாடிக்கையாளர்களின் வரிசை நீண்டிருக்கிறது.

பக்கத்தில் இருந்த ரேஷன் கடையில் ஏப்ரல் 13 அன்று சோதனை நடத்திய ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள், மாநில பொது விநியோக முறையில் வழங்கப்படாத மளிகைப் பொருட்கள் சட்டவிரோதமாக அங்கே விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்தனர். அந்தக் கடையின் உரிமம் பின்னர் ரத்து செய்யப்பட்டது. ’இப்போது அந்தக் கடையும் எனது கடையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பஞ்சாயத்தில் சுமார் இரண்டாயிரத்து நூறு அட்டைதாரர்களுக்கு நான் சேவை செய்து வருகிறேன்’ என்று நாசர் கூறுகிறார்.

முல்லூர்கராவில் 5,000 அட்டைதாரர்களுக்கான தேவைகளை ஆறு ரேஷன் கடைகள் பூர்த்தி செய்து வருகின்றன.  ஒவ்வொரு கடையும் 700 முதல் 1,100 பேருக்கு சேவையளிக்கின்றன. மொத்தம் 14,189 நியாய விலைக் கடைகளைக் கொண்ட வலுவான வலைப்பின்னல் அமைப்பு மாநிலத்தில் உள்ளது. கோவிட்-19 தொற்றுநோயின் போது இந்த வலைப்பின்னல் அமைப்பின் மூலமாகவே, உணவு சீராக விநியோகிக்கப்படுவதை கேரளா உறுதி செய்திருப்பது தெரிய வருகிறது.

இந்த வலைப்பின்னலே மற்ற அவசரகாலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெருமளவிலான பசி மற்றும் தோல்வியடைந்திருக்கும் பொது விநியோக முறை பற்றிய செய்திகள் பிற மாநிலங்களில் இருந்து தொடர்ந்து வெளிவருகின்ற நிலையில், உணவு குறித்த கேரளாவின் இந்த அணுகுமுறை, நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவளிப்பதற்கான படிப்பினைகளை  வழங்குவதாக இருக்கிறது.

kerala latest update: Kerala to begin distribution of free ration ...

’மாநிலத்தில் உள்ள 87.28 லட்சம் அட்டைதாரர்கள் அனைவரையும் நாங்கள் கவனித்து வருகிறோம்’ என்று மாநில உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திலோத்தமன் என்னிடம் கூறினார். ஊரடங்கின் போது, அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது என்று கூறிய திலோத்தமன் ’நாங்கள் முன்னுரிமை இல்லாதவர்களையும் கவனிக்க முடிவு செய்தோம். அவர்களுக்கு வழங்கப்படுகின்ற வழக்கமான ரேஷன் போதுமானதாக இல்லை என்பதால், கூடுதலாக 15 கிலோ தானியங்கள், மூன்று கிலோ ஆட்டா வழங்கப்படும் என்று அறிவித்தோம்’ என்று  தெரிவித்தார்.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் கேரளாவின் சுகாதார அமைச்சகத்தின் முயற்சிகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிட்-19 க்கு எதிரான போரின் முன்வரிசையில் திலோத்தமனின் குழுவும் சமமான முக்கிய பங்கைக் கொண்டதாக இருக்கிறது. மாநிலத்தில் நன்கு சுமுகமாக இயங்கி வருகின்ற பொது விநியோக முறை நோய் பரவல் வளைவைத் தட்டையாக்குவதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதுமில்லாத வகையில் இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுடைய முயற்சி கேரளாவை  பசியற்ற  நிலையில் வைக்கவும் செய்திருக்கிறது.

அரசு எடுத்துள்ள அவசர நடவடிக்கைகளில், சிறப்பு குடும்பத் தொகுப்பு விநியோகம் முக்கியமானது. இந்த தொகுப்பில் சோப், மசாலா தூள் மற்றும் உப்பு போன்ற 17 பொருட்கள் உள்ளன. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், ஏற்கனவே  அவர்கள் பெறுகின்ற உணவு தானியங்களுக்கு கூடுதலாக இவையும் சேர்த்து விநியோகிக்கப்படுகின்றன.

அட்டை இல்லாத 25,000 பேர், மக்கள்நலன் சார்ந்த அமைப்புகள், அனாதை இல்லங்கள், கான்வென்ட்கள் போன்ற மத நிறுவனங்களில் உள்ள நான்கு பேர் ஒரு குடும்பமாக கணக்கிடப்பட்டு, அவர்களுக்கு அரிசி மற்றும் இந்த குடும்பத் தொகுப்பை நாங்கள் விநியோகித்துள்ளோம்’ என்று திலோத்தமன் கூறுகிறார்.

வேண்டாம் என்று மறுத்து விட்ட சிலரைத் தவிர  கிட்டத்தட்ட முன்னுரிமை இல்லாத ரேஷன் கார்டு வைத்திருக்கும் நாற்பத்தொன்பது லட்சம் பேருக்கு – அரசாங்க வகைப்பாட்டில் இவர்கள் ஏழ்மையானவர்கள் அல்ல  – 15 கிலோ அரிசி மற்றும் 3 கிலோ ஆட்டா விநியோகத்தை ஒரு வாரத்திற்குள் செய்து முடித்திருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. விநியோகம் வேகமாக நிகழ்ந்த இடங்களுக்கான ஆதாரமாக முல்லூர்கரா இருக்கிறது. ’ஏப்ரல் 1 அன்று விநியோகத்தைத் தொடங்கினேன். அதை ஐந்தே நாட்களில் முடித்து விட்டேன்’ என்று நாசர் கூறுகிறார்.

Lockdown Family Used To Call Ngo For Food Ration Kit When They ...

தன்னுடைய பயனர்களை அவர்களுடைய தேவையின் அடிப்படையில் நான்கு வெவ்வேறு அட்டைகளின் கீழ் கேரளாவின் பொது விநியோக முறை வகைப்படுத்தி வைத்திருக்கிறது. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்கள் மஞ்சள் அட்டை என்று பொதுவாக அழைக்கப்படுகின்ற அந்தியோதயா அட்டையைக் கொண்டுள்ளன.

இந்த குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ கோதுமை இலவசமாகக் கிடைக்கும். மாநிலத்தின் தனிநபர் வருமானம், 2018–19ஆம் ஆண்டில் இந்திய சராசரியை விட 1.6 மடங்கு அதிகமாக இருக்கின்ற மாநிலத்தில், ஒப்பீட்டளவில் மிகச் சிறிய எண்ணிக்கையில் இருக்கின்ற இந்த மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே குடும்பத் தொகுப்பை விநியோகித்து விட்டதாக நாசர் கூறினார்.

இளஞ்சிவப்பு அட்டைதாரர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வருபவர்கள். இந்த கார்டுதாரர்களுக்கான குடும்பத் தொகுப்பை தான் பெறத் தொடங்கியிருப்பதாகவும், ஏப்ரல் 27 முதல் அவற்றின் விநியோகத்தைத் தொடங்கப் போவதாகவும் நாசர் கூறினார். ஊரடங்கிற்கு முன்பே, இளஞ்சிவப்பு அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு நான்கு கிலோ அரிசி, ஒரு கிலோ கோதுமை ஆகியவை ஒரு கிலோ இரண்டு ரூபாய் என்ற விலையில் தரப்படுகிறது.

மற்ற இரண்டு வகையான –  நீல அட்டை, மானியத்துடன் முன்னுரிமையற்றது; வெள்ளை அட்டை, மானியம் இல்லாத, முன்னுரிமையற்றது – அட்டைதாரர்களுக்கு தொகுப்பு விநியோகம் விரைவில் வரும் என்று நாசர் கூறுகிறார். நீல அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு நபருக்கு இரண்டு கிலோ அரிசி, ஒரு கிலோ நான்கு ரூபாய் என்ற விலையில் கிடைக்கும். இதேபோன்று, வெள்ளை அட்டைதாரர்களுக்கு ஒரு நபருக்கு இரண்டு கிலோ அரிசி, ஒரு கிலோ 10.90 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும். ரேஷன் கார்டுகள் இல்லாதவர்கள் அரிசி, கோதுமை மற்றும் ஆட்டா ஆகியவற்றை தங்கள் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டுகள் இல்லை என்ற சுய அறிவிக்கை மூலம் தங்களுக்கு  அருகிலுள்ள ரேஷன் கடைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

PDS

கேரள அரசாங்கம் விரைவாக உணவளிப்பதற்கு ஏற்ற மற்றொரு முக்கியமான புள்ளிவிவரம், அதிதி தொழிலாளிகள் – விருந்தினர் தொழிலாளர்கள் என்று அவர்கள் அழைக்கிற மாநிலத்தின் முப்பத்தைந்து லட்சம் வலுவான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்ததாக இருக்கிறது. ஊரடங்கால் அங்கே சிக்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு சிறப்பு தொகுப்புகளை வழங்கி வருகிறது. மாநிலங்களுக்கிடையே ரேஷன் கார்டுகளின் பெயர்வுத்திறனை முதலில் தொடங்கிய 12 மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்று திலோத்தமன் கூறுகிறார்.

அதாவது மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் வழங்கப்பட்டிருக்கின்ற  ரேஷன் கார்டுகளை கேரளாவில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கேரளாவில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது உணவு தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும்.

தற்போதைய நெருக்கடி குறித்து கேரளா மிகவிரைவாகச் செயல்பட்டிருப்பதற்கான் காரணம், அது அனைவருக்குமான ரேஷன் முறையைக் கொண்டுள்ளதே ஆகும். பிற மாநிலங்களில் உருக்குலைந்த, ஒழுங்கற்ற பொது விநியோக முறைகளே  இருந்த நிலையில், 1960களின் மத்தியில், சட்டரீதியான அனைவருக்குமான ரேஷன் முறை மாநிலத்தில் உருவாக்கப்பட்டது.

1997ஆம் ஆண்டு இலக்கு கொண்ட பொது விநியோக முறை (டிபிடிஎஸ்) என்ற புதிய முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியபோது, கேரளாவில் இருந்து வந்த அமைப்பு  நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. அந்த புதிய அமைப்பு முறை, திட்டக்குழுவால் வரையறுக்கப்பட்டவாறு வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் வழங்குவதை  ஊக்குவித்தது.

பெரும்பாலும் நகர்ப்புற சார்பு, கிராமப்புற ஏழைகள் அதிக அடர்த்தியுடன் உள்ள மாநிலங்களில் மிகக் குறைவான பாதுகாப்பு, விநியோகத்திற்கான வெளிப்படையான பொறுப்புணர்வு ஏற்பாடுகள் போன்றவை முந்தைய விநியோக முறையில்  இல்லை என்று கருதிய மத்திய அரசாங்கத்தின் நம்பிக்கையில் இருந்தே, இந்தியா முழுவதற்குமான டிபிடிஎஸ் முறையை அறிமுகப்படுத்துகின்ற நடவடிக்கை உருவானது.

கொச்சியில் உள்ள பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையத்துடன் தொடர்புடைய ஸ்ருதி சிரியாக், விஷிஷ்தா சாம் மற்றும் நவோமி  ஜேக்கப் ஆகியோரின் ஆய்வுக் கட்டுரையில் இந்த முறை குறித்த பகுப்பாய்வு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பின்னர், 2000 ஆம் ஆண்டில்  டிபிடிஎஸ் முறையுடன் அந்தியோதயா அன்ன திட்டமும் சேர்க்கப்பட்டது. நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழே அப்போது இருந்த 6.52 கோடி மக்களில், மேலும் ஒரு கோடி ஏழைக் குடும்பங்களின் நலனை இந்த திட்டம்  இலக்காகக்  கொண்டிருந்தது.

மத்திய அரசின் மறுசீரமைப்பின் விளைவாக, டிபிடிஎஸ் மூலம் கேரளாவிற்கு வழங்கப்பட்ட உணவு தானிய ஒதுக்கீடு முன்பு வழங்கப்பட்ட அளவை விடக் குறைந்தது. முன்னதாக, தன்னுடைய தானிய தேவைகளில் 32 சதவீதத்தை மத்தியிலிருந்து கேரளா பெற்றது. மாநிலத்தின் தேவையில் நான்கு சதவீதம் மட்டுமே  என்ற அளவிற்கு அது இப்போது குறைந்துவிட்டதாக அந்த ஆய்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின் படி 42 சதவீத வீடுகளை வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களாக (பிபிஎல்) கேரள அரசு அடையாளம் கண்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, திட்டக் குழு மாநிலத்தில் வெறும் 25 சதவீத வீடுகளை மட்டுமே பிபிஎல் என்று அடையாளம் கண்டுள்ளது. மாநிலத்தின் சொந்த நிதியிலிருந்து இந்த வீடுகளுக்கு பிபிஎல் மானியங்களை மாநில அரசு கொடுக்கத் தொடங்கியது. இப்போது, கேரளாவின் மக்கள் தொகையில் 46 சதவிகிதம் பேர் முன்னுரிமையின் கீழ் வருகின்றனர்’ என்று திலோத்தமன் கூறினார். முன்னுரிமை இல்லாத பகுதியினருக்கான உணவு தானியப் பற்றாக்குறை அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக  இருப்பதாக அவர்  தெரிவித்தார்.

எங்கள் மாநிலத்துக்கு நிதி உதவி தான் ...

கேரள அரசு எப்போதுமே நீண்டகால உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டிருப்பதாலேயே அனைவருக்குமான ரேஷன் முறையை ஏற்றுக்கொண்டது என்று கேரளாவின் நிதியமைச்சரான தாமஸ்  ஐசக் கூறுகிறார். தனக்குத் தேவையான உணவு தானியத்தில் 50 சதவீதத்தை மட்டுமே கேரளா உற்பத்தி செய்கிறது. சமீப காலங்களில், பணப்பயிர்களின் சாகுபடி விரிவடைந்ததால் நெல் சாகுபடி மேலும் குறைந்திருக்கிறது. அதுவும் ஓரளவிற்கு இந்த பற்றக்குறைக்கான  காரணமாக இருக்கிறது.

’கடந்த காலங்களில் கடுமையான விநியோகத் தடைகள் இருந்ததால், உணவு தானியங்கள் எங்களுக்கு கிடைக்காமல் போயின’ என்று கூறிய ஐசக்  ’இப்போது முன்னுரிமை அல்லாத பகுதியினராக இருக்கின்ற மாநில மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 54 சதவிகிதம் பேருக்கு, இரண்டு கிலோ வரையறுக்கப்பட்ட ரேஷன் மட்டுமே கிடைக்கிறது. இது உண்மையில் எதுவும் கிடைக்காததற்குச் சமமானது. தொற்றுநோய்களின் போது, உணவு தானியங்கள் வழங்கல் பாதிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், கடுமையான பற்றாக்குறையை கேரளா எதிர்கொள்கிறது’ என்றார். ’

கடந்த காலங்களில் மானிய விலையில் உணவு தானியங்களை விற்குமாறு  மத்திய அரசிடம்  வைக்கப்பட்ட கேரளாவின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. மத்திய அரசு எங்களுக்கு விற்பனை செய்கின்ற அரிசியின் விலை மிக அதிகம், ஒரு கிலோவுக்கு ரூ.22’ என்று  அவர் என்னிடம் கூறினார். ஐசக்கின் கூற்றுப்படி பார்த்தால், உணவு தானியங்களை அதிக விலைக்கு வாங்கி, வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள வீடுகளுக்கு அதனை விற்பனை செய்வதன் மூலம் மாநிலத்திற்கு பெரும் நிதிச் சுமை ஏற்படுகிறது. ’வெள்ளத்தின் போது கேரளாவிற்கு வழங்கப்பட்ட கூடுதல் உணவு தானியங்களுக்கு கூட, இந்த மத்திய அரசு 250 கோடி ரூபாயை எங்களிடம் கேட்கிறது’ என்று ஐசக் கூறினார்.

எப்படியென்றாலும், உணவுக்கான அரசின் செலவுகள் வீணானவை எனக் காட்டி அதனை மிகைப்படுத்தக்கூடாது என்று திலோத்தமன் சுட்டிக்காட்டுகிறார். கேரளாவின் மாதாந்திர ரேஷன் தொகை ரூ.80 கோடி என்ற அலவில் இருக்கிறது. இதில் ரூ.30 கோடி மானியமாகும். அதே நேரத்தில் போக்குவரத்துக்கு ரூ.20 கோடியும், விற்பனையாளர்களுக்கு கமிஷனாக ரூ.30 கோடியும் செலவிடப்படுகின்றன. மேலும் ’இந்திய உணவுக் கழகத்திடமிருந்து கூடுதல் அரிசியை எடுத்துக் கொண்டால், ஒரு கிலோவுக்கு ரூ.22 செலவாகும். எனவே, முன்னுரிமை இல்லாதவர்களுக்கு சமீபத்தில் நாங்கள் வழங்கிய 15 கிலோ அரிசி மூலம் எங்களுக்கு சுமார் 130 கோடி ரூபாய் செலவாகும்’ என்று  திலோத்தமன் கூறினார்.

மாநில அரசின் விநியோகத்துடன், தற்காலிக நாடு தழுவிய உணவு விநியோகத் திட்டத்தை மத்திய அரசும் அறிவித்துள்ளது. கேரளாவில் நடந்து வரும் திட்டங்களுக்கு கூடுதலாக அவை விநியோகிக்கப்படும். ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு நபருக்கு ஒரு கிலோ பருப்பு வகைகள் என்ற அளவில் மூன்று மாதங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மார்ச் 26 அன்று அறிவித்தார்.

இது முன்னுரிமை உள்ள, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பருப்பு வகைகள் இன்னும் கேரளாவுக்கு வழங்கப்படாத நிலையில், அரிசி  வழங்கல் ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ’அனைத்து மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் 20 மற்றும் 21 தேதிகளில் அதை நாங்கள் வழங்கி முடித்து விட்டோம். அட்டை எண்ணின் இறுதி  இலக்கத்தைக் கொண்டு பகுதிபகுதியாக விநியோகித்து, ஏப்ரல் 26 ஆம் தேதிக்குள் இளஞ்சிவப்பு அட்டைதாரர்களுக்கு வழங்கலை நாங்கள் முடித்து விடுவோம்’ என்று நாசர்  தெரிவித்தார்.

பொது விநியோகத்தில் கேரளாவின் வெற்றிக்கு, அதன் பொது விநியோக உள்கட்டமைப்பின் செயல்திறனும், அளவும் காரணமாக இருக்கலாம். தனக்கான அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றின் முழு தேவையையும் இந்திய உணவு தானியக் கழகத்தின் (எஃப்.சி.ஐ) கிடங்குகளிலிருந்து மாநில அரசு எடுத்து வருகிறது. ’கேரளாவில் எஃப்.சி.ஐயில் இருக்கின்ற தற்போதைய  கையிருப்புகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு வரும்’ என்று உணவு மற்றும் சிவில் விநியோக அமைச்சகத்தின் இணைச்செயலாளர் மோனிலால் குறிப்பிடுகிறார்.

’எனவே, அங்கே விநியோகத் தடை எதுவும் ஏற்படாது. எஃப்.சி.ஐ யிலிருந்து அதை எடுத்துக் கொண்ட பிறகு, பிரதமர் கரிப் கல்யாண் ஆன் யோஜனா (பி.எம்.ஜி.கே.ஏ,ஒய்) திட்டத்தின் கீழ் எங்களுக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கும்போது நாங்கள் அதைச் சரிசெய்து கொள்வோம்’ என்று அவர் மேலும் கூறினார். பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் திட்டம் என்பது, 80 கோடி ஏழை குடிமக்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான  அடுத்த மூன்று மாதங்களுக்கு பணம் மற்றும் ரேஷன் கிடைக்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்திருக்கும் திட்டமாகும்.

Provision shops in Kerala to be open till 7 pm, restaurants ...

’மத்திய அரசு உறுதியளித்த பருப்பு வகைகள் இன்னும் கேரளாவை வந்தடையவில்லை. ’கொச்சி சர்வதேச கொள்கலன் டிரான்ஷிப்மென்ட் டெர்மினல் மூலம் அதன் விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம்’ என்று சிவில் சப்ளை ஆணையத்தின் உதவி செயலாளர் எஸ்.எஸ்.அனிதத் தெரிவித்தார். இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பிலிருந்து சப்ளைகோ – கேரள மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலமாக பொருட்கள்  வழங்கப்படுகின்றன. ஏப்ரல் 28 முதல் அவற்றைப் பெற ஆரம்பிக்கலாம்’ என்று அவர் கூறினார்.

அரசாங்கமும் மாநில கூட்டுறவுத் துறையும் நடத்துகின்ற பல சங்கிலிகளைக் கொண்ட சில்லறை விற்பனை கடைகள் கேரளாவின்  பொது விநியோக முறைக்கு உதவுகின்றன.  மாநில அரசுக்கு சொந்தமான சப்ளைகோ நிறுவனம் 1,589 மாவேலி கடைகளை நடத்தி வருகிறது. அவை மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட சப்ளைகோ, உணவு மற்றும் சிவில் சப்ளைத் துறையின் செயல்படுத்தும் பிரிவாகச் செயல்பட்டு வருகிறது. விலைகள் திடீரென்று அதிகரிக்கின்ற போது  அரசாங்கம் விரைவாகச் செயல்படுவதை இது உறுதி  செய்கிறது.

’இந்தச் சங்கிலியின் கீழ் ஹைப்பர் சந்தைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மக்கள் பஜார் போன்றவற்றை நாங்கள் நடத்தி வருகிறோம்’ என்று திலோத்தமன் கூறினார். ’இப்போது நாங்கள் நகராட்சியுடன் இணைந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவோமில் புதிய வடிவத்தில், பெரிய புறநகர் மால் ஒன்றைத் தொடங்குவதற்குத் தயாராக உள்ளோம். அதற்கென்று நாங்கள் ரூ.16 கோடி செலவிடுகிறோம். தொற்றுநோயைக் கடந்த பிறகு, அதைத் தொடங்குவோம்’ என்று அவர் மேலும் கூறினார்.

சபரி மெடிக்கல் ஸ்டோர்ஸ் என்றழைக்கப்படும் 95 மருத்துவ விற்பனை நிலையங்களையும் சப்ளைகோ நடத்துகிறது. அனைத்து மருந்துகளுக்கும் சராசரியாக 15 சதவீதம் தள்ளுபடி தரப்படுகிறது. பிபிஎல் குடும்பங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஓணம், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் நிலையற்றதாக இருக்கும்போது, மாநிலம் முழுவதும் திருவிழா சந்தைகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

கன்ஸ்யூமர்ஃபெட் என்று பிரபலமாக அழைக்கப்படுகின்ற கேரள மாநில கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பும்  சில்லறை சந்தையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களின் உச்ச அமைப்பாக இருக்கின்ற இந்த கூட்டமைப்பு இருநூறுக்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளை இயக்கி வருகிறது. அவை திரிவேணி சூப்பர் மார்க்கெட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. கன்ஸ்யூமர்ஃபெட்  நடத்துகின்ற  நீதி மருத்துவ அங்காடி சங்கிலி, அதிகபட்ச சில்லறை விலையை விட 18 முதல் 40 சதவீதம் வரை குறைந்த விலையில்  நுகர்வோருக்கு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்கிறது.

ஊரடங்கிற்கு மத்தியில், ஏப்ரல் முதல் வாரத்தில் மளிகைப் பொருட்கள் தொகுப்பின் ஆன்லைன் விற்பனையை கன்ஸ்யூமர்ஃபெட் தொடங்கியது. எர்ணாகுளம் மாவட்டத்தில் முதலில் இந்த விற்பனை தொடங்கியது. பின்னர் அது விரைவாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவடைந்தது.  வீடுகளுக்கே வந்து பொருட்களைத் தருகின்ற வகையில், திரிவேணி பல்பொருள் அங்காடிகளிலிருந்து மளிகை பொருட்கள் அடங்கிய மூன்று தொகுப்புகளை ஆன்லைனில் ஆர்டர் செய்வதற்கான தேர்வையும் அது வழங்குகிறது.

இயல்பு நிலைமை பாதிக்கப்படும்போது கேரளாவின் உலகளாவிய பொது விநியோக முறை மிக இன்றியமையாததாக தன்னை இருத்திக் கொள்கிறது. சமூக சமத்துவத்தையும், மக்கள் நலனையும் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்ந்த முறையில் இணைத்துக் காணும் அதன் நீண்ட வரலாறே இதைச் செய்து முடிப்பதற்கான காரணமாக இருக்கிறது. கோவிட்-19 தொற்றுநோயைக் கையாளும் போது, மருத்துவத்துடன் மனிதாபிமானத்திற்கான நெருக்கடியின் தீவிரத்தையும் இணைத்தே மாநிலம் அங்கீகரிக்கிறது. ஏழைகளின் பாதிப்பு குறித்து எந்தக் கவலையுமில்லாமல், ஊரடங்கைத் திறமையாக கையாளுவதில் இந்த அரசு நிச்சயம் அதிக  நம்பிக்கையுடன்  இருக்க முடியும்.

கேரவான் இதழ், 2020 ஏப்ரல் 26

https://caravanmagazine.in/economy/keralas-roadmap-to-feeding-its-348-crore-residents-migrants-amid-the-covid-19-lockdown

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

Dr.T.Chandraguru

Virudhunagar

Show 1 Comment

1 Comment

  1. M. Mariappan

    கேரள அரசு கொரோனோ தொற்றைத் திறனுடன் கையாண்ட்தற்கு அம்மாநிலத்தை ஆட்சி செய்த தலைவர்கள் அனைவரும் மக்கள்நலனை முன்னிருத்தி உருவாக்கிய கட்டமைப்புகளே காரணம் என்பதைத் தெளிவாக புரியவைக்கிறது இக்கட்டுரை. கட்டமைப்புகள் என்பது ஒருசில ஆண்டுகளில் உருவாக்க முடியக்க்கூடியதல்ல. மத்திய அரசாக இருந்தாலும் சரி அல்லது மாநில அரசாக இருந்தாலும் சரி பேரிடர்கள் நேரும் காலம் மட்டும் செயல்படும் அரசுகளாக இருந்தால், அப்பேரிடர்களைக் களைந்து மக்கள்நலன் பேணுவதென்பது அவ்வளவு எளிதானதல்ல எனும் தற்காலச்சூழலை இக்கட்டுரை நன்றாக வெளிப்படுத்துகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *