வழிகாட்டும் கேரளம் : பின்பற்றட்டும் இந்தியா- சிவகுரு நடராஜன்
இந்தியாவில் மருந்துகளின் பயன்பாட்டில் அதுவும் குறிப்பாக நோய்கொல்லி மருந்துகள் (ANTIBIOTICS) கட்டுப்பாடு இல்லாமல் பயன்பாட்டில் இருப்பது பெரும் சவால் தான். இதனால் அந்த மருந்தின் நோய் எதிர்ப்புணர்வு (ANTI MICROBIAL RESISTANCE)வெகுவாக குறையும். உலக அளவில் மருத்துவ உலகில் இது ஒரு மாபெரும் பிரச்சனை. இந்தியாவில் மருத்துவர் நோயாளி விகிதாச்சாரம், ஏராளமான கிராமங்கள், மக்கள் தொகை, தொலைநோக்கில்லா அரசுகளின் திட்டங்கள் , மருந்துகளை பற்றிய அடிப்படை புரிதல் என பல காரணம் உண்டு. இந்த சவாலை சமாளிக்க கடந்த பல ஆண்டுகளாக பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும் எந்த அரசும் (ஒன்றிய & மாநில) உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே எதார்த்த கள நிலவரம்.
இதன் மைய பிரச்சனை என்னவென்றால் நோயாளிகள் பெரும்பாலும் நேரிடையாக மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் நோய் கொல்லி மருந்துகளை வாங்குவது தான். இந்திய சூழலில் இந்த பிரச்சனையை சரியான அணுகுமுறையில் கையாண்டால் நிச்சயமாக மாற்றம் வரும் என்பது உறுதி என்றாலும் இதை சாத்தியமாக்குவது எளிதல்ல ..இந்த சவால் மிகுந்த சூழலை இந்தியாவில் முதன்முதலாக சாதித்தது கேரள மாநில அரசு. மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்ட இந்த முடிவை கொள்கை முடிவோடு விடாப்பிடியாக எடுத்த முடிவை செயல்படுத்தி வரும் கேரள இடது ஜனநாயக அரசை பாராட்டி தான் தீரவேண்டும். இந்த முடிவை சாத்தியமாக்கிட உதவிய அம்மாநிலத்தின் மருந்து கடை வணிகர்களின் ஒத்துழைப்பை மனதார பாராட்ட வேண்டும்..காரணம் சிறு லாபத்திற்காக தடுமாறாமல் மக்கள் நலனோடு அரசுக்கு துணை நிற்பது தான்.
திடமான தீர்க்கமான முடிவு:
இந்த ஆண்டு ஜனவரி முதல் மருந்து கடைகளில் மருந்து சீட்டு இல்லாமல் ஆண்டிபயாடிக் மருந்துகளை கொடுப்பதில்லை எனும் முடிவு எடுக்கப்பட்டது. அதன் விளைவாக இந்த ஆண்டு மட்டும் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு அந்த குறிப்பிட்ட மருந்துகளின் வணிகம் குறைந்துள்ளது என சமீபத்திய கள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இதனால் முறையற்ற ஆண்டிபயாடிக் பயன்பாடு மிக பெரிய அளவில் குறைந்துள்ளது என்பது அப்பட்டமாக தெரிகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செய்யாத செய்ய துணியாத விசயத்தை கேரள அரசு செய்துள்ளது. காரணம் ஒன்றிய அரசு கொடுத்த விதி தளர்வுகளை முழுமையாக புறந்தள்ளிவிட்டு தங்கள் மாநில மக்களின் முழு பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றது. இந்திய மாநிலங்களிலேயே கேரளத்தில் தான் மருத்துவர்- நோயாளி விகிதம், தேவைகேற்ப இருக்கிறது அது மட்டுமல்ல அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பும் ஒப்பீட்டளவில் முதல் இடத்தில் உள்ளது. கேரளத்தின் இந்த முயற்சி பலனளிக்கிறதா என்றால் நிச்சயமாக உண்டு என அறுதியிட்டு சொல்ல முடியும். ஆனாலும் இந்தியா போன்ற ஒரு பெரும் நிலபரப்பு கொண்ட நாட்டில் இருக்கும் பிரத்யேக தன்மைகள் முழுமையாக நிறைவேற்றுவதற்கு சிறு
தடைகளை உருவாக்க தான் செய்யும்.
சார்ந்திருத்தல்- மாநிலங்களின் தேவை
பல மாநிலங்களின் கூட்டமைப்பே இந்தியா. ஒவ்வொரு மாநிலமும் அருகமை மாநிலத்தையும், தூரத்து மாநிலங்களையும் சார்ந்திருப்பது அவசியமானது. அவ்வகையில் கேரளா நிலப்பரப்பில் மிக சிறிய மாநிலம். பெரும் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையும், அதையொட்டிய காடுகளும் இருப்பதால் சம தள பகுதி குறைவே. அதிலும்கூட அவர்களின் அடிப்படை உணவான் நெல் உற்பத்தியோடு , காய்கறிகள், பழங்கள் என இருக்கின்ற இடத்தை மிக சிரத்தையோடு பயன்படுத்துகின்றனர்.
ஆனாலும் அவர்களின் முக்கிய உணவுகளான் கோழி இறைச்சி, முட்டை, சில காய்கறிகள் அனைத்திற்கும் அவர்கள் மற்ற மாநிலங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலை. இதில் தான் பிரச்சனை இருக்கிறது என்கிறார் அப்பல்லோ மருத்துவமனை நோய் குறியீட்டியல் நிபுணர் மருத்துவர் அப்துல் கஹஃப்பூர்.
அவர் மேற்கொண்ட ஆய்வின் படி கேரளா கிட்டத்தட்ட 50% கோழி இறைச்சியை தமிழ்நாட்டிலிருந்து தான் வாங்குகிறது. இங்கு கேரளத்தை போல் மருந்து கடைகளில் நோய் கொல்லி மருந்துகள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்ய கூடாது எனும் சட்டம் இங்கே நடைமுறைக்கு வராததால் தாராளமான முறையற்ற புழக்கத்தில் மருந்துகள் உள்ளது. இதனால் மண்ணில் மட்டுமல்லாமல், நீர் மற்றும் காற்றில் கூட நோய் எதிர்ப்பு கிருமிகள், நிச்சயமாக இருக்கும். அது மட்டுமல்ல விலங்குகளுக்கான மருந்துகள் பயன்பாட்டிலும் விதி மீறல்கள் நிலவுகிறது. இதனால் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளில் இதன் தாக்கம் இருக்கும். இதை கேரளத்தில் உணவோடு சேர்த்து பயன்படுத்தும் போது மனித உணவு குழாய் பகுதியில் இராசயன மாற்றம் பெற்று நோய் எதிர்ப்பு வீரியம் குறைந்து மீண்டும் நோய் பரவலும் ,தாக்குதலும் அதிகமாகும்.
இதை தவிர்க்க இயலாது என்றாலும் இந்தியாவில் கேரளத்தின் முன்மாதிரி செயலாக்கம் நீண்ட கால பயனை நிச்சயமாக தரும் என தன்னுடைய ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கிறார்.
தலைமுறையை காக்கும் திட்டம்:
உலக அள்வில் ஆண்டிப்யாடிக் மருந்துகள் கண்டுபிடிப்பில் நீண்ட காலமாக ஒரு பெரிய தேக்கம் நிலவுகிறது. கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் புது கண்டுபிடிப்பே இல்லை என சொல்லலாம். இது ஒரு சவாலாக இருக்க, மறுபறத்தில் இவ்வகை மருந்துகளின் எதிர்ர்புணர்வு அதிகமாகி வருவது பெரும் வேதனையாகவே இருக்கின்றது. அதனால் தான் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் வேலை செய்வது இல்லை என நாம் புலம்புவதும், தீர்வை நோக்கி வேறு மருத்துவரை பார்க்க முடிவெடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. பிரச்சனை மருத்துவரிடத்தில் இல்லை.. மருந்தில் தான்.
இதை கனக்கில் கொண்டு தான் கேரள அரசு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் ஆண்டிபயாடிக் மருந்துகள் விற்பனையை கடுமையான சட்டம் கொண்டு பின்பற்றி சிறு வெற்றி பெற்றுள்ளது. இது துவக்கமே.. நாடு முழுவதும் மேற்சொன்ன சட்டத்தை அனைத்து மாநிலங்களும் முறையாக அமல்படுத்தினால் நிச்சயமாக அடுத்த தலைமுறையை காப்பாற்ற பேருதவியாக இருக்கும். அத்தகைய சட்டத்தை நிறைவேற்ற வைக்க ஒன்றிய அரசை அமல்படுத்த தொடர் பிரச்சாரமும் விழிப்புணர்வும் செய்திடல் காலத்தின் தேவை.
கட்டுரையாளர் :
சிவகுரு நடராஜன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.