தளராத உறுதி மற்றும் வைராக்கியம் ஆகியவற்றால் வைரஸ் நோய் தொற்றுக்கு எதிரான போரில் கேரள இடது முன்னணி அரசு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது.
பலகாலமாய் தேவையற்ற அரசியல் சண்டகளாலும், உடனுறைகின்ற அதிகார திமிராலும் மற்றும் பரவலான ஊழலாலும் தவித்துக் கொண்டிருந்த கேரள மாநிலத்திற்கு கோவிட்-19 நோய் தொற்றுக்கான சமீபத்திய ஊக்கம் நிறைந்த செயல்பாடு வேறு எவரையும் விட மலையாளிகளையே அதிகம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும் என்றே நினைக்கிறேன். சுதந்திரத்திற்கு பின்னான கேரள அரசாங்கங்களில் இந்த அரசாங்கத்திற்கு இணையான ஒரு அரசாங்கமும் இல்லை எனலாம். மக்களின் நலனுக்காக தொடர்ச்சியான பணிகளை உண்மையாகவே கவனமாக இந்த அரசு செய்தது. ஆகஸ்ட் 2018இல் வந்த மிகப் பெரிதான வெள்ளத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இதை நன்றாக காண முடிந்தது. ஆனாலும் அது ஒரு சிறிய பகுதியில் கவனக்குவிப்பு செய்து உறுதியான மீட்பு நடவடிக்கைகளால் நிகழ்ந்தவை. அதிலும், எதிரியான நீர் நம் கண் முன் இருந்தது. ஆனால் இந்த கோரானா வைரஸ் கேரள மாநிலத்தை ஒரு மாய நிழலாய் சூழ்ந்தது.
இடது ஜனநாயக முன்னணியின் இந்த வைரஸ் நோய் தொற்றுக்கான எதிரான நடவடிக்கை உறுதிப்பாடு மிக்கதாகவும், உறுதியாகவும் இருக்கிறது. கேரள மாநிலம் உருவான தொட்டே இருந்து வந்த அசட்டைதன்மை, அலட்சியம் மற்றும் திறமையின்மை என்பதெல்லாம் வாழ்வியல் நெருக்கடி என்னும் பூதம் எழுகையில் கலைந்து இந்த நோய் தொற்றுக்கு எதிரான உளப்பூர்வமான ஈடுபாட்டை தருவித்தது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. இருப்பினும் பயத்தை ஒருமுகப்படுத்தி போருக்கு ஆயத்தமாக செய்ய ஒரு பொறி தேவைப்படுகிறதே.! இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சர்வாதிகார கனவு முளைத்தெழும் தருணத்தில் இந்த பொறி என்பது தலைமைப் பண்பு என்று நான் சொல்வதில் பலருக்கு ஏற்பு இருக்காது. மந்தப்புத்தி கொண்ட திமிங்கலங்களாகவே அரசுகள் இருக்கின்றன. அவை தலைவராக இருந்து வழிநடத்த முடியாதவை. ஒரு மனிதனே அந்த அரசின் முகமாகி வழிநடத்த வேண்டியிருக்கிறது.
இந்த கொரானா நெருக்கடியில் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அந்த தலைமைப்பண்பை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார் என எவர் ஒருவரும் பெருமையுடன் சொல்லலாம். கேரள கொரானா நோய் தொற்று எதிர்ப்பின் முகமாக இவர் இருக்கிறார். பல வருடங்களுக்கு பின் மறு ஒலிபரப்பாகும் ராமாயணத்தை விட பினராயி விஜயன் அவர்களின் தினசரி பத்திரிகையாளர் சந்திப்புகள் மிகுந்த வரவேற்பினைப் பெற்றன. கேரளாவின் கொரானா நோய் தொற்றுக்கு எதிரான போரில் நேரடி களத்தில் இருக்கும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தோழர் கே. கே. ஷைலஜா அவர்கள் தன்னுடைய ஆரவாரமற்ற அதே சமயம் உறுதியான பாணியினால் பினராயி விஜயன் அவர்களுடன் இப்போரினை முழுமையாக்கினார். பினராயி விஜயனுக்கு உள்ளது போல் ஒரு ஆண் என்னும் அதிகார பலமும் மூத்த தோழர் என்ற பாரமும் (அனுபவமும்) இல்லாத இயல்பான தலைவர் தோழர் கே. கே. ஷைலஜா. தவிர்க்க இயலாமல் ஆணாதிக்க முரணிலிருந்து மெதுவாக விடுபடும் கேரளத்தில் ஒரு பெண்ணாக இருந்தது கே. கே. ஷைலஜா அவர்களுக்கு உதவியாக இருந்தது எனலாம்.
பிரச்சனைகளில் தீவிரமும், எந்த அபத்தமும் இல்லாத போக்கே இந்த இரு கம்யூனிஸ்ட்டுகளை மற்ற எந்த வழக்கமான அரசியல்வாதியிடமும் இருந்து (அந்த அரசியல்வாதி ஒரு கம்யூனிஸ்ட்டோ அல்லது வேறு எவரோ) வேறுபடுத்திக் காட்டுகிறது. பினராயி விஜயன் ஒரு நியாயவாதியாகவும் ஆழ்ந்த யோசனை மிக்கவராகவும் நாம் காணுகையில் மறுபுறம் துடிப்பு மிக்கவராக பாசாங்குத்தனம் இல்லாதவராக கே. கே. ஷைலஜா இருக்கிறார். பினராயி விஜயன் அவர்களின் பாணியில் ஒழுக்கமும் சேர அது எச்சரிக்கை உணர்வையும் பயத்தையும் தூண்டுகிறது. நீங்கள் அவரை சர்வாதிகாரி என அழைக்க விழைந்தால் அது உங்கள் விருப்பம். ஆனால் இருவருக்கும் அந்த விவரணம் சற்றும் பொருந்தாது. ஷைலஜா அவர்களின் தலைமைப்பண்பில் குழு செயல்பாட்டினை ஊக்குவிக்கும் ஒரு பெண்ணிய உறுதிப்பாடு தெரிகிறது. இருவரும் முதலிலும் சரி இப்பொழுதும் சரி நாளையும் சரி கம்யூனிஸ்ட்டுகளே. வைரஸ் இருக்கிறதோ இல்லையோ அவர்களுக்கு அவர்கள் கட்சியே எல்லாவற்றிற்கும் முதல்.
இருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மேலும் அடுத்த காலத்திற்கான கொரானா நோய்த் தொற்று தொடர்பான ஊகங்களை வைத்துப் பார்க்கையில் இருவருக்கும் இன்னும் நெடும் பயணம் காத்திருப்பதாகத் தெரிகிறது. ஒரு அரசியல்வாதிக்கு அரிதாகக் கிடைக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள் மற்றும் ஆசிகள் ஆகியவற்றை இந்த இருவரும் நிச்சயம் ஏற்று மகிழ்வார்கள். பல முறை கேரளமும் ஷைலஜா அவர்களும் சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்திகளாயினார். கேரளா இந்நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளால் மட்டுமே அல்லாது வேறு ஒரு காரணத்திற்காகவும் ஊடக கவனத்தை பெற்றிருக்கிறது என ஒருவர் சந்தேகிக்கலாம். முதலாளித்துவ ஊடகங்கள் இந்த கம்யூனிஸ்ட்டுகள் பெற்ற வெற்றியைக் கண்டு பிரமித்து நிற்பதாகவே தெரிகிறது. அதுவும் அந்தப் போரின் படைத்தலைவர் ஒரு பெண் தோழர் என்பதில் அவர்கள் கூடுதல் பிரமிப்பு பெற்றிருப்பதாகவும் தெரிகிறது.
இந்த இருவரோடு நேரம் காலம் பாராது கொரானா நோயாளிகளை உயிரச்சம் துறந்து தொட்டுத் தூக்கி அரும் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் இருக்கின்றனர். கேரளத்தின் பெரும்பான்மையான அரசு அதிகார புதைகுழியில், இந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் எப்போதும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றும் தனித்த மக்களாக இருக்கின்றனர். இந்த கொரானா நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் இவர்களே முதல் இடத்தில் இருக்கிறார்கள். இந்த போரில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பல்வேறு நிலைகளில் பங்கெடுத்து இருப்பது புதுவித பலாபலன்களை தந்துள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் குடும்பஷ்ரீ மற்றும் ஆஷா ஆகிய அமைப்புகளின் பெண்கள் இக்காலத்தில் விலை மதிப்பில்லா சேவையைச் செய்திருக்கிறார்கள். எப்போது மனிதாபிமான பக்கங்களில் காவல்துறை இல்லாது போனாலும், பொதுச் சுகாதார காவலர்கள் என்னும் தற்போதைய பாத்திரத்தில் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். இவர்களோடு களத்தில் அடித்தளம் வரை உழைக்கும் சுமார் 20000 தன்னார்வலர்கள் எனக் கேரள வெற்றி போரில் நிறையப் பேர் உழைக்கின்றனர்.
இது கதையின் ஒரு பகுதி மட்டுமே. இதன் மறு பகுதி கேரளத்தின் வரலாற்றில் உள்ளது. 60களில் 70களில் சோசலிச கொள்கைகளாலும் ஜனநாயக நம்பிக்கைகளைக் கொண்டும் எழுப்பப்பட்ட மாடல் அல்லது மாதிரி என்பதே அது. இடதுசாரி என்றோ காந்திய வழிமுறை என்றோ சொல்லக் கூடிய ஒரு மனிதநேய மாடலாக கேந்திரமான துறைகளான கல்வி மற்றும் சுகாதாரத்தில் தொடக்கத்திலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதன் வழியே எழுப்பப்பட்ட பல நிலை சுகாதார வசதிகள் மூலமே மனிதவள குறியீட்டில் மற்ற வளர்ச்சியடைந்த நாட்களை போன்றதொரு நிலையைக் கேரளமும் எட்டிப்பிடித்திட முடிந்திருக்கிறது. இதற்கு இணையாகப் புரட்சிகரமான மற்றொன்றாக ஜனநாயக அமைப்புகளில் மேலிருந்து கீழ் வரை செய்யப்பட்ட அதிகார பரவலாக்கல் எனப்படும் decentralised planning சொல்லலாம். அதிலும் பெண்களே மிக முக்கியமான பதவிகளைப் பெற்றனர். ஜனநாயகத்தின் இந்த இரு இணைப்புக்கள் மாறி மாறி அரசாகங்கள் வந்திருப்பினும் அதிர்ஷ்டவசமாக தப்பித்து அவை இன்று இந்த கோரானா நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் முதுகெலும்பாக உள்ளன.
கேரளத்தின் கொரானா நோய்த் தொற்றுக்கு எதிரான போர் வெற்றி என்பது இவையும் கடந்த ஒன்றின் பங்கினையும் கொண்டுள்ளது. இறுதியான பரிசீலனையில், சிறந்த மனிதாபிமானிகளான அய்யன் காளி மற்றும் நாராயண குரு ஆகியோரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவுத்தேடல் பயணங்களின் வழி கேரள மக்களின் மனதில் புகுத்தப்பட்ட முற்போக்கு விழுமியங்களின் பங்களிப்பே இந்த வெற்றியைச் சாதித்துள்ளது எனத் தெரிகிறது. பிரிவினை சக்திகளின் பல முயற்சிகளையும் தாண்டி இந்த விழுமியங்கள் கேரளத்தின் நாகரிக வளர்ச்சி பாய்ச்சலில் உதவியிருக்கிறது. கொரானா போரும் அப்படி ஒரு பாய்ச்சலே. எவ்வளவு குறை இருந்தாலும் இன்னமும் நீடித்திருக்கும் ஜனநாயகத்தின் மீதான பிடிமானம்/அர்ப்பணிப்பு, சேதமடைந்திருந்தாலும் இன்னமும் இருக்கும் மதச்சார்பற்ற தன்மை, முற்றுகைக்கு ஆட்பட்டிருந்தாலும் இன்னமும் இருக்கும் சமூக நல்லிணக்கம் மற்றும் அறிவியல் மனப்பாங்கு ஆகியவற்றையே கேரளத்தின் இந்த வெற்றிக்கு வழி கோலியிருக்கிறது. அதனால் தான் தலித், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், இந்து, இஸ்லாமியர், கிறித்துவர், ஆண் பெண் பாகுபாடுகள் தாண்டி இந்த போரில் அனைவரையும் இணைய முடிந்திருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் நிகழ்ந்த மதத்தின் அடிப்படையில் பிரித்து ஒதுக்கப்பட்ட மருத்துவமனை படுக்கை வசதிகள் என்ற தன்மையில் இது கற்பனைக்கு எட்டாத ஒன்று.
பால் சக்கரியா, விருது பெற்ற மலையாள எழுத்தாளர்
நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழில் : ராம்.