முறிந்த சிறகுகளுக்குப் பிறகு கலில் ஜிப்ரான் என்னும் கவிஞானியை மொழி பெயர்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே என்ற நினைப்பில் மீண்டும் அவருடைய கவிதை ஒன்றை வாசிக்க எடுத்தேன். இந்த உலகில் கவிதை வாசிப்பை ஆனந்த அனுபவமாக மாற்றிவிடக்கூடிய மகா கவிஞர்களில் ஒருவர் தான் கலில் ஜிப்ரான். அவருடைய Have Mercy on Me, My Soul! என்ற அபூர்வமான கவிதையை வாசித்து அந்த அனுபவத்தை அடைந்ததும் அதை மொழி பெயர்க்க தூண்டியது என் ஆன்மா.
இந்தக்கவிதை எழுத H.P. Blavatsky ப்ளாவாட்ஸ்கி மொழி பெயர்த்த (Theosophy Co. edition). “The Voice of the Silence”, அமைதியின் குரல் என்ற ஆன்மீக கவிதையிலிருந்து ஜிப்ரானுக்கு தாக்கம் கிடைத்திருக்கிறது. கிறிஸ்தவ மத வேதக்கோட்பாடுகளும் இந்து மதக்கோட்பாடான ஜீவாத்மா பரமாத்மா என்ற நிலைப்பாடும் கவிஞருக்கு இக்கவிதை எழுத ஊக்குவிப்பாக இருந்திருக்கிறது. இது கவிஞரின் கவிஞரின் கண்ணீரும் புன்னகையும் “Tears and Laughter”, என்ற கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
கவிதைக்கரு
ஆன்மாவோடு ஒரு அந்தரங்க உரையாடலாக இந்தக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது.
Have Mercy on Me, My Soul!
Kahlil Gibran
என் ஆன்மாவே என்னிடம் கருணை காட்டு !
கலில் ஜிப்ரான்
ஏன் அழுகிறாய் என் ஆன்மாவே ?
என் பலவீனங்களையெல்லாம்
நீ அறிந்து கொண்டதனாலா ?
நீ கண்ணீர் விட்டு அழும் வரை
நான் செய்த தவறுகளை
ஒரு போதும் நானறியேனே !
ஏன் அழுகிறாய் என் ஆன்மாவே ?
உன் கூர்மையான கண்ணீர்துளிகள்
என்னைக் கீறிக் கீறிக் காயப்படுத்துகின்றன .
உன்னுடைய கனவுகளை
அறிவுரைகளை ஆசைகளை
நான் எவ்விதம் மொழியில் பெயர்ப்பேன் சொல் ?
அய்யோ என்னிடம் எஞ்சியிருப்பதெல்லாம்
வெற்று வார்த்தைகள் தா !
என்னைப் பார் ஆன்மாவே !
உன் உத்தரவுப் படி தானே
என் முழுவாழ்க்கையையும்
நுகர்ந்து முடித்துவிட்டேன்
உன்னால் என் முழுவாழ்க்கையும்
தீர்ந்து விட்டதே
எத்தனைத் துயரமானது என் நிலை என்று
நீ அறிவாயா ?
மணிமகுடத்தில் ஒளிவீசிக்கொண்டிருந்த
என் இதயம் இப்பொழுது
அடிமை நுகத்தடியைச் சுமந்து கொண்டிருக்கிறது.
என் நண்பனாக இருந்த பொறுமை
இன்று என் எதிரியாக மாறிவிட்டது
நம்பிக்கையாய் இருந்த என் இளமை
என் அலட்சியத்தை எதிர்த்துக்கொண்டிருக்கிறது
உனக்கு என்ன வேண்டும் என் ஆன்மாவே ?
உன்னால் வழிகாட்டப்பட்ட நான்
முற்றிலும் என் இன்பத்தை இழந்துவிட்டேன்
மகிழ்வான வாழ்க்கையை விட்டு
எங்கோ தொலை தூரம் தொலைந்துவிட்டேன்
உனக்கு என்னதான் வேண்டும் சொல் என் ஆன்மாவே ?
ஒன்று என்னிடம் பரிவாக நடந்து கொள்
அல்லது என்னிடம் மரணத்தை வரவழைத்து விடு
வாழ்வின் தளைகளிலிருந்து நான் தப்பிக்கொள்கிறேன்
உன் உயர்ந்த நீதிதானே
உன்னுடைய புகழின் ஒளிவெள்ளம் ?
ஓ என் மீது கருணை காட்டு என் ஆன்மாவே !
அன்பென்னும் சுமையை அளவுக்கு அதிகமாகவே
என்மீது ஏற்றி விட்டாய்
என்னால் சுமக்க முடியவில்லை மன்னித்துவிடு
அன்பும் நீயும் பிரிக்க
முடியாத வலிமைகள்
வெறுமையும் நானும்
பிரிக்க முடியாத பலவீனங்கள்
வலிமைக்கும் பலவீனத்திற்குமான போராட்டம்
என்றென்றும் ஓயுமா சொல் ?
ஓ என் மீது கருணை காட்டு என் ஆன்மாவே !
நீ என் கைப்பிடிக்கும் அதிகமாகவே
அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கிவிட்டாய்
நீயும் அதிர்ஷ்டமும் மலையுச்சியில் வசிக்கிறீர்கள்
துயரமும் நானும் படுபாதாளத்தில்
வீழ்ந்து கிடக்கிறோம்
மலையுச்சியும் படுபாதாளமும்
ஓர் நாளும் ஒன்றாகுமோ சொல் ?
ஓ என் மீது கருணை காட்டு என் ஆன்மாவே !
நீ அழகினை என் கண்களுக்கு காட்டினாய்
பின்பு நீயே அதை என்னிடமிருந்து மறைத்துவிட்டாய்
நீயும் அழகும் ஒளிவெள்ளத்தில் இணைந்திருக்கிறீர்கள்
அறியாமையும் நானும் இருளுக்குள்
ஒன்றாக புதைந்திருக்கிறோம்
என்நாளும் ஒளி வந்து இந்த இருளுக்குள்
ஊடுறுவுமோ ?
முடிவில் வரும் ஆனந்தம் உன்னிடம்
முன்னதாகவே
மகிழ்வில் திளைக்கிறாய் நீ
ஆனால் இவ்வுடலோ வாழும் போதே
வாழ்க்கையின் துயரத்தில் உழல்கிறது
என் ஆன்மாவே இது தான்
என்னை குழப்புகிறது
நீயோ நிரந்தரத்தை நோக்கி விரைகிறாய்
இவ்வுடல் அழிவை நோக்கி மெதுவாக நகர்கிறது
நீ இதற்காக காத்திருக்க மாட்டாய்
இவ்வுடலோ உன் விரைவுக்கு ஓடி வராது
இது தான் என் துயரம் என் ஆன்மாவே !
நீயோ சொர்க்கத்தின் ஈர்ப்பில்
உயரே உயரே செல்கிறாய்
இவ்வுடலோ புவிஈர்ப்பில்
தாழ்ந்து தாழ்ந்து வீழ்கிறது
நீ இவ்வுடலிற்கு ஆறுதலிக்கமாட்டாய்
அதுவோ உன்வேகத்தை ஊக்குவிக்காது
இதுதான் என் துயரம் என் ஆன்மாவே !
நீயோ அறிவின் களஞ்சியம்
இவ்வுடலோ புரிதலின் ஏழை
நீ இதனுடன் சமரசம் செய்யமாட்டாய்
அதுவோ உன்னிடம் கீழ்படியாது
இதுதான் என் முடிவில்லா துயரம் என் ஆன்மாவே !
அமைதியான இரவில்
அன்பின் பிரியமானவரை நீ தேடிச்செல்கிறாய்
அவருடைய அன்மையின் இனிமையில்
ஆனந்தத்தில் திளைக்கிறாய்
ஆனால் இவ்வுடலோ
நம்பிகைக் என்ற கசப்பிலும் பிரிவு என்ற சலிப்பிலும்
கிடந்து உழல்கிறது
இது தான் என் வேதனையை அதிகரிக்கிறது
என் ஆன்மாவே
என் ஆன்மாவே என்னிடம் கருணை காட்டு !
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.