புத்தக அறிமுகம்: பக்தவத்சல பாரதி எழுதியுள்ள “கிராவின் கரிசல் பயணம்” – மு.செல்வக்குமார்

புத்தக அறிமுகம்: பக்தவத்சல பாரதி எழுதியுள்ள “கிராவின் கரிசல் பயணம்” – மு.செல்வக்குமார்

பக்தவத்சல பாரதி அவர்கள் தமிழுலகம் நன்கறிந்த மானுடவியல் அறிஞர், திராவிடப் பெரும்பரப்பிலிருக்கும் பழங்குடிகள், அலைகுடிகள் முதலிய சமூகக் குழுக்கள் குறித்து அவர் செய்துள்ள ஆய்வுகள் இலக்கிய வாசக தளத்திலும்கூட செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. இத்தகைய படைப்பாக்கம் கொண்ட ஆய்வாளரின் பார்வையானது வரலாற்றுச் பழமையும் பண்பாட்டு செழுமையும் கொண்ட தமிழிலக்கியத்தின் பக்கம் திரும்பியதென்பது நற்பேறாகக் கருதத்தக்கது. அவ்வகையில் மானுடவியல் தருகின்ற ஒளியின்வழியாக செவ்விலக்கியப் பனுவல்களை வெகுநுட்பமான முறையில் ஆராய்ந்து ~இலக்கிய மானுடவியலாக~ அவர் ஏற்கெனவே படைத்தளித்துள்ளார். இந்தத் தேடலின் தொடர்ச்சியாக வட்டார இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும் முதுபெரும் படைப்பாளியுமான கி.ராஜநாராயணன் அவர்களின் படைப்புலகை மானுடவியல் வாசிப்பு செய்யவும் தற்போது முனைந்திருக்கின்றார். இதன்விளைவாக தமிழ் வாசகர் வட்டத்திற்கு ~கிராவின் கரிசல் பயணம்~ எனும் திறனாய்வு நூல் புதுவருவாயாக கிடைத்துள்ளது எனும் செய்தி மகிழ்ச்சிதருவதாகும்.

கல்கியின் புனைவுகளை ஒரு வரலாற்றாய்வாளரும் தி. ஜானகிராமனின் கதைகளை ஒரு உளவியல் ஆய்வாளரும் திறனாய்வு செய்வது எப்படி பொருத்தமுடையதாக இருக்குமோ அதேபோன்று கிராவின் படைப்புலகை பகுப்பாய்வு செய்ய ஒரு பண்பாட்டியல் ஆய்வாளரின் பங்களிப்பென்பது மிக அவசியமானது. இதனை உறுதிசெய்யும்வகையில் இந்நூல் அமைந்திருப்பதை வாசிப்பவர் எவரும் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும். மொத்தம் 27 துணைத்தலைப்புகளின் கீழ் கிராவின் எழுத்துக்களில் காணக்கிடைக்கும் பெரும்பான்மையானக் கூறுகளும் வகைதொகைப்படுத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளனன. அதிலும் குறிப்பாக முதல் 4 இயல்களில் ஆசிரியர் முன்மொழிந்துள்ள கருத்துக்கள் நமது கவனத்தை அதிகமும் ஈர்ப்பவையாகும். இவற்றில் கிராவின் எழுத்துமுறையைக் கோட்பாட்டாக்கம் செய்யும் செறிவான விவாதங்கள் விரவிக்கிடக்கின்றன. அதேவேளையில் இவை வெறும் வறட்டுச் சூத்திரங்களாக சுருக்கப்பட்டுவிடாமல் உயிர்ப்புத்தன்மையுடனும் வாசிப்பார்வத்தைத் தூண்டும் திறனுடனும் அமைந்திருக்கின்றன என்பது பாராட்டப்பட வேண்டிய அம்சங்களாகும்.

state news News : புதுவையில் இன்று கி.ரா. 95 ...

இந்த நூலின் ஆசிரியர் மானுடவியல் வாசிப்பை மேற்கொள்ளும் அதேசமயத்தில் படைப்பின் கலைத்தன்மையைத் தவறவிட்டுவிடாமலே தான் எடுத்துக்கொண்ட பணியை ஓர்மையுடன் நிறைவுசெய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ~கிராவின் கரிசல் பயணம்~ எனும் இந்த புத்தகத்தின் முதல் வரியே இவ்வாறுதான் தொடங்குகிறது: “கதைகள் ஓர் உயிரி போன்றவை. மற்ற நாட்டார் வழக்காறுகளைப் போல.” அதேபோன்று பக்தவத்சல பாரதி அவர்களின் பிறநூல்களில் காணமுடியாத மொழிநடையை இந்நூலில் பார்க்கமுடிகிறது. “கிரா கிராதான்” “கரிசல் பூமியாச்சே” என்பன போன்ற சின்னஞ்சிறு தொடர்களிலும் அழகு மிளிர்கின்றது. கி.ரா. எனும் பேச்சு மொழிக்ககாரரைப் பற்றிய இந்த ஆய்வு நூலுக்கு இத்தகைய எத்தனிப்புகள் உண்மையில் அணிசெய்கின்றன.

தானொரு கல்விப்புல மானுடவியலாளர் எனும் தன்முனைப்பு சிறிதுமின்றி கிரா எனும் படைப்பாளி தான் வாழ்ந்த நிலத்தை அதன் மக்களை பண்பாட்டை எவ்வாறு அகவயமான இனவரைவியல் எழுத்துக்களாகப் பதிவுசெய்திருக்கின்றார் என்பதை பக்தவத்சல பாரதி அவர்கள் தெள்ளத்தெளிவாக நிறுவுகின்றார். அவ்வகையில் தமிழ்மொழியின் மாபெரும் கதைசொல்லியான கிரா என்பவர் ஒரு சுதேசித்தன்மைமிக்க இனவரைவியலாளர் எனும் சித்திரத்தை இரசனைப்பூர்வமாக நம் கண்முன் வரைந்து தந்திருப்பதே இந்நூலின் தலையாயப் பங்களிப்பு என உறுதிபடக் கூறலாம். கிராவின் கதைகள், கட்டுரைகள்,கடிதங்கள் போன்றவற்றிலிருந்து செறிவான பகுதிகளை மேற்கோள்களாக காட்டியிருப்பது அறிமுக வாசகர்கள்கூட அவருடைய எழுத்தையும் சிந்தனையையும் புரிந்துகொள்ள உதவும்வகையில் இருக்கின்றது.

இதுமட்டுமன்றி ஒவ்வொரு இயலின் வடிவமைப்பும் விரிந்தநிலையிலான மேலதிக ஆய்வுகளுக்குத் தடங்காட்டிச் செல்லும் ஒரு குமுகத்தின் மூப்பனைப் போன்று திகழுகின்றன. சற்றேத் தெளிபடக் கூறினால்  இந்நூலானது கிராவின் பண்பாட்டுலகத்தை விளக்கிநிற்கும் ~ஒரு புனைனவியல் வரைபடமாகும்~ தகுநிலையுடையது என்பதில் மிகையேதுமில்லை. கரிசல் வட்டாரத்தின் முன்னத்தி ஏர் பற்றிய இந்த நூலினை கரிசல் பூமியின் மற்றொரு சிறந்த கதைசொல்லியான ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருப்பது மிகப்பொருத்தமே. 253 பக்கங்கள் கொண்ட இந்நூலை காலச்சுவடு பதிப்பகம் மிக அழகுற வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. இதை வாசிக்கும் பேறுபெற்றோர் பாக்கியவான்கள்.

நூல்: கிராவின் கரிசல் பயணம் 

ஆசிரியர்: பக்தவத்சல பாரதி

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

விலை:₹256.00

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *