தமிழ் புலத்தில் அடியுரமாக விழுந்தக் கிடை (கி.ரா.வின்- கிடை – குறுங்கதையை முன்வைத்து) – மு. சரோஜா தேவிமுன்னுரையாக

சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை மாணவியாக இருந்தபோது சு. தமிழ்ச் செல்வியின் கீதாரியை படித்தேன். அது நாம் அன்றாடும் நமது ஊர் சுற்றாடலில் சுற்றித்திரியும் ஆடோடிகளின் நாடோடி வாழ்வீகத்தை எடுத்துரைத்தது. தினசரி கண்டும் காணாமல் போனதன் என்னுடையக் குறையை எனக்கு இடித்துக் காட்டியது. அன்றாடும் வெய்யிலிலும் மழையிலும் அலையும் ஆடோடி மக்களை குறித்தும் சிந்திப்பதற்கான வாய்ப்பை இந்நூல் அளித்தது. மாடோடிகளும், ஆடோடிகளும் ஆதி நாடோடிகள் என்று மானிடவியலாளர்களின் கருத்தை நினைவுபடுத்தி கொண்டேன். இந்த வகைமையில் தமிழில் இதுதான் முதல் கதையா என்று தேடியபோது இத்துறையில் கி.ரா. என்கிற மந்திரவாதி இருக்கிறார் என்று நண்பர்கள் சொன்னார்கள். அதைக்கேட்டு வியந்து அவருடைய கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், கிடை ஆகியவற்றைத் தேடிப்படித்தேன் உண்மையில் படிக்கும் வாசகரைத் தன்பக்கமாக அழைத்துக்கொள்ளும் தந்திரமான மந்திரவாத எழுத்துதான். முகமதியர் ஆட்சிக் காலத்தில் முகமதிய அரசக் குடும்பத்தோடு ஏற்பட இருந்த கலப்பை மகள்மறுத்தப் பிணக்கால் ஆந்திர பகுதியிலிருந்து வெளியேறும் நாயக்க சமூகக்குழு ஆங்கில ஆளுகைக்கு உட்பட்ட தமிழகத்தின் தென்பகுதியில் மிகவும் வறண்ட நிலத்தில் குடியமருவதை எடுத்துரைக்கிறது கோபல்ல கிராமம். தங்களுடைய கடும் உழைப்பால் நிலங்களை பண்படுத்தி விவசாயம் உள்ளிட்ட தொழில்துறையில் நிலைப்பட்ட இம்மக்களின் வாழ்வை எடுத்துரைக்கிறது கோபல்லபுரத்து மக்கள். இவற்றோடு உறவுகொண்ட ஆனால் தனித்துவமான ஓர் அரைநாடோடிய வாழ்வை எடுத்துரைக்கிறது கிடை. அரைநாடோடியம் என்பது சிறுவிவசாயத்துடன் கூடிய கால்நடை மேய்ச்சலைக் குறிக்கிறது. பெரிய அளவில் நீர்வளமோ, பாசனவசதியோ இல்லாத மழையை மட்டும் நம்பி விதைக்கும் இந்த சிறுவிவசாயத்தை அரைவிவசாயம் என்றும் சொல்லுவர். சிறுவிவசாயத்திற்கும் அரைமேய்ச்சலுக்கும் இடையில் நிலவும் பணிப்போரை ஒத்த உரசலை இலாவகமாக எடுத்துக்காட்டுகிறது கிடை.

கதையமைப்பு

பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் கதாமாந்தர்களின் சிறுசிறு அசைவுகள், ஓரிரு சொற்களாலான சொலவடைகள், ஒரு கருத்தை மையப்படுத்தும் சம்பவங்கள் போன்றவற்றை எடுத்துரைத்தலின் வழி கதை கனகச்சிதமாக அமைந்து விடுகிறது. கிடை என்கிற இக்கதை குறித்த ஆட்டுக்கிடை பற்றியதாக மட்டுமில்லாமல் கிடை அமைதலின் சுற்றாடலில் நிகழும் வேடிக்கைகளை, அட்டகாசங்களை, அழிம்பை, அன்பை, பகிர்வை, பரிவை, காதலை, பிரிவை, அறியாமையை, இழப்பை, சிரிப்பை நிகழ்வுகளாக கோவைப்படுத்துவதன் வழி கதை இனைகதை, துணைக்கதை, இணைமுரன்கதை, கிளைக்கதை எனச் செறிவாக வடிவமைந்துள்ளது.

மேய்ச்சலும், விளைச்சலும் உயிர் இயக்க உணவு சங்கிலி கோட்பாட்டின்படி ஒன்றோடொன்று தொடரினை அல்லது சார்பினைத் தன்மை உடையது என்றாலும் நிலம் மேய்ச்சல்நிலம், விளைச்சல் நிலம் என்று மனிதமயப்படுத்தப்பட்டப் பின்னனியில் இரண்டையும் அருகருகில் வைத்து இனையாகக் கதைச்சொல்லல் தொடங்குகிறது. கீதாரியான ராமசுப்புநாயக்கரின் கிடையும், ராக்கம்மாவின் பருத்திக்காடும் இனைகதையின் ஆரம்பமாக தோன்றுகிறது. பள்ளர் நிலம் நாயக்கரின் கிடை சாதியக் குறிப்புணர்த்தல் கதையில் ஓரினை முரன்போக்கு கதையில் இருப்பதை உய்த்துணரவைக்கிறது.குடும்பன் மகளான செவனியும் – நுன்னகுண்ட ராமானுச நாயக்கரின் மகன் வயிற்றுப் பேரனான எள்ளப்பனும் ஆடுமேய்க்கு களத்தில் எதிர்ப்படும் ஓத்தப் பருவத்தினராவர். இவ்விருவருக்குள்ளும் நேர்ப்படும் எதிரினை பாலின உணர்வு கதையில் ஓரினைமுரணை விரிவுப்படுத்துகிறது. இவர்கள் காதல், காமம், உயிர், உடல், ஆண்-பெண் ஆகியவற்றால் இனையராக தங்களை கற்பித்து கொண்டிருக்கலாம், ஆனால் நாயக்கர்-பள்ளர் என மேல்-கீழ் ஆக்கப்பட்டுள்ள சாதி முரண் காதல் – திருமணம் என்கிற ஒழுங்கான தொடர்வினையை களைத்து எதிரினை முரணாக இருப்பதை எடுத்துரைப்பதன் வழி நீக்கப்படவேண்டிய துயரத்தின் பக்கம் வந்து சேர்கிறது கதை. செவனியோடு இன்பித்த எள்ளப்பனுக்கு அவனுடைய தாத்தாவான நுன்னகுண்ட ராமணுசநாயக்கரின் தலைமையில் அவருடைய வம்சத்திலிருந்து பெண்கள் பேசி திருமணமும் நடத்தப்படுகிறது. ஓராணுக்கு இருபெண்களையும் ஒரே சமயத்தில் கட்டிவைப்பது நாயக்க வம்சத்தின் பழக்கமாக கதையில் சொல்லப்படுகிறது. ஏதும் அறியாமல் வழக்கம்போல் மேய்சலுக்கு ஆடு ஓட்டிவரும் செவனி எள்ளப்பனைத் தேடுகிறாள். அவன் ஆடுகளை வேறொரு பெண் மேய்ப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறாள். இந்தக் காட்சி அவளுக்கு தான் காலையில் சாப்பிடாமல் வந்துவிட்டதை நினைவூட்டுகிறது. இப்போது வயிறு பசிக்கிறது, கண் சோர்கிறது, உடல் தளர்கிறது, நாக்கு தாகத்தால் வறளுகிறது மனம் துக்கித்து துக்கித்து அலைகிறது. இந்நேரத்தில் அத்துவான காட்டில் பருவம் அடைகிறாள் இந்தச் சூழலை பின்வரும் துணைக்கதையின் பின்னனியில் எடுத்துரைக்கப்படுகிறது.

அந்த அத்துவானக் காட்டில் செவனிதன் நிலை தவறி நின்றுகொண்டிருந்தாள். தூரத்தில் மரங்கள், மனிதர்கள் யாவும் தண்ணீரில்’ மூழ்கிப்போனார்கள். எந்தப்பக்கம் திரும்பினாலும் நீர் நீர்; கானல் நீர் . பெரும்குளத்தின் தண்ணீரைப் போல, அலைகள் தத்தளித்து அசல் தண்ணீரைப் போலவே தெரிந்தது ! அவளுடைய பாட்டன் ஆடு மேய்க்கும் போது, சிறுவயசில் அவளுக்குச் சொன்ன இரண்டு மான்கள் கதை’ஞாபகத்தில்வந்து‘ பாவைக் கூத்தாடியான மனசில், இரண்டு புள்ளிமான்கள். தாகம் தாங்க முடியாமல் தண்ணீரைத்தேடி அலைந்தன. தொலையில் தெரிந்த கானல் நீரை, அதுகள் தண்ணீர் தானாக்கும் என்று நினைத்து அதைப்பார்த்து விரைந்து சென்றன. அதுகள் போகப் போக கானல் நீரும் அதுகளுக்கு எட்டாமல் போய்க் கொண்டே இருந்தது. மான்களுக்கு ஆனால் தாகம் அதிகமாகிக் கொண்டே வந்தது. தகையைத் தாங்க முடியாமல் அதுகள் இன்னும் கூடுதலான வேகத்தில் பாய்ந்து ஓட ஆரம்பித்தன. எவ்வளவு வேகமாக ஓடியும், அந்தத் ‘தண்ணீர்’ கிட்டே இருப்பது போலத் தெரிந்தாலும் அந்த இடத்துக்குப் போகவே முடியவில்லை. இப்படியாக அந்த மான்கள் உயிரைக் கொடுத்து ஓடி ஓடி ஓடிக் கடைசியில் துள்ளி விழுந்து செத்தே போய்விட்டன. தாகத்தால் அவள் நாக்கு வறண்டது. அந்தச் சமயத்தில் சிகப்புக் கடுக் கண்கள் போட்ட முகமும் உண்ண உண்ண நீர் சுரக்கும் சிவந்த உதடுகளும் கண் முன் வந்தது . பக்கத்தில் நின்ற வன்னி மரத்தை நோக்கி எட்டு எடுத்து வைத்தாள். அவளுடைய ‘அறையில்’ வெதுவெதுப்பாகஏதோஒன்றுஇறங்கிவருவதுபோலத்தெரிந்தது. திடீரென்று பரவிய பச்சை இரத்தத்தின் வாடையால் செவனி திடுக்கிட்டாள்.
அவளுடைய கண்களின் சமீபம் நூற்றுக்கணக்கான பூச்சிகள் பறப்பதைக் கண்டாள். “அஞ்ஞா”என்ற வார்த்தை முழுவதும் வெளிவருவதற்குள்ளாகவே மயங்கி விழுந்துவிட்டாள். பிறகு பேயோட்டும் பூசாரி கையால் செவனி அடிவாங்குவதும், எள்ளப்பனின் திருமண நிகழ்ச்சியும் மாறி மாறி விவரிக்கப்படுகிறது. இதற்கிடையில் ராக்கம்மாவின் பருத்திக் காட்டில் அழிம்பு செய்தவராக பொன்னுசாமிநாயக்கர்மேல் ஊரே குற்றம் சாற்றுவதும் கிளைக்கதையாக எடுத்துரைக்கப்படுகிறது. இனி கதாமாந்தர்கள் குறித்து விளக்குவது பயன் தரும்.

கிடை by கி. ராஜநாரயணன் [Ki. Rajanarayanan]

கதாமாந்தர்கள்

இக்கதையில் ராக்கம்மா, பொன்னுசாமிநாயக்கரின் மனைவி காமம்மாள், ஆடுமேய்க்கும் செவனி ஆகிய பெண்கள் மட்டுமே நேரடியாகக் கூற்று நிகழ்த்துகின்றனர். எள்ளப்பனுக்குப் பதிலாக ஆடுமேய்க்கவரும் பெண், செவனியின் அம்மா, திருட்டுத் தடையம் தேடி திம்மைய நாயக்கர் செல்லும்போது குத்தவைத்திருந்து எழுந்திருக்கும் பெண் ஆகிய பெண்களும் கதைக்குள் உள்ளனர். நுன்னகுண்டாராமானுசநாயக்கர், தலைமை கீதாரி ராமசுப்புநாயக்கர், திம்மையநாயக்கர், பொன்னுசாமிநாயக்கர், கோபாலநாயக்கர், மன்சூர்நாயக்கர், ராமகோனார், இலகவுவண கவுண்டர், ஊர்சபை தலைவர் கலக்ட்டர்நாயக்கர் எள்ளப்பன், இவர்களோடு ஒருசிறுவமும் ஆண் கதாமாந்தர்களாவர்இம்மாந்தர்களின் இயக்கத்திற்கு தக்கப்படி அவர்களின் பேச்சுமொழி, உடல்மொழி, உணவுமுறை, உடையலங்காரம், இருப்பிடம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், உள்ளிட்ட பலவும் எடுத்துரைக்கப்படுகின்றன.

பாத்திரப் பண்புகள்

கி.ரா.வின் ஏனைய கதைகளை போல இக்கதையிலும் ஆண்களே அதிக எண்ணிக்கையில் நடமாடுகின்றனர் என்பதை மேலே தரப்பட்டுள்ள விளக்கங்களிலிருந்து அறியலாம். ஆனால் மண் மனம் மாறாத இனக்குழு பண்பு அல்லது சாதிப்பண்பு உடையவர்களாக காணப்படுகின்றனர். எனினும் இவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் உள்ளார்ந்திருக்கும் தனித்துவமான சிறப்பாற்றல்களை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தலின் மூலம் வாசகருக்கு கடத்தப்படுகிறது. வயது முதிர்ந்த பிறகும் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு கயிறு திரிக்கும் இரட்டைக் கதவு நுன்னகுண்டா ராமானுஜ நாயக்கர், ஒருக்கண் பார்வையால் திருட்டுத் தடையங்களைக் கண்டறியும் திம்மையா நாயக்கர், பல சேட்டைகள் செய்து திருடும் பொன்னுசாமி நாயக்கர், ஆடுகளை கச்சிதமாக அடையாளங்கண்டு பங்கு பிரிக்கும் தலைமை கீதாரி ராமசுப்பு நாயக்கர், உயரமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு சிறப்பாக பஞ்சாயத்து நடத்தும் கலக்ட்டர் நாயக்கர் என ஒவ்வொருவருக்கும் உள்ள தனித்தன்மைகள் விளக்கப்படுகிறது. நுன்ன கொண்ட ஸ்ரீ வேங்கட ராமானுஜுலு நாயக்கரின் திருமாளிகை எது என்று கேட்டால் யாருக்குமே தெரியாது.

ரெட்டைக் கதவு வெங்கட ராமானுஜ நாயக்கர் வீடு என்று கேட்டால் போதும், அந்த வீட்டுக்கே கூட்டிக் கொண்டு போய் விடுவார்கள் அந்தக் கிராமத்தில் யாரும் . அந்த ஊரிலேயே முதன்முதலில் வீட்டுக்கு இரட்டைக் கதவு போட்டவர் அவர் ஒருத்தர்தான் . கோவில் கதவுகளைப்போல அவைகள் அவ்வளவு பெரிச, சதா அவைகள் திறந்தேதான் இருக்கும்; அந்தக்கதவுகள் மூடியிருக்கப் பார்த்ததில்லை யாருமே. கதவுகளைக் கடந்து உள்ளே போனால், இடுப்பு உயரத்துக்கு இரண்டு திண்ணைகள் இருக்கும், இரண்டு பக்கமும். வலது பக்கத்துத் திண்ணையில் மடக்குக் கட்டிலில் அனேகமாக எந்தநேரமும் வெங்கட ராமானுஜ நாயக்கர் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். அவருக்குப் பக்கத்தில் கூந்தப்பனையில் செய்யப்பட்ட‘ டா’னாக் கம்பு ஒன்று கன்னங்கரேலென்று, கை பட்டுப் பட்டு அதில் ஒரு எண்ணெய் மினு மினுப்பு ஏறியிருக்கும். அவருக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன முக்காலியின் மேல் ஒரு வெள்ளைப் பணிக்கம் வைக்கப்பட்டிருக்கும். முக்காலியின் மேல் பகுதியிலும் கால்களிலும் உளியினால் தச்சன் தன் சாமர்த்தியத்தையெல்லாம் காட்டி வேலைப்பாடுகள் செய்திருந்தான் நுன்ன கொண்ட நாயக்கர் துப்பட்டியால் தலையில் முக்காடு போட்டு அது சரிந்து விழாமல் இருக்க சிட்டுப்போட்ட ஈரிழைத் துண்டினால், மேல் நெற்றியையும் பின்தலையையும் காதுகளுக்கு மேலாக வட்டமாகச் சுற்றி, முக்காட்டின் மேல் ஒரு லேஞ்சி கட்டிக் கொண்டிருப்பார், அரேபிய பாணியில். அவருடைய கைகள் சும்மாவே இருக்காது. எந்நேரமும் கம்பராக் கத்தி பக்கத்திலேயே வைத்திருப்பார்.

நனைந்த நீளமான பனை நார்களைக் கிழித்து, வாக்கூடு பின்னிக்கொண்டிருப்பார்; அல்லது, வலது துடையில், வேட்டியைவிலக்கிக்கொண்டு, புளிச்சைநாரில்கயிறுகள்திரித்துக்கொண்டிருப்பார். ‘சிய்’ என்றிருக்கும்நேரத்தில், இடுப்பின் இடது பின்புறம் வேட்டியில் சொருகியுள்ள பொடிப்பட்டையை எடுத்து, பட்டையின் பக்க வச ஒரு மடிப்பை மட்டும் நிமிர்த்தி, பட்டையைச் சற்று விரித்து, ஆள்காட்டி விரலினால் பதனமாகக் கஞ்சி ராவுக்கு ஸ்ருதி பார்ப்பதைப் போலத் தட்டிவிட்டுக் கொண்டு கூடிய பட்சம் இரண்டு விரல்களால் எவ்வளவு அதிகம் எடுக்க முடியுமோ அவ்வளவு கனமான ஒரு சிமிட்டாப் பொடியை எடுத்துக்கொண்டு, தயாரிப்பாக முதலில் வாயிலுள்ள எச்சிலைக் கூட்டி விழுங்குவார். பின்பு, சற்றே ஒரு பரவசநிலை; பிறகு அந்தச் சேலம் பொடியைப் பற்களின் ஒரு கோடியிருந்து மறுகோடி வரை இளுகிவிட்டு, அந்த விரலை உள்ளங்காலில் தேய்த்துத் துடைத்துக்கொள்வார். அதே சமயம் பற்களின் ஈறுகளில் ஒட்டாத பொடியை பூ’ என்று ஊதிவிட்டு, உதட்டைக்கூட்டி, ஓர் மாதிரி ‘உம்’ என்று வைத்துக்கொள்வார். இப்படி, ‘அழகில்’ வைத்துக் கொண்டிருக்கிற சமயத்தில் யாரும் அவரோடு வந்து பேச்சுக் கொடுப்பதை விரும்புவதில்லை, அவர்! நாயக்கருக்கு வயசு எண்பதையடுத்து ஆனாலும், பல் ஒன்று கூட இன்னும் உதிரவில்லை. பொய்ப்பல் ‘செட்’டைப் போல், அவ்வளவு ஒழுங்காகவும் அழகாகவும் இருக்கும் அவருடைய நிஜப்பற்கள்.அவரிடம் யாராவது இதைப் பற்றிக் கேட்டால, அதெல்லாம் வாயை மண்டைவாகுங்ஙே’ என்பார். வயசாளிகளுக்கே உண்டான ஒருவிதக் கொச்சை வீச்சம் அவரிடமிருந்து வீசும். அவருடைய மடக்குக் கட்டிலையொட்டிச் சுவரோரமாக ஒரு கயிற்றுக்கொடி கட்டப்பட்டிருக்கும். அதில் வெளிர் சாம்பல் நிறத்தில் ‘ஸ்கவுட்மா’லில் இரண்டு பைகளும் இரண்டு‘காது’களும்வைத்துத்தைக்கப்பட்டஅரைக்கைகமுசுஒன்றுகிடக்கும் . அதை அவர் அனேகமாக வெளுக்கப் போடுவதே இல்லை. கழுத்து முட்டப் பித்தான் வைத்துத் தைக்கப்பட்ட அந்தக் கமுசை அவர் பனிக்காலங்களில் மட்டுமே போட்டுக் கொள்வார்.’ தொல்லியல் ஆய்வாளனுக்குரிய நேர்த்தியுடனும், வரலாற்று ஆய்வாளருக்குரிய அக்கறையுடனும், மானிட ஆய்வாளருக்குரிய பரிவுடனும் இந்தக் காட்சிப்படுத்தல் அமைந்துள்ளது. கதையோட்டத்திற்கு வளுசேர்க்கும் ஒவ்வொரு கதைமாந்தருக்கும் இத்தகைய காட்சிப்படுத்தல் அமைக்கப்பட்டுள்ளது. தலைமை கீதாரி ராமசுப்பு நாயக்கர் பாங்கு பிரிப்பதில் தனித்துவம் உடையவர். இனி பாங்கு பிரித்தல் குறித்து விளக்குவது பயன்தரக்கூடும்.

பாங்கு பிரித்தல்

ஒரு கிடை என்று எடுத்துக்கொண்டால் பல நபர்களுக்குச் சொந்தமான பல வகையான ஆடுகள் இருக்கும் ஆடுகளை கிடை பிரித்து ஓட்டுகையில் அவரவருக்குரிய ஆடுகளை சரியாக அடையாளங்கண்டுபிடிப்பதில் குழப்பம் வரும். இந்தச்சூழலில் சரியாக அடையாளங்கண்டுபிடித்து பிரிப்பது பாங்கு எனப்படுகிறது. சரியாக பாங்கு பிரிக்கத் தெரிந்தவர் கீதாரியாக இருப்பார். அதனால் பாங்கு பிரிப்பது கீதாரிக்குரிய கடமையுமாகும். ‘கிடையிலிருந்து மேய்ச்சலுக்கு எழுப்பி, ஒருபக்கமாக ஒதுக்கி நிறுத்துவதைத் தான் ‘பாங்கு’  என்று சொல்லுவார்கள். கிடை என்பது ஒரு தனிராஜ்யம் அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவன் உண்டு. அந்த தலைமை ஸ்தானாதிபதியின் பெயர் தான்“கீதாரி’ என்பது கிடைக்கு என்று ஏற்பட்ட பூர்வீக வழி வந்த சில சட்ட திட்டங்கள் உண்டு. அதை யாருமே கொஞ்சம் கூட மீறக்கூடாது. ஆட்டுக்குட்டிகளின் கூடுகளை வரிசைப்படுத்தி வைப்பதற்குக் கூட ஒரு முறை உண்டு. அதற்கு‘வட்டம்’என்று பெயர். நிலச்சொந்தக்காரர்கள் கொடுக்கும் கிடைக்கூலியான தானியத்தைக் கிடைக்காரர்கள் இந்த வரிசை முறைப்படி தான் வாங்கிக் கொள்ள வேண்டும் . கிடைக்காரர்களுக்கு என்று ஒரு தனிச்சொற்கள் போட்டுப் பேசப்படும் ‘மொழியேஉண்டு.’ தப்பிதமாகப் பாங்கு பிரிக்கப்படுவதைக் கண்ட கீதாரி ராமசுப்பா நாயக்கர், தொலைவில் இருந்தவாறே சத்தம் போட்டார்: ‘ஏலே, வசங்கெட்ட பய புள்ளே. பாங்கு தெரிஞ்சி தான் நடக்கியா? இவங்கெள்ளாம் என்ன மயித்துக்கு இங்கே வாராங்க? ஏழுலே, எங்கேயாவது தேனையும் தவிடையும் கொண்டுக்கிட்டு போங்களேமுலே ! இங்ஙனே வந்து உசுரை வாங்குறாங்க. சரியாப் பிடிச்சி மோளத் தெரியாத பயல்கள் எல்லாம் தொறட்டிக்கம் பை கையிலே எடுத்தா பின்னே எப்படி இருக்கும்? என்று பேசிவிட்டு சரியாக கீதாரி ராமசுப்பா நாயக்கர் பாங்கு பிரித்தார்.

ஆடுகளின் வகை

பாங்கு பிரித்துக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்லும்முன் கிருட்ணகோனாரின் நினைவிலிருந்து ஆடுகளின் வகை சரி பார்க்கும் பொருட்டு சொல்லப்படுகிறது. செவ்வாடு – அரியாடு இவைகள் தனி சுத்தச் ‘சிகப்பு’ கருங்காத்து வெள்ளை உடம்பு பூராவும் வெள்ளை; காதுகள் கருப்பு. செங்காத்து வெள்ளை. வெங்காலாடு– தனி ஒரு நிறத்தில், காலில் மட்டும் ஒரு புள்ளி. மறை – தனி ஒரு சுத்த நிறத்தில், ஒரு பட்டை வேற்று நிறம். போர் – இரண்டு நிறங்கள் கலந்து காணுவது . கரும்போர், செம்போர், வெள்ளைப்போர், தவிட்டுப்போர். மூளி – காது குறை தாலி – கழுத்தின் கீழ் இரண்டு தொங்கட்டான்கள். கூளி – வளர்ச்சி குன்றிய குட்டை கறுவி – உடம்பு சிகப்பு; அடி வயிறு மட்டும் கருப்பு. ராயாடு உடம்பு சிகப்பு; அடி வயிற்றுக் கருப்பில் வெள்ளைப்போர்.

சென்றாயாடு சிகப்பு உடம்பில் அடிவயிற்றுக் கருப்பில் செம்போர். கரிசையாடு – கருப்பு மிஞ்சின சிகப்பு. கரிசைப் போர். கண்ணாடிப் போர் – கருப்புமிஞ்சினசிகப்பில்வெள்ளைப்போர் . கம்பளியாடுகருப்புமிஞ்சினசிகப்பில், துடைகளிலும்முன்சப்பையிலும், முதுகுஎலும்பு, புருவங்களிலும் தாரை தாரையாக கருப்புக் கோடுகள் . சுட்டி – தலையில் வெண்புள்ளி. வெண்தல . கொப்பாடு– கொம்பு இருக்கும் பெண் ஆட . கிடா – கொம்புள்ளது; ஆண். மோளைக்கிடா – கொம்பில்லாதது. கொச்சைக்கிடா – விதையில்லாதது; பிறவியிலேயே இந்தக் கொச்சைக் கிடா கிடைப்பது ஒரு பெரிய செல்வம் என்று கிடைக்காரர்கள் கருதுகிறார்கள்.

இது அபூர்வமாகவே வாய்க்கும் ஒருவருக்கு. கிட்ணக்கோனாருக்கு இதனால் கிடையில் மதிப்பு கூடியிருந்தது எனக் கூறுவதோடு மேலும் சில ஆட்டுவகை இக்கதையில் எடுத்துரைக்கப்படுகிறது. அவையாவன, போர். கோட்டை மறை – உடம்பைச் சுற்றி ஒரு வேற்று நிற வட்டம். சுட்டி . பூவால் – வாலின் முனையில் வெள்ளை. தாலி. பூலி – காதுக் கருப்பில் வெள்ளைப் புள்ளிகள். கன்னி கால, கண்பட்டை, அடி வயிறு முதலியதில் வெள்ளைக் கோடுகள் . பால்கன்னி . செவலைக்கன்னி,தவிட்டுப் போர் – தனி ஒரு நிறத்தில் நாலு நாலு ரோமங்களாய் வெள்ளை, சாம்பல் போர், மொட்டை, குடைக்கொம்பு, உச்சிக்கொம்பு, ஒத்தைக்கொம்பு, மாடக்கொம்பு, மூஞ்சி வெள்ளை, நெத்திச்சுட்டி, செவலைப்போர், மச்சை – தனி நிறத்தில் மச்சம், குரா – இளம் வயது, சுணக்கி – புள்ளி மான் மாதிரியான நிறம், நரை ரோமம் – கருப்பும் வெள்ளையும் கலவன். குருட்டாடு – ஒற்றைக் கண் தெரியாதது, சொட்டைக்காது– சிறிய சுருங்கிய காதுகளை உடையது, துடைமறை, ஓங்கோல் – நீண்ட தொங்கட்டான் காதுகள், புளியம் போர் – புளியம் பூவைப் போல நிறம்.திம்மைய நாயக்கர்

ராக்கம்மாவின் பருத்திக் காட்டை ஆடுகள் அழிம்பு செய்ததை அடுத்து துப்பறிய சென்ற மூவருள் திம்மையநாயக்கர் முதன்மையானவர், இவருக்கு ஒரு கண்ணில் பூவிழுந்துவிட்டதால் ஒரு கண் பார்வை மட்டும் உண்டு. இவருடன் துப்பறிய வந்த மற்ற இருவரை வரப்புகளை சுத்தி பார்த்துவாருங்கள் என சொல்லிவிட்டு அவர் தனியாக தனது பணியை செய்கிறார். தொறட்டிக்கம்பு ஊன்றிய தடம் ஏதாவது வருகிறதா என்று கவனித்தார்; இல்லை. ஆகவே, ஆடுகள் தவறி விழுந்து வெகுநேரம் சுயேச்சையாக அலைந்து மேய்ந்திருக்கின்றன. ஓடிவந்து, ஒரு கால்த்தடம் ஆடுகளைத் திருப்பியிருக்கிறது. பக்கத்திலுள்ள ஓடைக்குள் அவர் பதனமாக இறங்கிக் கவனித்தார். ஓடை மண்ணின் தேறல்களில் விழுந்த அதே காலடிகள் இரண்டு ஜதைகளும், அவைகளில் ஒரு ஜதையில் நடுவிரலில் அணிந்திருந்த மிஞ்சுவின் பதிவையும் கவனித்து அது ஒரு பெண்ணின் இளம் காலடி என்று தெரிந்துகொண்டார். சற்றுத் தொலைவில் மொச்சிச்செடியின் ஒரு புதர் அருகே குறு மணலில் இரண்டு தொறட்டிக் கம்புகள் கிடந்த தடங்களும் மனித பிர்ஷ்டம் பதிந்த தடமும் மணலில் கால்கள் உளம்பலாடிய இடங்களையும் பார்த்தார். அதன் பக்கத்தில் உடைந்த வளையல் ஒன்று கிடந்தது.

நாயக்கர் அந்த உடைந்த வளையலின் நொறுங்கல்களை எடுத்துப் பொருத்திப் பார்த்துத் தமக்குள் சிரித்தார். அவைகளைக் கவனமாக அடையாளம் பார்த்து விட்டு, எடுத்து மடியில் வைத்துக்கொண்டார். இன்னும் கூர்ந்து பார்த்துக்கொண்டே வந்த நாயக்கருக்கு மேலும் ஒரு தடயம் அகப்பட்டது; மணலில் புதைந்து கயிறு மட்டிலும் வெளி நீட்டிக்கொண்டிருந்த ஒரு இரும்பு முள்வாங்கியும் காது குடுமியும் அதில் திரித்து மாட்டியிருந்த துணிக்கயிறும் திம்மய நாயக்கருக்கு நன்றாக அடையாளம் தெரியும் இப்பொழுது, விஷயம் எங்கே ஆரம்பித்து, அது எப்படிந்திருக்கிறது’ என்ற கதை அவருக்கு விளங்கிவிட்டது ! தடங்களை மடியிலும், தடையங்களை மனசிலும் கட்டிக் கொண்டு வந்த திம்மைய நாயக்கர் செவனியையும், எள்ளப்பனையும் பார்த்து குறிப்பால் உணர்த்தி உறுதிப்படுத்திக் கொண்டார். அழிம்பு சாச்த்தி என சொன்னதை தவிர சமந்தப்படோரை குறித்து ஊர்சபையில் மட்டுமில்லை யாரிடமும் ஒன்றும் சொல்லவில்லை.
அதனால் இப்பழி பொன்னுசாமி நாயக்கரின் மேல் அனைவராலும் சுமத்தப்பட்டது. ஆடு மேய்க்கும் போது செவனியும் எள்ளப்பனும் ஒன்றாகவே இருந்தாலும் செவனி வயசுக்கு வராததனால் இவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. என்று கதை சொல்லியால் கதைக்குள் எடுத்துரைக்கப்படுகிறது. எள்ளப்பனும் செவனி போலவே தாழ்த்தப்பட்ட சாதியாக இருந்து இத்தகைய தடையங்கள் திம்மைய நாயக்கருக்கு கிடைத்திருந்தால் இவர்களுடைய நிலையை நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. எள்ளப்பனும் இந்த அழிம்பில் தொடர்புடையவனாக இருந்தாலும் நாயக்கர் என்கிற மேலாக்கப்பட்ட சாதிக்காரனாக இருந்ததனால் ஊர் முன் குற்றவாளிகளாக நிறுத்தப்படவில்லை. இத்தகைய காத்திரமான இக்கதையில் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. இனி இக்கதையில் வரும் ஓரிரு நகைச்சுவைகளை சுட்டுவது பயன்தரும்.

நகைச்சுவை காட்சிகள்

தொல்காப்பியம் எட்டுவகை மெய்ப்பாடுகளை கூறவரும் போது நகை என்று நகைச்சுவையை முதலிடத்தில் வைத்து விளக்குகிறது. இதிலிருந்து பழங்காலத்திலிருந்தே இலக்கியங்களில் நகைச்சுவை ஒரு முக்கியமான கூறாக இருப்பதை அறியமுடிகிறது. எள்ளல், இளமை, பேதமை, மடன் ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோற்றிவிக்கப்படுகிறது. இவை தவிர நவீன கோட்பாட்டின்வழி பலவகையான நகைச்சுவைகள் விளக்கப்படுகின்றன. “நகைச்சுவையின் பலவகைகள் என்பதைப் பலவேறு விதமான முறைகளால் உருவாக்கப்படும் நகைச்சுவை என்று நாம் கொள்ளலாம். உதாரணமாக, மிகை நவிற்சி (உயர்வு நவிற்சி), குறை நவிற்சி, பொருந்தாமை, குறிப்பு முரண், சொல் விளையாட்டு ஆகிய ஐந்து வகைகளில் நகைச்சுவை ஏற்படுவதாகக் காணலாம்” [பூரணச்சந்திரன்-2017]. இவற்றில் பொருந்தாமை என்பது நகைச்சுவைக்கு அடி ஆதாரமானது.இக்கதையில் வரும் முருக பக்த்தரான இராமக்கோனார் திருச்செந்தூர் கடலை முதல் முறையாக புதிதாக பார்த்த உடன் ‘பார்த்தியா கோப்பால்நாயக்கரே, மழ இங்க சக்கபோடுப்போட்டிருக்கு’ என்கிறார். இது அவருடைய அறியாமை என்னும் பேதமையை உணர்த்துகிறது. அதாவது தெரியாமை என்பதும் அறிவு பொருந்தாமையை குறிக்கிறது. பொன்னுசாமிநாயக்கர் உருவாக்கும் நகைச்சுவை எள்ளலை களமாக உடையது. இக்கதையில் வரும் பொன்னுசாமிநாயக்கர் திருடுவதில் கெட்டிக்காரர். இவர் ஊரெல்லாம் தூங்கும் நடுஇரவில் அவரவர் வீட்டுமுன் இருக்கும் உரலில் ஆட்டுக்கல்லைப் போட்டு கடகடகட என ஆட்டுவார். விடிந்தபின் இரவு பேய் வந்ததாகவும் அது உரலில் கல்லை போட்டு ஆட்டியதாகவும் அதனை தானும் கேட்டு பயந்துவிட்டதாகவும் கதைசொல்லுவதைக் குறிப்பிடலாம். மன்சூர்நாயக்கரின் தோட்டத்திலிருந்து அகத்திக் கீரைகள் காணாமல் போவதை அறிந்த அவர் திருடனை கையும் களவுமாக பிடிக்க தோட்டத்தில் இராகாவல் புரிகிறார். நெடுநேரம் ஆனபின் கண் சொக்கும் வேளையில் திடீரென்று சரசரவென சத்தம் கேட்டது. தழை ஒடிக்கும் சத்தம்வரும் திசைநோக்கி பார்த்தபோது அவர்முன் ஓருருவம் சிறிதுநேரம் ஆடிவிட்டு அப்படியே ஓடிக் கிணற்றில் குதித்துவிட்டது. இது பேயின் விளையாட்டு என நம்பிய மன்சூர் நாயக்கருக்கு சுரம் வந்துவிட்டது.

ஆனால் பொன்னுசாமிநாயக்கரோ இதை நிகழ்த்திவிட்டு அகத்திக் கீரையை அவருடைய மனைவி காமம்மாளிடம் கொண்டுகொடுத்தார். எனக் கதையில் விவரிக்கப்படுகிறது. பொன்னுசாமிநாயக்கரின் இத்தகைய கள்ளத்தனமான ஆட்டத்தை படிக்கும் யாவருக்கும் நிச்சையமாக சிறிப்பு தோன்றும். இது எள்ளல் சார்ந்த நகைச்சுவையாகும். தனது செயலுக்கு புலனறிவுக்கு பொருந்தாத காலச்சூழலான இரவை தேர்ந்தெடுப்பதன் மூலம் எள்ளல் சார்ந்த நகைச்சுவை இவரால் தோற்றிவிக்கப்படுகிறது. முதுமையான இலகுவன கவுண்டருடன் இளமையான எள்ளப்பன் ஆடும் ஆட்டமும், கீதாரி ராமசுப்பாநாயக்கர் தண்ணிக்கு வரும் இளைய பெண்களின் தொடையை கிள்ளிவைக்கும் ஆட்டமும் நகைப்பை அளிக்கிறது. இது இளமைக் காரணமாக தோன்றும் நகைச்சுவையாகும்.

நிறைவாக

இக்கதையில் இன்னும் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் என பல உண்டு. விரிவஞ்சி இங்கு தவிர்த்துக் கொள்ளப்படுகிறது. அறுவதுகளில் காந்தியம், மார்க்சியம் என இயக்கம் சார்ந்த புனைவுகளும், மனச்சிதைவு, அவநம்பிக்கை போன்ற நவினத்துவக் கோட்பாடு சார்ந்த புனைவுகளும் வந்துகொண்டிருந்த தமிழ்ச்சூழலில் முன் மாதிரியற்ற பின் காலனியத்திற்குச் சற்று நெருக்கமான தன்னடையாளங்களை எழுதிப் பார்த்தல் என்கிற வகையில் கீதாரியும் மிக முக்கியமானது.

மு.சரோஜாதேவி
அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி
வியாசர்பாடி, சென்னை: 39.
Email: [email protected]