தமுஎகச சிவகாசி: கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதை *கிருமிலோகம்* – பா. சரவண காந்த்

Ki. Rajanarayanan Memorial Short Story Competition (கி.ரா நினைவு சிறுகதைப் போட்டி) Special Prize Won Story "Kirumilogam" by Pa. Saravana Kanth (*கிருமிலோகம்* - பா. சரவண காந்த்)ரைட்டரே…. கொஞ்சம் போன கொடுங்க…

அடி வெளுக்க போறேன் பாரு இப்ப.

பசிக்குதுல…

இரு.  ஐயா வரும் போது ஏதாச்சும் எடுத்துட்டு வருவாரு…

அட போங்கய்ய… ஒரு மணி நேரமா இத தான் சொல்ரிங்க. நேத்து நம்ம மருது ஐயா இருந்தாரு. போன் போட்டு கொண்டு வர சொல்லி சாப்பிட்டோம்.

ஆமா… அவனவன்  வீடல முடங்கி இருக்கான். இவருக்கு வருது.

நிசமாத்தான்யா..  இருக்கிறவனுக்கும் இல்லாதவனுக்கும் எதுவும் எங்கயும் கிடைக்கும். கிடைக்காட்டி கிடைக்க வைப்பான்யா… நீங்க போன கொடுங்க… பத்து நிமிசத்தில வந்திடும்.

தத்துவ மசுரு… சினிமா பார்த்து பூரா பேரும் வசனம் பேசுறிங்கடா.. இரு….. பார்ப்போம் என சொல்லிமுடிக்கும் போது  அந்த காவல் நிலையத்தின் வாசலில் வாகனம் வந்து நின்றது,.

டேய் அய்யா வந்துட்டாரு…. மூடிட்டு இரு என சொல்லிகொண்டு தன் தொப்பியை எடுத்து அணிந்துகொண்டு வாசல் நோக்கி நகர தொடங்கினார். சென்னை மேடவாக்கம் அருகே இருக்கும் காவல்நிலையம் அது. நேரம் இரவு எட்டு தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. வாசலில் வந்து நின்ற ரைட்டர் யாரும் அந்த ஜீப்பில் இருந்து இறங்காததை கவனித்து படியில் இறங்கி நடக்க தொடங்கினார். அப்போது முன் கதவு திறந்து மெதுவாக ஒரு கால் மட்டும்  பூட்ஸ் முழுக்க மண் தூசியாக  இருக்கும்படியா தெரிந்தது. மெதுவாக இறங்க முடியாமல் அந்த உருவம் இறங்கியது.

ஏய்… என்னாச்சு… இவ்ளோ அடி என உரக்க சொல்லியபடியே நெருங்கினார். சட்டை பட்டன்  இருக்கும் இடம் கிழிந்திருந்தது. உதட்டில் முகத்தில் காயங்கள். கைகளில் சிராய்ப்புகள் என இருந்தன. அப்போது தான் கவனித்தார் ஜீப்பின் சைடு பக்க கண்ணாடிகள் உடைந்திருந்தன. மெதுவா வா…. இடுப்பில் கை வைத்து மெதுவாக படியேற்றினார்.

எனக்கு ஒன்னுமில்லையா.. கொஞ்சம் அடி … நா போய் வாஷ்பன்னிட்டு வரேன்.. பின்னாடி ஆள் இருக்குது.. விலங்கு போட்டு இருக்கு… பத்திரமா உள்ள உட்கார வைங்க என சொல்லவும் ரைட்டர் அவனை பிடித்திருந்த பிடியை விட்டார். அவன் மெதுவாக படியேறி உள்ளே சென்றான்.

ஜீப்பை நெருங்கிய அவர் மெதுவாக எட்டிப்பார்த்தார். உள்ளே ஐம்பத்தி ஐந்து வயதான ஒருவரும் அவரோடு ஒரு  நாற்பத்தி ஐந்து வயதான பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். அந்த வயதானவர் கைகளில் விலங்கு பூட்டப்பட்டிருந்தது. கதவை திறந்த ரைட்டர் ஏய் இறங்கு.. குடிச்சிருக்கியா… நீயும் இறங்குமா.. அந்த பைய எடு… உள்ளே போ என உத்தரவுகள் போட்டப்படியே இருந்தார். அந்த பெரியவர் வேட்டியும் மண்ணில் புரண்டது போல இருந்தது. சட்டை பை கிழிந்திருந்தது. அந்த பெண்ணின் ஜாக்கெட்டும் கொஞ்சம் பின்பக்கம் கிழிந்திருந்தது. ஒரு கூடையில் ஒரு வாட்டர் கேன், சில துணிகள் இருந்தன. ரைட்டர் ஜீப்பை உற்றுப்பார்த்தபடியே படியேறி உள்ளே சென்றார்.

அடிப்பட்ட அந்த போலீஸ் மப்டிக்கு மாறியிருந்தார். முழுமையாக அல்ல. அதே காக்கி பேண்ட் மேலே மட்டும் புளூகலர் சட்டை மாற்றியிருந்தார். காலில்  ஷூ இல்லை. அடிபட்ட இடங்களில் டிஞ்சர் போட்டிருந்ந்தார். சில இடங்களில் எண்ணெய் போட்டிருந்தார். மெதுவாக ஒரு காலை கெந்தியபடியே நடந்து வந்து அங்கே இருந்த சேரில் அமர்ந்தார்.

என்ன ஆச்சு.. யாரு இதுக ? ரைட்டர் கேட்டார்

தெரியல சார். நம்ம ஐயா கூட சண்ட போட்டுகிட்டு இருந்தாரு. நா ரோட்டுக்கு அந்த பக்கமா இருந்தேன். ஓடிவந்து ஐயா கிட்ட இருந்து இவர இழுத்தா.. இவரு என்னை அடிக்க ஆரம்பிச்சுட்டாரு.. வண்டியில வேற கல்லெறிஞ்சு இருக்காரு போல.

குடிச்சிருக்கானா

இல்லையில்லை. வேறு ஏதோ சண்டை. ஐயா நீ கூப்டு ஸ்டேஷன் போ. நா வீட்டுக்கு போய் டிரெஸ் மாத்திட்டு வரேனு சொல்லியிருக்காரு. ஜெயாவுக்கு சொல்லியிருக்கு. வந்துட்டு இருக்காங்க.

சார்… என அந்த ஸ்டேஷன் அறையில் இருக்கும் கைதி அழைத்தான்.

என்னடா  ?

பெருசு டோப்பு அடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். முகத்தை பாருங்க…

ரைட்டர் மெதுவாக எழுந்து சென்று…. அவரின் முகத்தை நிமிர்த்தி பார்த்தார். எந்த உணர்ச்சியும் இல்லை. அடிவாங்கிய வீக்கம் இருந்தது. அருகே அந்த பெண் இனி அழுது ஏதுமில்லை என அவரும் உணர்ச்சியற்று இருந்தார்.

டோப்பெல்லாம் இல்லை போலடா.. ஏம்மா அந்த பேக்க கொடு கையில் இருந்து புடுங்கினார். உள்ளே இருந்த துணிகள எடுத்து வெளியே போட்டார். உள்ளே சில கார்டுகள் இருந்தன. ஒரு பர்ஸ் இருந்தது. அந்த கார்டை எடுத்து பார்த்தார். கண்ணாடியை தூக்கிவிட்டு உற்றுப்பார்த்தார்.

வாத்தியாரா நீ…. உனக்கெதுக்குய்யா இந்த வேலை. ஐயா மேலயே கைய வச்சிருக்கே… இது யாரு.. வீட்லையா.. இல்லை தொடுப்பா…

அந்த பெண் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். அவர் நிமிர்ந்து அந்த ரைட்டரை கோபமாய் பார்த்தார்.

அடி செருப்பாலா… கண்ண கீழே இறக்குடா … கோவ மசுரு வருதோ… இரு ஐயா வரட்டும்… இருக்கு உனக்கு என்றபடியே கார்ட் பர்ஸ் எல்லாம் எடுத்து சென்றார். டேபிளில் வைத்தார். அங்கே ஒரு அமைதி நிலவியது. போலீசை அடித்திருகிறார்கள் ஒர்  தம்பதிகள். ஐயா வந்தால் மட்டுமே  மேற்கொண்டு எதுவும் தெரியும். ஒரு அவஸ்தையான காத்திருப்பு அங்கே நிலவியது.

வெளியே புல்லட் சத்தம் கேட்டதும் வேகமாய் தொப்பியை மாட்டிக்கொண்டு எழுந்து நின்றார்கள். வந்தவர் நேராக ஸ்டேஷன் உள்ளே இருக்கும் அந்த சிறிய அறையை நோக்கினார். அங்கே யாருமில்லாததை உணர்ந்தவர் தன் தலையை இடதுபக்கமாய் திருப்பினார். அங்கே அந்த தம்பதிகள் அமர்ந்திருந்தார்கள்.

ஏன் இன்னும் இந்த நாய்களா உள்ளே தள்ளலையா ?  ஏன் குமாரு.. என்னா என சத்தம் கொடுத்தார்.

குமாரு இப்பதான் அடிபட்ட இடத்துக்கு மருந்து போட்டு உள்ளே போனாருய்யா… லேடிஸ் இருக்காங்க.. அதான் எப்படினு தெரியல…

சேர்ந்து தள்ளு… நாய்கள.. பார்த்துக்கலாம்…காலைல…  என சொல்லிவிட்டு உள்ளே சென்றார். ரைட்டர் என்ன செய்ய யோசித்துக்கொண்டிருக்கும் போதே  இன்ஸ்பெக்டர் தன் அறைக்குள் சென்று அமர்ந்தார். மீண்டும்  அங்கே அமைதி நிலவியது. குமார் என்ற இளம் அதிகாரி மீண்டும் உள்ளே வந்தார். நேராக அறைக்குள் சென்றார்.

சார் என்ன சார்.. திரும்ப வந்திட்டிங்க… நா பார்த்துக்கிறேன் சார்..

நடுரோட்ல போலிச அடிக்கிறான். ஜீப் கண்ணாடிய வேற உடைச்சிருக்கான். ஏதும் பேசினானா ?

இல்ல சார்… நா வந்து கொஞ்சம் ப்ரெஷ் ஆகிட்டு இப்ப தான் சார் வந்தேன். அதுக்குள்ள நீங்க வந்திட்டிங்க. நீங்க போங்க சார்.. ரைட்டர் இருக்காரு. நான் இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்தில ஜெயந்தி அக்கா வந்திடுவாங்க. நாளைக்கு காலைலே ரிப்போர்டிங் இருக்கு சார். போன தடவையே கொஞ்சம் சொதப்பிட்டோம்…

ம்ம்ம். சரி பார்த்து ஸ்டேட் மெண்ட் எழுதி வாங்கி வை. இங்க நீ எப்படினு பார்க்க தான் வந்தேன். எனக்கு முடியல… தேவடியா பய.. குறுக்குல எத்திட்டான்… அதுவும் எதிர்பார்க்காத நேரத்தில.. முச்சுக்குத்து மாதிரி இருக்கு. விட்றாத அதுகள..

சரி சார்.

என்ன ரைட்டர்  பார்செல்லாம் பயங்கரமா இருக்கு.

எல்லாம்  இதோ நம்மா பிரோ புல்லிங் தான்.

என்னடா இருக்கு இதுல.

புரோட்டா, இட்லி தோசை.

சரி எடுங்க ரைட்டரே சாப்பிடுவோம் என சொல்லியபடியே பார்சலை பிரித்தபடி அந்த தம்பதிகளை பார்த்தார். அவர்கள் இன்னும் தலைகுனிந்தபடியே அமர்ந்திருந்தார்கள். பிரித்த பார்சலில் இட்லி இருக்க அதனை எடுத்து அவர்களிடம் நீட்டினார்.

அந்த பெண் கையெடுத்து கும்பிட்டு இதெல்லாம் வேண்டாம்யா.. எங்கள விட்றுங்கய்யா…

என்னது விடுறதா… ஏம்மா டூட்டில இருக்கிற போலிச அடிச்சு, ஜீப்பை அடிச்சு… எவ்ளோ கிரைம் தெரியுமா? காலையில்  நீதிபதி வீட்ல நிப்பாட்டுவோம் .அவர் சொல்லுவாரு.. என்னென்ன கிரைம்னு.. எத்தனை வருசம்னு…. ஒழுங்க சாப்பிடு. இதே வேற யாராச்சும் இருந்தா இந்நேரம் அடி பிரிச்சி எடுத்திருப்போம். பார்க்க பாவமா இருக்கேனு விட்டு வச்சிருக்க்கோம்.

இவரு வாத்தியாராம் என ரைட்ட கூடுதலாய் சொன்னார்.

வாத்தியா… தேவையா இதெல்லாம்… என்ன பிரச்சினை.. போலிச அடிக்கிற அளவுக்கு… நாங்களே வீட்டுக்கு போய் 4 மாசம் ஆகுது. உங்கள வீட்டுக்குள்ளையே உட்கார வைக்க நாங்க நாயா ரோட்ல நிக்கோம். படாத பாடு படுறோம். இதுல எங்கள அடிக்கிறே நீ…எங்கள எதுக்குய்யா அடிக்கிறே…. நீ…

அய்யா உங்கள் அடிக்கனும்னு எண்ணமில்லையா.. ஆனா போக போக்கிடமில்லையா ? உங்கள அடிச்சா புடிச்சு ஜெயில்ல போடுவிங்கனு தான்யா அடிச்சேன்… இவள கூப்டுகிட்டு பஸ்ஸூ ஓடாத காலத்தில எங்கய்யா போவேன்….  என இதுவரை வாயே திறக்காத அந்த மனிதர் அழுதார். ஒரு நிமிடம் யாருக்கும் எதுவும் புரியல…

ஏன் என்ன ஆச்சு ? நேத்து வரைக்கும் எங்க இருந்தீங்க ? என ரைட்டர் அவருக்கே உரிய தொனியில் கேட்டார். பெரியவர் பேசவில்லை. கண்ணீர் பெருகி அது மூக்கு வழியாகவும் வடிந்துகொண்டிருந்தது. அவர் வாழ்வில் பெரிதாக அழுதது இல்லை என்பது அவரின் முகம் தொடைக்கும் விதமே சொல்லியது. அந்த பெண்மணி பேச தொடங்கினாள்.

பையன ஆர்கிடெக் படிக்க வச்சோம். . இவரு வாலண்டிரி ரிடயர்ட்மெண்ட் ஆகி பையனுக்கு பெரிய வீடு கட்டி கொடுத்தாரு.  அவனும் சம்பாதிச்சான். வசதிக்கு மீறி பணக்கார இடத்தில பெண் எடுத்தோம். நல்லாதான் இருந்தா.அவளுக்கு  புள்ள பொறக்கவும்… புத்தி மாறிடுச்சு. டெய்லி சண்டை. நாங்க வீட்ட சுத்தமா வச்சிகல, டாய்லெட்ட சுத்தமா வச்சிகல, நாங்க ஹைஜினிக்கா இல்லைனு டெய்லி பிரச்சினை. ஆனா குழந்தைய எங்கட்ட விட்டுட்டு அவ வேலைக்கு போகணும்னு எங்கள விட்டு வச்சிருந்தா… இப்ப குழந்தை கொஞ்சம் வளர்ந்துடுச்சு, வொர்க் அட் ஹோம்னு வீட்லயே இருக்கிறதால எங்க தேவை இல்லாம போச்சு. நேத்து இவர… வெட்டியா உக்காந்து சாப்பிட உங்களுக்கு வலிக்கலையானு கேட்டுட்டா ? இவரும்… பதில் பேசிட்டாரு.

யாரும் என்ன பதில்னு கேட்கவே இல்லை. எது பேசினாலும் அது சரியாகவே இருந்திருக்கும் என அமைதியாக இருந்தார்கள்.

அவரே தொடர்ந்தார்… நீ உக்காந்து திங்கற வீடு என்னோட சம்பாத்தியம்… உன் புருசன கேளுனு சொல்லிட்டார். அது அவளுக்கு கோவம். வீட்டு டாகுமெண்ட எங்கட்ட விட்டெறிஞ்சு இது  என் புருசன் பேர்ல தான் இருக்கு. உன் பேர்ல இல்ல… உன் பேர்ல இருக்குனு காட்டு நா வெளியே போறேன்.. உன் பேர்ல இல்லைனா நீ வெளியே போனு சொல்லிட்டா…

உம் பையன் ஒன்னும் சொல்லலையா ?

இந்த கேள்விக்கு அந்த பெரியவர் குலுங்கி குலுங்கி அழுதார். அவன நா சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுற மாதிரி வளர்த்தா… . இப்பவும் தலையாட்டுறான். ஆனா அது இவளுக்கு இல்லை. கேட்டா என் புள்ளையோட எதிர்காலம் முக்கியம்னு சொல்லுறான். அதான் பொண்டாட்டி என்ன சொன்னாலும் தலையாட்டுறேனு சொல்றான்…

ஸ்டேஷன் கொஞ்சம் அமைதியாக இருந்தது. ரைட்டர் சொன்னார்.. நீ ஒரு கம்பெளய்ண்ட் கொடு… சட்டம் இப்ப இருக்கு. தூக்கி உள்ள வச்சு உனக்கு கெளரவமா வாழ மாச மாசம் கொடுக்க வைப்போம். ஆனால் அவர்  தன் மனைவியை கை காட்டி பேச தொடங்கினார்.

இவ விடமாட்டா… இவளுக்கு இப்பவும் நாங்க இங்க இருக்கிறது வருத்தமா இருக்காது. அவன் அவள்ட்ட மாட்டிகிட்டானே.. சரியா சாப்பிடுவானானு தான் இருக்கும். இவளுக்கு தலையாட்டுற மாதிரியே வளர்த்தா… தொட்டில் பாசம். அவனும் தலையாட்டினான். இப்ப அவனுக்குனு ஒரு தொட்டில் வந்துடுச்சு, கூடவே கட்டில் பாசம். இப்ப அவளுக்கு தலையாட்டுறான். அப்பவே அடிச்சிகிட்டேன்.. இப்படி பொத்தி பொத்தி வளர்க்காதே… வெளியே விடு நாலு பேர் வீட்டுக்கு போகட்டும்னு… கேட்டாளா ? போனா கெட்டுப்போய்டுவானு சொன்னா… இப்பே கேடு கெட்டு நிக்கிறான். விடுங்கய்யா.. இப்படித்தான் சாகனும்னு இருக்கு. என் அப்பா ஒரு  கழைகூத்தாடி. ரோட்ல தான் படுத்தேன். நா பியூசி படிக்கிற வரை. அப்புறம் காமராசாரால படிச்சு மேலுக்கு வந்தேன். எனக்கு இது புதுசு இல்லை .. இப்ப மறுபடியும் ரோட்டுக்கே வந்துட்டேன். ஆனா இவ.. என் வாத்தியார் மக..என் உழைப்ப பார்த்து அவரு கட்டிக்கொடுத்தாரு. . சொகுசா வாழ்ந்தவ.. அதான் என்ன செய்யனு தெரியல…  எங்கயாச்சும் ரோட்ல படுத்து பிச்சைகாரனா ஆகிட கூடாதுன்னு தான் யோசிக்கிறேன்யா.. இப்ப கூட ஜெயில்ல போடுங்க… அங்க உழைக்க தெம்பிருக்கு… ஆனா ரோட்ல விட்றாதீங்கய்யா… எனக்கு வீடு டீச்சிங் தவிர வேற ஒன்னும் தெரியாது என கையெடுத்து கும்பிட்டு கேட்டார்.  அப்படியே அமர்ந்தபடியே தரையில் குனிந்தார். அவர் மனைவி… வாய் மூடி அமர்ந்திருந்தார் அழுதபடி.

முகத்தில் சில சிராய்ப்புகள். கையில் பிளாஸ்திரி என இன்ஸ்பெக்டர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். சரி குமாரு, உன் வீட்ல இருக்கட்டும். முன்னாடி ஒரு தடவை சிவானந்த குருகுலத்தில  கேட்ருந்தாங்க.. . படிச்ச ஸ்டோர் கீப்பர் வேலைக்கு ஆள் வேணும்னு சொல்லியிருந்தாங்க. ஒரு வாரத்தில ரெடி செய்வோம். அதுவரைக்கும் உன் வீட்ல இருக்கட்டும். அதுவும் நீ கேட்டதாலே. பத்திரமா வச்சிகோ. எதுக்கும் போகும் போது ஒரு கோவிட் டெஸ்ட் ஏடுத்திரு ரெண்டு பேருக்கும். வண்டிய என்ன செய்றது ?

அய்யா நா கொடுத்திறேன்யா… எதும் கேஸ் வேண்டாம். கொஞ்சம் பார்த்து செய்ங்க.

செய்வோம். நாமளும் மனுசங்க தானே…. நோய் கிருமிய விட.. இந்த மனுசபய கிருமிகளால் தான் நமக்கு வாழ்க்கை போகுது. விடு… சரி செய்வோம். நீ கூப்டு போ.

அவர்கள் இருவரும்  நடக்க முடியாமல் நடந்து வந்து அவருக்கு வணக்கம் வைத்தார்கள். பெரியவரே… விடுங்க. ஒரு வாத்தியாரு…. இப்படியெல்லாம் முடிவு எடுக்கலாமா… சரி விடுங்க.. யாரா இருந்தாலும் அந்த குழப்பத்தில இப்படி தான் ஆகும். இனி நிதானம இருங்க.. கிருமி இருக்கிற இதே காலத்தில தான் அதில இருந்து காப்பாத்த டாக்டரும் நாங்களும் இருக்கோம். எப்பவும் பிரச்சினையும் இருக்கும். தப்பிக்க வழியும் இருக்கும்.

மன்னிச்சிடுங்க…

விடுங்க பெரியவே… ரெண்டு நாள்ள சரியாகிடும். நீங்கள் போற வழியில டாக்டர்ட போய்ட்டு போங்க. குமார் பார்த்துப்பான். ஒரு வாரத்தில நீங்க கெளரவமா வாழ வழி செய்றோம். பெரியவர் கையெடுத்து கும்பிட படியே இருந்தார். அந்த பெண்மணி முகத்தில் இப்போது பெரிதாக சோகம் இல்லை.

டேய் மாப்பு.. நம்ம ஏரிகரையோரம், பாரதி தெரு இருக்கும்ல… அதுல அந்த வயலட் கலர் மாடி வீடு இருக்குல்ல… அதுல சின்ன சின்னதா சம்பவம் செய்டா…நா வந்த பிறகு கிடா வெட்டுவோம்… ஆமா அந்த கவுன்சிலர் வீட்டுக்கு அடுத்த தெரு.. டெய்லி சம்பவம் செய்யணும்..

டேய் போன கொடுடா…  என்ன சொல்லிட்டு வாங்கிட்டு என்ன  செய்றே… என்னா ஸ்டேசன்லையே அடுத்த திட்டமா… இதுக்கே ஒரு மாசம் உள்ளே இருக்கணும்டா..

விடுங்க சாரே…  நா திருடி மாட்டுனா உனக்கு கேசு. மாட்டலனா… பெத்தவங்கள் ரோட்ல உட்டவனுக்கு ஒரு பாடம். ரெண்டும் உனக்கு ஹேப்பி தானே சாரே… அவனையெல்லாம் நாம தான் சார் வச்சு செய்யணும்.  கடவுளா வரும்… இந்த காலத்திலயும் அடிச்சு விரட்டி இருக்கானே…. நாதாரி..

வாய குறைடா என்றாரே தவிர.. அவருக்கும் ஏதாச்சும் செய்யனும்னு தோன்றியது. தலையாட்டியபடியே தன் வேலையை தொடங்கினார்.

மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதையாகும்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.