Ki. Rajanarayanan Memorial Short Story Competition (கி.ரா நினைவு சிறுகதைப் போட்டி) Special Prize Won Story "Positive Payam" by Vijayarani Meenakshi (*பாசிட்டிவ் பயம்* – விஜயராணி மீனாட்சி)

தமுஎகச: கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்றது *பாசிட்டிவ் பயம்* – விஜயராணி மீனாட்சி



என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. நேற்று மதியம் கூட அவர் என்னிடம் பேசினார். இந்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. என் மனதின் வதையைத் தணிக்க தண்ணீர் குடித்தேன். தொண்டைவழியாக இறங்குகிற தண்ணீரின் க்ளக் க்ளக் … சத்தம் என் மௌனத்தை உடைத்துக் கொண்டிருந்தது.

தினம் தினம் இப்படி வரும் மரணச் செய்திகளைக் கேட்டுக்கேட்டு பயத்தின் உச்சிக்குச் சென்று நடுங்கும் மனதை எப்படி மீட்டுக் கொண்டுவருவது? நிம்மதியாக இறந்தவர்களின் செய்தியும் நம்மை மட்டும் கலங்கடித்துவிடுகிறது. பயத்தின் இறுக்கமே மூச்சுமுட்டுகிறது இதில் இந்த மாஸ்கு வேற…. அதிலும் ரெண்டு மாஸ்க போடணும், அப்படி போடணும் இப்படி போடணும் எதத் தான் ஃபாலோ பண்ண? எல்லாம் ஒரே குழப்பமாவே இருக்கு. யார் பக்கத்துல வந்தாலும் அல்லது தற்செயலா தும்மினாலும் ஒரே பதட்டமா பயமாகிடுது. இயல்பான இருமலு தும்மலு இதெல்லாம் இவ்வளவு பயமுறுத்தும்னு நெனெச்சிப் பார்த்திருப்போமா? சாதாரண ஜலதோஷத்துக்கே கொரொனாவா இருக்குமோன்ற பயம் வந்திருது.

இன்னைக்கு செத்துப்போன சுதாகர் சாரும் நானும் போன வாரம் வரைக்கும் ஒண்ணாத்தான் சுத்திக்கிட்டு இருந்தோம். திடீர்னு போன் பண்ணி எனக்கு கோவிட் பாசிடிவ் நீ எதுக்கும் செக் பண்ணிடுனு சொன்னதில் இருந்து திக்திக்குனு இருக்கு. அவர ஆஸ்பத்திரீல சேர்த்ததுல இருந்து கேட்ட செய்தி எதுவும் சொல்ற மாதிரியில்ல. அத்தனை லட்சம் செலவு பண்ணியும் கொஞ்சங்கூட ஈவு எரக்கமில்லாம அந்த டாக்ட.ருங்க நடந்துகிட்டத மத்தவங்க சொல்லிக் கேட்டபோது தூக்கிவாரிப்போட்டுச்சு. அதநான் ஏம்வாயால சொன்னா நீங்களும் பயப்படுவீக. இதோ இன்னைக்கு அவரு செத்தும் போய்ட்டாரு. அதேநேரம் நல்லாக்கவனிச்சு பொழைக்க வைக்கிற டாக்டருகளும் இருக்காக. காசு காசுன்னு அலையறவங்களும் இருக்காக.

ஒரு மனுஷனோட வாழ்க்கை அவ்ளோதானா?. இதுக்கா இத்தன ஆட்டம். இங்கு எல்லோரும் மனதளவில் சரிந்துதான் போய்ட்டாங்க. ஏன்னா அவ்வளவு வெறுமை இப்படி ஒரு வெறுமை யாரும் அனுபவிக்கக்கூடாது.
ஆனா எனக்குத் தெரிஞ்சு எல்லோரும் அவர் அவரின் அளவில் வெறுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கொரோனா காலத்தில் இத்தனை புழுக்கத்திற்கு இடையிலும் நான் வாழ்ந்தாக வேண்டும் மற்ற மனிதர்களிடம் இருந்து என்னை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். இப்ப தான் புரியுது சிறைச்சாலையில் தனி அறையில் பூட்டி வைக்கப் பட்டிருக்கும் கைதிக்கான தண்டனையை அனுபவிப்பதன் ரணம். ஆனா காந்தி மண்டேலால்லாம் புஸ்தகம் படிச்சு தனிமையப் போக்கிக்கிட்டாங்களாம். ஆமா அவங்களுக்கு நோய் பயமோ உசுரு பயமோ இல்ல. நாட்டுக்காக விடுதலைக்காக சிறைல இருந்தவங்க.

மனசு கண்ட கண்டத நினைச்சி குழம்பி, பயந்து பதட்டத்தோட தவிக்குது. போன மார்ச்ல இருந்து கிட்டத்தட்ட ஒண்ணேகால் வருஷம் ஆகிபோச்சு வேலையில்லை, கையில் காசு இல்ல, ஆனா எப்படியோ இந்த வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. பயம் மட்டும் குறையவேயில்லை. என்னை நான் என்னிடமிருந்தே சகித்துக் கொண்டு, தப்பித்து பிழைக்க அருவருப்பா இருக்கு. ஆனாலும் இப்ப எனக்கு ஜுரம் வரமாதிரி இருக்கு. வந்துடுமோனு ரொம்ப பயமாவுமிருக்கு. வந்துட்டா எப்படி சமாளிக்கறது. உடல் முழுக்க வலி பின்னுது உடம்போட ஒவ்வொரு செல்லையும் ஊசி வச்சி குத்தற மாதிரி வலிக்குது. மூச்சுக்காத்து எனக்குள்ள வந்து போறது நல்லாத் தெரியுது. சட்டையில் வெள்ளை வெள்ளையாக வேர்வையின் உப்பு பூத்திருக்கிறது. மிதமாக தொண்டை கரகரக்கிறது. ஆனால் மல்லிப்பூவின் வாசனை நல்லா மணக்குது. கொரோனா வந்தா வாசனை தெரியாது. ஆனா எனக்கு நல்லா வாசனை தெரியுதே. “So, Be positive”

சுதாகர் சாரு செத்துடாருனு இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியல. அது வேற எதாவது சுதாகர் சாரா இருப்பாங்க. சீ…. வேற யாரா இருந்தாலும் ஒரு மரணத்த எப்படி உன்னால சாதாரணமா கடக்க முடியுது? அந்த அளவுக்கு இந்த சூழல் நம்மை மாத்திடுச்சா? ஃபேஸ்புக்கில் அவரோட profile போய் பாக்கும் போது அவரோட போட்டோவ போட்டு ” ஆழ்ந்த இரங்கல்”னு வர பதிவ பாத்துட்டு எளிதில் கடக்க முடியல. என் கண்கள் என்னை அறியாம அழுதிடிச்சி. என்னால என்ன பண்ண முடியும் இன்னும் நல்லா அழ முடியும் இல்ல sad சிம்பலை அழுத்திவிட்டு ஆழ்ந்த இரங்கல்னு comment பண்ணத்தான் முடியும்.

கொரோனா காலத்தில் எத்தனை பேருக்கு பசியப் போக்கியிருப்பாரு. எல்லாத்தையும் கடந்து வந்துடுவோம்னு சோர்ந்து போனபோதெல்லம் நம்பிக்கைய கொடுத்த அந்த வார்த்தை இனி கிடைக்காது. கடைசியா முகத்தக்கூட பாக்க முடியல. எனக்கு இன்னும் பயமாக இருக்கிறது. பசியுமெடுக்கிறது.

ஒருவரின் இறப்புச் செய்தியால் அதிர்ந்திருக்கிறேன். எனக்கும் கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்துடனுமிருக்கிறேன். பசியுமெடுக்கிறது. இந்த மூன்றின் உணர்வும் என்னை சிதைத்துக் கொண்டிருக்கிறது. பயம் பசியைவிட பலம் வாய்ந்தது. பயம் பசியைமட்டும் அல்ல என்னையும் சேர்த்துத் தின்று கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த வெறுமையின் மௌனத்தில் என் மூச்சுக் காற்று மட்டும் என்னுள் வந்து வெளிவருவதை அறியமுடிந்தது. அதையும் மீறி வெளியே எங்கோ இருமும் சத்தம் என் காதில் கேட்டவுடன் கைகள் அனிச்சையாக சானிடைசரை எடுத்து கைகளுக்கு தெளித்து தேய்த்துக் கொண்டதில் கைகள் சில்லிட்டது, சானிடைசரின் வாசனையை என்னால் உணர முடிந்ததில் அப்பாடா என்ற பெருமூச்சின் வேகம் மாஸ்கை வெளித்தள்ளி அழுத்தியது.

காலராவுக்கு பிறகு எல்லோரும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கினோம், இப்ப கொரோனாவிற்கு பிறகு காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்துட்டோம்னு சுதாகர் சார் சொன்னது சம்பந்தம் இல்லாம இப்ப ஞாபகத்துக்கு வருகிறது.

வாழ்க்கை நாம நினைக்கிற மாதிரி நேர்கோட்டில் பயணிக்கறது இல்ல. அது இழுத்த இழுப்புக்கு நாம ஓடிட்டு இருக்கோம். எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சகிச்சிக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க எல்லாருக்குள்ளயும் எதோ ஒரு நாள் நாம செத்துடுவோம்ங்கற எண்ணம் நிச்சயம் வந்திருக்கும் அத எல்லாத்தையும் தாண்டி நாம வாழ்ந்தே ஆகணும். இதுக்குப் பேரு தப்பிப்பிழைக்கறதில்ல வாழ்க்கைய வென்று ஜெயிக்கறதுனு
சொல்லிட்டு இப்படி பொட்டுனு போய்ட்டாரு..

அமைதியான சூழ்நிலையில் அவரின் நினைவுகள் எனக்குள்ள மயக்க ஊசி போல படிப்படியா இறங்குது. மனசு மறத்துப்போகாம கனத்துப் போகுது விம்மி அழுததில் தான் மூச்சு திணறுகிறது மத்தபடி நான் பயப்பட வேண்டாம்.

மூச்சு முட்டுகிறது உடல் முழுக்க வெப்பம் மிகுந்து கண்களின் வழியேவும் மூக்கின் வழியேவும் வெப்பம் கொப்பளிக்கிறது. தொண்டை வறண்டு வாய் கசக்கிறது. உடலின் எல்லா பக்கமும் வியர்வை சுரந்து உடையை நனைத்து பிசுபிசுக்கிறது.

எலும்புகளின் இணைவில் ஊசியை வைத்து சுருக்கென்று குத்துவதைப் போல வலிக்கிறது. உடல் அனிச்சையாகப் போராடிக் கொண்டிருக்கிறது மனம்மட்டும் பயந்து எங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. கொரோனா என்னுள்ளும் இருக்கிறது. எனக்கும் நாளை யாராவது முகநூலில் என் புகைப்படத்துடன் பதிவு போடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. பாழாப்போன டெஸ்ட் ரிசல்ட் வரும்வரைக்கும் இந்த மனசு பயந்தே செத்துப்போய்டும் போல. நீ தைரியமா இரு என்று எனக்கு நானே தைரியமூட்டிக் கொண்டேன்.

எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்கு. ஆயிரக்கணக்கான தூரம் குழந்தை குட்டியோட நடந்துபோற அளவுக்கு வறுமையில் இல்லனாலும். எல்லாத்தையும் சந்தேகத்துடன் அணுகவே பதைபதைப்பா இருக்கு. எல்லாத்தையும் தலைகீழா மாத்திடிச்சி கண்ணுக்கு தெரியாத ஒன்னு. பிழைச்சா வாழ்ந்திடலாம்னு வந்து நிக்கறோம்.

யாரும் இல்லாத என்னுடைய அறையே எனக்கான ஆறுதல். அறை நண்பர்கள் எல்லாருமே லாக்டவுன் போட்டவுடனே ஊருக்கு கிளம்பிடாங்க. ஒருவகையில் அவங்க எல்லாரும் தப்பிச்சிட்டாங்க.
நான் மட்டும் தான் மாட்டிகிட்டேனா.? இப்படி எனக்கு நானே பேசிட்டு இருக்கேன்

என்னோட தனிமை என்னுடைய சுயரூபத்தை எனக்கு காட்டிக் கொடுக்குது. மரணத்தவிடக் கொடும இந்த பயம் ..சீ.. செத்துப் போய்டலாம்.

இன்னைக்குள்ள மேசேஜ் வந்தா கொரோனா பாசிடிவ் வரலனா நெகடிவ் கருமம் புடிச்சவனுங்க சீக்கிரம் சொல்லித் தொலைக்க மாட்டாங்களா.

நேரம் நகர நகர பதட்டமும் பயமும் அதிகமாகுது. என்னோட நெஞ்சு துடிக்கிறது எனக்கே கேக்குது. சம்மந்தமே இல்லாம இடது தொடையின் சதை துடிக்குது. பல்லிவிழும் பலன் போல தொடையின் சதை துடிப்பதற்கு எதும் காரணம் இருக்குமா என காலண்டரின் பின் அட்டையை தேடியது கண்கள். தண்ணிய வேற அதிகமா குடிச்சதால மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தது வழக்கமா இருப்பதைவிட அடர் மஞ்சள் வண்ணத்தில் எரிச்சலுடன் சிறுநீர் வந்தது. உன்மையிலே உடலுக்கு பிரச்சனை தான் போல அதான் இப்படி வருது என்று பயத்துக்கு பல காரணங்கள் கிடைத்துக் கொண்டே இருந்தது. எச்சிலை கூட்டி முழுங்கினாலும் கசக்குது, கசாயத்த குடிக்கறதால வாய் கசக்குதா இல்ல எதனால? ஆனா இப்ப எல்லாம் முன்ன போல கசாயம் கசக்கறதில்ல, ஒருவேளை தினமும் குடிக்கறதால பழகிப்போச்சா.?

பொறுத்தது போதும் நாமே கால் பண்ணி கேட்டுடுவோம்னு கால் பண்ணா அவரும் கால் அட்டன் பண்ணவேயில்ல.. எப்படியும் பாத்துட்டு அவரே கூப்பிடுவாரு.. அதுகுள்ள நம்ம ஆவி பிடிச்சிடுவோம்னு
கொதித்த தண்ணிரில் “Eucalyptus” மாத்திரையை கிள்ளிப் போட்டவுடன் நீராவியும் யூகலிப்டஸ் வாசனையும் இணைந்து நெடியைக் கிளப்பி இருமச் செய்தது சூடான காற்று என் மூக்கின் வழியாக என் உடலுக்குள் செல்கிறது. மழை நின்ற பிறகு இலையில் துளி துளியாக சொட்டிக் கொண்டிருப்பதைப் போல வேர்வை துளிகள் என் முகத்திலிருந்து சொட்டிக் கொண்டிருந்தது. வேர்வை துளி சுடுநீரில் விழும் சத்தமும் கடிகாரத்தில் சிறிய முள் நகரும் சத்தமும் இணைந்தே கேட்டுக்கொண்டிருந்தது. போனில் மெசேஜ் வந்ததற்கான சத்தம் கேட்டவுடன் போர்வையை விலக்கிப் பார்த்தால் “விநாயகர் ஒரு?A)கடவுள்B)பாடகர்.A/B WINRs.500RC” என்று வந்திருந்தது.

நொந்து பற்களை கடித்துக் கொண்டு, அவருக்கு மீண்டும் கால் செய்தேன்.
செல்போனின் மணியுடன் என் இதய துடிப்பும் சேர்த்தே ஒலித்தது இவ்வளவு நேரம் காத்திருப்பதைவிடவும் அவர் போன் எடுக்கும் வரையில் காத்திருப்பது மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியது.

ஹலோ..

சார் வணக்கம்.
என்னோட கோவிட் ரிசல்ட்…

நேத்தே அனுப்பிட்டனே
நீங்க பாக்கலையா…

இல்ல சார் எதும் வரலையே..

அப்படியா ..
உங்களுக்கு நெகடிவ் சார் ..
கொரோனா இல்ல..
இருந்தாலும் கவனமா இருங்க…

மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதையாகும்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *