‘ஒரு சிறிய தவறு’ சிறுகதை
ஒரு சிறிய தவறும் பேரிழப்பும் இலக்கியம் சமூகத்தை நுண்கண் கொண்டு பார்க்கிறது.வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் அப்பார்வை வேரென ஊடுறுவுகிறது. இலக்கியம் சமூகத்தின் மேன்மை, அழகு, இயலாமை, பொறுப்பு, உறவுநிலை பொறுப்பு,உறவுநிலை முதலியவை பற்றி அனுபவமாகவும், மெய்ம்மை ஏறிய கற்பனையாகவும் தொடர்ந்து விவாதிக்கொண்டே இருக்கிறது.
உன்னத இலக்கியங்களின் ஆன்மாவான இப்பண்பே இலக்கியத்தையும் சமூகத்தையும் தலைநிமிர்த்துகிறது. எதிர்கால சமூகத்தைக் கட்டும் பள்ளிக்கூடத்தையும் சிறு சமூகம் என்று கூறலாம். உறவுகளின் ஒத்திசைவே நலமான சமூகச் செயல்பாட்டின் ஆதாரம் எனக் கொண்டால், சிறு சமூகமான பள்ளிக்கு ஆசிரியர் -மாணவர் என்ற இருவரின் ஒத்திசைவு முக்கியமான ஒன்றாகும்.
இந்த இருவரின் ஒத்திசைவுக்கு ஆசிரியர் என்னும் ஒருவரின் பண்பே தலையாயது. பள்ளிக்குச் செல்லும் குழந்தை, அன்பையே தனது கற்பித்தலின் வழிமுறையாகக் கொண்டிருக்கும் ஆசிரியருடன் தயக்கமின்றிக் கைகோர்த்துத் தடங்கலின்றிக் கற்றலில் முன்னெறிச் செல்லும். மாறாக அமைந்துவிட்டால்…? ஒரு மனிதனின் பள்ளி வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் எதுவென நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒரு குழந்தை முதன்முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் அந்த நாள்தானே!
ஆனால், அந்த முதல்நாள் அனுபவமே ஒரு குழந்தைக்கு வாழ்நாள் முழுதும் பள்ளியைப் பற்றிய ஒவ்வாமையை ஏற்படுத்தி விட்டால், அதற்கு ஆசிரியரே காரணமாக அமைந்துவிட்டால்… கி.ராஜநாராயணின் ‘ஒரு சிறிய தவறு’ எனும் கதை இது குறித்தே பேசுகிறது.
கதையில் வரும் ராகவலு குறை மாதத்தில் பிறந்தவன். பிறக்கும்போது கையளவே இருந்த குழந்தையைப் பார்த்து ஊரே அதிசயப்படுகிறது; குறை மாதத்தில் பிறந்த குழந்தை பிழைக்குமோ என நினைக்கிறது. இந்தக் காலத்தில் குறை மாதக் குழந்தையைக் காப்பாற்ற நவீன மருந்துவ வசதிகள்
வந்துவிட்டன. ஆனால், வசதிகள் அற்ற அந்தக்காலத்திலும்கூட எளிய கிராம மக்கள் குறைமாதக் குழந்தையைக் காப்பாற்றுவதற்குத் தம்மளவில் அறிந்து வைத்திருந்த வழிமுறைகளைக் கதை விவரிக்கையில் வியப்பு ஏற்படுகிறது.
வளர்ந்துவிட்ட ராகவலுவைப் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.”பள்ளிக்கூடத்தில் நிறைய பிள்ளைகள் இருப்பார்களென்றும், அவர்களோடு சந்தோசமாக விளையாடலாமென்றும், வாத்தியார் நல்ல கதைகளாய்ச் சொல்வாரென்றும், நல்ல குழந்தைகளுக்கு வாத்தியார் கருப்பட்டிகூட வாங்கிக் கொடுப்பார் என்றும் சொல்லப்பட்டது”. ராகவலுக்கு உடனே கருப்பட்டி திங்கணும்போல ஆசை ஏற்படுகிறது. ராகவலு பள்ளிக்கூடம் போகிறான்.
“போகும்போது தின்றுகொண்டே போக வறுத்த காணப்பருப்பும் குருதவாலி புழுங்கலரிசியும் கலந்து நனையப் போட்டது, சட்டைப் பை நிறையப் போட்டு அனுப்பினார்கள்”. ராகவலுவுக்குக் கொடுத்து அனுப்பிய நொறுக்குத்தீனியைப் படிக்கும்போது இக்காலக் குழந்தைகளின்மீது பரிதாபந்தான் ஏற்படுகிறது.
“ராகவலு ‘குட்டி பாலர்’ வகுப்பில் உட்கார வைக்கப்பட்டான்.”வகுப்பில் கொஞ்ச நேரமே அவனால் உட்காரமுடிந்தது.. பக்கத்தில் வரிசையாயிருந்த பூச்செடியின் மலர்கள் அவனை வா வா என்று அழைத்தன.
மெல்ல எழுந்துபோய் இமைக்காமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆசைப்பட்டு ஒரு பூவைப் பறித்தான். அப்பொழுது அவனுக்குப் பின்னால் இடி முழக்கம்போல் ஒரு உறுமல் கேட்டது.கையில் பிரம்புடன்
‘ருத்ராவதார’மாக வாத்தியார் நின்று கொண்டிருந்தார்.
குழந்தையின் கையிலிருந்த பூ நழுவி மண்ணில் விழுந்தது. ராகவலுவின் குளுமையான கண்களிலுள்ள ஈரப்பசை வற்றிவிட்டது. உடம்பு கிடுகிடு என்று நடுங்கியது. வாத்தியார் பிரம்பை ஓங்கி ஏதோ சொன்ன ஒலியை அவனால் கேட்க முடியவில்லை.
அந்தப் ‘பச்சைமண்ணின் கண்கள் நிலை குத்தியபடியே வாத்தியாரைப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் திடீரென்று ‘அம்மா…’ என்று கூவிக்கொண்டே அந்தப் பூச்செடியைச் சேர்த்து அணைத்துக்கொண்டான்.”
ராகவலுவைப் பையன்கள் வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு போகிறார்கள். அவன் உடம்பு அனலாய்ச் சுடுகிறது. ராகவலுவின் முதல்நாள் பள்ளி அனுபவம் இப்படியானதற்குக் காரணம் யார்? ஆசிரியரா அல்லது ராகவலுவின் இயல்பா
அதற்குப் பிறகு “ராகவலுவைத் திரும்பவும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைக்கச் செய்த முயற்சிகள் எல்லாம் பயனற்றுப் போயின.பள்ளிக்கூடம் என்ற
உடனேயே அந்த வாத்தியாரின் முகமும் பிரம்பும்தான் அவன் மனக்கண்முன் வந்து நிற்கும்”.
என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறார்கள் ; என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள்.அவன் மாறவேயில்லை. என்னசெய்வதென்றே தெரியாமல் பெற்றவர்கள் பெருங் கவலைப்படுகிறார்கள். எந்த மிரட்டலுக்கும் அடிக்கும் பயந்து அவன் பள்ளிக்கூடம் போகவில்லையோ, அந்த மிரட்டைலையும் அடியையும் தினந்தோறும் வீட்டில் வாங்குகிறான்.
நாட்கள் பல கடந்தும் ராகவலு மாறுபவனாக இல்லை; பள்ளிக்கூடம் போகாமல், போவதாகப் போக்குக்காட்டிவிட்டு அந்த கிராமத்தில் மனித சஞ்சாரமற்ற தெருக்களில் பகல் முழுதும் ஒரு திருடனைப்போல் யார் கண்ணுக்கும் தட்டுப்படாமல் சுற்றி அலைவதும் மாலையில் தன் தாயிடம் அடி வாங்குவதுமாக இருக்கிறான்.
ராகவலுவின் நிலைமைக்கு யார் பொறுப்பு? குறை மாதத்தில் பிறந்த பலவீனமான அவனது மனநிலையா? அல்லது ஒரு சிறிய தவறுக்காக அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பயமுறுத்தி, அடித்து அவன் மனத்தில் நீங்காத பயத்தையும் வெறுப்பையும் விதைத்த ஆசிரியரா?
ராகவலு செய்தது தவறுதான்; பூவைப் பிடிங்கியிருக்கக் கூடாது; அறியாமல் ஆர்வத்தில் செய்துவிட்டான். பள்ளிக்கு முதல்நாள் வந்த அவனை ஆசிரியர் கொஞ்சம் கருணையுடன் நடத்தியிருக்கலாம். இப்படிச் செய்யக்கூடாது என அன்போடு கூறியிருக்கலாம். சின்னக் குழந்தைகளின் சிறு தவறையும் திருத்த மிரட்டலும் அடியும்தானா வழி? அடிப்பது என்பது கற்பித்தலின் வழிமுறைகளில் ஒன்றாகுமா?
ஒருநாள் பள்ளிக்கூடம் போனதாகப் பொய்சொல்லிவிட்டு ஊரைச் சுற்றிய ராகவலுவை பருத்திமாரால் அடிஅடியென்று அடித்துத் துவைக்கிறாள் அவள்
அம்மா.”இனிமேலாவது பள்ளிக்கூடம் போவயா? போவயா? என்று சொல்லிக் கொண்டே அவள் அடித்த அடியில் ராகவலுவின் கைகளிலிருந்தும் முதுகிலிருந்தும் இரத்தம் கொட்டுகிறது.
அடித்துச் சொர்ந்துபோன அம்மாவின் கைகளில் இருந்து பருத்திமார் நழுவிக்கீழே விழுகிறது. தாயின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுகிறது.ராகவலு கைகளில்
வழிந்த இரத்தைத் துடைத்தபடி, அரைப் பிரக்ஞையோடு “அம்மா… அம்மா, என்னைப் பள்ளிக்கூடம் மட்டும் போகச் சொல்லாதேம்மா…’ என்று ஏங்கி அழுதுகொண்டே தாயை நோக்கி நடக்கிறான்.
ஒரு சிறு தவறினால் எத்துணை பேரிழப்பு! ராகவலு விதிவிலக்கானவன். எல்லாக் குழந்தைகளும் இப்படி இருக்கமாட்டார்கள் என்ற சமாதானத்தைவிட, எந்த ஆசிரியரும் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்ற பதைபதைப்பையே கி.ராஜநாராயணனின் ‘ஒரு சிறிய தவறு’ சிறுகதை உணர்த்துகிறது.
கட்டுரையாளர்:
மணி மீனாட்சிசுந்தரம்,
மதுரை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.