தமிழ் இலக்கியத்தில் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தவர் கி.ரா. வறண்ட கரிசல் பூமியில் வாழும் மக்களின் ஈரம், அன்பு, பிரியம் இவைகளை விவரித்ததால் இவர் கரிசல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரது படைப்பின் ஆகச்சிறப்பு வாய் மொழி சொல்லும் மரபாகும்.
வானம் பார்த்த கரிசல் பூமியின் அசலான மாந்தர்கள் லட்சுமி, லட்சுமியின் தம்பி சீனிவாசன் ஆகியோரின் இளமைப் பருவத்தின் சித்திரங்களின் தொகுப்பு “கதவு” சிறுகதை. ஒரு புறம் குடும்பத்தின் வறுமை, மறுபுறம் குழந்தைகளின் கட்டுப்பாடற்ற கொண்டாட்ட நிகழ்வு என மானுட ஆழ்மனத்தை சித்தரித்திருப்பார் கி.ரா.
முன்னொரு காலத்தில் வசதியுடன் வாழ்ந்து தற்போது நொடித்துப் போய் துயர வாழ்க்கை வாழ்ந்து வருபவள் ரங்கம்மாள். மணி முத்தாறில் கூலி வேலை செய்யப் போய் பல மாதங்களாக வீடு திரும்பாத ரங்கம்மாவின் கணவன். வறுமைக்கு எதிராக போராடி காட்டு வேலை செய்து சொற்ப வருமானத்தில் எட்டு வயது மூத்த குழந்தை லட்சுமி, சிறுவன் சீனிவாசன் மற்றும் கைக்குழந்தை ஆகிய மூவரையும் வளர்த்து வருகிறாள் ரங்கம்மாள். கணவனின் இடப்பெயர்வைத் தொடர்ந்து தனித்து பிழைப்பை எதிர் கொள்ளும் சூழல், தீர்வை கட்ட முடியாத காரணத்தால், வீட்டின் கதவை தலையாரி கழற்றிக் கொண்டு போவதும் அதையொட்டிய நெருக்கடிகளின் தொடர்ச்சியயாய் ஏற்படும் வறுமை, சிறுவர்களின் பட்டாம்பூச்சிகளாய் சிறகடிக்கும் கனவுகள் இவையே இக்கதையின் மையக்கரு.
ரங்கம்மாள் தனது குழந்தைகளை வளர்க்க எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சனையை இக்கதை பேசுவதாக இருந்தாலும் அதனுடாக அவளது குழந்தைகள் லட்சுமி – சீனிவாசன் ஆகியோரின் கனவுகள், கற்பனைகள் உள்ளாகவும் ஊடுபாவி அவர்களின் மனங்களை வதைக்கும் நிகழ்வுகளையும் இந்த சிறுகதை சுட்டிக்காட்டுகிறது. இக்கதையில் வரும் லட்சுமி மற்றும் சீனிவாசன் என்ற குழந்தைகளின் உலகமே வேறு. கதவு இச்சிறுவர்களின் கனவுலகம். அக்கதவோடான அச்சிறுவர்களின் வாழ்வியலை கதையின் தொடக்கத்தில் அழகிய சித்தரிப்புகள், நேர்த்தியான சொல்லோவியம் மூலம் படைத்திருப்பார் கி.ரா.
‘எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க’ என சீனிவாசன் சொன்னவுடன் “எனக்கொரு டிக்கெட், உனக்கொரு டிக்கெட்” என்று குழந்தைகள் சத்தம் போடுவதும்
எந்த ஊருக்கு டிக்கெட் வேணும்?” என சொன்னவுடன். “திருநெல்வேலிக்கு, திருநெல்வேலிக்கு”என மற்றவர்கள் கூப்பாடு போடுவதும் கதவே இக்கதையின் உயிரின் துடிப்பக அமைகிறது.
தலையாரி வீட்டிற்கு வந்து ரங்கமாவிடம் தீர்வை பாக்கியைக் கேட்கும் தருணத்தில் “ஐயா, அவரு ஊரிலே இல்லை. மணி முத்தாறு போயி அஞ்சு மாசமாச்சி. ஒரு தகவலையும் காணோம். மூணு வருஷமா மழை தண்ணி இல்லயே. நாங்க என்னத்தை வெச்சு உங்களுக்கு தீர்வை பாக்கியைக் கொடுப்போம்?
ஏதோ காட்டிலே போய் கூலி வேலை செய்து இந்தக் கொளந்தைங்கள காப்பாத்ரதே பெரிய காரியம். உங்களுக்குத் தெரியாததா?” எனச் சொன்ன போது ரங்கம்மாளின் வார்த்தைகள் தலையாரியின் மனசைத் தொடவில்லை. என்றுமே அதிகாரமிக்கோரிடம் ஏழையின் சொல் எடுபடாது.
பிறிதொருநாளில் ரங்கம்மாள் வீட்டில் இல்லாத போது கதவை தலையாரி கழற்றிசென்று விடுவான். ஈரத்திற்கு இடமில்லாத நமது வறண்டுபோன சமூகப்பரப்பில் அதிகாரத்தின் கொடுங்கரங்களால் அந்தக் குழந்தைகளின் கனவுகள் நொறுக்கப்படுகிறது.
சாயந்திரம் வெகுநேரம் கழித்து ரங்கம்மாள் தலையில் விறகுச் சுள்ளிகளுடன் வீட்டிற்கு வருவாள். சுள்ளிகள் சேகரிக்கும் போது கையில் தேள் கொட்டி இருந்ததால் முகத்தில் வலி தோன்றி வேதனைகள் அழுத்தினாலும் ரங்கம்மாள் அமைதியாக வந்து குழந்தைகளின் பக்கம் அமர்ந்து லட்சுமியிடமிருந்து கைக்குழந்தையை வாங்கிக் கொண்டு ‘உடம்பு சுடுகிறதே?’ என்று தனக்குள் கேட்டுக் கொள்கிறாள்.
உடம்பெல்லாம் கண்ணுத் தெரியாத ஒரு நடுக்கம். வயிற்றில் தாங்க முடியாத வலியை உணர்ந்த போது ரங்கம்மாள் குழந்தையை இறுகப் பிடித்துக் கொண்டாள். நடைமுறை வாழ்வில் குழந்தைகளுக்கு முன் அழக் கூடாது என்று எவ்வளவு தான் அடக்கினாலும் முடியவில்லை. “என்னைப் பெத்த தாயே” என்று அலறி விடுவாள் எதிர்பாராமல் கழற்றப்பட்ட வீட்டின் கதவால் அவர்களது வாழ்வின் திசை மாறுகிறது.
கதவில்லாததால் வீடு முழுவதும் பனி படர்ந்து அதன் காரணமாக கைக் குழந்தை இறந்து போவதும் எளிய குடும்பத்தின் சோகத்தை வழிந்தோடச் செய்கிறது. நிராதரவாக தவிக்கும் ரங்கம்மாளும் ஒன்றும் புரியாத லட்சுமி, சீனிவாசன் சூழ நோயுற்று கைக் குழந்தை மறையும் காட்சி வாசக மனதை உலுக்குவதாகவே உள்ளது.
‘கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை’ . இளம் வயதில் அதுவும் ஒரு சிறுவன் உணவுக்காக ஏங்கும் சூழல் எத்தகைய கொடுமையானது. உலகில் ஏற்படும் மரணங்களில், அதிகம் வறுமையினால் தான் ஏற்படுகிறது.
வறுமையின் கசப்பை கிரா அழகாக ஒரு இடத்தில் படரவிட்டிருப்பார்.
சீனிவாசன் ஒருநாள் மத்தியானம் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வந்து “அக்கா எனக்கு சீக்கிரம் கஞ்சி ஊத்து, பசிக்கி; எனச் சொன்ன போது
“தம்பீ, கஞ்சி இல்லை” என அவள் பதட்டத்தோடு சொன்னபோது
“ஏன்? நீ காலையில் காய்ச்சும் போது நான் பாத்தேனே?”
‘ஆம்’ என்ற முறையில் தலையசைத்து விட்டு, “நான் வெளிக்குப் போயிருந்தேன். ஏதோ நாய் வந்து எல்லாக் கஞ்சியையும் குடித்து விட்டுப் போய்விட்டது தம்பி…
கதவு இல்லையே” என்றாள் துக்கமும் ஏக்கமும் தொனிக்க.
வறுமையின் நீங்காத துயரமாய் அமைந்தது இவர்களது வாழ்க்கை.
நமக்கு கதவு என்பது ஒரு சடப்பொருள். ஆனால் அக்குழந்தைகளுக்கு அது உயிர் மூச்சு என்ற அசலான தன்மைதான் இச்சிறுகதையை புகழ்பெற வைத்தது என்று சொல்ல முடியும்.
லட்சுமியும், சீனிவாசனும் சாவடிக்குச் சென்று தங்கள் வீட்டு கதவை பார்க்கும் காட்சியை கி.ரா.சிறப்பாக சொல்லியிருப்பார். சாயந்திரம் லட்சுமி சட்டி பானைகளைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள்.
சீனிவாசன் முகத்தில் ஆவல் துடிக்க, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்தான்.
“அக்கா அக்கா நம்ம பள்ளிக் கூடத்துக்கு பக்கத்திலே சாவ்டி இருக்கு பாரு..
அதுக்கு பின்புறம் நம்ம வீட்டு கதவு இருக்கக்கா! கண்ணாலே நான் பார்த்தேன்”என்றான்.
“அப்படியா! நிஜமாகவா? எங்கே வா பாப்போம்” என்று சீனிவாசனின் கையைப் பிடித்தாள்.
இருவரும் கிராமச்சாவடி நோக்கி ஓடினார்கள்.
உண்மை தான். அதே கதவு சாத்தப்பட்டு இருந்தது. தூரத்திலிருந்தே தங்கள் நண்பனை இனம் கண்டு கொண்டார்கள் அச்சிறுவர்கள். பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார்கள். ஒருவரும் இல்லை. அவர்களுக்கு உண்டான ஆனந்தத்தைச் சொல்ல முடியாது.
அங்கே முளைத்திருந்த சாரணத்தியும் தைவாழைச் செடிகளும் அவர்கள் காலடியில் மிதிபட்டு நொறுங்கின. அதிவேகமாய் அந்தக் கதவின் பக்கம் பாய்ந்தார்கள். அருகில் போய் அதைத் தொட்டார்கள். தடவினார்கள். அதில் பற்றி இருந்த கரையான் மண்ணை லட்சுமி தன் பாவாடையால் தட்டித் துடைத்தாள்.
கதவோடு தன் முகத்தை ஒட்ட வைத்துக் கொண்டாள். அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு. சீனிவாசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். முத்தமிட்டாள். சிரித்தாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. சீனிவாசனும் லட்சுமியைப் பார்த்து சிரித்தான். அவர்கள் இருவரின் கைகளும் கதவைப் பலமாகப் பற்றி இருந்தன.
வீட்டின் கதவு அவர்களின் கனவு மண்டலம். இது தங்களது கனவான கதவை இழப்பதன் கதை. அது அவர்களுடைய இளமையின் புறவடிவமாக மனதுக்குள் தேங்கியுள்ளது. சிறுவர்களின் கடந்தகால ஏக்கம் அன்பெனும் விரிந்த குடையாய் வானில் கிளை பரப்புகிறது.

