கி.வா.ஜகந்நாதன் (கி.வா.ஜ) எழுதிய “நல்ல பிள்ளையார்” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

கி.வா.ஜகந்நாதன் (கி.வா.ஜ) எழுதிய “நல்ல பிள்ளையார்” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

நல்ல பிள்ளையார் – சிறுகதைத் தொகுப்பு

திரு. கி. வா. ஜகந்நாதன் (கி.வா.ஜ) அவர்கள் எழுதியதுதான் “நல்ல பிள்ளையார்” என்னும் சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் உள்ளன. அவற்றுள் ஐந்து சிறுகதைகளைப் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி பொதிந்திருக்கும். அந்த நீதியைத் திரு. கி.வா.ஜ அவர்கள், தனது கதாபாத்திரங்களின் வாயிலாக அழகாக வெளிக்கொணர்ந்திருப்பார்.

இவர், மிக எளிமையான நடையைப் பயன்படுத்தியிருப்பதால், சிறார்கள் அனைவரும் இவரது கதைகளை விரும்பிப் படிப்பர். இதனால், யார் வேண்டுமானாலும் இவரது படைப்புகளை எளிதாகப் படித்துவிட முடியும்.

தொகுப்பு: பாலமுருகன்.லோ

நாயும் காளையும்…

கி.வா.ஜகந்நாதன் (கி.வா.ஜ) எழுதிய “நல்ல பிள்ளையார்” சிறுகதைத் தொகுப்பு புத்தகம் | Ki. Va. Jagannathan's Nalla Pillaiyar Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இக்குறுங்கதையை எழுதியவர் திரு கி.வா.ஜ அவர்கள். இந்தக் கதையைப் படித்தவுடன் என்ன தோன்றுகிறது என்றால், எழுத்தாளராக இருப்பவர் என்றுமே கற்பனை வளம் நிறைந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. கண்ணால் கண்டது, காதால் கேட்டது, ஏட்டில் படித்ததை வைத்துத் தன் கற்பனையையும் கலந்து கதையாகச் சொல்லும் போது அது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதில் எந்த ஓர் ஐயப்பாடுமில்லை.

அப்படித்தான் தோன்றியது இந்தக் கதையைப் படித்தவுடன். கதையாசிரியர் தான் கண்டதைத் தன் கற்பனை வளத்துடன் சேர்த்து ஒரு குறுங்கதையாக நமக்குப் படைத்திருக்கிறார்.

சிறிய கிராமத்தில் ஒரு பெரிய குடும்பம். பெரிய குடும்பமென்றால் பணத்தில் இல்லை, எண்ணிக்கையில். ஆம், அவர்கள் வீட்டில் பன்னிரண்டு பேர். அவர்கள் வீட்டுப் பின்புறத்தில் வாழை, தென்னை, எலுமிச்சை போன்ற மரங்கள் உண்டு. இவர்கள் அனைவரும் வாழை இலையில் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் அனைவரும் உணவை வாழை இலையில் உண்ட பிறகு அந்த இலையை வீட்டிற்கு வெளியே எறிந்து விடுவது வழக்கம்.

அப்படி அவர்கள் எறிந்த எச்சில் இலையில் உள்ள உணவை உண்ண இங்கு ஒரு நாய் தினமும் வரும். இவர்கள் வெளியே எறிந்த இலையில் உள்ள மீதமுள்ள உணவை உண்டு தன் பசியை ஆற்றிக்கொண்டு போகும்.

இப்படியாக நாட்கள் கடந்தன. ஒரு நாள்! அந்த வீட்டில் உணவு உண்ட பிறகு எச்சில் இலையை வெளியே எறிந்தனர். அப்போது அதைச் சாப்பிட ஒரு புதிய பிராணி வந்தது. என்னவென்று பார்த்தால் அது ஒரு காளைக் கன்றுதான். வாழை இலையைப் பார்த்தவுடன் அதை உண்ண ஓடிவந்துவிட்டது. சற்றுத் தாமதமாக வந்த நாய் அதைப் பார்த்துக் கோபம் கொண்டது. நாயானது, காளைக் கன்றைக் குரைத்து அதனுடன் சண்டை போட்டது. முடிவில் காளைக் கன்று தனது கொம்பால் நாயை விரட்டி அடித்துவிட்டது. நாயும், காளைக்கன்றுடன் போட்டிப் போட முடியாது, இனி இதனுடன் நயமாகப் பேசித்தான் வழிக்குக் கொண்டுவர முடியும் என்று தன் மனதில் நினைத்தது.

மறுநாள் இதே போன்ற நிகழ்வு நடந்தது. நாய் உடனே, “அண்ணே, நான் பல நாட்களாக இந்த உணவைத்தான் உண்டு வருகிறேன். உனக்கென்ன, ஊர் முழுவதும் புல்தரை உள்ளது, நீ எங்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் எனக்கு அப்படியா?” என்றது. அதற்குக் காளை, “புல்தரை உள்ளது, ஆனால் வாழை இலைபோல் வருமா?” என்று கேட்டது. உடனே நாய், “அவ்வளவுதானா? நான் இந்த வாழை இலையில் இருக்கும் உணவை மட்டும் உண்ணுவது வழக்கம். இனி நான் இந்த இலையில் உள்ள உணவை மட்டும் உண்கிறேன், பிறகு நீ இந்த இலையைச் சாப்பிடலாம் அல்லவா?” என்றது. காளையும், நாயின் கூற்றுக்குச் செவிசாய்த்தது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் இருவரும் அவர்கள் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உணவை உண்டு வந்தனர். திடீரென்று ஒரு நாள், இவர்கள் எதிர்பார்க்காமல் இருக்கும் நேரத்தில் இன்னொரு புதிய நாய் வந்து அந்த எச்சில் உணவைச் சாப்பிட்டது. இதைக் கண்ட பழைய நாய் அந்தப் புதிய நாயுடன் சண்டை போட்டது.

குரைத்துக் குரைத்து இரு நாய்களும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது காளைக்கன்று இரு நாய்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. நினைத்திருந்தால் அந்தப் புதிய நாயைத் தனது கொம்பால் துரத்தி எறிந்திருக்கலாம். ஆனால் காளைக்குப் பழைய நாய் மீது பெரிய நட்பொன்றும் இல்லை.

இப்படியாகச் சென்று கொண்டிருக்கையில், இதற்குப் போட்டியாக ஒரு எருமை வந்து அந்த எச்சில் இலையை உண்டது. காளை கலவரத்தைப் பார்த்துக்கொண்டு உணவை உண்ண மறந்தது. காளைக்கன்று எருமையை விரட்ட முயன்றது, ஆனால் பலனில்லை. தன் மனதில் காளை எண்ணியது, “புதிய நாயை நாம் கொம்பால் விரட்டியிருந்தால் உணவாவது கிடைத்திருக்கும். பாவம், கைக்கு எட்டியது! வாய்க்கு எட்டாமல் போய்விட்டது.”

கூடும் ஓடும்…

கி.வா.ஜகந்நாதன் (கி.வா.ஜ) எழுதிய “நல்ல பிள்ளையார்” சிறுகதைத் தொகுப்பு புத்தகம் | Ki. Va. Jagannathan's Nalla Pillaiyar Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இந்தக் கதையைப் படித்தவுடன் ஓர் உண்மை விளங்கும். நாம் ஒவ்வொருவரும், அதைப்போல் மற்ற சீவராசிகளும் தங்களின் மனதில் எண்ணக்கூடும், “அவரவர் வாழ்வில்தான் எவ்வளவு போராட்டம் இருக்கிறது!” என்று. பலரும் கடவுளை நொந்துகொண்டிருப்பவர்களும் அதிகமே.

இதைப்போன்ற மற்ற சீவராசிகளைப் பற்றியதுதான் நத்தை மற்றும் ஆமையின் கதையான இந்தக் “கூடும் ஓடும்” என்ற குறுங்கதை. இக்கதையை இயற்றியவர் திரு கி.வா.ஜ அவர்கள்.

நத்தை தன் உடம்பில் கூட்டைச் சுமந்துகொண்டு ஊர்ந்து ஊர்ந்து மெதுவாக நடந்துவந்தது. அதனுடைய ஆழ் மனதில் எப்போதுமே ஒரு சிந்தனை ஒளிந்துகொண்டுதான் இருந்தது. அப்படி என்ன அந்த எண்ணம் என்று பார்த்தால், தன் உடம்பில் கூட்டைச் சுமந்துகொண்டு இருப்பதே. “மற்ற சீவராசிகள் மாதிரி நம்மால் ஓட முடியவில்லையே! எங்குச் சென்றாலும் மெதுவாகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. ஆண்டவன் ஏன் இந்தக் கூட்டை நம் மேல் படைத்தானோ?” என்று உள்ளூர நினைத்துக்கொண்டது.

ஒரு நாள் நத்தை தன் வழியில் மெதுவாக வந்த போது அங்கு ஓர் ஆமையைப் பார்த்தது. நத்தைக்கு ஆமையைப் பார்த்தவுடன் ஒரு சிறிய ஆறுதல். என்னவென்றால், ஆமையின் முதுகில் தன் மேல் இருக்கும் கூட்டைப் போலப் பெரிய ஓடு ஒன்றை ஆமை தன் முதுகின் மேல் சுமந்துகொண்டு இருக்கிறது. இதைப்பார்த்த நத்தை, ஆமையிடம், “என்னதான் ஓடு உனது முதுகில் இருந்தாலும், நான்கு கால்கள் உள்ளதால் தன்னை விட வேகமாக நடக்க முடியும் மற்றும் ஓட முடியும்” என்று எண்ணியது.

ஆமையிடம், நத்தை கேட்டது, “அண்ணே, உங்களால் நன்றாக, வேகமாக நடக்கவும் ஓடவும் முடியும் அல்லவா?” என்றது. அதற்கு ஆமை, நத்தையைப் பார்த்து, “நீ உன் முதுகில் கூட்டைச் சுமப்பது போல, என் முதுகில் உன்னைக் காட்டிலும் பெரிய ஓடு உள்ளது. இதனால் நீ நினைக்கிற மாதிரி என்னால் வேகமாக நடக்கவும் ஓடவும் முடியாது,” என்றது.

இரண்டும் பேசிக்கொண்டே நடந்து வந்த நேரத்தில் இருவரும் அங்கு ஒரு மரவட்டையைப் பார்த்தனர். ஆமையும் சரி, நத்தையும் சரி, மரவட்டையைப் பிரமிப்புடன் பார்த்தன. ஏனென்றால் மரவட்டையிடம் அத்தனை கால்கள் இருந்தன. ஆமையும் சரி, நத்தையும் சரி, அதன் மனதில் “மரவட்டையால் நம்மைக் காட்டிலும் வேகமாக நடக்கவும் ஓடவும் முடியும்” என்று நினைத்து, மரவட்டையைப் பார்த்து, “நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்! உங்களுக்கு எவ்வளவு கால்கள் உள்ளன! இதன் காரணமாக நீங்கள் வேகமாக ஓடவும் நடக்கவும் முடியும் அல்லவா?” என்றன.

இதனைக் கேட்ட மரவட்டை, “இந்த இரண்டு சீவராசிகளும் நம்மைக் பார்த்துப் பிரமிப்புக் கொண்டுள்ளன. அவர்களது சந்தோஷத்தை நாம் ஏன் கெடுக்க வேண்டும்?” என்று எண்ணி ஆமையிடமும், நத்தையிடமும் பொய் சொன்னது. “நான் இப்போதுதான் நன்றாகச் சாப்பிட்டு முடித்தேன், அதனால் என்னால் வேகமாக ஓட முடியாது,” என்றது. இதைக் கேட்ட ஆமையும், நத்தையும் உண்மையென்று நம்பின.

அப்போது அந்த வழியாக ஒரு காக்கை பறந்து வந்தது. காக்கையைப் பார்த்தவுடன் நத்தை தன் கூட்டுக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டது. அதேபோல் ஆமையும் தன் கால்களையும் தலையையும் தனது ஓட்டுக்குள் நுழைத்துக்கொண்டது. மேலே பறந்து வந்த காக்கை ஆமையையும் நத்தையையும் பார்த்துப் பெரிய மற்றும் சிறிய கற்களாக இருக்கக்கூடும் என்று எண்ணி அதை ஒன்றும் செய்யாமல் சென்றது. ஆனால் மரவட்டையைத் தனது வாயில் கவ்விக்கொண்டு சென்றது.

சிறிது நேரம் கழித்து நத்தையும் ஆமையும் தமது தலையை எட்டி வெளியே பார்த்தன. அப்போது மரவட்டை அங்கு இல்லை. ஆமை, நத்தையிடம் கேட்டது, “எங்கே மரவட்டையைக் காணவில்லை?” என்று. அதற்கு நத்தை, “காக்கை மரவட்டையைத் தனது வாயில் கவ்விக்கொண்டு சென்றுவிட்டது,” என்று பதிலைக் கூறியது.
அப்போதுதான் ஓர் உண்மை விளங்கியது ஆமைக்கும் நத்தைக்கும். அது என்னவென்றால், “எந்தக் கூடு மற்றும் ஓட்டைப் பற்றி நாம் மனம் வருந்திப் பேசினோமோ, அதே கூடும் ஓடும் இல்லை என்றால் இன்று நம் கதி என்னவாகியிருக்கும்?” என்று சிந்தித்தன.

இதனால் நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்றால், நமக்கு மட்டும்தான் கஷ்டம், சோதனை, உலகில் வேறு யாருக்கும் இல்லை என்றெல்லாம் இல்லை. அவரவருக்கு ஏற்பக் கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. நாம் அதிலிருந்து எப்படிக் கடந்து வருகிறோம் என்பதே இந்த வாழ்வு. “நமக்கு ஏன் இதைக் கொடுத்தார்? இப்படி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே!” என்றெல்லாம் யோசிப்பதைத் தவிர்த்து, இருக்கும் வாழ்வை எப்படிச் சிறப்பாக வாழ முடியுமோ அப்படித் தன்னம்பிக்கையுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கதையின் சாராம்சம்.

மந்திரப் பெட்டி…

கி.வா.ஜகந்நாதன் (கி.வா.ஜ) எழுதிய “நல்ல பிள்ளையார்” சிறுகதைத் தொகுப்பு புத்தகம் | Ki. Va. Jagannathan's Nalla Pillaiyar Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இக்கதையானது திரு கி.வா.ஜகந்நாதன் அவர்களால் புனையப்பட்டது. இந்தக் கதையின் மூலம் நாம் அறிந்தது என்னவென்றால், ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்கக் கூடாது. “பேராசை பெரு நஷ்டம்” என்பது உண்மையே என்று விளங்கும். “இப்படியும் நடக்குமா?” என்றெல்லாம் ஆராயாமல், அதில் இருக்கும் உட்பொருளை நாம் நல்ல விதத்தில் எடுத்துக்கொண்டோமேயானால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்.

கதையாசிரியர் கி.வா.ஜ அவர்கள் சுவாரசியம் குறையாமல் கதைக்களத்தை அமைத்திருப்பார். கதையின் நாயகன் நான்காம் வகுப்பு வரையில் படித்திருக்கிறான். அவனால் அதற்கு மேல் படிக்க இயலவில்லை. ஏனென்றால் அவனுக்குப் படிப்பு மண்டையில் ஏறவில்லை. அவனுக்குச் சாமி மற்றும் சாமியார் மீது அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. சாமியைப் பார்த்தவுடன் வணங்குவது, சாமியாரிடம் இருந்து ஆசி பெறுவது போன்றவற்றை அவ்வப்போது செய்துவருவான்.

ஆனால் அவனது தந்தை! “இவன் இப்படியே வாழ்க்கையைத் தொலைத்துவிடுவானோ” என்று அவரது மனதில் ஒரு சிறிய பயம் இருந்தது. இப்படி இருக்க, ஒரு நாள்! கந்தன் வீட்டிற்கு ஒரு சாமியார் வருகை புரிந்தார். கந்தன் சாமியாரிடம் பயபக்தியுடன் நடந்துகொண்டான். அவனது சேவையில் மனம் உருகி, சாமியார் கந்தனிடம் கேட்டார், “நீ என்னுடன் வந்துவிடுகிறாயா?” அவனோ, “என் தாய், தந்தையிடம் கேட்டுச் சொல்கிறேன்,” என்று கூறினான். அப்படியே அவன் தன்னைப் பெற்றவர்களிடம் கேட்டான்! கந்தனின் அப்பாவும் அம்மாவும், “இவன் இப்படியே இருந்தால் சரியாக இருக்கமாட்டான். எங்காவது கண்காணாத இடத்திற்குச் சென்று வேலை செய்து பிழைத்துக்கொள்ளட்டும்,” என்று மனதில் எண்ணி, சரி என்று அவனிடமும் மற்றும் சாமியாரிடமும் கூறினர்.

உடனே சாமியார் கந்தனுடன் தனது குடிலுக்குச் சென்றனர். சாமியாருக்கு அவன் பணிவிடைகள் செய்து வந்தான். அவனுக்கு முதலில் தெரியாது, அவனது குரு மற்றும் சாமியார் மாயமந்திரம் எல்லாம் தெரிந்தவர் என்று. அவர் தன் மனதில் என்ன நினைத்து வேண்டுகிறாரோ அல்லது முறையிடுகிறாரோ, உடனே அவர் கண் முன் அது வந்துவிடும்.

அவர்கள் சாப்பிடும் உணவு கூட அப்படிப்பட்ட உணவே. ஒரு நாள் சாமியார் கந்தனைப் பார்த்து, “நீ சிறிது தண்ணீர் கொண்டு வா,” என்று அவனை வெளியே அனுப்பினார். அவன் திரும்பி குடிலுக்கு வரும் போது வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டு இருந்தது. சாமியார் அவனைப் பார்த்து, “வா, ஒன்றாகச் சாப்பிடலாம்,” என்றார். அவனோ, “இல்லை, நீங்கள் முதலில் சாப்பிடுங்கள், பிறகு நான் சாப்பிடுகிறேன்,” என்றான். ஆனால் சாமியார் அவனை உடன் அழைத்துச் சாப்பிடத் தொடங்கினார்.

இவனும் ஒரு கட்டத்தில் சாப்பாடுதான் முக்கியம் என்று நினைத்து எதையும் ஆராயாமல் சாப்பிடத் தொடங்கினான். சில காலங்கள் உருண்டோடின. கந்தனுக்குத் தன் தாயையும் தந்தையையும் பார்க்க ஆசையாக இருந்தது. அவன் அவனது எண்ணத்தைச் சாமியாரிடம் கூறினான். அவரும், “அதற்கென்ன, நீ போய் உன் தாயையும் தந்தையையும் பார்த்துவிட்டு வா,” என்றார். மேலும் சாமியார் கந்தனைப் பார்த்து, “போகும் போது வெறும் கையுடன் செல்ல வேண்டாம். இந்த வேட்டி, சட்டை மற்றும் புடவையை அவர்களிடம் கொண்டு போய்க் கொடு,” என்று கூறி அவனிடம் அதைக் கொடுத்தார். அவனும் அதை வாங்கிக்கொண்டு தனது தந்தையையும் தாயையும் பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்தான்.

கந்தனின் பெற்றோர் அவனைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஏனென்றால் அவன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்டான். மேலும், அவன் வாங்கிவந்த பொருட்களைப் பார்த்து அவன் நல்ல நிலையில் இருக்கிறான் என்று எண்ணினர். அவனைப் பார்த்து, “நாங்களும் ஒருமுறை உனது சாமியாரைப் பார்க்க வேண்டும்,” என்றனர். அவன் உடனே, “நான் சாமியாரிடம் உத்தரவு பெற்று உங்களை வந்து அழைத்துச் செல்கிறேன்,” என்று கூறி அவன் சாமியார் குடிலுக்குத் திரும்பிச் சென்றான்.

அவன் மறுபடியும் தன் தாயையும் தந்தையையும் சந்தித்தானா? அவனது பெற்றோர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்பக் கந்தன் அவர்களைச் சாமியாரைப் பார்ப்பதற்குக் கூட்டிச்சென்றானா? அங்குக் கந்தனின் பெற்றோர் எப்படி நடந்துகொண்டனர்? அவர்கள் எண்ணிச்சென்ற காரியம் நிறைவேறியதா? என்ன நடந்தது அவர்களது வாழ்வில்? கதையைப் படித்து முழுவதையும் தெரிந்துகொள்ளுங்கள். திரு கி.வா.ஜ அவர்கள் கதைக்களத்தை நேர்த்தியாக நகர்த்திச்சென்றிருப்பார்.

குரங்கு உபவாசம்…

கி.வா.ஜகந்நாதன் (கி.வா.ஜ) எழுதிய “நல்ல பிள்ளையார்” சிறுகதைத் தொகுப்பு புத்தகம் | Ki. Va. Jagannathan's Nalla Pillaiyar Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இந்த நகைச்சுவையான குறுங்கதையை இயற்றியவர் திரு கி.வா.ஜகந்நாதன் அவர்கள். உபவாசம் என்றால் என்ன? “விரதம்” என்பது பொருள். “இது என்ன வித்தியாசமாகக் குரங்கு உபவாசம் என்று தலைப்பை அமைத்துள்ளார்?” என்று படிக்க முற்பட்டேன். அப்போதுதான் புரிந்தது, இந்தக் கதை நகைச்சுவையை மையமாக வைத்துப் புனையப்பட்ட கதை என்பது. “மனிதன் மனம் குரங்கு மாதிரி” என்று கூறுவார்கள். ஏனென்றால், வினாடிக்கு வினாடி நம் மனமானது ஓடிக்கொண்டே இருக்கிறது. “இதைச் செய்யலாமா? அதைச் செய்யலாமா?” என்று எண்ணமானது இங்கும் அங்கும் அலைந்துகொண்டுதான் இருக்கிறது. ஆசையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பிரம்மப் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கும் அப்படித்தான், இந்தக் குரங்கு மனதில் ஒரு முடிவெடுத்து, அதை நிலைநிறுத்தப் பிரம்மப் பிரயத்தனம் செய்கிறது. முயற்சியில் வெற்றி கண்டதா? படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு காட்டில் குரங்கு ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அந்தக் காட்டு வழியாக வழிப்போக்கர்கள் இருவர் வந்து, அந்தக் குரங்கு இருக்கும் மரத்திற்கு அடியில் அமர்ந்து இளைப்பாறிய பிறகு சிறிது தூரம் நடக்கலாம் என்று முடிவெடுத்து, அங்கு மரத்திற்கு அடியில் சற்று இளைப்பாறினார்கள். அப்போது அவர்கள் இருவரும் சற்று உரையாடத் தொடங்கினர். குரங்கு மரத்தின் மேல் அமர்ந்து, “அவர்கள் அப்படி என்னதான் பேசுகிறார்கள்?” என்று அவர்களின் உரையாடலைக் கேட்கத்தொடங்கியது.

வழிப்போக்கர்களில் ஒருவர் மற்றவரிடம், “நாளை மறுநாள் ஏகாதசி, நான் உபவாசம் இருப்பேன்,” என்று கூறினார். “மறுநாள் துவாதசி அன்று காலையில்தான் பாரணை செய்வேன்,” என்றார். பாரணை என்றால் என்ன? உபவாசம் இருந்து மறுநாள் சாப்பிடுவது பாரணை என்று அழைக்கப்படும். அதற்கு மற்றொருவர், “நானும் ஏகாதசி விரதம் இருப்பவன்தான். என் குருநாதர் உபவாசம் இருந்தால் நல்ல பலன் உண்டு என்று கூறியுள்ளார்,” என்றார் அவர்.

இதையெல்லாம் மரத்திற்கு மேலிருந்து குரங்கு கேட்டுக்கொண்டிருந்தது. அதனுடைய மனதில், “மனிதர்கள் உபவாசம் இருக்கிறார்கள். ஏன் நாம் இந்த உபவாசத்தை இருக்கக் கூடாது?” என்று எண்ணி, “நாளை மறுநாள் நாம் கண்டிப்பாக உபவாசம் இருக்கலாம்,” என்று முடிவெடுத்தது.

இரண்டாவது நாள், ஏகாதசி அன்று குரங்கும் உபவாசம் இருக்க முடிவெடுத்து விரதத்தைத் தொடங்கியது. உபவாசம் என்றால் சாப்பிடாமல் இருப்பது. குரங்கு நினைத்தது, “அப்படியானால், பழங்கள் நிறைந்த மரத்தில் இருந்தோமானால் நம் மனமானது மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால், பழங்கள் இல்லாத இடமாகப் போய் அமர்ந்தோமானால் விரதத்தை நல்லபடியாக முடித்துவிடலாம்,” என்று நினைத்துப் பழங்கள் இல்லாத மரத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்தது.
சிறிது நேரம் போனது. அதனுடைய மனதில், “நாம் வைராக்கியமாக இருக்கும் பட்சத்தில், ஏன் பழங்கள் நிறைந்த மரத்தடியிலோ அல்லது மரத்தின் மேலோ போய் அமரக்கூடாது?” என்று நினைத்துப் பழங்கள் நிறைந்த மரத்தை நாடிச்சென்றது. அங்குப் போய் மரத்தின் மேல் அமர்ந்தது. சிறிது நேரம் சென்றது. குரங்கிற்கு இன்னோர் எண்ணம் அதன் மனதில் உதித்தது. அது என்னவென்றால், “நாம் ஏன் பழங்கள் பக்கத்தில் போய் அமரக் கூடாது? அதில் என்ன இருக்கிறது? நாம் உபவாசம் இருக்கும் போது சாப்பிடக்கூடாது, அவ்வளவுதான்.” உடனே குரங்கு பழங்கள் நிறைந்த பகுதிக்குப் பக்கத்தில் போய் அமர்ந்தது.

சிறிது நேரம் தூங்க முடிவெடுத்துத் தூங்க முயற்சி செய்து பார்த்தது குரங்கு. ஆனால் அதனால் தூங்க முடியவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. மேலும் அதன் மனதில் ஒரு புதிய எண்ணம் உதித்தது. என்னவென்றால், “நாளை பாரணை செய்யும் போது எப்படியும் சாப்பிடப் போகிறோம். அதனால் நாம் ஏன் பழங்கள் அருகாமையில் அமர்ந்திருக்கக் கூடாது? எப்படியும் உபவாசத்தினால் உடல் சற்றுச் சோர்வாகக் காணப்படும். ஆகையால் நாம் பழங்கள் அருகாமையில் அமர்ந்துகொண்டால் எளிதாக நாளை பாரணையை முடித்துவிடலாம்,” என்று நினைத்து, நல்ல பழுத்த பழத்திற்கு அருகாமையில் அமர்ந்துகொண்டது குரங்கு.

சிறிது நேரம் சென்றது. அதனுடைய மனதில் ஒரு புதிய எண்ணம் உருவானது. “ஏன் நாம் நாளைவரை காத்திருக்க வேண்டும்? நமது உள்ளம் தன்னம்பிக்கையுடன் இருக்கும் பட்சத்தில், நாம் ஏன் நாளை பாரணை செய்யும் போது என்ன பழங்களைச் சாப்பிடப் போகிறோமோ அதை இன்றே எடுத்துக் காம்பையெல்லாம் சுத்தம் செய்து வைத்தால், நாளை பாரணை செய்யும்போது சீக்கிரமாகச் சாப்பிட்டுவிடலாம்?” என்று எண்ணி, ஒரு பெரிய மாங்கனியை நோக்கிச் சென்று அதில் தென்பட்ட காம்பைக் கடித்துப் பழத்தைச் சுத்தம் செய்யத் தொடங்கியது. அப்போது மாம்பழத்தின் சுவை அதன் நாக்கில் பட்டவுடன், குரங்கால் பசியை அதற்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. “என்ன இப்படி ஆகிவிட்டதே, விரதம் வீணாகப் போய்விட்டதே!” என்று எண்ணியது. எப்படியும் இந்த விரதம் வீணாகிப் போய்விட்டதால், இந்த மாம்பழத்தை அப்படியே விட்டுவர மனமில்லாமல் அந்தப் பழத்தை முழுவதுமாகச் சாப்பிட்டுவிட்டு மற்ற பழங்களையும் உண்டது குரங்கு.

அப்போது அதன் மனதில் நினைத்தது, “இந்த மனிதர்கள் ஏன் உபவாசம் என்ற பெயரில் தங்களது உடலையும் உயிரையும் வாட்டிக்கொள்கின்றனர்?” என்ற ஞானோதயம் அதற்குத் தோன்றியது.

நல்ல பிள்ளையார்…

கி.வா.ஜகந்நாதன் (கி.வா.ஜ) எழுதிய “நல்ல பிள்ளையார்” சிறுகதைத் தொகுப்பு புத்தகம் | Ki. Va. Jagannathan's Nalla Pillaiyar Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இக்கதையை எழுதியவர் திரு கி.வா.ஜ அவர்கள். பிள்ளையாரை யாருக்குத்தான் பிடிக்காது? ஆம், அப்படித்தான் கமலா பிள்ளையார் மீது அதீத நம்பிக்கையும் பிரியமும் வைத்திருந்தாள். அவள் தவறாமல் பிள்ளையாருக்குப் பூமாலைத் தொடுத்து, அம்மா கொடுக்கும் உணவைச் சிறிது நைவேத்தியம் செய்து, பூஜை செய்த பிறகே உண்பதை வழக்கமாக வைத்திருந்தாள். இதைப் பார்த்த அம்மா கூட அவளிடம், “என்ன இது! எப்போதும் பிள்ளையாரும் கையுமாகக் காணப்படுகிறாய்.

உனக்குக் கல்யாணம் ஆனால் பிறகு என்ன செய்வாய்?” என்றாள். அதற்குக் கமலா, “கவலைப்படாதீர்கள், உங்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்க மாட்டேன். பிள்ளையாரை நான் உடன் கூட்டிக்கொண்டு சென்றுவிடுவேன்,” என்று தன் அம்மாவிடம் கூறினாள். இதைக் கேட்ட அம்மாவும், “ஏதோ பிதற்றுகிறாள்,” என்று எண்ணிச் சிரிப்பாள்.

ஆனால் கமலா கூறியது போல, அவள் புகுந்த வீட்டிற்குத் தன்னுடன் பிள்ளையாரையும் கூட்டிச் சென்றுவிட்டாள். கமலா புகுந்த வீட்டிலும், தன் தாய் வீட்டில் பிள்ளையாருடன் எப்படி விளையாடி பூஜை புனஸ்காரங்கள் செய்து வந்தாளோ, அதை அப்படியே கடைப்பிடித்துவந்தாள். முதலில் அவளது மாமியாருக்கு வினோதமாக இருந்தது. “போகப் போகச் சரியாகிவிடுவாள்,” என்று எண்ணினாள்.

ஆனால் கமலாவிடம் எந்தவித மாற்றமும் காண முடியவில்லை. அவ்வப்போது மாமியார் கமலாவைத் திட்டுவாள், “எதற்குக் கல்யாணம் செய்துகொண்டு வந்தாய்? ஒன்று அந்தப் பிள்ளையார் வெளியே போக வேண்டும், அப்படி என்றால் நீ இந்த வீட்டில் இருக்க முடியும். இல்லையென்றால் பிள்ளையாருடன் நீ வீட்டைவிட்டு வெளியேறு,” என்று கூறினாள் கமலாவின் மாமியார். கமலாவும் மாமியாரின் கோபம் போகப் போகத் தணிந்துவிடும் என்று நினைத்தாள்.

கமலாவின் போக்கைப் பார்த்த அவளது மாமியார் அவளிடம், “நீ தனியாக இந்த வீட்டில் பிள்ளையார் இல்லாமல் இருக்கலாம். இல்லையென்றால் உடனடியாக உன் பிள்ளையாரை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடு,” என்று, வெளியில் தள்ளாத குறையாகக் கமலாவை வீட்டை விட்டு விரட்டினாள். கமலா, “இதற்குப் பிறகு இங்கு வாழ முடியாது. நாம் பிள்ளையாருடன் வெளியே செல்வது நல்லது,” என்று எண்ணி வீட்டைவிட்டு வெளியேறினாள்.

கமலாவின் மாமியார், அவள் அவளது தாய், தந்தை வீட்டிற்குத்தான் போவாள் என்று நினைத்தாள். ஆனால் கமலாவோ அவளது தாய் வீட்டிற்குச் செல்லவில்லை. ஏனென்றால் அவளது தாய் சமீபத்தில்தான் இறந்து போனாள். இப்போது அவள் தாய் வீட்டிற்குப் போனால், அவளது தந்தை அவளை மறுபடியும் தன் மாமியார் வீட்டில்தான் கொண்டுவந்து விடுவார் என்று தன் மனதில் எண்ணி, கால் போன போக்கில் நடந்தாள்.

அவள் நடந்து நடந்து காட்டுப் பகுதிக்கே வந்தடைந்தாள். சூரியன் மறையத் தொடங்கியது. அந்தி மாலைப் பொழுதில் அவள் ஓர் அரச மரத்தைப் பார்த்தாள். அதன் கிளைகளில் ஏறி அமர்ந்தாள். அவள் மடியில் பிள்ளையாரும் இருந்தார். சோர்வின் காரணத்தினால் கண் அயர்ந்தாள். அந்தச் சமயம் பார்த்து அங்குத் திருடர்கள், தாங்கள் திருடிய பொருட்களைப் பங்கு போடுவதற்காக இந்த அரச மரத்தடியில் அமர்ந்து பங்கு போடும்போது, கமலாவின் கையிலிருந்து பிள்ளையார் நழுவிக் கீழே விழுந்தார். திருடர்கள் அவர்களை யாரோ கவனிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர். கீழே விழுந்த பிள்ளையார் தங்க நகைகள் மற்றும் பணத்திற்கிடையில் வீற்றிருந்தார்.

பொழுது விடிந்தவுடன் கமலா பிள்ளையாரைத் தேடிக் கீழே இறங்கினாள். அவள் அப்போது அங்குப் பிள்ளையாரைத் தங்க நகைகளுடனும் பணத்துடனும் அவர் இருந்ததைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினாள். கமலா இவை அனைத்தையும் மற்றும் பிள்ளையாரையும் தன் மாமியார் இருக்கும் வீட்டிற்குக் கொண்டு சென்றாள். “இதைப் பார்த்தாலாவது தன் மாமியாரின் கோபம் தணியும்,” என்று. வீடு வந்து அடைந்ததும், கமலாவைப் பார்த்து, “எங்கு வந்தாய்? நேற்று எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டாள் அவளது மாமியார். அதற்குக் கமலா, “என்னைப் பிள்ளையார் ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றார், அங்குச் சென்று பார்க்கையில் இவை இருந்தன,” என்று கூறி, தன்னிடம் இருந்த தங்க நகைகளையும் பணத்தையும் மாமியாரிடம் காண்பித்தாள். மாமியாரோ வாயடைத்துப் போய்விட்டாள். மறுபடியும் கமலாவிடம், “இவை அனைத்தும் எங்கு கிடைத்தன?” என்றாள். அவள் முன்னரே கூறிய பதிலையே கூறினாள்.

மாமியார் உடனே அவளிடம், “உன் பிள்ளையார் நல்ல பிள்ளையார். அவருடைய அருமை தெரியாமல் நான்தான் கோபம் கொண்டேன். நீ இனி உன் மனம்போல் அந்தப் பிள்ளையாருக்கு என்ன வேண்டுமானாலும் செய்,” என்று கூறி அவளுக்குச் சிற்றுண்டி கொடுத்தாள். தன் அப்பா வீட்டிற்குப் போகாமல் தங்கள் வீட்டிற்கே வந்தாளே என்று மாமியார் மனதில் உள்ளூர மகிழ்ச்சி. அதுமுதல் அந்தப் பிள்ளையார் அந்த வீட்டிலும் கமலாவின் அலங்காரங்களைப் பெற்று எழுந்தருளியிருந்தார் என்று கதையை முடித்திருப்பார். மேலும் அவர் இங்கு ஒன்றைப் பதிவு செய்திருப்பார்: (ஒரு நாடோடிக் கதையைத் தழுவியது) என்று.

📚 நூலின் விவரங்கள்:
தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “நல்ல பிள்ளையார்” சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: கி.வா.ஜகந்நாதன் (கி.வா.ஜ)
வெளியீடு: அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட்
விலை: ₹.3
அறிமுகம் எழுதியவர்:   
பாலமுருகன்.லோ

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *