கிடங்குத் தெரு - Kidangu Theru BookReview | Senthooram Jagedesh செந்தூரம் ஜெகதீஷ்

90களின் துவக்கத்தில் சென்னை பாரிமுனை பகுதிகளுக்கு தொடர்ச்சியாக சென்று வரும் வாய்ப்புகள் ஏற்பட்டது. அன்றைய நாட்களை நினைவுபடுத்திவிட்ட நாவல் இது.

சென்றமாத காலச்சுவடு இதழில் இந்நாவல் குறித்த குறிப்பு ஒன்றை வாசித்ததன் அடிப்படையில் முன்பதிவு செய்தேன்.

வாசிப்பதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிட்ட நூல் என்ற போதும், வாசிப்பின் முடிவில் அடைந்த ஏமாற்றத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

ராஜா என்ற எழுத்தாளனைப் பற்றியே மிக அதிக பக்கங்களுக்கு இடம்பெறும் புனைவு, சுய பச்சாதாபம் மிகுந்ததாகவும் உருமாறி விடுகிறது.

தன்னையே, தனது செயல்பாடுகளையே எப்போதும் எந்நிலையிலும் நேர்மறையாக கட்டமைப்பது உவப்பானதாக இல்லை. மிதமிஞ்சிய தன்னிரக்கம், தன்னம்பிக்கை இழப்புக்குத்தான் கொண்டு செல்லும்.

நாவலில் ஆங்காங்கே அறியப்பட்ட பெரும் எழுத்தாளர்களின் மேற்கோள்கள் இடம்பெறுவது சிறப்பு.

வணிகத்தில் மார்வாடிகளின் ஈவிரக்கமற்ற, கறார்த்தனமான செயல்களையும் நாவல் பகடியுடன் சொல்கிறது.

பணி செய்யும் இடங்களில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் கொடுமையானவை. ‘பெண்ணை உடலாக மட்டுமே பார்த்தல்’ என்ற வரி பெரும் அபத்தமாகப்படுகிறது.

யாருக்குத்தான் வாழ்வில் துன்பங்கள் இல்லை, நமது மேன்மைகளை அறிந்து பிறர் மட்டுமே அச்சிறப்புகளை எடுத்துக்காட்டுவது நலம்.

தனக்கான அங்கீகாரம் குறித்து எண்ணாமல் கர்மயோகியாக செயல்படுதலே எழுத்தாளர்களுக்குப் பெருமை தரும்.

கொத்தடிமைகள் போன்று நடத்தப்படும் ஊழியர்களின் நிலை, முதலாளித்துவத்தின் கோர முகத்தைக் காட்டுகிறது.

பல ஆண்டுகள் காதலித்து மணந்த தீபாவுக்கு ராஜா செய்வது பச்சைத் துரோகம். ஏற்கவே முடியாத கொடுஞ்செயல் இது.

ராஜா-துளசி அத்துமீறலில் காதலை அறிய முடியவில்லை. உடல் வேட்கைதான் முன்னிற்கிறது.பாலியல் அத்துமீறல்களுக்குப் பின் கோயிலுக்கு சென்று வருவதாக எழுதியிருப்பது மிகையாகவே அமைகிறது.

பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த மக்களின் துன்பங்கள் குறித்தும், கிடங்குத் தெருவின் அந்நாளைய வணிகச் செயல்பாடுகள் குறித்தும் இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாம்.

மேத்தா தனது ஊழியர்களிடம் மிகமிக கறாராக நடந்து கொள்வதும், பெண் ஊழியரிடம் அத்துமீறுவதும், திருமணத்திற்கு வந்த விருந்தினரில் ஒரு பகுதியினருக்கு உப்புமா பரிமாறுவதும், இது போன்ற அற்ப மனிதர்களை நினைவுபடுத்துபவை.

உண்மையில் தொழில்களில் ஈடுபடுபவர்கள் தமது ஆரம்ப கட்டங்களில் தொழிலாளியைப் போன்று பெரும் உழைப்பை இடுகின்றனர். நாளடைவில் பணம் ஈட்டும் வழிமுறைகள் வசப்பட்ட பின்பு கருணையின்றி செயல்படவும் கற்றுக் கொள்கின்றனர்.

மகாபாரதத்தில் அர்ஜுனன் செய்துவிட்ட ஒரு தவறுக்கு அவனை தண்டிக்க எண்ணிய கிருஷ்ணர், அரச சபையில் தன்னைப் பற்றியே அவன் சில மணித்துளிகள் பேச வேண்டும் என்று கூறிவிடுகிறார்

கலங்கிய அர்ஜுனன் வேறு ஏதேனும் தண்டனை அளிக்குமாறு இறைஞ்சுகிறான்

சுயமதிப்புடன், துணிவாக உழைப்பதை விடுத்து அதீத தன்னிரக்கத்தில் மூழ்கி விடுதல் ஒருபோதும் நன்மை அளிக்காது.

புத்தகக் காதலராக, தொடர்ச்சியான வாசிப்பாளராக செயல்படும் இந்நூல் ஆசிரியருக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

நூலின் தகவல்கள்:- 

நூல் : கிடங்குத் தெரு

நூலாசிரியர் : செந்தூரம் ஜெகதீஷ்

வெளியீடு : ஜெயரிகி பதிப்பகம்

விலை : ரூ. 224/-

பக்கங்கள் : 280

நூலறிமுகம் எழுதியவர்:- 

 

சரவணன் சுப்ரமணியன்

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *