நூல்: கிகோர் (குறுநாவல்)
ஆசிரியர்: ஹோவன்னஸ் டூமேனியன்
தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்
வெளியீடு: வம்சி பதிப்பகம்
பக்கம்: 64
விலை: ₹. 60

குடும்பத்தின் கனவுகளை சுமக்கும் தலைமகன் “கிகோர்” 

ஆம் இது குடும்பத்தின் தலைமகனாய் பிறந்து ஏழ்மையை போக்க, வறுமையை துடைத்தெறிய குடும்பத்தின் கனவுகளை சுமக்கும், ஓர் ஏழை குடும்ப தலைமகனின் கதை. அன்றைய சோவியத் யூனியனின் ஒரு பகுதியான இன்றைய அர்மேனியாவின் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்த “ஹம்போ” என்பவரின் மூத்த மகனும், 12 வயதான சிறுவன் “கிகோரின்” கதை.

கிராமத்தின் வயல்வெளிகளில், நீர் நிலைகளில், விளையாட்டு மைதானங்களில் அவனது வயதை ஒத்த சக நண்பர்களோடு குதுகுளத்தோடு விளையாட வேண்டிய வயதில், தனது குடும்ப கனவுகளை சுமந்து கொண்டு, தந்தை போட்ட உத்தரவின் பெயரால், தந்தையான ஹம்போவுடன் திப்லிஸ் நகருக்கு செல்லுகிறான் கிகோர்.

அங்கே உள்ள சந்தையில் வியாபாரம் செய்து வரும் “பஸாஸ் அர்த்தெம்” எனும் அந்த வியாபாரி அவர்கள் வேலையை தேடி அலையும் நிலையை அறிந்து கிகோரை தன்னிடம் ஒப்படைத்துச் செல்லுமாறு தந்தையிடம் பேரம் பேசுகிறார். “உனது மகன் மிக சிறிய சிறுவன் என்பதால் அவனுக்கு ஒரு வேலையை எப்படி செய்வது என்றே தெரியாது. ஆகவே அவனுக்கு நான் நிறைய கற்றுக் கொடுக்க வேண்டி வரும், ஆகையால் ஐந்து வருடம் வரைக்கும் இவனுக்கு எந்த சம்பளமும் நான் கொடுக்க மாட்டேன். இது போக அவன் எனது வீட்டு சமையல் வேலைகள் என அனைத்தையும் செய்ய பழகிக் கொள்ள வேண்டும். அதன் பின்னரே அவனை நான் எனது கடையில் வியாபாரத்திற்கு பயன்படுத்துவேன்” என கூறுகிறார்.

தந்தையும் அதற்கு ஒப்புக்கொண்டு, கிகோரிடம், “மகனே நீ கண்டிப்பாக எஜமானர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், கீழ்ப்படிதல் உள்ளவனாக இருந்து, அவர்கள் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்தால், நிச்சயம் ஒரு நாள், இந்த திப்லிஸ் நகரத்தின் எஜமானர்களில் ஒருவனாக நீயும் வலம் வருவாய். ஆகையால் நீ விரைவில் சம்பாதித்து, இந்த சந்தைக்கு வரும் நமது ஊரார்களிடம் பணம் கொடுத்து அனுப்பினால் மட்டுமே நமது குடும்பம் வறுமையிலிருந்து மெல்ல மெல்ல மீண்டும் எழும்” என்று தனது மகனிடம் அறிவுரை பல சொல்லிக் கொண்டு மீண்டும் கிராமத்திற்கு திரும்புகிறார். இதில் குடும்பத்தின் கனவுகளை சுமந்து வேலை செய்யும் கிகோர், அங்கே என்னென்ன சிரமங்களை சந்திக்கிறான். இறுதியில் அவன் என்ன ஆனான் என்பது கதை.

கண்டிப்பாக இக்கதை வாசிப்பவரின் மனதில், இன்னொருவரை அடிமைப்படுத்தும் எண்ணத்தை கொஞ்சமாவது குறைக்கும், மனித நேயத்தை வளர்க்கும். குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய கதை அல்ல கவிதை என நம்புகிறேன்.

அர்மேனிய இலக்கியத்தின் அமிர்தமான இக்கதை 80 மற்றும் 90களில் நமது கிராமத்தில், நமது ஊரில், குடும்பத்தில் வறுமை தாங்க முடியாமல் சிறுவனாக சென்னைக்கு சென்று மளிகை கடையில், ஹோட்டலில், திருப்பூர் பனியன் நிறுவனங்களில், கோவை தொழிற்சாலைகளில், இப்போது அரேபிய நாடுகளில் வேலை செய்ய சென்ற பல குடும்ப தலைமகன்களின் முகங்கள், கதைகள் உங்களுக்கு ஞாபகம் வரலாம்.

ஹோவன்னஸ் டூமேனியன், அன்றைய சோவியத் யூனியனின் ஒரு பகுதியான இன்றைய அர்மேனியாவின் தேசிய கவிஞர், எழுத்தாளர், சமூக போராளி என அறியப்படும் இவருக்கு அந்நாட்டின் அனைத்து நகர பகுதிகளிலும் சிலை வைத்து கௌரவித்து இருக்கிறது. அந்த அளவிற்கு அம்மக்களின் மனங்கவர்ந்த, போற்றுதலுக்குரிய கவிஞனாக, எழுத்தாளனாக இருந்திருக்கிறார்.

1894 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல், காலம் கடந்து இப்போது கூட வாசிப்பவரின் மனதை கலங்கடிக்கும். இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் அர்மேனியாவிலும், அஸர்பைஜானிலும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு, ரசிகர்கள் மனங்களை கவர்ந்ததோடு விருதுகள் பலவும் வென்றுள்ளது. தமிழில் இலங்கையைச் சேர்ந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் எம். ரிஷான் ஷெரீப், ஹோவன்னஸ் டூமேனியன் எழுதிய அதே கவிதை நடையில் மொழிபெயர்த்துள்ளார்.

சுரேஷ் இசக்கிபாண்டி‌‌   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *