தமிழில் துறை – தொழில் சார்ந்த படைப்புகள் இல்லை, எல்லாம் திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்ற எனது நெடுநாளைய புலம்பல் நிறைய பேருக்குக் கேட்டிருக்கும் போலிருக்கிறது. இப்போது வரிசையாக துறை – தொழில் சார்ந்த எழுத்துகள் கண்ணில் பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கைக்குக் கிடைத்தது செந்தமிழினியன் எழுதிய கிளி நின்ற சாலை என்ற நாவல்.
தொழில் சார்ந்த நாவல் என்று சொல்லும் போதெல்லாம் நான் ராபின் குக் மாதிரி தமிழ் நாட்டு டாக்டர்கள் அல்லது ஜான் கிரிஷாம் மாதிரி தமிழ் நாட்டு வக்கீல்கள் என்பது மாதிரியாகத் தான் பேசி, எழுதி வந்தேன். கிளி நின்ற சாலை என் அந்த மேட்டுக்குடி மனப்பான்மையில் ஒரு குட்டு குட்டியது. வக்கீல், டாக்டர்களின் தொழில் சார்ந்த படைப்புதான் வேண்டுமோ? ஏன் ரோட் ரோலரின் கிளீனரின் கதை என்றால் உனக்கு ஆகாதோ? என்றது.
ஆம்.. இது ரோட் ரோலர் கிளீனர் ஒருவரின் கதை. கிளி நின்ற சாலை என்பது ஏதோ வண்ண வண்ணக் கிளிகள் பறந்து திரியும், பூக்களும், மரங்களுமான சோலையினூடாகச் செல்லும் சாலை அல்ல.ரோட் ரோலரின் கிளீனரை அவர்களது தொழிலில் கிளி என்று குறிப்பிடுகிறார்கள். நாளொன்றுக்கு பதினேழு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கும் தினக்கூலி கிளி ஒருவர் நாள்தோறம் வேலை பார்க்கும், கொதிக்கும் தார் ஊற்றப்படும், விதவிதமான அளவுகளில் ஜல்லி கொட்டப்படும், செம்மண் கொட்டப்படும் சாலை. ரோட் ரோலர் ஓட்டுபவர்கள், தாரைக் காய்ச்சுபவர்கள், சல்லடையாக ஓட்டை போட்ட டின்னிலிருந்து தாரை சாலை முழுக்க சீராகக் கொட்டுபவர்கள், தார், ஜல்லிக் கலவையை சாலையில் பரப்புவர்கள், ரோட்ரோலரின் சக்கரத்தில் தண்ணீர் ஊற்றியபடி அதன் கூடவே நடந்து வரும் பெண்கள் (சிறுவயதில் இந்த வேலைக்குப் போக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதுண்டு !), மேஸ்திரிகள், காண்ட்ராக்டர்கள். டிப்பர் லாரிக்காரர்கள், ஜே.ஈக்கள், ஏ.ஈக்கள்…… நாவல் நாம் அறியாத ஒரு தனீ… உலகை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் காட்டிக் கொண்டே செல்கிறது. கதையில் படிப்பதாக இல்லாமல் நம் வீட்டு வாசலில் ரோடு போடுவதை வேடிக்கை பார்க்கும் ஒரு உணர்வைத் தருகிறது.
நாவல் முழுக்க உரையாடலிலேயே நகர்கிறது. எந்த இயற்கை வர்ணனையும் கிடையாது. நாயகனின் வாழ்வைப் போலவே மிக வறண்ட ஒரு மொழியில் சொல்லப்பட்ட நாவல். சாலை போடும் தொழிலாளி ஒருவனின் வாழ்வில் கவித்துவமான, அழகான, மென்மையான வார்த்தைகளுக்கு என்ன இடம் இருக்கிறது? படைப்பாளி வேண்டுமென்றே இப்படியான ஒரு நடையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஏனெனில் அடிப்படையில் ஒரு ஹைக்கூ கவிஞர்.
கதையின் நாயகனின் தொழிலைப் போலவே கதை நிகழும் களமும் புதிது. பாண்டிச்சேரி. பாண்டிச்சேரியின் ஒரு ஊரின் நகராட்சி ஊழியன் நாயகன். சாலைப் பணி இல்லாத நேரத்தில் அலுவலகத்தில் பிறப்பு இறப்பு பதிவு, இரவு வாட்ச்மேன் என்று எல்லா வேலையும் பார்க்கிறான். அப்போது அந்த அலுவலகத்தில் அவன் சந்திக்கும் மாந்தர்கள் வழக்கமாக நாம் தமிழ் நாவல்களில் பார்க்கும் மனிதர்களாக இல்லாமல், பிரெஞ்சுக் கலாச்சாரத்தில் வாழும் மக்களாக இருக்கிறார்கள். நன்றியையும், மன்னிப்பையும், பிரெஞ்சு மொழியில் கூறும் பாண்டித் தமிழர்கள் ! அலுவலகங்களின் பெயர்கள், அலுவலகத்தில் அன்றாடம் புழங்கும் பல்வேறு ஆவணங்கள், கோப்புகளின் பெயர்களில் எல்லாம் பிரெஞ்சு மொழி சர்வ சாதாரணமாக விளையாடும் ஒரு புதுமையான நாவல். நாவலாசிரியர் பொறுப்பாக அவற்றிற்கெல்லாம் அடிக்குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
நாயகன் குடும்பத்தின் மூத்த மகன். தம்பி கல்யாணம், அம்மாவிற்கும், மனைவிக்கும் சண்டை, இவனது தினக்கூலி வேலையை கேவலமாகப் பேசும் சற்றே பணக்காரியான மனைவி, இருக்கும் கஷ்டத்தில் இரண்டாவது குழந்தை பிறப்பது என்று எல்லா கீழ், நடுத்தர மக்களுக்கும் உள்ள பிரச்சனைகள். கடைசியில் நாயகனுக்கு சமூகநலத் துறையில் நான்காம் பிரிவு ஊழியராக நிரந்தர வேலை கிடைப்பதுடன் கதை முடியும் போது, நமக்கே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அத்தனை இயல்பாக நகரும் கதை.
தினக்கூலி ஒருவருக்கு நல்ல அரசுப் பணி கிடைக்கும் எளிய கதை. ஆனால், அந்த தினக்கூலி பார்க்கும் வேலை இதுவரை தமிழ் இலக்கியத்தில் பதிவு பெறாத ஒன்று. அதுவும், நமக்கு அத்தனை பரிச்சயம் (அதாவது எனக்கு !) பாண்டிச்சேரியில் நடப்பது நாவலின் தரத்தை உயர்த்தி விடுகிறது.
வரும் காலங்களில் செந்தமிழினியனிடமிருந்து இன்னும் புதிது புதிதாய் மாறுபட்ட தொழில்கள், களங்கள் உள்ள நாவல்கள் வரவேண்டும் என்று ஆவலாக்க் காத்திருக்கிறேன்.
கிளி நின்ற சாலை
விடியல் பதிப்பகம்
செந்தமிழினியன்
பக்கம் – 200 விலை 150.00