கவிதை : சேர்ந்தாரைக் கொல்லி
*******************************
கோபத்தில்
என் நாக்கு உலர்ந்து விடுகிறது
இதயம் சூடேற
கை கால்கள் படபடக்க
கண்கள் சிவந்து விடுகின்றன
என் உடல் கொதிக்கிறது
எதிரியின் போர்வையைப் போல
உருமாறிய என் நாக்கு
அவன் கவனிக்காதபோது
அவன் மேல் கவிந்து
ஒரே அமுக்காய் அமுக்கிச்
சுருட்டியெடுத்துத்
தாக்குதல் தொடுக்கத்
தனியே தூக்கிச் செல்கிறது!
கோபம்
நான் அணிந்திருந்த உடைகளை
உடனடியாக உருவியெறிந்துவிட்டு
அம்மணமாக்கிவிடுகிறது
அதன்பின்
நான்
அழுக்கடைந்த கந்தல் துணிகளணிந்த
ஒரு பைத்தியக்காரனின்
காட்சி ரூபம்தான்!
என் உடல்மொழியே மாறிவிடுகிறது
நீச்சலடிப்பவன்
கிணற்றங்கரை மேலிருந்து
நிலைக்குத்தாய்க் குதிக்கிற
விறைத்துப் போன சடலமாகிவிடுகிறது
என் உடல்.
கோபம்
கடலில் நீந்தும் அழகிய மீனை
சட்டெனச் சட்டியில் போட்டுச்
சளசளவெனக் கொதிக்க விடுகிறது
கோபம் றெக்கையை விரித்த கழுகினைப் போல
பார்வையில் பட்டவனைப்
பாம்பினைப் போலக் கொத்தி எடுக்கிறது
எப்போதும்
என் தோளில் தொங்கிக் கொண்டிருக்கும்
வேதாளத்திடமிருந்து
எப்போது விடுதலை?
இதயத்தில்
வெடி மருந்து கிடித்து வந்தவனின்
பிளக்கிற வார்த்தைகள்
பூக்களாவதில்லை.
கோபத்தை நான் கழற்றி எறிய விரும்புகிறேன்
பாம்பு சட்டையை உரித்து கொள்வதைப் போலவோ
மரம் உலர்ந்த பட்டைகளை உதிர்த்து விடுவதை போலவோ
ஆனால்
கோபம் என் நரம்புகளைக்
கயிறுகள் போலப் பின்ன வைத்து விடுகிறது
அந்தக் கயிற்றில்
என் கழுத்து மாட்டிக்கொள்கிறது.
கோபம் அடுத்தவரைக் கொல்ல முடியாது
அது
தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும்
தற்கொலை நஞ்சு!
எழுதியவர் :
-நா.வே.அருள்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.