இக்கட்டுரை ஏகன் ஆதன் கோட்டத்தின் பெயர் ஆய்வையும் ; அந்நிறுவனத்தின் சமய வழிபாட்டு மரபின் முக்கியத்துவத்தையும் தமிழர் சமயமரபை மீட்டுருவாக்குவதில் இதன் பங்கு குறித்தும் வரலாற்று நோக்கில் விளங்கிக் கொள்ள முயல்கிறது.
மதுரை மாவட்டம் செக்கானூரணிக்கு அருகில் கிண்ணி மங்கலம் என்ற ஊரில் தமிழி எழுத்துப் பொறித்த தூண் கல்வெட்டு ஒன்றும் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் அண்மையில் பாறை ஒவியத் தொல்லியல் அறிஞர் காந்திராஜன் அவர்களால் கண்டறியப்பட்டது.
தமிழி கல்வெட்டில்
“ஏகன் ஆதன் கோட்டம்…” என்றும் .
வட்டெழுத்துக் கல்வெட்டில்
“இறையிலியாக ஏகனாதன் பள்ளிபடை மண்டளி யீந்தார்…” என்றும் உள்ளது.
தமிழிக் கல்வெட்டின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டாகலாம் என்றும் வட்டெழுத்துக் கல்வெட்டின் காலம் கி.பி. 6-9 நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இக்கண்டுபிடிப்பு மற்ற தமிழிக் கல்வெட்டுகளிலிருந்து இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.
- ஏகன் என்ற சமயப் பொருண்மையோடு தொடர்புடைய புதிய பெயரும் கோட்டம் என்ற பெயரும் முதன் முதலாக கல்வெட்டில் கிடைத்திருப்பது.
2.இக்கல்வெட்டுகள் கிடைத்த நிறுவனத்திற்கு சங்ககாலத்திலிருந்து சமகாலம் வரையிலான ஆவணத் தொடர்ச்சியும் குருபரம்பரம்பரைத் தொடர்ச்சியும் இருப்பது.
இதுவரை வணிகர்கள் உள்ளிட்ட ஆட்களின் பெயர்களும் இடங்களின் பெயர்களும் ‘அமணர் ‘ என்ற சமயம் தொடர்பான பெயர்களும் கிடைத்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் ஏகன் என்ற பெயரும் ஆதன் என்ற பெயரும் கோட்டம் என்ற பெயரும் விவாதப் பொருளாக மாறியிருக்கின்றன.
இப்பெயர்களின் பின்புலம் குறித்தும் அவை பிரதிபலிக்கும் வழிபாட்டு மரபு குறித்தும் அறிந்து கொள்வது தமிழர் சமய வரலாற்றில் ஒரு புரிதலை வழங்கக் கூடும் . முதலில் ஏகன் ஆதன் கோட்டம் குறித்துக் காண்போம்.
கோட்டம்:
இலக்கியங்களில் கோட்டம் என்பதற்கு
வளைவு (நன்.25) ,
வணக்கம் (திருக்கோ. 156),
நடுநிலை (தேவா..1182, 2)
மனக்கோணல் (குறள்.119),
பகைமை (விநாயகபு. 37, 3)
பொறாமை , நாடு, நகரம், தோட்டம், கரை (பட்டினப். 36)
அறை (மணி. 6, 59)
கோயில் (சிலப். 14, 10)
பாசறை, சிறைச்சாலை (சீவக. 262)
ஒருவகை வாசனைச்செடி (சீவக. 1905)
ஒருவகை வாசனைப்பண்டம் (கம்பரா. கும்பக. 145)
பசுக்கொட்டில் , (வாயுசங். பஞ்சாக். 58) போன்ற பல்வேறு பொருள்கள் பயின்று வருகின்றன்.
அவை போக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படும் நிலப் பகுப்பையும் (வருவாய் கோட்டம்/ உட் கோட்டம் ) குறிக்கிறது. ஆனாலும் இது வழிபாடு நிகழும் இடமாகவும் நினைவிடமாகவும் இருப்பதால் அது தொடர்பான பொருளோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
கோயிலைக் குறித்து வரும் சொற்களாக கோயில் , நியமம் , நகரம், கோட்டம் ஆகியவற்றை இலக்கியங்கள் குறித்தாலும் கோட்டம் என்பது கோயிலோடும் வழிபடும் இடத்தோடும் அதிகமாகக் இடம்பெருவதைக் காண முடிகிறது. கோட்டங்கள் தலைநகரங்களிலும், பிற இடங்களிலும் அமைந்திருந்ததை அவை விழா அறைந்து, தூண் நாட்டிக் கொடியேற்றி , இசைக்கருவிகளை முழக்கி, பூப்பலி செய்து, காப்புக் கடை நிறுத்தி, மலர் தூவி, நறும்புகை காட்டி , மணி முழக்கி, தெய்வத்தின் கோலத்தைப் புனைந்து தெய்வமேறப் பெற்று ஆடி வழிபடும் இடங்களாக இருந்துள்ளதை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் பல்வேறுபட்ட கோட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
புறநானூறு முருகன் கோட்டம் பற்றிப் பேசுகிறது (பா.-299) .
பட்டினப்பாலை புகார் நகரில் இருந்த நிலாக்கோட்டம் பற்றிக் கூறுகிறது. (அடி .34-36) . மருதக் கலி “புத்தேளிர்கோட்டம்” பற்றிப்பேசுகிறது.(கலித்தொகை – பா.- 82 – அடி – 4 ). முல்லைக்கலியில் காமன் கோட்டம் பற்றிய செய்தி உள்ளது. (கலித்தொகை -பா. -109 -அடி -20)
சிலப்பதிகாரம் புகார் நகரில் அமரர் தருக்கோட்டம் ,வெள்ளானைக் கோட்டம் , புகர் வெள்ளை நாகர் கோட்டம் , பகல் வாயில் உச்சிக் கிழான் கோட்டம், ஊர்க்கோட்டம், வேற்கோட்டம், வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம், நிக்கந்தக் கோட்டம், நிலாக்கோட்டம் , பாசண்டச்சாத்தன் கோட்டம் ஆகியவற்றைக் கூறுகிறது. செங்கோட்டு உயர் வரையில் மங்கல மடந்தை கோட்டமும், (கண்ணகி கோயில்) கொடும்பாளூருக்குத் தெற்கே மதுரை செல்லும் வழியில் ஐயை கோட்டமும், மதுரைக்குள்ளே கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும், மற்றொரு தேவகோட்டமும் இருந்ததாகக் கூறுகிறது.
இவற்றோடு பிணத்துடனும் செல்லக்கூடிய வழிபாட்டிடங்களாகக் கோட்டம் இருந்தது என்பதைச் சிலப்பதிகாரமும் கனாத்திறம் உரைத்த காதையிலும் (-அடி.-5-15) , கோட்டங்கள் ஈமப்புறங்காட்டில் இருந்ததை மணிமேகலை சக்கர வாளக்கோட்டம் உரைத்த காதையிலும் ( அடி.- 51-166) கூறுகின்றன.
சிலப்பதிகாரம்,’ தேவந்தியின் கணவனாகிய பாசண்டச் சாத்தன் வரலாறு கூறும்பொழுது மாலதி என்ற பார்ப்பனப் பெண் மூத்தாள் குழவிக்குப் பாலூட்ட; பால்விக்கிப் பாலகன் இறந்துவிட பார்ப்பானோடு மனையாள் தன் மேல் சுமத்தப் போகும் பழிக்கு அஞ்சி அவள் இறந்த குழந்தையின் உடலோடு பல கோட்டங்கட்குச் சென்று அழுது முறையிட்டு இறுதியாக பாசண்டச் சாத்தன் கோயிலில் பாடு கிடந்தாள்” என்கிறது.
சுடுகாட்டில் இருந்த வழிபாட்டிடங்கள் கோட்டங்கள் என்று பெயர் பெற்றமையை மணிமேகலையில் ,” பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றிலுடன் காடமர் செல்வியின் கழிபெருங் கோட்டமும், குறியவும், நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும், அரசர்க்கு அமைந்த ஆயிரம் கோட்டமும் புகார் நகரத்து ஈமப்புறங்காட்டில் இருந்தன ” என்கிறார் சாத்தனார். (சக்கர வாளக்கோட்டம் உரைத்த காதை- அடி.- 51-166).
சாரங்கலனின் தாய் கோதமை அவனது இறந்த உடலைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டின் எயிற்புறத்தில் சம்பாபதித் தெய்வத்தை அழைத்து முறையிட்டுத் தன் மகனுக்கு உயிரை மீட்டுத் தருமாறு வேண்டுகிறாள். தெய்வங்கள் எல்லாம் தோன்றி அவள் வேண்டுதலை நிறைவேற்ற இயலாது என்று கூறிய கோட்டமே சக்கரவாளக் கோட்டம் ஆனது. (சக்கர.-அடி .- 176-182) என்கிறார் சாத்தனார்.
கண்ணகி, மங்கல மடந்தை என அழைக்கப்படுவதும் , கண்ணகி மறைந்த இடத்தில் நடுகல் எடுத்து கண்ணகிக்கு மங்கல மடந்தை கோட்டம் அமைத்தான் சேரமன்னன் என்று சிலம்பு கூறுவதன் மூலமும் இறந்த கண்ணகியின் நினைவாக நடுகல் எடுத்ததும் கோட்டம் அமைக்கப்பட்டதும் கள ஆய்விலும் தெரிகிறது.
புறப்பொருள் வெண்பாமாலை, இலக்கண விளக்கம், சாமிநாதம் ஆகிய இலக்கண நூல்கள் நடுகல்லின் படிநிலைகளாக கற்காண்டல், கற்கோள் நிலை, கல்நீர்ப்படுத்தல், கல் நடுதல், கல்முறை பழிச்சல், இல்கொண்டு புகுதல் என்ற ஆறு நிலைகளைக் குறிப்பிடுகின்றன. இவற்றில் இல் கொண்டு புகுதல் என்பது வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லைச் சுற்றி கோயில எழுப்பி உள் சென்று வழிபடுதலைக் குறிக்கிறது.
கண்ணகிக்கு ஏற்படுத்தப்பட்ட கோட்டமும் ; வழிபாடும் , போரில் இறந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் உயர்ந்த மனிதர்களாகக் கருதப்பட்டவர்களுக்கும் நடுகல் எடுக்கப்பட்டும் அவர் நினைவிடங்கள் வழிபடப்பட்டும் வந்துள்ளது தெரிகிறது. தற்போதும் வடகிழக்கு மாநிலப் பழங்குடிகளிடம் இம்மரபு பின்பற்றப்படுகிறது. எனவே இங்கு ஏகன் ஆதனுக்கு நடுகல் வைத்தும் பின் கோட்டம் எழுப்பியும் வழிபடப்பட்டிருக்கலாம் எனக்கருதலாம். இந்நடுகல் முறை என்பது கந்து வழிபாடு, பெருங்கற்கால வழிபாடுகளின் தொடர்ச்சியாக உருவான நடுகல் வழிபாடு முன்னோர் வழிபட்டின் தொடர்ச்சியே. ஆக இங்கு கோட்டம் என்பது அடக்கம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த ஒருவரின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவிடமே கோட்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது.
பள்ளிப்படை:
சங்க இலக்கியங்களில் புதைப்பிடத்தைக் குறிப்பிட’ பள்ளி’ என்பதோடு ‘துஞ்சிய’ என்ற குறிப்பும் சேர்த்து ‘பள்ளித் துஞ்சிய’ என்றே இடம்பெறுகிறது. இதில் துஞ்சிய என்பது இறந்ததையும்; பள்ளி என்பது சங்க காலத்தில் அரசர்கள் உயிர்துறந்த பின் புதைத்த இடங்களையும் குறிப்பிடும்.
உதாரணமாக , சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ, இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்பர்.
தேனி மாவட்டம் தாதப்பட்டி நடுகல்லில் உள்ள ‘அடியோன் பாகற் பாளிய் கல் ‘ என்பதில் உள்ள பாளி என்பதை அடக்கம் செய்யப்பட்ட கல்லறை என்றே அறிஞர்கள் பொருள் கொண்டுள்ளனர்.
பல்லவர் காலத்தில் செங்கம், தர்மபுரிப் பகுதியில் கிடைத்த ஆகோள் பூசல் தொடர்பான கல்வெட்டுகள் இறந்துபட்டான் என்ற பொருளில்
‘தொறுக்கொளிற்றுப் பட்டான்’
‘தொறுக்கொண்ட ஞான்று பட்டான்’
‘தொறுமீட்டுப் பட்டான்’
‘தொறு இடுவித்துப் பட்டான்’ என ‘பட்டான்’ என்றே குறிப்பிடுகின்றன.
இடைக்காலத்தில் புதைப்பிடங்களைக் குறிப்பிட பள்ளி என்பதோடு, இறப்போடு தொடர்புடைய பட்டான்/ படை என்ற சொல் சேர்ந்து பள்ளிப்படை என வழங்கி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பாலாற்றங்கரையில் பிரம்மதேசம் என்ற இடத்தில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் கோவிலில் ராஜாதிராஜன் காலக்கல்வெட்டில் ராஜேந்திர சோழனுக்கு பள்ளிப்படை எடுத்த செய்தி ” ஸ்ரீராஜேந்திரசோழ தேவர் சிவலோகத்துக்கு எழுந்தருளின திருப்பள்ளிப்படையிலே ” என்று கூறப்பட்டுள்ளது.
விக்கிரமசோழனுக்கு எடுக்கப்பட்ட பள்ளிப்படையை மூன்றாம் குலோத்துங்கன் காலக்கல்வெட்டு ,
” உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர் நாட்டுப் பள்ளிப்படை விக்கிரமசோழ சதுர்வேதி மங்கலத்து ” என்று குறிக்கிறது.
இங்கு கிண்ணிமங்கலத்தில் கிடைத்த வட்டெழுத்துக் கல்வெட்டும் ‘ ஏகனாதன் பள்ளிப்படை ‘ என்றே இருப்பதால் பட்டவருக்கு எடுக்கப்பட்ட பள்ளி என்று உறுதியாகிறது. சங்க காலத்தில் கோட்டம் என்று அழைக்கப்பட்ட மரபு இடைக்காலத்தில் பள்ளிப்படை என்று உருமாற்றம் பெற்ற பண்பாட்டுப் போக்கையும் காணமுடிகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக இன்றும் அக்கோயில் ‘அருள்மிகு ஏகநாதசுவாமி சமேத ஆனந்த வள்ளி அம்மன் திருக்கோயில் ஜீவசமாதி’ என்றே அழைக்கப்படுகிறது.
ஆக கிண்ணிமங்கலத்தில் மூன்று காலகட்டப் பரிமாணங்களைக் பார்க்க முடிகிறது. சங்ககாலத்தில் கோட்டம் என்றும் இடைக்காலத்தில் பள்ளிப்படை என்றும் தற்போது ஜீவசமாதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
அக்கோயில் தொன்மமும் சித்தர் ஜீவசமாதியடைந்ததாகவே கூறுகிறது. அக்கோயில் திருவிழாவும் கூட ஒவ்வொரு ஆண்டும் சித்தர் சமாதியடைந்த வைகாசிமாதம் பூர நட்சத்திர நாளில் தான் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்ல இங்கு சித்தருக்கு முன் ராஜநாகம் இருந்து வந்ததாகவும் அதனை ஜீவசமாதி அடையச்செய்து அதன் பிறகே சித்தர் விருப்பத்தின் பேரில் அதன் மேல் ஜீவசமாதி அடக்கம் செய்யப்பட்டதாக தற்போதைய குரு அருளானந்த சுவாமி கூறுகிறார். எனவே இது முன்பு கோட்டமாக இருந்து பின்னால் பள்ளிப்படையாக மாற்றப்பட்டு தற்போது ஜீவசமாதி என அழைக்கப்படுகிற நினைவிடம் என்று தெரிகிறது. அப்பள்ளிப்படைக் கல்வெட்டில் ‘மண் தளி’ என்ற குறிப்பு பற்றிக்கூறும் அம்மடத்தின் குரு ஆரம்பத்தில் சுதையால் அமைந்திருந்த கட்டுமானம் என்கிறார். அடுத்து ஆதன் குறித்துக் காண்போம்.
ஆதன்:
சங்க இலக்கியத்திலும் , சங்ககாலக் கல்வெட்டிலும் குகைத்தளத்திலும் ஆதன் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன. புல்லிமான்கோம்பை நடுகல் கல்வெட்டில் ‘ஆதன் ‘ என்றும் அண்மையில் கீழடி அகழாய்வின் பானையோடுகளில் ஆதன் என்றும் பெயர் கிடைத்தது.
கடல்சார் தொல்லியல் அறிஞர் டாக்டர் ராஜவேலு அவர்கள் இலக்கியங்களில் கிடைத்த ஆதன் என்ற
பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார்.
- சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
- சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
- சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
- பெருஞ்சேரலாதன்
- ஆதன் அழிசி – ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனின் 5 நண்பர்களுள் ஒருவன்
- ஆதன் – ஓரியின் தந்தை
- நெடுவேள் ஆதன் – போந்தைப்பட்டினம் என்னும் குறுநில மன்னன்
- நல்லியாதன் – ஓய்மான் நல்லியக்கோடன்
- ஓய்மான்வில்லியாதன் – இலங்கையரசன்
- ஆதனுங்கன் – வேங்கடநாட்டு அரசன்
- ஆதன் – வாட்டாற்று எழினியின் மகன்
- ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
- முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்
- ஆதனூர் – “மேற்காநாட்டு ஆதனூர்” – திருத்தொண்டர் மாக்கதை.
மூச்சுக்காற்றில் உள்ளிழுக்கும் காற்று, வெளிவிடும் காற்று என்று இரண்டு வகையுண்டு. உள்ளிழுக்கும் காற்றிலுள்ள உயிர்வளி உடலில் ஊறிய சத்தை எரிக்க உதவுகிறது. உதவும் காற்று நமக்கு ஆகும் காற்று. ஆகும் காற்று ஆதல் காற்று. ஆதல் காற்றை ஆதன் என்பது தமிழ். ஆதன் என்பது உயிர்வளி. உயிர் என்றும் பொருளாகும். வெளிவிடும் காற்று அவிந்த காற்று. எரிந்தது அவிந்தால் கரி. அதனால் வெளிவிடும் காற்றைக் கரி+அமில வாயு என்பர். தமிழ் அவிந்த காற்றை அவினி என்று குறிப்பிடுகிறது. ஆதன், அவினி என்னும் பெயர்கள் இவ்வாறு தோன்றின. இவற்றை மக்களும் தமக்குப் பெயராக்கிக்கொண்டனர் என்பார் கா.ராஜவேலு. எனவே ஆதன் என்ற தமிழ்ப்பெயர் சித்தர் ஓக முறையில் முக்கியத்துவம் வாய்ந்த பெயராகும்.
அதுபோல அழகர் மலை , கொங்கர் புளியங்குளம் , மேட்டுப்பட்டி, புகழூர், எடக்கல் கல்வெட்டுகளில் ஆதன் என்பதற்குப் பதிலாக அதன் என்ற பெயர் வருகிறது. ஒருவேளை அது ஆதனாக இருக்கலாம்.
அதன், அதன் அதன், சேற் அதன் , கோ அதன், இராவஅதன்
பேரதன், எளம் பேரதன்,
சேந்தன் அதன்,
திடிஇல் அதன்
பாகன் ஊர் பேரதன்
குவிரந்தை சேய் அதன் ,
குவிரந்தை வேள் அதன்,
கணக அதன் மகன் அதன் அதன்
ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன. குகை கற்படுக்கைகளில் ஆதன் என்று இல்லாமல் அதன் என்றே கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதன் என்ற பெயர் பரவலாக வருவதோடு கோ, வேள் என்ற அரச மரபோடும், பல்வேறு வணிகர்களோடும், அமணன் என்ற சமய மரபோடும் தொடர்புடைய பெயராக உள்ளது.
ஆதன் என்ற பெயர் ஆசிவகத்தில் பரமசுக்க நிலையை அடைந்த மூவருள் ஒருவரான கணிநந்தாசிரியன் இயக்கன் என்பவரின் உற்ற நண்பர் என்பதை புறப்பாடலில் ( 71: 10-16)மூலம் விளக்குவார் க.நெடுஞ்செழியன்.
இப்பாடல் பூதப்பாண்டியன் போருக்குச் செல்லும்முன் கூறிய வஞ்சின மொழியில் தன் கண்போல் திகழ்ந்த ஐந்து நண்பர்கள் பெயரைக் கூறி , இப்போரில் வெல்லேனாயின் அந்த நண்பர்களையும்.நான் பிரிவேனாக எனவும் சூளுரைத்தான். அந்த நண்பர்கள்
- வையைக் கோமான் மாவன்,
- மன்னெயில் ஆந்தை,
- அந்துவன் சாத்தன்,
- ஆதன் அழிசி,
- வெஞ்சின இயக்கன்
ஆகியோர் ஆவர்.
மதுரை மாங்குளம் கல்வெட்டில் உள்ள நெடுஞ்செழியன் என்ற பெயர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைக் குறிக்கும் என்றும் அக்குகைப்பள்ளி கணிநந்தாசிரியன் இயக்கன் என்ற முனிவருக்காக எடுக்கப்பட்டது என்றும் , அது ஆசிவகக் கணியரைக் குறிக்கும் என்றும். இந்த கணிநந்தாசிரியன் இயக்கன் என்பது நெடுஞ்செழியனின் தந்தையான பூதப்பாண்டியனின் நண்பராகக் குறிக்கப்பட்ட வெஞ்சின இயக்கன்தான் என்றும் கருதுவார் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் .
இதில் ஆதன் அழிசியின் தோழனான வெஞ்சின இயக்கன் ஆசிவக சமயத்தின் பரமசுக்க நிலையை அடைந்தவர் என்று கூறுவதால் ஆதன் என்ற பெயர் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் அமணன் மதிரை என்று பொறிக்கப்பட்ட மேட்டுப்பட்டி குகைக் கல்வெட்டில் இந்த ஐவரில் மன்னெயில் ஆந்தை என்ற பெயரோடு தொடர்புடைய அந்தை என்ற பெயர் வருவதும் கவனிக்கத்தக்கது.
இங்கு ஆதன் என்ற பெயர் அதன் எனவும் ஆந்தை என்ற பெயர் அந்தை என்றும் குறிக்கப்பட்டதாகக் கருதவேண்டியுள்ளது. குகைக்கல்வெட்டு தமிழி எழுத்துகள் மறுவாசிப்பு செய்ய வேண்டிய தேவையை இது வலியுறுத்துவதாகக் கருதலாம்.
எனவே தமிழகத்தில் அனைவரும் விரும்பி ஏற்ற , சித்தர் மரபோடு தொடர்புடையதாகப் பெருவழக்காக இருந்த பெயர் என்றும் அத்தகைய சித்த்தரான ஆதன் என்பவரின் நினைவாக எடுக்கப்பட்ட கோட்டம் என்றாகிறது.
ஏகன் :
ஏகன் என்ற பெயர் குறித்துக் காண்போம். இப்பெயரை ஏகநாதன் என்பதாகக் கருதி ஓரிரைக் கடவுளைக் குறிக்கும் என்று ஒரு சிலர் கருதுகிறார்கள்.
ஒருவேளை ஏகநாதன் என்பது ஏகம் என்ற வடமொழிச் சொல்லின் அடிப்படையில் பிறந்து ஏகம் + நாதன் எனறு புணர்ந்திருந்தால் அது ஓரிரைக்கடவுளைக் குறிக்கும் எனக் கருதலாம்.
ஏனென்றால் ஏகம் என்ற பெயர்ச் சொல்லிற்கு ஒன்று (திவாகரம் ), தனிமை (திவாகரம்), ஒப்பற்றது (சீவகசிந்தாமணி2398) ஆகிய பொருள்கள் இருப்பது போலவே அதற்கு நேர் மாறாக மொத்தம், மிகுதி ஆகிய பொருள்களும் உண்டு. ( சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி)
ஆனால் இக்கல்வெட்டில் கிடைத்த சொல் ஏகம் அல்ல . மாறாக ஏகன் என்று தெளிவாக உள்ளது. மட்டுமல்ல ஏகன் என்ற தமிழ்ச்சொல்லாகவும் உள்ளது.
ஏகன் என்பது ஏகு+ அன் என்ற இரண்டு சொற்கள் புணர்ந்து உருவான சொல்லாகத் தெரிகிறது.
ஏகு+ அன் = ஏகன்.
ஏகு என்ற நெடில் தொடர் குற்றியலுகரம் அன் என்ற வருமொழியோடு சேரும்போது குற்றியலுகரத்தின் ‘உ’ கரம் மெய்விட்டு ஓடி வரு மொழி முதலான ‘அ’ கரத்தோடு புணர்ந்து ஏகன் என்றாகிறது.
ஏகு= ஏ+ (க்+உ)
ஏக் + அன் = ஏகன்.
எனவே ஏகன் என்ற சொல் ஏகு என்ற வினைச் சொல்லின் அடியாகப் பிறந்த சொல்லாகும்.
ஏகு என்ற வினைச்சொல்லுக்கு செல், போ, நட , கழல் என்ற பொருள்கள் உள்ளன. சங்கச் சொல்லடைவு அகராதி ஏகு என்பதற்கு செல், போ என்று பொருள் கொள்கிறது. “அணி மாண் சிறு புறம் காண்கம் சிறு நனி ஏகு” (அக:7).
லிப்கோ தமிழ் அகராதி ஏகு என்பதற்கு
நட , போ , கழன்று விழு ( வ.சொ.) ஏகுதல்.) எனப்பொருள் கொள்கிறது.
ஏகுதல் என்பது செல்லுதல், நடத்தல் (பிங்.) போதல் (தாய்க்கொண் டேகுமளித்திவ்வுலகு – நாலடி, 15)) கழலுதல் (நல்வளையேக (பு. வெ. 11, பெண்பாற். 12) என்று பொருள்படுகிறது..
எனவே ஏகன் என்பது செல், போ, நட, கழல் என்ற வினையின் அடியாகப் பிறந்து செல்பவன், போகிறவன், நடப்பவன், கழல்பவன் என்று பொருள்படுகிறது.
போகர் என்ற சித்தரின் பெயரையும் கூட இதே புணர்ச்சி விதி அடிப்படையில்
போகு + அர் = போகர் என வருவிக்கலாம்.
இது இல்லறத்தில் ஒடிங்கி ஓரிடத்தில் நிற்காமல்
* சென்று கொண்டே இருக்கிற
* வெவ்வேறு இடங்களுக்குப் போய்க்கொண்டே இருக்கிற
*நடந்து கொண்டே இருக்கிற
* வாழ்வியல் பற்றைக் கழற்றிவிடுகிற துறவியையே குறிக்கும் எனக் கருதலாம்.
வெகுமக்கள் வழிபாட்டில் பற்றற்றவரை ஆண்டி என்பார்கள். (மாயாண்டி, பேயாண்டி, பெரியாண்டி, சின்னாண்டி, பரமாண்டி, வெள்ளையாண்டி, கருத்தாண்டி) . அதுபோல நாட்டார் வழிபாட்டில் உள்ள செல்லாண்டி ( செல்+ ஆண்டி) என்பது ஏகன் என்ற துறவியைக் குறிக்கும் மக்கள் மொழியாக இருக்கலாம் எனத்தோன்றுகிறது
கிண்ணிமங்கலத்தில் சமாதியான ஏகனாதன் என்ற இச்சித்தர் தொடர்பான தொன்மமும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக துறவிகள் வைத்திருக்கும் பாத்திரமாகக் கருதத்தக்க கிணணி பற்றிப் பேசுவதோடு அவரைச் சித்தராக, துறவியாகக் காட்டுகிறது. ( இறுதியில் தொன்மம் குறித்தும் காண்போம்)
கோட்டமும் மடமும்:
கிண்ணிமங்கலத்தில் சங்ககாலம் முதல் சமகாலம் வரை ஒரு குருபரம்பரைத் தொடர்ச்சி இருப்பது தெரிகிறது.
கோட்டம்- பள்ளிப்படை- ஜீவசமாதி மடம் –
என்ற பரிமாணத் தொடர்ச்சியை ஏற்கனவே குறிப்பிட்டோம்.
சங்க காலத்தில் இருந்த ‘ஏகன் ஆதன்’ நினைவாக அமைக்கப்பட்ட இக்கோட்டத்தை ஆதரித்தவர்கள் யார், இதில் பங்கெடுத்தவர்கள் யார் என்ன தன்மையில் இயங்கியிருக்கும் என்று தெரியவில்லை . சங்க காலத்திலேயே இக்கோட்டம் அமைக்கப்பட்டிருப்பதால் சங்க காலத்து மன்னர்களின் ஆதரவும் இருந்திருக்கும் என்று கருதலாம். குருபரம்பரையாக இங்கு போர்க்கலை உள்ளிட்ட 16 விதமான கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வந்ததாக கர்ணபரம்பரைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. சங்ககாலத்தில் மையப்படுத்தப்பட்ட அரசு இல்லாத காரணத்தால் ஊர் மன்றங்களும் , ஊர் அவைகளும், பொதியில் மன்றங்களும், இனக்குழு அமைப்பும் தனித்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மதுரைக்கு வெகு அருகாமையில் உள்ள இக்கோட்டம் ஊர் மன்றங்கள் போல இப்பகுதி மக்களின் வாழ்வில் மிக நெருக்கமாக இருந்திருக்கும் என்று தெரிகிறது.
இதற்குப் பிந்தைய கி.பி. ஆறாம் நூற்றாண்டு களப்பிரர் காலத்தில் மதுரையில் தாபதப் பள்ளியில் வாசுதேவன் கோட்டம் அமைக்கப்பட்டு அதற்கு அற நிவந்தம் அளிக்கப்பட்டது குறித்தும் பூலாங்குறிச்சி கல்வெட்டு குறிப்பிடுகிறது. அங்கு கிடைத்த இரண்டு கல்வெட்டுக்களுள் ஒன்று சேந்தன் கூற்றன் என்ற களப்பிர அரசன் ஆட்சியில் நூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் ஆண்டில் பதிக்கப்பட்டது. வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவனுமான எங்குமான் என்பவர் இரு தேவகுலங்களும், ஒரு கோட்டமும் எழுப்பிய செய்தியைக் கூறுகிறது.
அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகியோர் இம்மூன்று கோயில்களுக்கும் வேண்டியதைச் செய்வதாக ஏற்றுக்கொண்டனர். இக்கோயில்களில் வழிபாடு நடத்துபவரை நியமிக்கும் பொறுப்பு பாண்டங்கர், சேவுக்கர், விரும்மசாரிகள், தருமிகள், ஊர்க்காவல் கொண்டார் என்ற குழுக்களைச் சேர்ந்தது என்றும் அவர்களால் நியமிக்கப்படுவோர் தவிர பிறர் வழிபாடு நடத்தக்கூடாது என்றும் விதிக்கப்பட்டது . எனவே அந்தத் தேவகுலத்தைப் பாதுகாப்பதற்கும், அதில் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே உரிமை வழங்கப் பெற்றுள்ளதும் தெரிகிறது. ஆனால் தேவகோட்டத்தின் வழிபாட்டு உரிமை தொடர்பான செய்தி கிடைக்கவில்லை. மதுரைக்கு ஐம்பது கி.மீ தூரத்திலுள்ள பூலங்குறிச்சியில் மதுரையிலுள்ள வாசிதேவனார் கோட்டம் அமைக்கப்பட்டது பற்றிக்கூறுகிறது. எனவே வாசசிதேவனார் கோட்டம் போல அதற்கு முன்பே அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த மதுரைக்கு மேற்கே வெகு அருகாமையில் அமைந்த ஏகன் ஆதன் கோட்டத்திற்கும் களப்பிரர் காலத்தில் அரச ஆதரவு கிடைத்திருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். பூலாங்குறிச்சி கல்வெட்டுபோல இக்கோட்டம் குறித்த களப்பிரர் கால ஆவணம் ஒன்றும் இருந்திருக்க வேண்டும். அவ்வாவணம் கிடைத்தால் மதுரையை ஆண்ட களப்பிர அரசு பற்றிய வெளிச்சம் கிடைக்கும். அது தமிழர் வரலாற்றில் முக்கியத்துவம் மிகுந்ததாக இருக்கும். இனிமேல் அங்கு கிடைக்கும் வேறு ஆவணங்கள்தான் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.
மடங்கள்:
தமிழகத்தில் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை மடங்கள் அமைக்கப்பட்டதையும் மடங்களின் ( சமயகுருமார்கள்) செயல்பாடுகள் குறித்தும் அங்கு வெளியிடப்பட்ட பல்வேறு கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன.
கொடும்பாளூர் மூவர் கோவில் கல்வெட்டு” தபோராசியும் வித்யாராசியின் மாணவருமான ஆத்ரேய கோத்ரத்தில் பிறந்த, மதுரை நகரைச் சேர்ந்த வேதம் வல்ல காளாமுகக் குருநாதராகிய மல்லிகார்ச்சுனர் என்ற முனிவருக்கு வேளிர் அரசன் பூதிவிக்ரமகேசரி ( கி.பி. 945-970) மடம் ஒன்றை அமைத்துக் கொடுத்து பதினொரு கிராமத்தையும் பூசைக்குத் தேவையான சந்தனம், மலர்கள், தீபம், வெற்றிலை முதலியன தரப்பெற்றன என்றும் அம்மடத்தில் ஐம்பது துறவிகள் இருந்தார்கள் என்றும் ” கூறுகிறது.
திருவொற்றியூர் கல்வெட்டு குலோத்துங்க சோழன் மடத்தில் வழிபாடு செய்வோரில் நாளொன்றுக்கு ஐம்பது பேருக்கு உணவளிப்பதற்காக நிலப்பகுதி ஒன்றை வரிவிலக்கி மடப்புறமாக முதலாம் குலோத்துங்கன் அளித்தான் என்பதைப் பதிவு செய்துள்ளது. இதில் பக்தர்கள் அல்லது மடத்தில் குடியிருக்கும் சன்னியாசிகளுக்கு உணவளிப்பதோடு, வழிபாடு செய்தல், பக்திப்பாடல்களை ஓதுதல், கல்வி கற்பித்தல் போன்றவற்றையும் சில முக்கியப் பணிகளாக மடங்கள் செய்து வந்துள்ளன.
இம்மடங்கள் உருவாக்கத்தை நூற்றாண்டு வாரியாக ஆய்வு செய்து மடங்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டுள்ள நொபுருஹரோசிமா அவர்கள் தெரிவித்துள்ள கருத்து கவனத்துக்குரியது.
* ஒப்பீட்டளவில் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கி பதிமூன்றாம் நூற்றாண்டு வரை மடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
* பதிமூன்றாம் நூற்றாண்டு மடங்களுக்கு பக்தி இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறுகிறார். இம்மடங்களில் பல பக்தி இயக்கத்தின் முன்னோடிகளான அப்பர், ஞானசம்பந்தர் , சுந்தரர் ஆகியோரின் பெயரில் இயங்கின என்றும் இங்கு தேவாரப்பாடல்கள் ( திருப்பதியம்) , திருமுறை ஆகியவற்றை ஓதும் வழக்கம் இருந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
* பதினொன்றாம் நூற்றாண்டு வரை மடத்தை ஏற்படுத்தியவர்களிலும் ஆதரித்தோர்களிலும் பார்ப்பணர்களே முதன்மையாக இருந்துள்ளனர். ஆனால் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளிலும் அதன் பின்னரும் வெள்ளாளர், வணிகர், கைவினைஞர் போன்ற பார்ப்பணரல்லாதோர் மிகையாகக் காணப்படுவதை அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இடைக்காலத் தமிழகத்தில் உருவான மடங்களின் தன்மைக்கும் கிண்ணிமங்கலம் மடத்திற்கும் உள்ள தொடர்பு , இயங்குமுறை குறித்தும் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. இங்கு ஓரிரு வேறுபாடுகள் தெளிவாகத்தெரிகின்றன.
* மற்ற மடங்களில் தேவாரத் திருமுறைகள் , வைணவப் பாசுரங்கள் முற்றோதல் , வேதக் கல்வி ( எண்ணாயிரம் மடம்) , வழிபாடு போன்றவை நடைபெற்றிருக்க இங்கு கிண்ணிமங்கலத்தில் சித்தர் மரபின் ஓகம், மருத்துவம் , கல்வி, கலை, போர்ப்பயிற்சி, குரு பரம்பரை, குருகுலக்கல்வி, சமாதி அடக்கம் போன்ற மரபு பின்பற்றப்படுவதாகவும் தற்போதும் அம்மரபு வழக்கில் உள்ளது. (இதற்கு முன் 66 குருக்கள் இருந்ததாகவும் , அதன் தொடர்ச்சியாக தற்போது 67 வது குருவாக இருக்கும் அருளானந்த சுவாமிகள் கூறுகிறார்)
* அக்காலகட்டத்தில் உருவான மடங்களின் பெயர் கல்வெட்டுகளிலேயே மடங்கள் எனக் குறிப்பிட்டிருக்க ஏகநாதர் பள்ளிப்படை கல்வெட்டில் பள்ளிப்படை என்றும் வாய்மொழி வழக்கில் மடம் என்றும் வழங்கி வந்துள்ளது தெரிகிறது.( எனவே இதுவும் மடம் போன்று செயல்பட்டுவந்திருக்கலாம். )
* அதேபோல மற்ற மடங்கள் சைவ நாயன்மார்கள் மூவர் பேரில் அமைந்திருக்க , இது பழைய மரபின் தொடர்ச்சியாக ஏகனாதன் என்று மரபான பழைய பெயரிலே தொடர்ந்து அழைக்கப்பட்டிருக்கிறது.
* பரவலாகத் தமிழகத்தில் பார்ப்பணர்கள் அல்லாத மற்ற பிரிவினர் பதினொன்றாம் நூற்றாண்டுக்கு பின்தான் மடங்கள் அமைத்திருக்கிறார்கள் . ஆனால் இந்த ஏகநாதன் கோட்டம்/ பள்ளிப்படை வெகு காலத்திற்கு முன்பிருந்தே பார்ப்ப்பனர் அல்லாதவர்களின் நிர்வாகத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
* பக்தி இயக்கங்களின் செல்வாக்கில் உருவான மடங்களுக்கும் இதற்கும் அடிப்படையான வேறுபாடு இருந்திருக்க வாய்ப்புள்ளது.
தொன்மமும் வரலாறும்.:
———————————————–
தொன்மங்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசும் மாலினோவ்ஸ்கி ,” தொன்மங்கள் எப்போதும் வரலாற்றை சமூகமயப்படுத்தும் ” என்பார்.
ஏகநாதர் தொன்மம்:
—————————————————-
அட்டமா சித்துகள் தெரிந்த சித்தர் ஒருவர் நாகமலைப் பகுதியிலுள்ள நாகத்தீர்த்தப்பகுதியில் தங்கியிருந்திருக்கிறார். ஒரு முறை அபகுதியில் மாடு மேய்க்கும் சிறுவனிடம் தூர் இல்லாத ( அடிப்பாகம் இல்லாத ஓட்டையான ) கிண்ணத்தைக் கொடுத்து காராம்பசுவில் பால் பீச்சியெடுத்து வரும்படி கூற அச்சிறுவனும் அவ்வாறே கொண்டு வந்ததாகவும், பாத்திரத்திலிருந்து பால் சிறிது கூடச் சிந்தாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வதிசயத்தை அச்சிறுவன் மூலம் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அவரை அணுகி தமது கிராமங்களுக்கு வந்து அருளாசி வழங்கும்படி கேட்க , அதற்கு அவர் அந்தக் கிண்ணத்தை ஆகாயத்தை நோக்கி தூக்கி வீசி எறிந்து , அது விழும் ஊருக்கே தாம் வருவதாகக் கூறுகிறார். அதன்படி அவர் எறிய அக்கிண்ணம் மங்கலம்பட்டி என்ற இடத்தில் விழுந்ததாகவும் , அதன்படி அச்சித்தர் இங்கே வந்து தங்கி மக்களுக்கு அருள் வழங்கி வந்ததாகவும்
கிண்ணம் விழுந்த மங்கலப்பட்டியே கிண்ணி மங்கலம் என்று வழங்கப்பட்டது என்றும் தொன்மம் கூறுகிறது. அங்கு ஒரு குட்ட்டிச்சுவரில் மேடை அமைத்து அதில் அமர்ந்து மக்கள் கையில் எடுத்துவரும் மண்ணை அவர்கள் நினைக்கும் பொருளாக மாறும்படி செய்து மக்களுக்கு நன்மை செய்து அருளாசி வழங்கி வந்திருக்கிறார். ஒரு முறை அப்பகுதிக்கு மன்னன் வந்ததாகவும் , மக்கள் மன்னனுக்கு வழிவிடாமல் கூட்டமாக சித்தர்முன் கூடியிருந்ததாகவும் அதனைக்கண்டு கோபம் கொண்டு மொட்டைச் சுவரில். அமர்ந்திருக்கும் உனக்கு இவ்வளவு திமிரா என்று சித்தரை வெகுண்டிருக்கிறான் மன்னன். சித்தர் தான் அமர்ந்திருந்த மொட்டைச் சுவரை உடனே குதிரையாக மாற்றிவிட்டிருக்கிறார். அதனைக்கண்டு ஆச்சரியமும் கோபமும் அடைந்த மன்னன் தன் குதிரையுடன் போட்டிக்கு அழைத்திருக்கிறார். சித்தரின் குதிரை தரையிலும் வானிலுமாக சென்றதைப் பார்த்த மன்னன் சித்தரின் சக்தியையும் , தன் தவறையும் உணர்ந்து , அவருக்குப் பணிந்து தாம் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க , அதற்குச் சித்தர் தாம் சமாதியானவுடன் இவ்விடத்தில் கோயில் அமைக்குமாறும் , அக்கோயில் பணிகளுக்காக தம் குதிரை காலடி பட்ட ஊர்களைத் தானமாக வழங்கும்படியும் கூறியிருக்கிறார். அதன்படியே மன்னன் அவர் சீவசமாதி அடைந்தவுடன் கோட்டம் அமைத்து அதற்கு நிலங்களையும் வழங்கியுள்ளான். என்ற தொன்மக்கதை செவிவழியாக உள்ளது.
அதேபோல இம்மடத்தின் 67 ஆவது குரு அருளானந்த சுவாமிகள் கூறும் தொன்மம் சற்று மாறுபட்டதாக உள்ளது. தற்போது சமதியாகியுள்ள குரு சிறுவயதிலேயே பழனிமலைப் பகுதியின் குதிரையறு மலைப்பகுதியில் உள்ள புலிப்பாணி சித்தரிடம் கற்றுத் தேர்ந்து பின் சதுரகிரி மலையில் தியானம் செய்துகொண்டிருந்து பின் நாகமலை காக்கா ஊத்துப்பகுதியில் இருந்து வந்தாராம். அவர் ஜீவசமாதி அடைய விரும்பிய இடத்தைத் தேர்வு செய்ய தாம் வைத்திருந்த கிண்ணியை ஆகாயத்தில் வீசியிருக்கிறார். அக்கிண்ணி புவி ஈர்ப்பு விசை குறைவான இடத்தில்தான் வந்து நிற்குமாம். அப்படி தூக்கி வீசப்பட்ட கிண்ணி அங்கிருந்து 51காத தொலைவிலுள்ள இன்றைய கிண்ணிமங்கலம் உள்ள இடத்தில் ஒரு நாகப்புத்தின் மேல் வந்து நின்றதாம். கிண்ணியைப் பின்பற்றி வந்த அவரது சீடர்கள் விவரத்தை குருவிடம் கூற , குரு தம் சக்தியால் அந்த ராஜநாகத்தை ஜீவசமாதி அடையச்செய்து அதனை அடக்கம் செய்த இடத்திலே தாமும் நிருவிகற்ப முறையில் ஜீவசமதி அடைந்ததாகவும் கூறுகிறார். இந்த மடத்தோடு புலிப்பாணி சித்தரையும் அவரது சீடர்களையும் பல வகையில் இணைக்கிறது இவர் கூறும் தொன்மம்.
கிண்ணி/கிண்ணம்:
ஊர்ப்பெயர் ‘கிண்ணிமங்கலம்’ என இருப்பதோடு அங்கு கிடைத்த வட்டெழுத்துக் கல்வெட்டில் கிண்ணம் போன்ற அமைப்பும் பொறிக்கப்பட்டுள்ளது. அங்கு கிடைத்த கல்வெட்டில் கிண்ணம் செதுக்கப்பட்டிருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. பலர் இதனை மருத்துவக்கிண்ணத்தோடு மட்டும் சுருக்கிப் பார்க்கின்றனர். ஆனால் கிண்ணம் என்பது துறவு மரபோடும் , தாந்திரிக மரபோடும் தொடர்புடையது.
குறுந்தொகைப் பாடல் ஒன்று இளமாணவன் ( இளந்துறவி) பற்றியும் இரந்துண்ணும் மரபு பற்றிய செய்தியையும் ஊர் மன்றத்திற்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் கூறுகிறது.
அன்னாய்! இவன் ஓர் இள மாணாக்கன்;
தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ?
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே. ( குறு; மரு 33)
இப் பாடல் குரு – மாணவர் பரம்பரை ; இரந்துண்ணும் துறவறம் ஆகியவற்றை உள்ளார்ந்து குறிப்பிடுகிறது. இரந்துண்ணலுக்கும் கிண்ணத்துக்கும் உள்ள நெருக்கம் முக்கியமானது.
ஓரிற் பிச்சையார் என்ற சங்கப்புலவர் இயற்றிய குறுந்தொகைப் பாடல் அறிவர்கள் உடலில் உயிர் ஒட்டியிருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் பிச்சையேற்றதையும் அவர் வைத்திருந்த நீர்ப்பாத்திரத்தையும் பற்றிக் குறிப்பிடுகிறது.
” ஆசுஇல் தெருவின் ஆசுஇல் வியன்கடை,
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர்இல் பிச்சை ஆர மாந்தி,
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ, ” (குறு 277).
குற்றமற்ற தெருவில் குற்றமற்ற அகன்ற வாயிலில் செந்நெல் சோற்றுத் திறளை நரை எருமையின் வெண்ணெய்யோடு என் ஒரு மனைக்கண்ணே அப்பிச்சை முழுதும் உயிர் உடலோடு பொருந்தியிருப்பதற்காக உண்டு பனிக்காலத்திற்கு ஏற்ற, விரும்பத்தக்க்க வெப்பத்தோடு கூடிய மெல்லிய நீரை பாதுகாப்புடன் கூடிய பாத்திரத்தில் ( சேமச் செப்பில் ) பெற்று வாழ்வாயாக! என்கிறது அப்பாடல்.
இங்கு செப்பு என்பது சிமிழ், ஒரு வகைக்கிண்ணம் ( பாத்திரம்) , நீர்க்குடுவை போன்ற பொருள்படுகிறது.
அதேபோல் தாந்திரமரபுக்கும் கிண்ணத்திற்கும்.தொடர்புண்டு. தொல்காப்பியம் புறத்திணைக்கு ( நூ எண் 16) விளக்கமளிகும் நச்சினார்க்கினியர் “கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவரென்றுணர்க” என்கிறார். அகத்திய முனிவர் சித்தர் மரபில் வைத்து எண்ணப்படுபவர். கும்பமுனி என்று அறியப்படுபவர். இங்கு கலசம்/ கும்பம் என்பது தாந்திரீகத்தின் குறி என அனைவரும் அறிவோம். பெருங்கற்படைச் சின்னத்தின் தாழியும் தாந்திரீகத்தின் குறியீடுதான் என்றும் அறிவோம். சித்தர் மரபிற்கும் தந்திரீகதிற்கும் தொடர்புண்டு. எனவே இங்கு கிண்ணம் என்பதை தாந்திரீகக் குறியீடாகவும் கருதலாம். இங்கு ஏகன் ஆதனுக்கும் கிண்ணிக்கும் உள்ள தொடர்பை இலக்கியம் மற்றும் தொன்மங்களின் வழி இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
எனவே செல், போ, நட, கழல் போன்ற பொருள்தரக்கூடிய ஏகன் என்ற பெயருக்கும் அக்கிண்ணத்திற்கும் உள்ள தொடர்பை நோக்கினால் அவர் ஒரு துறவி என்பதும் அக்கிண்ணம் இரந்துண்டு வாழும் துறவியின் நீர்ப்பாத்திரமாகவோ/ சிமிழாகவோ ; தமிழர் மரபின் தாந்திரீகக் கோட்பாட்டோடோடு தொடர்புடைய நீர்க்கரகமாகவோ இருக்கலாம் என்று கருதலாம்.
அதே நேரத்தில் சிவன் நடராசராகவும் பிச்சாடனாராகவும் கருதப்பட்டதும் பிற்கால ஏற்பாடாகும். ஏனென்றால் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் சிவன் வழிபாடு உருப்பெற்றிருக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பக்தி இயக்கத்திற்கு விதையூன்றிய காரைக்காலம்மையார் வாழ்ந்த ஆறாம் நூற்றாண்டில் சிவன் பெருந்தெய்வமாக உருப்பெறவில்லை. சுடலையின் கபாலத்தை ( மண்டையோட்டை) ஏந்திப் பிச்சையெடுக்கும் கபாலிகர், பாசுபதர், காளாமுகர், வாமர், பைரவர், மாவிரதர் போன்ற வெவ்வேறு வகையில் நாட்டார் சமய வழிபாட்டு மரபில்தான் சிவனை வணங்கி வந்தனர். காரைக்காலம்மையாரே தம்மைப்பேய் மகளிராகப் படிமப்படுத்திக் கொண்டு சிவனை சுடலையில் சுடலைப்பொடி பூசி நர்த்தனமிடும் நடராசராய் உருவகித்தார். இந்த நடராசர் வடிவம் பின்னால் நாவுக்கரசரால் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நடந்தே வந்த கண்ணகியைச் செல்லத்தம்மனாகக் கருதுவதும் இங்கு நினைவு கூறத்தக்கது. காவிரிக்கரையிலிருந்து கொங்குப் பகுதிக்குச் சென்றதாக ( செல்) கொங்குப் பகுதியில் பரவலாக வழிபாட்டிலுள்ள செல்லாண்டியம்மன் வழிபாடும் கவனிக்கத்தக்கது இங்கு கிண்ணி மங்கலத்தில் ஏகநாதர் தற்போது அருள்மிகு ஏகாம்பரநாதர் சமேத ஆனந்தவள்ளியம்மன் என்ற அம்மன் வழிபாட்டோடு இணைத்து வழிபடப்படுவதும் கவனிக்கத்தக்கது. . செல்லி, செல்லாயி, செல்லாண்டியம்மன், செல்லாண்டி ஆகியவற்றை இம்மரபோடு இணைத்துப் பார்க்கவேண்டும்.
ஆக ஏகன் ஆதன் என்பது தொல்தமிழர் சமய மரபுகளில் ஒன்றான இரந்துண்டு கிண்ணி / குடுவை/ சிமிழ் / நீர்க்கரகம் வைத்திருந்த (செல்லாண்டி, பிச்சாண்டி) ஆதன் என்ற அறிவருக்கு / துறவிக்கு / சித்தருக்கு எடுக்கப்பட்ட நினைவுக் கோட்டமாக இருக்கலாம் எனக் கருதவேண்டும்.
அரசிடமிருந்து இறையிலியாக நிலங்கள் வழங்கப்பட்டிருப்பது கல்வெட்டு மூலமும் , ஏகன் ஆதன் கோயில் தொன்மம் மூலமும் (மன்னனுக்கும் சித்தருக்கும் நடந்த குதிரைப்பந்தயத்தின் மூலம் குதிரை சென்று வந்த கிராமங்களை கோயில் நிலமாக வழங்கியதைக் கூறும் தொன்மம்) தெரிகிறது. அதே நேரத்தில் ஆரம்ப கட்டத்தில் இக்கோட்டத்திற்கும் மன்னனுக்கும் இருந்த முரணை மறைமுகமாக இத்தொன்மம் குறிப்பதாகவும் கருதலாம்.
மன்னனால் நிலம் இறையிலியாக கொடுக்கப்பட்ட காலமும் இடைக்காலமாக ( ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு ) இருப்பதால் ஒருவேளை மன்னனுக்கும் சித்தருக்குமான இடைக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் முரணைக் குறிப்பதாகத் தொன்மத்திறனாய்வின் மூலம் ஊகித்தால் பிழையாகாது. அதே நேரத்தில் அத்தொன்மம் சித்தருக்கு அப்பகுதி மக்களின் பேராதரவு இருப்பதையும், மன்னன் செல்லும் பாதையை அடைத்ததையும் குறிப்பிடுகிறது. மதுரையில் இடைக்காலத்தில் ஏற்பட்ட ஆட்சி களப்பிரரை வீழ்த்தி கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் உருவாக்கிய வைதீகச் செல்வாக்கு மிகுந்த ஆட்சியே என்பதையும், தற்போது களப்பிரர் என்று சொல்லப்படுபவர்களை வெளியிலிருந்து வந்த அரசமரபாகக் கருதாமல் இங்கிருந்த இனக்குழு மக்களின் ஆட்சியிலிருந்து தேட வேண்டும் ( முனைவர் ஆ.பத்மாவதி) என்ற ஆய்வு முறை வளர்ந்து வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மதுரையின் மைய ஆட்சிக்கும் சுற்றியிருக்கும் இனக்குழு மக்களுக்கும் உள்ள முரண் பற்றியும் வரலாற்றிலும் தொன்மத்திலும் உள்ள தரவுகளையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
இத்தொன்மம் சித்தர் நாகமலை நாகதீர்த்தம் பகுதியிலிருந்து வந்ததாகக் கூறுகிறது. இந்த நாகத்தீர்த்தம் சங்ககால இலக்கியம் , கொங்கர்புளியங்குளம் குகைக்கல்வெட்டு, களப்பிரர் பற்றிப்பேசும் வேள்விக்குடி செப்பேடு, கழுவேற்ற அனல்வாதம் புனல்வாதம் ஆகியவற்றோடு தொடர்புடைய பாகனூர் கூற்றத்தோடு தொடர்புடைய பகுதி என்பதும் கவனிக்கத்தக்கது. சித்தர் வந்தடைந்த கிண்ணிமங்கலம் இடைக்காலத்தில் ( கி.பி. 8-13 ஆம் நூற்றாண்டு) தென்கல்லகநாட்டிலோ அல்லது மாடக்குளக்கீழ் பகுதியிலோ இருந்திருக்கலாம். ஆனால் நாயக்கர் ஆட்சியில் உறுதியாக தென்கல்லக நாட்டோடு சேர்ந்துள்ளது தெரிகிறது.
களப்பிரர் ஆட்சியில் மதுரைப் பகுதியில் தேவகோட்டம் அமைக்கப்பட்டதும் , ஏகநாதர் கோட்டத் தொன்மத்தில் ஆரம்பத்தில் மன்னர் முரண் பேசப்படுவதும், கோட்டத்தின் குருகுலமுறை, கற்கை நெறி வைதீக மடங்களிலிருந்து மாறுபட்டு இருப்பதும் பார்ப்பணர் அல்லாதவர்களோடு தொடர்புடைய மடமாக இருப்பதும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்ய வேண்டியவையாகும்.
இங்கு மக்களிடையே நிலவும் ஏகநாதர் தொன்மம் இங்கு கிடைத்த கல்வெட்டு உள்ளிட்ட தொல்லியல் வரலாற்று ஆவணங்களை சமூகவயப்படுத்தி இருக்கின்றன என்பதை அறியமுடிகிறது.
தமிழரின் அறிவர் மரபே சித்தர் மரபு:
மருத்துவம், மாந்திரீகம், தாந்திரீகம், கணியம், நாடிசாத்திரம், இரசவாதம் இவற்றோடு வியப்பூட்டும் செயல்களைச் செய்பவரையும், துறவு வாழ்க்கை மேற்கொள்பவரையும் மக்கள் சித்தர் என அழைத்தனர்.
சங்க இலக்கியத்தில் இத்தகைய வியப்பூட்டும் செயல் பற்றிய குறிப்பு உள்ளது.
குறுந்தொகைப் பாடல் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுவதாக அமைந்துள்ளது ,
நிலம் தொட்டுப் புகாஅர் ; வானம் ஏறார்; விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்;
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ? – நம் காதலரே ( குறு 130)
தோழி நம் தலைவர் சித்தி பெற்ற சித்தரைப் போல பூமியைத் தோண்டிப் புகார். ஆகாயத்தின்கண் ஏறார். குறுக்கிடுகுன்ற பெரிய கடலின் மேல் காலினால் நடந்து செல்லார் . நாடுகள் தோறும் ஊர்கள் தோறும் முறையாகக் குடிகள் தோறும் ஆராய்ந்தால் அகப்படாமல் தப்புவோரும் உளரோ, இரார் ‘ என்பது இப்பாடலின் பொருள் இதன் மூலம் சங்க காலத்தில் சித்தர்களின் தன்மைகளைத் தெளிவுபடுத்தியிருப்பது தெரிகிறது.
இதனையே பின்னால் மணிமேகலை,
” நிலத்தில் குளித்து , நெடுவிசும்பு ஏறி சலத்தில் திரியும் ஓர் சாரணன் ” என்று கூறும்.
தமிழர் மரபில் சித்தர் மரபு என்று அழைக்கப்பட்டது அறிவர் மரபே என்று அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளனர். க.கைலாசபதி அவர்கள், ” சித்தர்கள் என்றால் அறிவர் என்பது பொருள் ; விளங்கிய அறிவுடையவர் எனலாம்” என்கிறார். க.சு.பிள்ளை, சாமி.சிதம்பரனார் போன்றோரும் சித்தர்களைப் பண்டைக் காலத்து அறிவர்களாகவே குறித்துள்ளனர்.
தொல்காப்பியம் அறிவன் மரபு பற்றிய முக்கியமான செய்தியை வழங்கியுள்ளது.
” மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்” (தொல், புறத் 16) என்றுகூறும் . அகத்தியர் உள்ளிட்ட சித்தர் மரபே அறிவர் மரபு எனநச்சினார்க்கினியரும் குறிப்பிட்டுள்ளதை ஏற்கனவே பார்த்தோம்.
அதேபோல சித்தர் நெறிக்கு தந்திர நெறிமுறைகளே அடிப்படையாக இருப்பதையும் தமிழர் பண்பாட்டோடு தொடர்புடைய தந்திரக் கோட்பாடு , தந்திர நெறி பற்றிய செய்திகள் சித்தர் பாடல்களில் இருப்பதையும் அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளனர். சித்தர் நெறியை இந்தியா முழுதுமுள்ள தாந்திரீக நெறியுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ள வி. கமில்சுவலபிள் பிற தாந்திர நெறிகளுடன் சித்தர் நெறி வேறுபட்டு நிற்கும் இடங்களையும் சுட்டியுள்ளனர்.
அதேபோல தமிழ்ச்சித்தர்களைச் சீனத்து தாவோயிகளுடனும் இசுலாமிய சூஃபிகளுடனும் ஒப்பிட்டு க.கைலாசபதி க.நாராயணன் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். போகர், புலிப்பாணி ஆகியோர் சீனா, இந்தியா இரு நாடுகளோடும் தொடர்புடையவர்களாகக் கூறுவர். போகர் தனது பாட்டில் அவர் சீனா, எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்ததாகக் குறிக்கிறார்.
சித்தர் மரபில் நாதசித்தர் என்ற ஒரு மரபு உள்ளது. அதில் 84 பேர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் சத்தியநாதர், சகோதரநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளிநாதர் , மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர், ஆகிய ஒன்பது பேர் நவ சித்தர்கள் என்று சிறப்பிக்கப்படுகின்றனர். இவற்றுள் கோரக்கர், மச்சமுனி, பத்ரகிரியார் போன்ற தமிழ் சித்தர் பட்டியலும் உண்டு. (கண்ணதாஸ்.பெ 2013, பக்8).
இந்நிலையில் கிண்ணிமங்கலம் கல்வெட்டு மூலம் ஆதன் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்தே நாதன் என்ற சொல் பிறந்த இருக்கும் என்பதை அறியமுடிகிறது. எனவே கன்படயோகிகள் ( kanphata yogis) என்று அழைக்கப்படும் ‘நாத சித்தர் ‘ என்பது ‘ஆதசித்தர் ‘ எனவே இருக்க வேண்டும். எனவே நாத சித்தர் மரபு என்பது ஆதர் சித்தர் மரபு என்ற தமிழ் மரபாகலாம்.
எனவே நவ சித்தர்களைக் கீழ்க்கண்டவாறு கூறலாம்.
- சத்தியன் ஆதர்,
- சகோதரன் ஆதர்,
- ஆதின் ஆதர்,
- அனாதி ஆதர்,
- வகுளி ஆதர்,
- மதங்கன் ஆதர்,
- மச்சேந்திரன் ஆதர்,
- கடேந்திரன் ஆதர்,
- கோரக்கன் ஆதர்
கிண்ணிமங்கலத்தில் கிடைத்த ஆதன் கல்வெட்டும் சித்தர்மரபோடு இணைந்து வருவதால் தொல் தமிழர் சித்தமரபைக் கண்டடைய முக்கியமான தரவாக அமைகிறது. கிண்ணிமங்கலத்தின் தொன்மம் குறித்துப் பேசுகிற தற்போதைய 67 வது குரு போகர், புலிப்பாணிசித்தர், குண்டலினி ஓகத்தை இம்மடத்தோடு இணைத்துப் பேசுகிறார். கிண்ணி பால் கரக்கும் கிண்ணியோடு இணைத்தும் பேசுகிறார். பல்கலை சார்ந்த அறிவர் மரபான சித்தர் மரபிலிருந்து ஓகமரபு மற்றும் தனித்துப் பிரிக்கப்பட்டதும் வரலாற்றில் நிகழ்ந்துள்ளதையும் அறியமுடிகிறது.
குறிப்பாக இம்மடத்தின் குரு கூறும் தொன்மத்தில் அக்குரு கிண்ணியோடு அங்கு வருவதற்கு முன்பே அங்கு ராஜநாகம் யோகத்தில் இருந்தது என்று கூறுகிறார். அந்த ராஜநாகம் சமாதியடைந்ததற்குப் பின்னால்தான் சித்தர் அங்கே வருகிறார். இத்தொன்மத்தில் கூறப்படும் ராஜநகம் என்பதைப் பாம்பாகக் கருதவேண்டியது இல்லை. ஏனென்றால் ஓகமர்க்கத்தில் பாம்பு என்பதும் இரண்டு நாகம் சுருளாய் பிணைந்திருப்பதும் ஓகமார்க்கத்தின் குறியீடு. எனவே புலிப்பாணிச்சித்தரின் சீடரான இச்சித்தர் இங்கு வருவதற்கு முன்பே ஒரு சித்தர் மரபு இங்கே இருந்துள்ளது என்பதன் குறியீடாகவே இதைக்கருத வேண்டும். எனவே சித்தர் மரபு என்பது தமிழரின் தொன்மையான மரபென்பதை அறியவேண்டும்.
பொதுவாக மு.அருணாச்சலம், டி.வி.சதாசிவப்பண்டாரத்தார் போன்ற ஆய்வாளர்கள் சித்தர்மரபு கிபி. ஐந்தாம் நூற்றாண்டு முதலே தொடங்குவதாகக் கருதுவர் . நீலகண்ட சாஸ்திரியும் கால்டுவெல்லும் 16,17 ஆம் நூற்றாண்டு என்று கருதுவர் . சித்தர் மரபில் பழமையானவராகக் கருதப்படும் திருமூலர் காலத்திலேயே சித்தர் மரபைத் தொடங்கும் போக்கு உண்டு. ஆனால் நாம் மேலே சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் அறிவர் என்ற சித்தர் மரபு இருந்து வந்தததைப் பார்த்தோம் . அதேபோல சித்தர்மலைக் கல்வெட்டில் ஆதன் என்ற சித்தர் மரபோடு தொடர்புடைய பெயரையும் பார்த்தோம். சித்தர் என்ற அறிவு மரபின் கல்வெட்டான கிண்ணிமங்கலம் கல்வெட்டு சங்ககாலத்தது என்றும் பார்த்தோம்.
எனவே சித்தர் மரபை 5-6 ஆம் நூற்றாண்டிலிருந்து பார்க்கும் பார்வையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சித்தர் மரபை குண்டலினியோகச் சித்தர்,மருதுவச் சித்தர், கணியச் சித்தர் என்று தனித்தனிக் கூறாகக் கருதும் போக்கு பிற்காலத்தில் ஏற்பட்டுவிட்டது. ஆனால் தமிழர் சமயமரபு இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு, ஆவிவழிபாடு, முன்னோர் வழிபாடு, பெருங்கற்கால நினைவுச்சின்ன வழிபாடு போன்றவற்றின் தொடர்ச்சியாக உருவான பல்துறை அறிவும் சேர்ந்த நிறுவன மரபாகவே சித்தர் என்ற அறிவர் மரபு தமிழ்நாட்டில் உருப்பெற்றிருக்கிறது. பின்னால் உருவான பல்வேறு நிறுவனச்சமயங்கள் பலவும் இவ்வறிவு மரபிலிருந்தே உள்வாங்கி உருப்பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பாக சம்பந்தரின் கபாளிகம் கோலோட்சிய காலத்தில் அரசின் ஆதரவைப்பெற்று பிற சமயங்களைத் தாக்குதல் தொடுத்தபோது மாற்று மரபுகள் தம்மை மறைத்துக் கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் மரபுடன் ஐக்கியமாகியிருக்க வேண்டும். சித்தர்களை மறை ஓதும் சித்தர் என்று சம்பந்தர் பாடியதும் இங்கு கவனிக்கத்தக்கது. ” தேவராயும் அசுரராயும் மறைசேர் சித்தர் செழுநாவராயும் ” ( திருமுதுகுன்றம் :1). சித்தர்களை கபாளிகம் உள்வாங்கிவிட்டதையே இது காட்டுகிறது.
கிண்ணிமங்கலம் மடத்தின் சுற்றுப்புறமும் முக்கியத்துவம் மிகுந்த பகுதியாக இருப்பதை அறியமுடிகிறது. இப்பகுதிக்கு ஐந்து கி.மி தொலைவிற்குள் அருகாமையில் சித்தாலை, சாத்தங்குடி போன்ற ஊர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சித்தாலை என்பது சீத்தலை ( சீத்தலச் சாத்தனார்) என்றே அண்மைக்காலம் வரை இருந்ததாகவும் பின் வழக்கில் சித்தாலை என ஆனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன . அதே போல சாத்தங்குடி என்பது சாத்தனாரோடு தொடர்புடையது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. ( திரு இருளப்பன் அவர்கள் தெரிவித்த தகவல்).
இப்பகுதிகளில் கிண்ணிமங்கலம், சித்தாலை, சாத்தங்குடி, திடியன், கொங்கர்புளியங்குளம், அமணமலை, முத்துப்பட்டி, திருப்பரங்குன்றம் , மலைப்பட்டி போன்ற எழுத்து வரலாற்றிலும், சமய வரலாற்றிலும் முக்கியத்துவம் பெற்ற இடங்கள் அருகருகே இருப்பதும் அவை இரும்புக்காலத் தொடர்ச்சியுடைய ஊர்களாக இருப்பதும் இபகுதியின் முக்கியத்துவத்தைக் குறிப்பனவாகும்.
சித்தர் மரபோடு நெருக்கமான இடங்கள் இப்பகுதியில் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கிண்ணிமங்கலத்திற்கு அருகில் உள்ள திடியன் என்ற ஊர் சங்க காலத்தில் திடிஇல் என்று அழைக்கப்பட்டதும் , அங்கு குகைப்படுக்கை இருப்பதும், மேட்டுப்பட்டி குகைக்கல்வெட்டில் திடிஇல் அதன் என்ற பெயரும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் என்ற பெயர் அதிகமாகக் கிடைத்த மேட்டுப்பட்டி மலை, சித்தர்மலை என்றே அழைக்கப்படுவதும் , இம்மலைக்கு எதிர்புறம் வைகை ஆற்றின் வடகரையில் இரும்புக்கால மற்றும் வரலற்றுக்காலத் தடயமுள்ள சித்தர்கள் நத்தம் என்ற ஊர் இன்றும் இருப்பதும் கவனிக்கத்தக்கது. அதேபோல் புதுக்கோட்ட்டை குகைப்படுக்கை சித்தர் அன்னவாசல் ( சித்தன்னவாசல்) என அழைக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது.
குகைப்பள்ளிகளில் ‘அதன்’ என வாசிக்கப்பட்டது ‘ ஆதன்’ என வாசிக்கப்படக்கூடியதாக இருந்தால் அதன் பொருள் வெறொன்றாக இருக்கும். எனவே கிண்ணிமங்கலத்தில் இரும்புக்கால தொல் எச்சங்களும் எழுத்து பொறிக்கப்பட்ட நாணயம் உள்ளிட்ட தொல் பொருட்கள் கிடைத்திருப்பதாலும் கூடுதல் ஆய்வுகள் செய்தால் வரலாற்றின் மூடப்பட்ட பக்கங்கள் திறக்கும் சாத்தியம் உண்டு.
இன்றைய மதுரையின் கிழக்குப் புறநகர்ப் பகுதி (கீழடி ) தொழிற்பகுதியாகவும் மேற்கு புறநகர்பகுதி சமய மையங்களாகவும் அமைநது மதுரையின் பொருளியல் பண்பாட்டு வெளியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்
நிறைவாக:
——————————————————————–
தமிழர் தொல் சமயமரபுகளும் , நாட்டார் வழிபாட்டு மரபுகளும் ஆசிவகத்தின் கூறுகள் பலவும் சிவனியத்தால் உள்வாங்கப்பட்டுள்ளன என்பதை நன்கறிவோம். அதுபோல தொல் தமிழரின் சமய மரபில் உருவான இக்கோட்டம் காலப்போக்கில் ஏற்பட்ட ஆட்சி, நிர்வாக, பண்பாட்டுச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப சில வைதீக வழிபாட்டு முறைகளை உள்வாங்கியிருக்கலாம். ஆனாலும் இங்கு தமிழர்களின் தனித்த அறிவு மரபான சித்தர்மரபு பின்பற்றப்பட்டு வந்திருப்பதும் குரு + மாணவக் கல்வி மரபின் எச்சம் இருந்திருப்பதும் தெரிகிறது.
எனவே இம்மடத்தில் அகழாவு செய்து பார்த்து கிடைக்கும் தடயங்களையும், தற்போது இருக்கும் சான்றுகளையும் , எஞ்சிய கல்வெட்டு, ஓலைச்சுவடிகள் போன்ற எழுத்து ஆவணங்களையும் குருபரம்பரையாகச் சேகரித்து வைத்துள்ள வய்மொழித் தகவல்களையும் இணைத்து ஆய்வு செய்யும் பொழுது சைவம் , வைணவம் போன்ற வைதீக மரபிற்கும் ; வட இந்திய வேதமரபிற்கும் ; சைனம், பவுத்தம் போன்ற அவைதீக வடமரபுக்கும் , அப்பாற்பட்ட தொல்தமிழரின் அறிவு மரபையும் , சமய மரபையும் அறியமுடியும். கூடவே மங்கலாகத் தெரிகிற பாண்டிய நிலத்தின், மதுரையின் பல்வேறு ஆட்சி மாற்றங்களின் வரலாற்றிலும் வெளிச்சம் கிடைக்கலாம்.
* ஏகன் ஆதன் கோட்டத்தை சங்க காலத்து அறிவர் மரபின் ஆக்கமாகக் கருதலாம்.
* ஏகன் என்பது ஏகு என்ற வினைச்சொல்லின் அடியாகப் பிறந்த துறவியை/சித்தரை/ அறிவரைக் குறிப்பதாகும்.
* ஆதன் என்பது அறிவர் மரபின் ஓகமுறையோடு தொடர்புடைய பெயராகும்
* கிண்ணி/ கிண்ணம் என்பது துறவி / சித்தர்/ அறிவர் வைத்திருக்கும் இரந்துண்ணும் கிண்ணம்/ தந்திர முறையின் நீர்க்கரகம் தொடர்புடையது.
* அறிவர்/ சித்தர்/ துறவர் ஆதன் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுக்கோட்டம் ஓகம், கணியம், வானியல், மருத்துவம், எண், எழுத்தறிவு, இசைக்கலை, போர்க்கலை போன்ற கலைகள் கற்பிக்கும் மையமாகச் செயல்பட்டிருக்கும் ஒரு அறிவர் கூடமாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.
* இடைக்காலத்தில் பள்ளிப்படையென்று பெயர் மாற்றம் பெற்றிருக்க வேண்டும். வரலாற்றில் பெயர் மாற்றம் என்பது பெயரளவிலான மாற்றம் மட்டுமல்ல. அது அரசியல், சமூக, பொருளியல், பண்பாட்டு மாற்றத்தை உள்ளடக்கியது.
* ஏகன் ஆதன் என்ற தனிச்சொற்கள் ஏகனாதான் என கூட்டுச்சொல்லாக மட்டும் மாறவில்லை. ‘ நாதன் ‘ என்ற சொல்லின் மாற்றம் மாற்று அரசியல், மொழி, சமய ஊடுருவல், இணைவு, விழுங்கல் என்ற நீண்ட வரலாற்றைப் பிரதிபலிப்பவை.
* இந்திய இலக்கிய மரபில் பல்வேறு இலக்கிய வகைமைகள் இருந்தாலும் சங்க இலக்கியம் எப்படி தனித்த இலக்கிய அறிவு மரபாக இருக்கிறதோ அதுபோல இந்திய அளவில் பல்வேறு தாந்திர, சித்த மரபுகளும், அவைதீக மரபுகளும் இருந்தாலும் தொல் தமிழ் மரபு தனித்த / அறிவர் / தாந்திரீக/ சித்தர்/ அவைதீக மரபாக இருந்திருக்கத்தான் வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேலாக தமிழர் சமய மரபின் ஏற்ற இறக்கம் , உரு மாற்றம், போன்ற நீண்ட அசைவியக்கத்தை வெளிப்படுத்தும் வகைமாதிரியாக எஞ்சி நிற்கிறது கிண்ணிமங்கலம் ஏகன் ஆதன் கோட்டம் தமிழர் வரலாற்றுக்கதவைத் திறக்கட்டும்..
———————————.
இருபதாண்டுக்கும் மேலாக வெளியெங்கும் தேடித்திரிந்த தொல்லியல் ஆய்வாளர் தோழர் காந்திராசனின் கால்களும் கண்களும் கரங்களும் ஏதன் ஆதன் கோட்டத்தைத் திறந்திருக்கின்றன. அவருக்கும் அவரோடு இணைந்து களப்பணியில் கலந்து கொண்ட இராசவேல், ஆனந்தன் ஆகியோருக்கும், இக்கல்வெட்டையும் இம்மரபையும் காத்து வந்த அவ்வூர் மக்களுக்கும் மடம்/ கோவில் நிர்வாகத்துக்கும் மடத்தின் 67 வது குரு அருளானந்த சுவாமி அவர்களுக்கும் நன்றி…
பாவெல்பாரதி @ ப.மோகன்குமாரமங்கலம், அமைப்பாளர், வைகை தொல்லியல் கழகம்.
07/ 072020
பயன்பட்ட நூல்கள்:
- இரத்தினக்குமார். நா., பெரியசாமி.பெ.க. தொல்லிய்ச்ல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை. கருத்துபட்டறை 2018.
- இரவீந்திரன் ந. , மதமும் மார்க்சியமும் தமிழ்ப் பண்பாட்டுப்பார்வை, சவுத்விசன் வெளியீடு, 2006
- இளங்கோவன்.நாக., குணவாயில் கோட்டம் , கட்டுரை, நாணயம் வலைப்பக்கம்.
- கண்ணதாஸ்.பெ, நட்டகல்லும் பேசுமோ- சித்தர்பாடல்கள் ஓர் அறவியல் நோக்கு
- சங்க இலக்கியத்தொகுப்பு நூல்கள், என்.சி.பி.எச், 2007
- புலியூர்கேசிகன் , சிலப்பதிகாரம்,ஜீவா பதிப்பகம், 2013,
- புலியூர்கேசிகன் , மணிமேகலை, ஜீவா பதிப்பகம், 2013,
- தியாகராஜன் இல. இரவிச்சந்திரன்.பெ.( பதிப்பாசிரியர்கள்) , கங்கை கொண்ட இராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்கழகம் வெளியீடு, 2017,
- நெடுஞ்செழியன் க., சக்குபாய்.இரா , . சங்ககாலத்தமிழர் சமயம், பாலம், 2006.
- நொபுரு கராஷிமா ( தொகுத்தவர்) தமிழில் முனைவர் ப.சண்முகம் (பதிப்பாசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம்) சுருக்கமான தென் இந்திய வரலாறு பிரச்சனைகளும் விளக்கங்களும். அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் , பொள்ளாச்சி, 2018.
- பக்தவத்சலபாரதி, இலக்கிய மானிடவியல், அடையாளம் வெளியீடு 2014.
- பாசம்.ஏ.எல், வியத்தகு இந்தியா, தமிழாக்கம் செ.வேலாயுதம் பிள்ளை , மகேசுவரி பாலகிருட்டிணன் விடியல் பதிப்பகம் 2015.
- மகாதேவன் .வே , கொடும்பாளூர் வேளிர் வரலாறு, அருள் பதிப்பகம் சென்னை , 2009.
- முனைவர் .கண்மணி கணேசன். ச, சிலப்பதிகாரம் காட்டும் வழிபாட்டிடங்கள், மின்தமிழ் வலைப்பக்கக் கட்டுரை .
- முனைவர் பவானி, பூலாங்குறிச்சி கல்வெட்டு.
- பாவெல் பாரதி , கண்ணகி கோவிலும் வைகைப் பெருவெளியும், கருத்துபட்டறை, மதுரை, 2017
- பாவெல் பாரதி , வைகை வெளி – தொல்லியல், மானிடவியல், வரலாறு கருத்துபட்டறை, மதுரை, ( அச்சில் உள்ள நூல்)
- பூங்குன்றன்.ர. நடுகல் கல்வெட்டுகள், Heritage Treasure Publishers 2017
- ;ராஜவேலு க , குவிரன், ஆதன் வடமொழிச் சொல் அல்ல! தமிழ்ச்சொல்லே! இணையக்கட்டுரை, தொகுப்பு : தமிழ் கோ. விக்ரம்
- ராஜேந்திரன்.பொ., சாந்தலிங்கம்.பொ. கல்வெட்டுக்கலை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வுவ்மையம், மதுரை, 2013.
- ஜெயக்குமார் பா. தென்கல்லகநாடு தொன்மையும் சிறப்பும், தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர் 2016.
- ஜெயபாலன்.கோ, இராஜராஜன் பள்ளிப்படை, ஸ்நேகா பதிப்பகம், 2017.
- அகராதிகள், வலைப்பக்கங்கள்
- .Karashima, N, Y.Subburayalu, snd P.shanmugam 2010, Mathad and Medivel Religious Movement in Tamilnadu: An epigraphical study , Indian historical Review 37, no 2 25. Karashima, N, Y.Subburayalu, snd P.shanmugam
- 2011 Mathad and Medivel Religious , Movement in Tamilnadu: An epigraphical study , Indian historical Review 38 , no 2
- Mahadevan Iravatham, Early Tamil Epigraphy From the earliest Times to the Sixth Century A.D. Cre – A Chennai and the Department of Sanskrit and Indian Studies, Harvard University 2003 .
பாவெல் @மோகன் குமாரமங்கலம் மிகச்சிறப்பான பதிவு ! வாழ்த்துகள்!
செ.நடேசன்
வெகு சிறப்பான ஆய்வு,
தரவுகளை கோர்வையாக வாசிப்போருக்கு சலிப்பின்றி தந்தமைக்கு நன்றி,
இக்கல்வெட்டு கிபி 6-9ம் நூற்றாண்டாக இருக்கையில் வைதீக மரபிற்கு முந்தியதாகத்தானே அமையும்?