கிறு கிறு வானம் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : “கிறு கிறு வானம்”
நூலாசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன்
விலை : ரூபாய் 80/-
வெளியீடு :தேசாந்திரி பதிப்பகம்
தொடர்பு எண் : 9789825280
“நம்மை பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் செல்லும் நூல்”
குழந்தைகளுக்கான இந்த நூலில் கிராமத்து சிறுவனது பால்ய நாட்களைப் பற்றியும், பள்ளி கால நினைவுகள் பற்றியும் விரிவாக நகைச்சுவையோடு பகிரப்பட்டுள்ளது.
குறிப்பாக:
என் பேரு ஓட்டை பல்லு
சாப்பாடும் கூப்பாடும்
கை நிறைய பொய்
பயம்னா பயம்
கிறு கிறு வானம்
கோழித் தூக்கம்
யாரு தச்ச சட்டை
கள்ளன் கணக்கு
காத்துல கட்டுன கோட்டை
அழுது உருளுவேன்
என பத்து தலைப்புகளில் உண்மை சம்பவங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட மிக அருமையான நாவல் இது.
நாம் குழந்தைகளாக இருக்கும்போது நமக்கு பள்ளியிலும் நாம் வசிக்கும் பகுதியிலும் பட்டப்பெயர் சூட்டுவார்கள். இந்த சிறுவனின் பெயர் ஓட்டைப்பல்லு.
அது போன்று வகுப்பு ஆசிரியர் பெயர் நிமிட்டான் பழம். தலைமை ஆசிரியர் பெயர் தொந்தி கணபதி. டீச்சரின் பெயர் பூம் பூம் மாடு. இது போன்ற பட்டப் பெயர்களை நாமும் சூட்டி மகிழ்ந்திருப்போம். இதுபோன்ற நகைச்சுவை உணர்வுகளோடு தான் இந்த நூலில் நாம் பயணம் செய்ய முடியும்.
நம்ம வீட்டு பெரியவங்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சின்ன பிள்ளைகளை அடிக்கிறது தான். அதுவும் அப்பாவும், அம்மாவும் போட்டி போட்டு அடிக்கும் சம்பவம் நிறைய நமக்கு நடந்திருக்கும்.
பொதுவாக விசேஷ நாட்களில் தான் இட்லியை பார்த்த காலங்கள் உண்டு.
அப்படித்தான் இக்கதையில் சோள தோசை செஞ்சு போடுவாங்க ஒரு தோசை ஒரு கிலோ எடை இருக்கும் என்று அந்த குழந்தை சொல்லும் மொழி அற்புதமானது. தோசையை தின்பதற்குள் விக்கல் வந்துடுமாம்.
பள்ளிக்கூட இடைவேளையின் போது ஓடோடிப் போய் சேமியா ஐசையும் தேன் மிட்டாயையும் பல்லி மிட்டாயையும் சுவைத்து சாப்பிட்ட அனுபவங்களை நமக்கு பகிர்ந்து உள்ளார் எழுத்தாளர் எஸ்ரா.
பள்ளியை பார்வையிட இன்ஸ்பெக்டர் வருவார்களாம். அந்த அதிகாரிகள் மதிய உணவு சாப்பிடுவதற்கு எட்டு அடுக்கு டிபன் பாக்ஸ்சில் டவுனுக்குச் சென்று சாப்பாடு வாங்கி வருவாங்களாம். அரை வயிறுக்கு கூட சாப்பிட முடியாத சூழலில் எட்டு அடுக்கு டிபன் பாக்ஸை பார்த்து அசந்து போன சம்பவம் பதிவிட்டுள்ளது மிகவும் அழுத்தமானதாகும்.
பக்கத்து வீட்டு வீட்டில திருட்டுத்தனமாய் முருங்கைக்காய் பறிச்சிட்டு வர அம்மா சொல்லுவாங்க. குழந்தையும் பறிச்சிட்டு வந்துருவாராம்.
மறுநாள் பக்கத்து வீட்டு அம்மா எவனோ முருங்கை காயை திருடிட்டு போயிட்டான் என்று சொல்லி ஒரே கூச்சல். பெரியவங்க பொய் சொல்லலாமாம். சின்ன குழந்தை சொல்ல கூடாதாம். அதுவும் பொய்யில்ல கால் பொய், அறப்பொய் முக்கா பொய்யின்னு வேற இருக்காம்.
குழந்தைகளிடம் பேயி இருக்குன்னு சொல்லி பயமுறுத்தி வச்சிருப்பாங்க.
இரவு சைக்கிள்ல தனியா போனா கேரியர்ல பேய் வந்து உட்கார்ந்திருக்குமாம். அதனால சத்தமா சாமி பாட்டு பாடிகிட்டு சென்ற சம்பவத்தையும் அருமையா சொல்லி இருக்காங்க.
நெல் அடிக்கும் களத்தில் பசங்க எல்லாம் ஒன்று கூடி வானத்தை அனாந்து பார்த்துகிட்டு கிறுகிற வானம் என்று பாடிகிட்டு ரவுண்டு சுத்தணும்.
வானமும் கூடவே சுத்தும். கொஞ்ச நேரத்துல வானம் தலை மேலே விழுந்து கண்ண கட்டிக்கிட்டு வந்துரும்.
கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா வானம் மறுபடி மேலே போயிருமாம். இப்படி தரைக்கு வானத்தைக் கொண்டு வரும் விளையாட்டு தான் கிறுகிறுவானம்.
மிகுந்த நகைச்சுவையோடு அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்ளும் கதைகள் தான் இந்த நூலை படிக்கும் போது நமக்கு ஏற்படும்.
நாமும் நமது குழந்தை பருவம் மற்றும் பள்ளியில் செய்த சேட்டைகளை நினைவு கூறும் சூழலுக்கு தள்ளப்படுவோம் என்பதை உண்மை.
நம் குழந்தைகளுக்கு இந்த கிறு கிறு வானம் நாவலை வாசித்துக் காட்டுவோம். மகிழ்ந்திருப்போம்.
உண்மை.
நூல் அறிமுகம் எழுதியவர் :
MJ. பிரபாகர்
மேலும் படிக்கச் கிளிக் செய்யுங்கள் : கிறு கிறு வானம்
நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில் thamizhbook.com இணையதளம் பாருங்கள்….
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

