தீநுண்மியின்றி அமையாது உலகு
பூமி தோன்றுவதற்கு முன்பே நுண்ணுயிரிகள் இப்பேரண்டம் முழுவதிலும் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அசலில் இந்த பிரம்மாண்டமான அண்டம் துகள்களாக உடைந்து துண்டுகளாகப் பிளவுபட்டு புவியாகக் கட்டமைந்து பூகோளமாக வடிவு பெற கிருமிகளின் அணிவாரியமான பங்கு அலாதியானது. மேலும் வளிமண்டலச் சுழற்சி, சுத்திகரிப்பு, நிலத்தைப் பதப்படுத்தி மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், நீரைத் தூய்மைப்படுத்துதல், பாறைகளைப் பிளவுபடுத்துதல், மரத்தின் வேரை பலப்படுத்துதல், மண்ணின் வளமையைப் பெருக்குதல்; ஏன் தீயில் கூட வாழும் தீநுண்மிகள் ஏராளம். நமக்குத் தெரிந்ததெல்லாம் விஞ்ஞானிகளின் மூக்குக் கண்ணாடியான ஆய்வுக்கூட உபகரணங்கள் காட்டும் உயிரிகள். பிரம்மாண்டங்கள் அமைத்து பிள்ளைகளுக்கு வியப்பூட்டுவதைப் போலக் காண்பிக்கப்படும் பதுமைகள்.
இப்பிரபஞ்சம் உருவாகும் முன்பே இந்நுண்ணுயிர்கள் வாழ்ந்ததை இயற்கையியலாளர்கள் மட்டுமின்றி பல ஆய்வாளர்களும் நிரூபித்துள்ளனர்.. நம்மைச் சுற்றிலும் வளிமண்டலச் சுழற்சியிலும் கிருமிகளின் இருப்பு நீக்கமற நிறைந்திருக்க, புறக்கண்களை மட்டுமே நம்பும் சமூகமாக இன்றைய தலைமுறை ஏற்கமறுக்கின்றன. உடலின் மேல் தோலில் வினைபுரிந்து பிரபஞ்ச ஆற்றலை உறிஞ்சி உடலுக்குள் பாய்ச்சும் செயற்கரிய பணியைச் செய்வதும் இந்தத் தீநுண்மிகளே என்பதை நமது பாரம்பரிய மரபுவழி மருத்துவங்கள் குறிப்பிடுகின்றன.
ஆக, நுண்ணுயிரிகள் என்று அழைக்கப்படும் இக்கிருமிகளின் தோற்றம், மாற்றம், தன்மை, மற்றும் வளர்ச்சி குறித்து இதுவரை மருத்துவத்துறைகள் துல்லியமாகக் கணிக்க இயலவில்லை. நமது மூதாதையரோ கிருமிகளைக் கொண்டாடியே வந்துள்ளனர்
கிருமிகள் கருத்தரிப்பில் மட்டுமல்ல உயிரின், உடலின் அனைத்துச் செயல்பாடுகளிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. நமது பாரம்பரிய மருத்துவங்களும் இந்த உயிர்களை அழிக்கவோ பெருக்கத்தைக் குறைக்கவோ கிருமிகளின் வகைகளைக் கண்டறியவோ தலைப்பட்டதில்லை. கிருமிகளின் உயிராற்றலையும் மனித உடலில் உயிர்ப்பாக இயங்கி வரும் இவைகளின் தொன்மையையும் தொண்டையும் செயலூக்கத்தையும் அறிந்த நம் முன்னோர் கிருமிகள், புழுக்கள், பூச்சிகளை தமது வாழ்வின் அங்கத்தினர்களாக தோழமையாகப் போற்றியே வந்தனர். அன்றும் இன்றும் என்றும் மண்புழு, விவசாயிகளின் நண்பன் என்கிறது மரபு அறிவியலும் நவீன ஆய்வுகளும்.
இவ்வாறாக நமக்கு முன் தோன்றி நம்முடன் பயணித்து உறுதுணையாக நம்மை வழிநடத்தி நன்மை செய்யும் மூத்த குடிகளான இந்தப் புழுக்களையும் பூச்சிகளையும் கிருமிகளையும் எதிரிகளாக மனிதகுலத்தை அழிக்கும் பேராயுதமாகப் பிரச்சாரம் செய்து மக்கள் வெளியில் அவதூறுகளைப் பரப்பி வருகின்றது இன்றைய ஆங்கில மருத்துவ உலகம். பொய்யான கருத்துக்களை, தவறான ஆய்வறிக்கைகளை, புரிதலற்ற அனுமானங்களை உண்டாக்கி கிருமிகள் மீதும் சிறிய ஜீவன்கள் மீதும் அருவருப்பை உண்டு பண்ணி உள்ளது. அதைவிடக் கொடுமை, கிருமிகளைக் கண்டால் தெறித்து ஓடும் அளவிற்கு அச்சத்தை விளம்பர நிறுவனங்களும் நவீன மருத்துவமும் கார்பரேட் நிறுவனங்களும் ஏற்படுத்துகின்றன. அதன் விளைவாக ரகரகமான சுத்திகரிப்பான்கள், பல் துலக்கும் பேஸ்டுகள், சோப்புக் கட்டிகள், கை கழுவ பயன்படும் இரசாயன மருந்துகள், முகக் கவசங்கள் என பாவம் இந்தக் கிருமிகளிடமிருந்து மனிதர்களைப் பாதுகாப்பதாக இத்தனை ரசாயனங்களை அறிமுகப்படுத்தி உலகளாவிய பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மறைமுகமாக லாபம் தேடித் தருகிறது நவீன மருத்துவம். இது மக்களை எளிதாகக் கவர முனையும் வணிகத் தந்திரம் என்றே சொல்ல வேண்டும்.
முற்றிலும் அபத்தமான பிரச்சாரங்களைப் பரப்பி மக்களை ஏமாற்றி வரும் ஆங்கில மருத்துவத்தின் கிருமிகளுக்கெதிரான பிரகடனங்களைக் களையவும், மறைமுகமாக ஆதரிக்கும் உலக அளவிலான அரசுகளின் மக்கள் நலனுக்கெதிரான மறு பக்கங்களையும், முழு மூச்சில் லாபத்தை மட்டுமே குறிகோளாகக் கொண்ட கார்பரேட் நிறுவனங்களின் முகத்திரைகளையும் கிழித்தெறியும் விதமாக கிருமிகளைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டி அக்குஹீலர் அ. உமர்பாரூக் அவர்கள் கிருமிகளுக்கான உலகாக மாறி வரும் இன்றைய நடைமுறை அரசியலை வெளிச்சப்படுத்தும் நோக்கில் “கிருமிகள் உலகில் மனிதர்கள் என்னும் நூலைப் படைத்து மக்களை கிருமிகளுக்கெதிராகத் திருப்பி விட்ட அலோபதி மருத்துவத்தின் கட்டுக் கதைகளை இயற்கை அடிப்படையிலும் உலகளாவிய நவீன ஆய்வாளர்களின் ஆய்வுத் தரவுகளின் வழியாகவும் எடுத்துக் கூறுகிறார்.
ஆழ்ந்து கவனித்தால் மனிதர்கள் தான் கிருமிகளின் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.மனிதர்களின் உயிரில், உடலில், உணவில், மூச்சில், பேச்சில் என கிருமிகள் நீக்கமற வியாபித்துள்ளன. கிருமிகளற்ற மனிதனோ பிரபஞ்ச வெளியோ இருக்க வாய்ப்பில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்பதே இந்நூல் படைத்ததற்கான அடிப்படைக் காரணம். ஆசிரியர் கிருமிகளின் வரலாற்றை ஆதி முதல்அந்தம் வரை தொட்டு அவற்றின் வாழ்வியல் அவசியத்தைப் புரியவைத்தும் கிருமிகளின் உன்னதச் செயல்பாடுகளைத் தெளியப்படுத்தியும் மனிதர்கள் இந்தக் கிருமிகளை அழிக்க செயல்படுத்தி வரும் திட்டங்களை கடுமையாக விமரிசித்துள்ளார்.
கிருமிகளே இயற்கைச் சுழற்சியின் ரகசியம். இந்த பரந்துபட்ட வளி மண்டலத்தில், விரிந்து கிடக்கும் கடல் அடியின் வெந்நீர் ஊற்றுகளில், நிலச் சுரங்கங்களில், தோண்டப்பட்ட கரிக்குழிகளில் என கிருமிகளின் இருப்பிடமும் அவைகளின் உழைப்பும் அதையும் தாண்டிய பல அற்புதங்களில் உறைந்திருக்கின்றன மறைந்திருக்கின்றன என்று போற்றுகிறார் ஆசிரியர்.
இயற்கையின் வேதியியல் சுழற்சி முதற் கொண்டு அனைத்து இடங்களிலும் பெரும் பங்காற்றி வருகின்றன கிருமிகள். உலகில் இயற்கையாக உருவாகும் கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்து வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு என்கிற கரியமில வாயு மூலக்கூறுகளை உடைத்து கார்பன் ஆக்ஸிஜன் என, தனித்தனியே பிரிப்பது முதல் கந்தகத்தை உணவாக உட்கொண்டு கந்தகச் சுழற்சியில் துணை புரிவது வரை கிருமிகளின் பங்கு அளப்பரியது. விளைநிலங்களின் நைட்ரஜனை உரமாக மாற்றி மண்ணின் வளத்தைக் கூட்டும் நுண்ணுயிரிகள், உலோக தயாரிப்பில் தங்கம் வெள்ளி யுரேனியம் போன்ற தாதுக்களைப் பிரித்தெரிக்கும் உலோக உண்ணிக் கிருமிகளான ஆல்கா, க்ளோரல்லா வல்காரீஸ் போன்ற கிருமிகள் என தொகுப்பின் ஆரம்பப் பக்கங்கள் கிருமிகளின் வகைகள் மற்றும் அவற்றின் செயற்கரிய பணிகளை அறிய உதவுகிறது.
இன்னும் சொல்லப் போனால் மின்னாற்றல் உற்பத்தியில் கூட ஒருவகைக் கிருமி பயன்படுவதாக ஆய்வறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வகைக் கிருமிகளை ஆய்வுக்குட்படுத்தி இவற்றின் ஆற்றலை ஆராய்கின்றனர் ஆய்வாளர்கள். அழியாத சிதைக்கவே முடியாத மண்ணில் மக்காத தன்மை கொண்டவை என்றெல்லாம் நிராகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு உருமாற்றும் ஆற்றலைக் கண்ணுக்குத் தெரியாத சில உயிர்கள் பெற்றிருக்கின்றன என்கிறது சமீப கால ஆய்வுகள். ஒருபுறம் கிருமிகளின் நற்பயன்களின் ஆய்வுகள் நம்மை பிரம்மிக்க வைக்க, மறுபுறம் நுண்ணுயிர்களைக் கொல்லும் இரசாயன மருந்துகளின் வெவ்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
நாம் ஒன்றை இங்கு புரிந்துக் கொள்ள வேண்டும். கிருமிகளைப் பொறுத்த வரை ஒன்றை இன்னொன்றாக மாற்றும் ஆற்றல் பெற்றவை. அழிக்கவே முடியாது மண்ணிற்கு பெரும் ஊறு விளைவிக்கும் என்று நம்பப்படும் நெகிழிக் கழிவுகளைக் கூட சிதைத்து உருத் தெரியாமல் மாற்றி மறு சுழற்சிக்கு ஆட்படுத்த குறிப்பிட்ட ஒவ்வோர் கழிவிற்கும் ஏற்றவாறு பிரத்யேகமாக ஒரு உயிர் உருவாகும். இதுவே பிரபஞ்சக் கோட்பாடு. படைப்பின் இந்தத் தத்துவம் மனித உடலுக்கும் பொருந்தும். மனிதர்கள் தங்கள் வாழ்வியல் முறைகளின் புரிதலற்ற நடவடிக்கைகளால் கழிவுகள் உடலுக்குள் உருவாகித் தேங்குகின்றன. அந்தக் கழிவுகளை உண்டு தீர்க்க விசேஷமான நுண்கிருமிகள் இயற்கையால் தோற்றுவிக்கப் படும். இந்த நுண்ணுயிர்கள் மனிதனால் உண்டாக்கப்பட்ட அ ந்தக் கழிவுகளை அகற்றி அவனுக்கு நன்மை பயக்கவே உருவாகியுள்ளதைப் புரிந்துக் கொள்ளாமல் அவற்றை நோய்க் காரணிகளாகச் சித்தரித்துக் கொன்று குவிக்கும் அனைத்துத் திட்டங்களையும் தீட்டுகின்றன நவீன அறிவியல்துறை. இவர்கள் கிருமிகளைக் கொல்ல பல்வேறு இரசாயனங்களை மனிதர்களுக்குப் பரிந்துரைத்து உடல் உறுப்புகளை நிர்மூலமாக்கி ஆரோக்கியத்தை நிலைக்குலையச் செய்கின்றனர்.
மனிதர்களின் உயிர் உற்பத்தி தொடங்கி, செரிமானம், கழிவு நீக்குதல், உணவை ஆற்றல் சக்தியாக மாற்றுதல், உடலிற்குள் செல்லும் ஒன்றை இன்னொன்றாக மாற்றும் வல்லமை எனக் கிருமிகளின் அளபரிய பங்கு மனிதகுலத்தின் கொடை. மனிதகுலம் மீதான இயற்கையின் கருணை. இந்த அடிப்படைப் புரிதல் கூட இல்லாத மருத்துவமாக ஆங்கில மருத்துவம் இன்று மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்று வருவதும், கிருமிகளின் மீது தவறான புரிதலை மக்கள் மனதில் உண்டாக்கியும், கிருமிகளையும் புழுபூச்சிகளையும் கண்டாலே தெறித்து ஓடும் நிலைக்கு மனிதர்களின் புத்தியையும் சுய சிந்தனையையும் சலவை செய்துள்ளது நவீன அறிவியல்.
கிருமிகளின் இயல்பு, ஒன்றை இன்னொன்றாக மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை இத்தொகுப்பில் பகிர்ந்துள்ள ஆய்வுச் சான்றுகளின் வழி நின்று அறிவோம். வேதிப்பொருட்களின் கூட்டுச் சேர்க்கையில் அவற்றின் மூலக்கூறுகளை உடைத்து உருமாற்றுகின்றன நுண்ணுயிரிகள். அதே செயபாடுகளை மனித உடலிலும் நிகழ்த்துகின்றன. ஒரு தன்மையிலிருந்து மற்றொரு தன்மைக்கு உணவை ஆற்றல் சக்தியாக மாற்றி உடல் முழுவதும் பகிர்வதும், தேங்கிய கழிவுகளில் வினைபுரிந்து உருமாற்றி உடலிலிருந்து வெளியேற்றுவதும், உண்டு தீர்ப்பதும், வளர்சிதை மாற்றத்தில் சத்துக்கள் உருவாகத் துணை இருப்பதும் என கிருமிகளின் நேரடிப் பங்கை விட மறைமுகமான செயற்கரிய செயல்பாடுகள் எண்ணற்றவை . அவற்றைக் கொல்ல முனையும் முயற்சிகளில் பல கொடிய பக்கவிளைவுகளைத் தரும் உயிர்க் கொல்லி மருந்துகளை ஆங்கில மருத்துவர்களின் பரிந்துரைப்பில் தின்று நமது உடலுக்கு ஊறு விளைவிக்கிறோம். அறியாமையால் உடலுக்குச் செய்யும் இந்தப் பாதகச் செயல்களால் உடல் ஆரோக்கியம் குலைவதோடல்லாமல் ஒரு குற்றமும் செய்யாத கிருமிகளின் மீது பழிபோட்டு அவற்றை அழிக்கும் ஆய்வுகளுக்கு ஆதரவு தருகிறோம்.
முக்கியமாக, குழந்தைகளுக்கு உயிர் கொல்லி மருந்துகளாகக் கொடுக்கப்படும் ஆன்டிபயோட்டிக் மருந்துகளை நிறுத்த வேண்டும். இ ந்த மருந்துகள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் கொடிய விஷம் என்று குழந்தைகள் சிறப்பு மாநாட்டொன்றில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது என்று நம் நாட்டு ஆங்கில மருத்துவர்கள் அறிவித்ததாகவும், கூடுதலாகத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகமும் தமது பங்கிற்குக் காய்ச்சல் சளி போன்ற இயல்பான தொந்தரவுகளுக்கு இரசாயன மருந்துகளை குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கக் கூடாது என்றும் பகிரங்கமாக அறிவித்த தகவல்களை ஆவணங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது நூல்.
கிருமிகளுடன் மட்டுமல்ல 300 ஆண்டுகளாக உலக அரசுகளும் பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் கொசுக்களுடனும் மல்லுக்கட்டித் தோல்வியடைந்து வருகின்றன. அதுபோக, கிருமிகளால் நோய்த் தொற்று ஏற்படுவதாகவும் கொத்துக் கொத்தாக மக்கள் இறக்கிறார்கள் என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்து கிருமிகளுக்கு எதிராக மக்களைத் திரட்டுகிறது ஆங்கில மருத்துவம். ஒன்றை யோசிக்கத் தவறுகிறோம். கிருமிகளைக் காற்றின் வழியாகவோ அல்லது ஆறுகள் நதிகள் போன்ற நீர்நிலைகளின் மூலமோ போரிடும் நாடுகளுக்குக் கடத்தினோமேயானால் அதை விட இன்னும் சுலபமாக நோய்கள் தாக்கப்பட்ட மனிதர்களை எல்லைகளில் நிறுத்தி இருமல் வழியாக அல்லது வேறு சில உடல் வழியான கடத்தல்கள் மூலம் கிருமிகளைத் தூதாக அனுப்பி நோயைப் பரவ விட்டு போர் வீரர்களை நோயாளிகளாக்கி எளிதாக எதிரி நாட்டை வீழ்த்தி விடலாம். இதை ஏன் செய்ய மறுக்கிறது உலக அரசுகள் என்கிற கேள்வியை எழுப்பி கண்மூடித்தனமாக மருத்துவர்களின் அச்சுறுத்தல்களை நம்பி பயந்து கொண்டிருக்கும் மக்களை சிந்திக்க வைத்துள்ளார் ஆசிரியர். காரணம், உலக ஆய்வு நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும், கிருமிகளால் நோய்கள் பரவுவதில்லை என்று நன்கு தெரியும். கிருமிகள் நோய்த் தொற்றிற்கான மூலக்காரணம் அல்ல. அவர்களின்பிரசாரங்கள் அனைத்தும் போலித்தனமானவை.
கொசுவோ கிருமிகளோ கழிவுகள் தேங்கும் இடத்தில் நிச்சயம் கிருமிகள் உருவாகும். இவைகளைக் கொல்வதற்காக மெனக்கிடுவதை விட நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம். ஆரோக்கியமான சூழலுக்கான அடித்தளம் என்பதை நூல் பல ஆய்வாளர்களின் ஆய்வுத் தரவுகள் கொண்டு விளக்குகிறது.
மனித உடலில் தேங்கிய கழிவுகளிலிருந்து தோன்றும் கிருமிகள் அந்தக்கழிவை மட்டுமே உண்டு உயிர்வாழும் என்பது படைப்பம்சம். படைப்பின் ஆதாரமே தகவமைப்புத் திறன் என்பதை அறியாமல் மனிதர்களுக்கும் சுற்று சூழல்களுக்கும் ஊறு விளைவிக்கும் என்று இந்த சிறிய உயிர்களை அழிக்க விதவிதமான இரசாயனங்கள் தயாரிக்கபடுகின்றன. ஆனால் இங்கு நடப்பது என்ன… எத்தனை இரசாயனவிஷங்கள் மனிதனால் உருவாக்கப் பட்டாலும் அவை அனைத்தையும் உண்டு மாண்டு மீண்டும் அந்த இரசாயனங்களைத் தகவமைத்துக் கொள்ளும் திறன் கொண்ட அடுத்த தலைமுறையை உருவாக்கும் பேராற்றல் கொண்டவை உயிரிகள். இதுவே பிரபஞ்சக் கோட்பாடு. இதை நிரூபிக்கும் வகையில் வைரஸ் கிருமிகள் பற்றிய ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் சில வைரஸ் கிருமிகளின் தகவமைப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் மருந்துகளின் வீரியத்தில் உயிருடன் வாழ்ந்து வளர்ந்த சில வைரஸ் கிருமிகளை ஆங்கில ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கிருமிகள் பல்கிப் பெருகும் தன்மைக் கொண்டவை. இதை “மல்டிபில் இன்ஃபெக்ஷன் தியரி” என்கிறது நவீன நுண்ணுயிரியல். உயிரனைத்தும் ஒன்று என்கிற கோட்பாடு புரியாத விஞ்ஞானமாக, பாக்டீரியாக்கள் விலங்குகள் என்றால் வைரஸ்கள் பேய்கள் என்கிறது அறிவியல். இது போன்ற கட்டுக் கதைகளை, வைரஸ்கள் பற்றி கணக்கேயில்லாமல் அவிழ்த்து விடுகின்றன ஆங்கில மருத்துவம். பாக்டீரியாக்களை இரசாயனக் கொல்லிகள் கொண்டு அழித்திடும் தந்திரம் தெரிந்த ஆங்கில மருத்துவத்தால் வைரஸ்களுடன் போராட முடிவதில்லை. காரணம் அவை இறந்த பின்பும் மீண்டும்உயிர்த்து வரும் தன்மையும், நிரந்தரமான உருவ அமைப்பற்ற, தனித்துவமான வகைமைக்குள் அடங்கும். மூலக்கூறுகளற்ற, இயல்பாகச் செயலாற்றும் திராணியற்ற உயிரினமாக இந்த வைரஸ் கிருமிகள் ஏதாவது ஒரு உயிர் பொருட்களின் மீது சார்ந்து செயல்பட்டு அவற்றைத் தன்வயப்படுத்திக் கொண்டு வாழும் தன்மை கொண்டவை. சில வைரஸ் பதப்படுத்தும் போது உயிரற்றவையாகக் காணப்படும். நீரில் கடத்தினால் மீண்டும் உயிர் பெறும். இந்த வைரஸ் கிருமிகள் பற்றிய ஆச்சரியமான தகவல்கள் நூலில் கூடுதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தனை வீரியம் மிக்க வைரஸ் கிருமிகளை அத்தனை எளிமையாக அழித்து விட முடியாது என்பதற்குக் கடந்துப் போன கொரோனா நோய்த் தொற்றுக் காலங்களே சாட்சி. முழுமையாக அழிப்பதற்கு முற்றிலும் சாத்தியமற்ற உயிரியாகவே இந்த வைரஸ்கள் இருந்து வந்ததை இந்தப் பேரிடர் கால தொற்று நமக்கு நோய்கள் பற்றியும் உலகையே ஆட்டிபடைப்பதாகப் பிரச்சாரப்படுத்தி வந்த கிருமிகளுக்குப் பின்பான மறைக்கப்பட்ட உண்மைகளையும் காட்டிக்கொடுக்கிறது. விஞ்ஞானிகள் இந்தக் கிருமிகளைக் கொல்வதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ இரசாயன விஷம் கண்டுபிடிக்கத் திணறுகிறார்கள். வலியது தானே ஜெயிக்கும் என்கிற ஆசிரியரின் பதிவு வைரஸ் கிருமிகளுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது.
உயிர்ச் சக்தி ஆற்றல் உடலைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் போது தசைகளோ உடலோ சிதைவதுமில்லை அழுகுவதுமில்லை. அதே வேளை, உடலிலோ வேறு எந்தவொரு பொருளிலோ உண்டாகும் கழிவை உண்டகற்ற பிரத்தியேகமாக நுண்ணுயிரிகள் பிறக்கின்றன. அது புழுக்களாகவோ பூச்சிகளாகவோ வண்டுகளாகவோ கண்ணுக்குத் தெரியாத தீநுண்மியாகக் கூட இருக்கலாம் என்பதை விளங்கிக் கொள்ள வீட்டில் சமையலுக்காகப் பயன்படுத்தும் மிளகாய்ப் பொடி மசாலாப் பொடிகளைக் கூர்ந்து கவனித்தால் அவை சமையலுக்கு உதவாத கெட்டுப் போன நிலையில் இரண்டிலும் வெவ்வேறு தன்மைக் கொண்ட உயிரிகள் தோன்றியுள்ளதைக் கவனிக்கலாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒன்றில் உருவாகிய உயிரை மற்றொரு பொருளில் போட்டால் அங்கு அவை தங்காது இறந்துவிடும். இதுவே படைப்பம்சத்தின் தனித்துவம். உண்மையில் புழுக்களின் பூச்சிகளின் தாய் கழிவுகளே என்கிற உயிர்களின் படைப்பில் இயற்கையின் சுழற்சியை விளங்கச் செய்துள்ளார் ஆசிரியர்.
அடுத்ததாக கழிவுகள் உடலில் தேங்குவதற்கான முறையற்ற வாழ்வியல் செயல்களின் அறியாமையை எடுத்துரைக்கும் ஆசிரியர், உடலின் மொழிகளான பசி, தாகம், ஓய்வு, தூக்கம் போன்ற இயற்கை நெறிகளைக் கடைப்பிடிக்காமல் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் தவறான பழக்கவழக்கங்களால் உடலில் முதலில் கழிவுகள் உருவாகுகின்றன, பின் தேக்கமடை ந்து சிறு தொந்தரவுகள் உடலில் வெளிப்படுகின்றன. அதையும் நாம் இரசாயன மருந்துகளைக் கொண்டு அழுத்த முற்படுகிறோம். இவ்வாறாக உடலுக்குள் அழுத்தப்பட்ட இரண்டாம் நிலைக் கழிவுகள் தொடரும் நமது தவறான பழைய பழக்க வழக்கங்களாலும் இரசாயன மருந்துகளின் தொடர் பயன்பாடுகளாலும் மூன்றாம் நிலைக் கழிவுகளாக உருமாறுகின்றன. இவையே தேக்கமுற்ற கழிவுகள். இந்த தேக்கமுற்ற கழிவுகள் இயற்கைக்கெதிரான நமது தொடர் செயல்பாடுகளால் நான்காம் நிலைக் கழிவுகளான இரசாயனக் கழிவுகளாக (morphid matter) அடுத்த நிலைக்கு மிக வீரியத்துடன் உருமாறுகிறது. மிக மோசமான அந்த ரசாயனக் கழிவுகளால் பிற செல்களோ உறுப்புகளோ பாதிப்படையாதவாறு உடலின் செல்கள் சவ்வு போன்ற மெல்லிய போர்வையால் பாதுகாத்து வைக்கிறது. மனிதர்களின் உடலுக்கெதிரான செயல்பாடுகள் தொடர்ந்தாலும், இயற்கை நியதிக்குட்பட்ட உடல் மீண்டும் மீண்டும் கழிவுகளை அகற்றும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறது. உடலின் கழிவு நீக்கச் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் ஆழமாக செல்லின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை அத்தியாயம் முழுக்க விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார் ஆசிரியர்.
உடல் செல்களால் பாதுகாத்து வைக்கப்பட்ட கழிவுகளை அழிக்கும் போர் வீரர்களாக லைசோஸோம் (suicidal sox) கழிவுகள் மீது தாக்குதல் நடத்தி, தானும் அழிந்து கழிவுகளையும் அழிக்கிறது. நாம் உடலின் இயற்கைக்கு மாறாக தொடர்ந்து செயல்பட்டு வந்தால்கழிவுகள் மீண்டும் தேங்கத் துவங்குகின்றன. சாதாரணக் கழிவுகள், தேக்கமுற்ற கழிவுகள், ரசாயனக் கழிவுகள் எனத் தொடரும் இயற்கைக்கு மாறான நமது பழக்க வழக்கங்களின் கழிவுத்தேக்கம் அடுத்த நிலையான அழுகிய ரசாயனக் கழிவுகளாக அதி தீவிர நிலையை அடைகிறது இந்த வகையான கழிவுகளை அகற்ற உடலால் உருவாக்கப் படுவதே கிருமிகள்.
உடல் எனும் இயற்கை ஊழியன் உடலையும் உள்ளுறுப்புகளையும் மெல்ல மெல்ல அழித்துக் கொண்டிருக்கும் கழிவுகளை அகற்ற இயற்கையின் துப்புரவுப் பணியாளர்களை நாடுகிறான். உடலின் அனைத்து முயற்சியும் தோல்வியுற்ற நிலையில் கடைசி முயற்சியாகவே உடல் கிருமிகளின் உருவாக்கத்தைக் கைக்கொள்கிறது. வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகள் உடலில் நீடித்திருக்க முடியாது, உடல் செல்களை மெல்ல அழித்துவிடும் என்கின்ற இறுதிநிலையில் கிருமிகளைக் கொண்டுக் கழிவுகளைச் சுத்தப்படுத்த முயல்கிறது. இதன் பொருட்டே உடலில் ஏற்படும் நோய்க்குறிகள் . ஆங்கில மருத்துவம்,விதம் விதமான
உயிர்க்கொல்லிகளால் உடலின் எதிர்ப்புச் சக்தியின் தோழனான கிருமிகளை அழித்து உடலியக்கத்திற்கு இடையூறு செய்கிறது.
ஒருங்கிணைந்த உடலின் அடிப்படை அறிவியல் புரியாத ஆங்கில மருத்துவம் தங்கள் தவறான அனுமானத்தால் கழிவுகளைக்களைய முற்படாமல் அவற்றை உண்டு உடலுக்கு நன்மை பயக்கும் கிருமிகளைக் கொல்ல ரசாயனங்களை உட்கொள்ள வைக்கிறது.
தேங்கிய கழிவுகளிலிருந்து கிருமிகள் உருவாகின்றன. அது ஒரு புறம் இருக்க, உடலுக்கு ஒவ்வாத அந்நியப் பொருட்களான நுண்ணுயிரிகள் புறச் சூழலிலிருந்து ஊடுருவி உடலின் தோல் மூலமாகவோ அல்லது உடற் துவாரங்கள் வழியாகவோ உட்புகுந்தாலும் அவற்றையும் அழிக்கும் பெரும் எதிர்ப்பு சக்தியாக பேகசோம் என்னும் எதிர்ப்புச்சக்தியால் உருவாக்கப்பட்ட பலூன் போன்ற அமைப்பு செயல்பட்டு புறக்கிருமிகளைக் கைதுசெய்து வைக்கிறது. எதிர்ப்புச் சக்தியின் பலம் கூடும் போது அவற்றையும் வெளியேற்றுகிறது பேகோசோம் உடல் செல்லின் அழிக்கும் இந்த அந்நிய எதிர்ப்பாற்றலுக்கு பேகோஸைட்டோஸிஸ் என்று பெயர்.
உலகிலேயே முதல் முதலில் தற்கொலைப் படையை உருவாக்குவதும், வெளியிலிருந்து வரும் அந்நியப் பொருட்களை எதிர்த்துப் போரிடும் போர் வீரனாக செயல்படுவதும் நம் உடல் தான். எதிர்ப்பே உயிர்ப்பு என்கிற வாழ்வியல் தத்துவத்திலும் இயற்கையின் கோட்பாட்டிலும் உறுதியாகச் செயல்படும் உன்னதம் மனித உடல்.
பேன்களைப் பற்றிய பொதுவான புரிதலைத் தெளிவு படுத்துகிறது இந்நூல். உடல் இயல்பைத் தாண்டிய வெப்பநிலை காரணமாக பேன்கள் உருவாகின்றன. ஆனால் ஒருவரின் தலைப்பகுதியிலிருக்கும் முடியின் அடர்த்தி தன்மை வெப்ப மாறுபாடு இவற்றுக்கேற்றாற்ப் போல அங்கு பேன்கள் உருவாகும். இதையறிய பேன்களின் கால்களைக் கவனித்தால் புரிந்துக் கொள்ளலாம். அதேபோல ஒருவர் தலையிலிருக்கும் பேன் மற்றொருவர் தலைக்குப் பெயர்வதாகக் கூறும் கருத்து முற்றிலும் தவறான புரிதல். ஒருவர் தலைப்பகுதியில் உருவான கழிவில் தோன்றிய பேன்கள்மற்றொருவர் தலைக்கு இடம் மாறினால் அவைகளால் உயிர் வாழ முடியாது இறந்துவிடும் அல்லது தலையிலிருந்து வெளியேறிவிடும் என்பதே உண்மை. முடி போன்ற புறச் சூழலில் வாழும் உயிர்களுக்கு இடமாறுபாடு உயிர் வாழ்தலைக் கடினமாக்குகிறது எனில் உடலின் உட்சூழலில் உருவாகும் கிருமிகளால் குறிப்பிட்ட வகையான கழிவுகளற்ற இடங்களில் ஒருக் காலும் வாழ முடியாது என்று பேன்கள்போன்ற நுண்ணுயிர்களின் வாழ்தன்மையைப் பற்றி இயற்கைப் பூர்வமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
அதேபோல் வெளிப்புறக் கிருமிகள் நம் உடலுக்குள் ஊடுருவ வேண்டுமானால் உடல் அனுமதிக்க வேண்டும். எப்போது இப்படியான ஒரு அனுமதி கிடைக்கும் என்பதையும் இங்கு விளக்கியுள்ளார். “உடலில் போதுமான சக்தி இன்றி அன்றாட வேலைகளைப் பார்க்கவே திணறும் உடலால் புதிய உயிர்களைத் தோற்றுவிப்பதற்குத் தேவையான ஆற்றலை வழங்க முடியாத நிலை உருவாகும். இந்தச் சூழலில் உடல் புறக் கிருமிகளைப் பயன்படுத்திக் கொள்ளமுயலும். இது சாதாரண நிலை. உடலுக்குக் கிருமிகள் தேவைப்படும் போது தன்னால் உருவாக்க முடியாத போது புறக்கிருமிகள் உடலில் புக வாய்ப்பு அளிக்கும். இது முதல் நிலை.
இரண்டாவது நிலை அசாதாரண நிலை. உடலின் இயல்பிற்கு மாறாக அறுவை சிகிச்சை செய்யப்படும் போது உடலின் பாதுகாப்பு இயக்கங்கள் தற்காலிகமாக ரசாயனங்களால் நிறுத்தி வைக்கப்படுகின்றன. செயலிழந்த பாதுகாப்பு இயக்கங்களால் கிழித்துப்போடப்பட்டதோல் வழியாக புறச்சூழலில் வாழும் கிருமிகள் உட்புகவாய்ப்புள்ளது. நம் உடலின் கவசமான தோல் திறந்து கிடப்பதாலும் ரசாயன மருந்துகளால் உடலின் எதிர்ப்பு சக்தி மழுங்கடிக்கப்பட்டதாலும் புறக்கிருமிகள் உடலுக்குள் நுழைந்து விடுகின்றன. இந்த அசாதாரண நிலையில் உடலில் கழிவுகள் தேங்கி இருப்பதால் அந்தக் கழிவுகளில் கிருமிகள் வாழும் சூழல் உருவாகி அவை அங்கு பல்கிப் பெருகுகின்றன. இந்த இரண்டு நிலை தவிர உடலுக்குள் கிருமிகள் புகுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. ஆனால் இன்றைய நவீன மருத்துவம் கிருமித் தொற்று என்கிற பெயரில் பல தவறான பிரச்சாரங்களைப் பரப்பி மக்களை பயமுறுத்தி வருகிறது. பேசும் போது, சுவாசிக்கும்போது, கைகளின் வழியாக, சகமனிதரின் பொருட்களை பயன்படுத்தும் போது, தொட்டுப் பேசும், பொதுக் கழிவறையைப் பயன்படுத்தும் போது, இருமல், தும்மல், காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற உடலின் கழிவு நீக்க வெளியேற்றத்தின் போது, கிருமிகள் ஒரு மனிதரிடமிரு ந்து இன்னொரு மனிதருக்குப் பரவும் என்றும் அதன் காரணமாகவே நோய்த்தொற்று உண்டாகி உடல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன என்றும் தவறாகப் பிரகடனப்படுத்தி வருகின்றது.
உடலின் இந்த வேறுபாடுகளையும் ஒழுங்கமைந்த இயக்கங்களையும் புரிந்து கொண்டால் கிருமியைப் பற்றிய பயம் ஒருக்காலும் வராது. இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். உடலின் எதிர்ப்பு சக்தி என்னும் பாதுகாப்பு அரண் இருக்கும் வரை எந்த அந்நியப் பொருட்களும் உடலுக்குள் புக முடியாது. உடலின் எதிர்ப்பு சக்தி உடனடியாகச் செயல்பட்டு அவற்றை அகற்றிவிடும் செயல்களில் ஈடுபடும் என்பதே உடலின் ஒருங்கிணைந்த செயல்பாடு.
அடுத்ததாக நம் உடலைச் சீராக இயக்குவது மனம் என்னும் அகத்தோழன். இந்த நோய் நமக்கும் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் அந்த நோயை நமக்கு வரவழைப்பதற்கான உடலியல் ரீதியான தயாரிப்புகளைச் செய்கிறது. ஒரே குடும்பத்தில் வாழும் பல நபர்கள் ஒரே சூழலில், ஒரே மாதிரியான உணவுப்பழக்க வழக்கங்கள் போன்ற காரணங்களாலும் உடற்கழிவுகளாலும் ஒரே மாதிரியாகவே இருப்பார்கள்.ஒரு நபருக்கு அவருடைய உடல் சூழலால் கழிவுகள் வெளியேற்றப்படும் சூழலில் காய்ச்சல் அல்லது வோறொரு தொந்தரவு உருவாகுகிறது. ஒரே விதமான ஒரே அளவிலான கழிவுகள் உள்ள மற்றவர்களுக்கும் அதே விதமான தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இதுவே மனம் சார்ந்த உடல் ரீதியான நோய்த் தாக்கமும், நோய்த் தொற்றும் பரவும் என்பதெல்லாம் முற்றும் தவறான புரிதல் என்பதை அனைத்து விதங்களிலும் மக்களுக்குப் புரிய வைக்க முற்பட்டுள்ளார் ஆசிரியர்.
தமிழில் கிருமிகளைப் பற்றிய மாற்றுக் கருத்து வந்த முதல் நூல் எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள் 1964 ஆம் ஆண்டில் எழுதிய இயற்கை வைத்தியம் எனும் நூல். உடல் சார்ந்தும் மருத்துவம் சார்ந்தும் இயற்கை அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது அந்நூல்.. உடலிலிருந்து உயிராற்றல் பிரிந்தவுடன் அப்பொருள் கழிவாக மாறுகிறது. அக்கழிவை உண்டு தீர்க்க உருவாகும் நுண்ணுயிர்களே கிருமிகள் என்பதை தத்துவப் பூர்வமாகப் பெருச்சாளியின் செத்த உடலில் தோன்றிய புழுக்களைக் கொண்டு விளக்கியுள்ளார் தமிழ்வாணன்.
“அம்மை நோய் மாரியம்மனால் ஏற்படுகிறது என்று நம்பும் கிராமத்து மக்களின் நம்பிக்கையும் அம்மை நோய் கிருமிகளால் ஏற்படுகிறது என்று நம்பும் படித்தவர்களின் நம்பிக்கையும் மூடநம்பிக்கையே அன்றி வேறில்லை.” என்கிற தமிழ்வாணன் முன் வைக்கும் அம்மை நோய் பற்றிய கருத்து நிதர்சனம். நமது மூதாதயர், நோய் பற்றிய அச்சத்தைக் களைய கடவுள் நம்பிக்கையைக் கைகொண்டனர். சாதாரண நிலையில் மக்கள் எதையும் ஏற்கத் தயாராக இருக்க மாட்டார்கள். அவர்களின் நம்பிக்கை உறுதிப்பட ஒரு ஊன்றுகோல் தேவையாய் இருக்கிறது. அதற்கு இறை சார்ந்த சில நம்பிக்கைகளையும் பின்பற்றல்களையும் உத்திகளாகப் பயன்படுத்தினர். மக்களை நோயிலிருந்து மன உளைச்சலின்றி நீங்கச் செய்ய மாரியம்மன் வழிபாடு பெரிதும் கைகொடுத்தது என்பதையே அம்மை நோய் பற்றிய சமயம் சார்ந்த வழிகாட்டல்கள் உணர்த்துகின்றன.
1892ல் பவேரியா நாட்டைச் சேர்ந்த நுண்ணுயிரியியல் விஞ்ஞானி பெட்டின்காஃபர் ஒரு டெஸ்ட் டியூப் அளவில் காலரா கிருமிகளை உட்கொண்டு மருத்துவ உலகிற்கும் மக்களுக்கும் கிருமிகள் பற்றிய அச்சத்தைத் தெளிய வைத்த முதல் மேற்கத்திய விஞ்ஞானி. நம் ஆதிக்குடி மூதாதையர் எப்போதுமே கிருமிகளைக் கொண்டாடியே வந்துள்ளனர். லூயி பாஸ்டரின் கிருமிக் கொள்கையை கல்வித்திட்டமாகக் கொண்ட நவீன அறிவியலுக்கு உண்மையைப் புரிய வைக்க இது போன்ற சான்றுகள் தேவைப்படுகின்றன. முதன்முதலில் கிருமி பற்றிய ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானி ஆண்டனி வான் லீவன் ஹாக்.
மனித உடலில் சிறிய உயிரினங்கள் வாழ்வதை 1600 களிலேயே நுண்ணோக்கி கொண்டு ஆராய்ந்து கண்டுபிடித்தார். மாறுபட்ட வடிவமைப்பில் மனித உடலில் வீற்றிருந்த இந்த நுண்ணுயிர்களுக்குச் சிறிய விலங்குகள் என்கிற அடைமொழியோடு தனது கண்டுபிடிப்பைப் பதிவு செய்து வைத்தார்.
தொடர்ந்து 1700 களின் மத்தியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவரும் விஞ்ஞானியுமான டாக்டர் ஆண்டனி பீச்சாம்ப், ஆண்டனி வான் லீவன் ஹாக் விட்டுச் சென்ற ஆய்வைத் தொடர்ந்தார். இந்தச் சிறு விலங்குகளுக்கு மைக்ரோசிமாஸ் என்று பெயரிட்டு கிருமிகளைப் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்தார். இந்த நுண்ணுயிர்கள் மனிதர்களுக்கு ஒரு போதும் தீங்கிழைக்காது என்றும் கிருமிகள் நோய்களுக்கான காரணமல்ல மனித உடலில் தேங்கியுள்ள கழிவுகளே காரணம் என்பதை பல ஆய்வுகளைக் கொண்டு நிரூபித்து, கிருமிகள் பற்றிய தனது அறிக்கையைப் பதிவு செய்தார்.
1916 ஆம் ஆண்டு கிருமிகள் நோய்களின் தாயா அல்லது நோய்களின் சேயா என்கிற கேள்வியுடன் தமது ஆய்வை துவங்கிய கனடாவைச் சேர்ந்த ஜான் பிரேசர், தொந்தரவுகள் தோன்றும்போது கிருமிகள் தென்படுவதில்லை, தொந்தரவுகள் நோய்களாக மாற்றம் பெற்ற பின் கிருமிகளின் உருவங்கள் தெரிவதைக் கண்டு தமது ஆய்வைத் தொடர்ந்த பிரேசர் நோய் ஏற்பட்ட பின்பே கிருமிகள் பிறக்கின்றன என்ற தனது ஆய்வறிக்கையைக் கட்டுரையாக கிருமிகளின் பல்வேறு ஆய்வுத் தரவுகளுடன் லேன்செட் என்கிற மருத்துவ இதழில் வெளியிட்டார்.
1860-களில் லூயி பாஸ்டர் கிருமித் தத்துவத்தைத் துவங்கி வைத்தார். கிருமிகள் தான் உடலின் நோய்களுக்குக் காரணம் என்கிற கிருமிகள் பற்றிய தவறான அனுமானத்தை பல ஆய்வுகளின் வழியாக உருவாக்கினார். இதைத் தொடர்ந்து பல விஞ்ஞானிகள் கிருமிகள் பற்றிய வெவ்வேறு ஆய்வு அறிக்கைகளைப் பாஸ்டரின் ஆய்வுகளுக்கு ஒத்திசைவாக அறிவித்தனர். குறிப்பிடும்படியாக ஜெர்மனியைச் சேர்ந்த ராபர்ட் கோச் பாஸ்டரின் ஆய்வுக்கு வலு சேர்க்கும் வகையில் கிருமித் தத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் பாக்டீரியாலாஜி உருவாக்கி ஒவ்வொரு நோயையும் கிருமிகளின் மூலக்கூறுகள் அடிப்படையில் பட்டியலிட்டு வழங்கினார். லூயி பாஸ்டரின் கிருமி தத்துவம் ஆங்கில மருத்துவத்தின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அவருக்கு முன்பே 1841 இல் மனித உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் கழிவுகள் மட்டுமே காரணம். வேறு காரணங்கள் இல்லை என்கிற லிக்கோ கோட்பாட்டை டாக்டர் ஹென்றி லிகோ வலியுறுத்தினார். ஆனால் 1846 இல் வியன்னா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஹங்கேரி மருத்துவர் செம்மெல் வெய்ஸ் அங்கிருந்த இரண்டு மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு வந்த தாய்மார்களின் இறப்பு விகிதம் ஒரு மருத்துவமனையில் அதிகமாகவும் மற்றொன்றில் குறைந்த சதவிகிதத்தில் இருப்பதைக் கண்டு குழம்பி, பலதரப்பட்ட புறக்காரணிகளைத் தேடி ஆய்வைத் துவங்கினார். இறுதியில் பிரேதப் பரிசோதனை அறையில் அறுவை சிகிச்சை நடக்கும் அறையில் பணிபுரியும் ஊழியர்களின் புழக்கமே காரணம் என்கிற தவறான புரிதலின் அடிப்படையில் அந்த ஊழியர்களைக் குளோரின் கலந்த லைமினால் கைகழுவச் செய்து பிரசவ அறையை பயன்படுத்த வலியுறுத்தினார்.
இப்படியாகக் கிருமிகளுக்கு எதிரான பல்வேறு ஆய்வாளர்களின் அர்த்தமற்ற ஆய்வுகள் பதிவு செய்யப்பட்ட வண்ணமிருக்க, 1881ல் லூயி பாஸ்டரின் கிருமிகளால்தான் நோய்கள் உண்டாகின்றன என்கிற கொள்கை அதிகாரப்பூர்வமாகவும் அதேவேளை பல ஆய்விலாளர்களின் தர்க்க விவாதத்தோடும் வெளி வந்தது.
1881 இல் லூயி பாஸ்டரின், கிருமிகளால் தான் நோய்கள் உண்டாகின்றன என்கிற கொள்கை அதிகாரப்பூர்வமாகவும் அதேவேளை பல ஆய்விலாளர்களின் எதிர்விமர்சனங்களோடும் விவாதங்களோடும் வெளிவந்தன. இந்தக் கொள்கையைப் பிரெஞ்சு விஞ்ஞானி ஃபோர்மின் உடன் பல விஞ்ஞானிகள் முன்னுக்குப் பின் முரணான பாஸ்டரின் கிருமிக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்தனர்.
தொடர்ந்து வியன்னா பல்கலைக்கழகத்தில் பாஸ்டர் மாமிசத் துண்டொன்றைக் கொண்டு,”காற்றின் வழியாக கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் மாமிசத்துண்டில் புகுந்து அதனை நோயுற்றதாக மாற்றுகின்றன.”என்கிற கிருமிகளுக்கு எதிரான தவறான கருதுகோளை நிரூபிக்க, ஸ்டராஸ் போர்க் கல்லூரியின் பேராசிரியரான விஞ்ஞானி ஆன்டனி பீச்சாம்ப் அதே போன்ற மாமிசத் துண்டொன்றை காற்று புகமுடியாத கண்ணாடிக் குடுவைக்குள் வைத்து அழுகிய பொருட்களிலேயே கிருமிகள் உருவாகும் என்றும் மனித உடலில் தேங்கியுள்ள கழிவுகளிலேயே கிருமிகள் உருவாகின்றன என்கிற தமது ஆய்வை ஊடகவியலாளர்கள் பேராசிரியர்கள், மக்கள் முன்னிலையில் நிரூபித்துக் காட்டினார்.
தொடர்ந்து கிருமிகளுக்கு ஆதரவான தமது ஆய்வுகளில் பீச்சாம்ப் வெளியிட்ட கருத்துக்கள் பிளியோமார்ப்பிசம் என்று அழைக்கப்பட்டது. அவர் கோட்பாட்டின் முக்கிய அம்சமாக “எல்லாக் கிருமிகளுக்கும் தாய் ஒரே வகை தான்.கழிவுகளிலிருந்து பிறக்கும் கிருமிகள், தொடரும் கழிவுத் தேக்கங்களாலோ, ரசாயன மாறுதல்களாலோ வெவ்வேறு உருவங்களாகத் தங்களை மாற்றிக் கொள்கின்றன.”
மேலும், “காற்றின் மூலம் கிருமிகள் பரவுவதில்லை, காற்று நுண்ணுயிர்களை வளர்க்கப் பயன்படுகிறதே தவிர அவற்றைக் கடத்துவதில்லை.”
பீச்சாம்பின் கிருமிகளுக்கு ஆதரவான ஆய்வுகளுக்கு முன்பாக ”ரத்தம் மற்றும் அதன் முதல் காரணி”மற்றும் ”நுண்ணுயிர்கள்” போன்ற பிரெஞ்சு நூல்கள் பிற்காலத்தில் தெளிவுபடுத்தின..
1940களில் அமெரிக்க மருத்துவர் ஹென்றி லிண்டார் ”இயற்கை மருத்துவத் தத்துவங்கள்” என்கிற ஆங்கில நூலில் பீச்சாம்ப் பற்றிய நூல்களின் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
1920 களில் ”பீச்சாம்ப் ஆர் பாஸ்டர்” என்கிற ஆங்கில நூல் மருத்துவ ”உலகின் மறைக்கப்பட்ட பக்கங்கள்” என்கிற துணைத் தலைப்புடன் பல மருத்துவ இரகசியங்களை வெளிப்படுத்துகிறது.
ஆனால் ஃபோரமின், பீச்சாம்ப், காப்பர், பிரேசர் போன்றவர்களின் நுண்ணுயிர்களுக்கு ஆதரவான ஆய்வறிக்கைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. பாஸ்டரின் கிருமிக் கொள்கையே பரவலான ஆதரவைப் பெற்றது.இதற்குக் காரணம் பாஸ்டர் பிரெஞ்சு அரசர் லூயி நெப்போலியனின் பெரும் ஆசிக்கும் ஆதரவுக்கும் உட்பட்டவர் மற்றும் 1700 களில் ஜெர்மன் டாக்டர் சாமுவேல் ஹானிமன் கண்டுபிடித்த ஆங்கில மருத்துவத்திற்கு எதிரான மக்கள் மத்தியில் பரவி வந்த இயற்கை மருத்துவமான ஹோமியோபதி மருத்துவத்தை ஒழித்துக்கட்டும் கடும் பிரயத்தனமாக பாஸ்டரின் கிருமிக் கொள்கை இருந்து வந்ததும் காரணம். இன்றும் இதே கிருமிக் கொள்கை விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கின்றன.
ஆங்கில மருத்துவத்திற்கு அலோபதி என்கிற பெயரைச் சூட்டியவரே டாக்டர் சாமுவேல் அவர்கள். அலோபதி என்றால் உடலுக்கு எதிரான என்று பொருள். ஆங்கில மருத்துவத்தின் அடிப்படையே தவறானது. அது இயற்கைக்கும் மனித குலத்திற்கும் மனித உடலுக்கும் எதிரானது என்கின்ற கடும் விமர்சனத்தை தத்துவ பூர்வமாக உணர்ந்தே சாமுவேலின் மருத்துவத் தேடல் ஹோமியோபதியைக் கண்டுபிடித்தது. இது போன்ற பல மருத்துவ வரலாற்றுத் தகவல்கள் கட்டுரைத் தொகுப்பில் நிறைந்துள்ளன .
டாக்டர் ராபர்ட் கோச்சின் மூலம், நோய்ப் பட்டியலின் அடிப்படையில் 1929 ஆம் ஆண்டு முதல் முதலாக கிருமி கொல்லி மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதல் கிருமிக்கொல்லி மருந்து பென்சிலின். பயங்கரமான பக்க விளைவுகளைக் கொண்ட ஆன்டிபயோட்டிக் மருந்து. ஆனால் 1729 களிலேயே சின்ஹோனா என்கிற மரப்பட்டையைக் கொண்டு மலேரியா காய்ச்சலிலிருந்து ஜெர்மனி மக்கள் குணமடைந்தனர் என்பது வரலாற்றுக் குறிப்பு. டாக்டர் ஹானிமன் இந்த மருந்தைக் கொண்டு பல்வேறு நோய்களைக் குணப்படுத்தினார் என்பதும் கூடுதல் தகவல்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கிருமித் தத்துவக் கோட்பாட்டை உலகம் முழுதும் பரப்பிய பாஸ்டர் தனது இறுதிக்காலங்களில் விஞ்ஞானிகளிடம், “கிருமிகள் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு என்னிடம் இப்போது பதில் இல்லை எதிர்கால விஞ்ஞானிகள் உங்களுக்கு விடை தருவார்கள்.” என்றார். கிருமிகள் தான் நோய்களுக்கான காரணம் என்று பிரச்சாரம் செய்து வந்த பாஸ்டர் .
உலகம் முழுதும் இன்று உயிர் காக்கும் மருத்துவமாக பெரிதாய்ப் பேசப்படும் ஆங்கில மருத்துவத்தை கிமு 600 களில் பல்வேறு நாடுகளின் பயன்பாட்டில் இருந்து வந்த மருத்துவக் குறிப்புகளை இணைத்து டாக்டர் ஹிப்போகிரேட்ஸ் கண்டுபிடித்தார் என்பதை விட ஒருங்கிணைத்தார் என்பதே மருத்துவ ஆய்வுகள் தெள்ளத்தெளிவாக விளக்குகின்றன.
ஆங்கில மருத்துவத்திற்கென்று தனித்துவமான தோற்றமோ, வரலாறோ, கோட்பாடுகளோ, தத்துவங்களோ, குறிப்புகளோ ஏதும் கிடையாது. அது ஒரு சார்பு மருத்துவம்; அவ்வளவே.. இவ்வாறான சார்பு மருத்துவமான ஆங்கில மருத்துவத்தின் தந்தையாக டாக்டர் ஹிப்போகிரேட்ஸ் அழைக்கப்பட்டார். இன்றும் மருத்துவக் கல்லூரி மாணாக்கர்கள் தங்களது இறுதியான பயிற்சிக்குப் பின்னர் அறுதியான உறுதி மொழியை இவரது பெயரில் எடுத்து வருகின்றனர். பல்வேறு விஞ்ஞானிகளின் மறைக்கப்பட்ட மருத்துவ உண்மை வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்கள்.
ஆங்கில மருத்துவத்தின் கிருமி பற்றிய தவறான கோட்பாடுகள், கிருமிகள் மீதான புரிதலற்ற ஆய்வறிக்கைகள், மனித உடலின் நோய்களுக்கான காரணிகளாக கிருமிகளைச் சித்தரித்து அவைகளை மனிதர்களின் வில்லன்களாக, தீய சக்தியாகப் பிரச்சாரம் செய்து மனிதர்களின் சக மனித நேயத்தைத் துவம்சம் செய்த நவீன அறிவியலின் மருத்துவ சாதனங்களை ஒவ்வொரு அத்தியாமும் ஆவணங்களுடன் ஆய்வாளர்களின் ஆக்கப்பூர்வ தரவுகளுடன் எடுத்துக் காட்டுகிறது. இருட்டடிப்பு செய்யப்பட்ட பல மருத்துவ இரகசியங்களை வெளிக்கொண்டு வ ந்த இந்நூல் மருத்துவ வரலாற்றின் மற்றுமொரு புதினம் என்று கூறினால் மிகையாகாது. மனிதர்களைப் பெரிதாக அச்சுறுத்தி வந்த கிருமி பயத்தை முற்றிலும் போக்கும் படியான நிவாரணியாக இந்தக் கட்டுரைத் தொகுப்பு மக்களின் உடல் நலத்தை மட்டுமல்ல மனதையும் செழுமைபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. மேலும் இந்நூல் கிருமிகளின் அசல் வரலாற்று ஆவணம் . .
ஆய்வறிஞர்கள் வரலாறு, நோய்களின் பிறப்பு முதற்கொண்டு ஒவ்வொன்றாக நிரல்படுத்தி, தரவுகள், குறிப்புகள், வரலாற்று சம்பவங்கள், பிரசித்தி பெற்ற மருத்துவ நூல்களின் குறிப்புகள் என அனைத்தையும் குறித்து வைத்துள்ளது நூல்.
மலேரியா காய்ச்சலுக்குப் பிறகு அடுத்தடுத்த நோய்களாகப் பன்றிக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஆங்கில மருத்துவத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன. பன்றிக் காய்ச்சல் என்று உலகெங்கும் அச்சுறுத்தப்பட்ட தொற்றுக் காய்ச்சலாக ஃப்ளூ காய்ச்சல் 1818 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. H1N1 என்கிற வைரஸ் கிருமியால் பரவுவதாகச் சொல்லப்படுகிறது. இதைப் போன்ற மற்றொரு வடிவமாக 1977-ல் H3 N2 வைரஸ்கள் மீண்டும் பரிசோதனைகளில் தென்பட்டதை இந்நூல் பதிவிட்டுள்ளது.
ஆக..பன்றிக்காய்ச்சல் என்பது இன்று புதிதாகத் தோன்றிப் பரவிய காய்ச்சல் இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் காய்ச்சலுக்காக அடையாளப்படுத்தப்பட்ட நுண்ணுயிரிகள் மனித உடலில் தென்படுவதை மருத்துவ ஆய்வுகள் ஆவணப்படுத்தி உள்ளன. இன்று வெகுவாகப் பயமுறுத்தும் கொரோனா வைரஸ்கள் பல ஆண்டுகள் முன்பே பரிசோதனைகளில் தென்பட்டதும், அது தான் தோன்றியாக வந்து மறைந்ததையும் ஆய்வறிஞர்கள் பலர் தமது ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர். ஆனால் சமீபமாக உலகெங்கும் பரவி வருவதாக ஆங்கில மருத்துவர்களும் நவீன ஆய்வாளர்களும் உலக அரசுகளும் கிருமிகள் பற்றிச் சித்தரிக்கப்பட்டதன் அரசியல் பின்புலத்தை சமூக ஆர்வலர்களும் மரபு வழி மருத்துவர்களும் வெளிச்சப்படுத்தியுள்ளனர்.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுக்குப் பன்றி காய்ச்சல் என்று அடையாளப்படுத்தும் ஆங்கில மருத்துவம் இதற்கு தாமீப்ளூ என்ற மருந்தைப் பரிந்துரைத்து வருகின்றது. ஆனால் கார்பரேட் மருத்துவ இடைத்தரகர்கள் இந்த மருந்தை உயர்தர மருந்தாக விலை பேசி விற்று வருகின்றனர். மக்களின் உடல் ஆரோக்கியத்தில் பெரும் இடைமறிப்பு செய்யும் என்று நன்குஅறிந்தும் மக்களின் நலனில் துளியும் அக்கறையின்றி இந்த மருந்துகளை சந்தையில் அறிமுகம் செய்கின்றனர். ஆங்கில மருத்துவர்களும் இந்த மருந்துகளை மக்களுக்கு தாட்சண்யமின்றி பரிந்துரைப்பு செய்கின்றனர். மூளை இயக்கத்தைக் குறைத்து நரம்பு மண்டலத்தைச் செயலிழக்கச் செய்யும் கொடிய விஷம் என்று அறிந்திருந்த ஜப்பான், இந்த மருந்தை 15 ஆண்டுகள் முன்பே தடை செய்து விட்டது. ஆனால் இங்கு இந்தியாவில் சாதாரணமாக இந்த மருந்து புழக்கத்தில் உள்ளது. அனைத்து நுரையீரல் நோய்த் தொந்தரவுகளுக்கும் இந்த மருந்தையே பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள் என்பது எத்தனை அபத்தம்.
நவீன மருத்துவத்தின் இடைக் காலத்தில் மிக பிரபலமாக்கப்பட்டு பீதியை கிளப்பிய டெங்கு காய்ச்சல் பற்றி தோலுரிக்கிறது தொகுப்பு. கி.பி 265இல் சீனாவிலும் 1779 களில் ஐரோப்பாவிலும் 1789இல் அமெரிக்காவிலும் புதிதாகத் தோன்றிய காய்ச்சல் அறிகுறியை டெங்கு காய்ச்சல் எனப் பெயர் சூடியது. உடலில் ஏற்பட்ட நோய் அறிகுறிகளைக் கொண்டு டெங்குக்காய்ச்சல் என்று அழைத்தது அமெரிக்கா. இதே அறிகுறிகளைக் கொண்ட தொந்தரவுகளை இப்போதே முளைத்ததாகப் பரப்பி, புதிய நோயாகச் சித்தரித்தது. இந்த அறிகுறிகள் காலம் காலமாக இருந்து வந்த சாதாரணக் காய்ச்சல் வகைகளில் ஒன்று. இந்தக் காய்ச்சலின் போது உடலைப் பரிசோதித்துக் கண்டுபிடிக்கப்பட்டது தான் ஆர்ப்போ வைரஸ். உண்மையில் இந்த ஆர்ப்போ வைரஸ் நோய்க்கழிவு உடலில் தேங்கும் போது உருவாகும் ஒரு வகை நுண்ணுயிரி. அதன் ஆயுட்காலம் வெறும் 14 நாட்களே.15 வது நாள் கழிவு முடிவுற்ற நிலையில் தாமே இறந்து விடும் தன்மை கொண்டவை. உடலில் கழிவுகள் மிச்சம் இருந்தால் மறுபடியும் புதிய புதிய வைரஸ்கள் தோன்றும். இந்த வைரஸ் நம் உடலில் உருவானவுடன் அவற்றைக் காப்பதற்காக ”இன்டர்பெரோன்” என்ற புரதத்தை நம் எதிர்ப்பு சக்தி சுரக்கிறது. இந்த நிலைக்குப் பெயர் தான் டெங்கு காய்ச்சல். ஒரு மாத காலம் மருத்துவமனையில் நோயாளியின் வருமானத்தைப் பிடுங்காமல் உடல் எதிர்ப்பு சக்தியைக் குலைக்காமல் மக்களை விடாது அலோபதி மருத்துவமனைகள். இந்த காய்ச்சலுக்கும் விலையுயர்ந்த தாமிப்ளூ மருந்தையே மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர் என்பது மக்கள் அறிந்திராத உண்மை. அடுத்து, உயிர்க்கொல்லி நோயாக அலோபதி விளம்பரப்படுத்தும் எய்ட்ஸ் பற்றி இறுதி அத்யாயங்கள் பேசுகின்றன.
பல்வேறு ஆய்வாளர்கள் டாக்டர்கள் பேராசிரியர்கள் இந்த நோயை முன்வைத்து அரசாங்கங்களும் பன்னாட்டு மருத்துவக் கம்பெனிகளும் பிரச்சாரப்படுத்தும் அரசியலைப் பகிரங்கமாக வெளிச்சப்படுத்தியுள்ளது தொகுப்பு.
டாக்டர் ஆல்ப்ரெட் ஹாஸ்ஸிக், டாக்டர் ஹாரிரூபின், டாக்டர் பிராட்லி, டாக்டர் வால்டர் கில்பர்ட் என எய்ட்ஸ் நோய் பற்றிய பேராசிரியர்கள், மருத்துவ ஆய்வறிஞர்கள் ஆகியோரின் கருத்துக்களைத் தொகுத்து வழங்கிய அதே வேளை இந்நோய் பற்றிய பல உண்மை நிலவரங்களில் வெளிச்சம் பாய்ச்சி, எய்ட்ஸ் நோய் மீது உண்டான குழப்பங்களையும் குளறுபடிகளையும் மக்கள் வெளியில் அம்பலப்படுத்தியுள்ளார் ஆசிரியர். எய்ட்ஸ் பற்றிய மக்களுக்குப் புகட்டப்பட்ட தவறான கற்பிதங்களையும் உடைத்தெறிகிறார்.
மேற்கோளிடும் படியாக எய்ட்ஸ் நோய்க்கான நுண்ணுயிரியாக கூறப்படும் எச்.ஐ.வி(HIV) வைரஸைக் கண்டுபிடித்த பாரீஸ் பாஸ்டர் கல்லூரியின் கிருமியியல் துறைப் பேராசிரியர் டாக்டர் லுக் போன் பிக்னியர்,”எச்ஐவி எய்ட்ஸுக்கு காரணம் அல்ல இதைப்பற்றிய ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளில் எக்கச்சக்கமான குளறுபடிகளும் பித்தலாட்டங்களும் உள்ளன.” என்ற உண்மையை மக்கள்வெளியில் பகிரங்கமாகப் பகிர்ந்துள்ளார். அசலில் எந்த ஒரு கிருமியின் தாக்குதலாலும் நோய் உருவாவதில்லை. வணிக லாபத்திற்காகத் தீட்டப்பட்ட அரசியல் சதித்திட்டங்களே அனைத்துத் தொற்று நோய்களின் பிறப்பிடமாக இயங்கி வருகின்றன என்பதை அப்பட்டமாக நிரூபிக்கிறது நூல்.
சாதாரணமாகத் தோன்றி மறையும் தொந்தரவுகளை நோய்களாகச் சித்தரித்து இதுகாறும் ஏமாற்றி வரும் ஆங்கிலமருத்துவ வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் பன்னாட்டு நிறுவனங்களின் முகங்கள் ரூபாய் நோட்டுகளில் புன்னகைத்து அணிவகுப்பதைத் தரிசிக்க முடியும். கிருமிகளின் அடிப்படை ஆய்வுகளுக்குள் போகாத வண்ணம் இன்றைய நவீன ஆய்வுகள் விஞ்ஞானிகளின் அடிப்படை அறிவியல் அறிவைக் குழப்பியுள்ளன. கிருமிகளைக் கொண்டு அது வளரும் சூழலுக்கு ஏற்ப கழிவுகளை வழங்கிப் பின் அவை மடியும் ரசாயனங்களைக் கொண்டு ஆய்வு செய்து புதிய மருந்துகள் கண்டுபிடித்து விட்டதாகத் தங்கள் ஆய்வுகளைப் பிரகடனப்படுத்துகிறனர் மருத்துவ விஞ்ஞானிகள்.
அசலில் நுண்ணுயிரிகள் தான்தோன்றிகள். ஒவ்வொரு கழிவும் உருவாகும் சூழலுக்கு ஏற்ப இயற்கையால் அவ்வகைக் கழிவுகளை மட்டுமே தின்று தீர்க்க உருவாக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களே இக்கிருமிகள். ஆனால் ஆங்கில மருத்துவமும் மருந்து நிறுவனங்களும் கிருமிகளை மனித குல வில்லன்களாகச் சித்தரித்துப் பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் அனைத்துத் தந்திரங்களையும் செய்து வருகின்றன.
ஆசிரியர் மரபு வழி மருத்துவராக, பாரம்பரிய மருத்துவமான அக்குபங்சரின் வழிநின்று, உடல் சார்ந்த நமது முன்னோர்களின் வழிநடத்தலைக் கொண்டு, மக்களின் கிருமி பயத்தைப் போக்க அனைத்து வகைகளிலும் புரிதலை இந்நூல் வழியாக ஏற்படுத்தியுள்ளார்.
அன்றே தோன்றிகளாகக் கூறப்படும் கிருமிகளை இன்றே உருவானதாகப் பரப்பப்பட்டு வரும் உயிரிகளை நாளை புதிதாகப் பிறக்கவிருப்பதாகப் பிரச்சாரப்படும் லட்சக்கணக்கான தீநுண்மிகளையும் காட்டி மிரட்டி வரும் அலோபதி மருத்துவத்தின் அரசியல் சதியை நூலில் நேர்மையாகச் சுட்டிக் காட்டி மக்களின் அறியாமையைப் போக்கியுள்ளார் ஆசிரியர். மக்கள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசிரியரின் வேண்டுகோள்.
“நோய்கள் இந்தக் கிருமிகளாலேயே ஏற்படுகிறது என்றால் மனித சமுதாயம் முழுமையும் கிருமிகளிடம் உயிர்ப்பிச்சைக்காகக் கையேந்தி நிற்க வேண்டியதுதான்.”
என்கிற டாக்டர் ஹென்றி லிண்டார் அவர்களின் ஆதங்கக்குரலை நூல் பதிவு செய்கிறது.
நூலின் தகவல்கள்
நூல் : “கிருமிகள் உலகில் மனிதர்கள்”
நூலாசிரியர் : அக்குஹீலர் அ. உமர் பாரூக்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
விலை : ரூ.150/-
நூலறிமுகம் எழுதியவர்

து.பா.பரமேஸ்வரி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

