உத்வேகம் அளிக்கும் வரலாறுகள்!
கே.சாமுவேல் ராஜ்
தஞ்சை மண்ணில் நிலவுடைமைக்கு எதிராக – சாதீய ஒடுக்குமுறைக்கு எதிராகச் செங்கொடியின் தீரமிக்க போராட்டங்களின் தியாக வரலாறு நெடியது. மிக எளிய உழைப்பாளி மக்களை நெஞ்சு நிமிர்த்தித் தங்களது உரிமைகளுக்காகப் பேச வைத்தது செங்கொடி இயக்கம். கீழத் தஞ்சையில் ஏக்கரா கணக்கில் குவிந்திருந்த நிலங்களின் உடமையாளர்களிடம் விவசாயக் கூலிகளாக, குத்தகை விவசாயிகளாக அந்நாட்களில் மிக சாதாரண மக்கள் பட்ட பாடுகள் விவரிக்க முடியாதது. அந்தக் காலத்தைப் பற்றிய தனது நூலில் மறைந்த நமது மதிப்புக்குரிய தலைவர் என் சங்கரய்யா அவர்களுடைய தம்பி என்.ராமகிருஷ்ணன் எழுதி இருப்பதை எல்லோரும் வாசிக்க வேண்டும். செங்கொடி தியாகிகளது வரலாறுகளைத் தேடித் தேடி எடுத்துத் தொகுத்து நமக்கு வழங்கி விட்டு மறைந்த அருமையான தோழர் என் ராமகிருஷ்ணன்.
மாட்டுக் கொம்பு சத்தம்
விடியற்காலையில் மாட்டுக் கொம்பு எடுத்து ஊதும் சத்தம் கேட்கும். அதைக் கேட்ட மாத்திரத்தில் ஆண்கள் எல்லோரும் அனிச்சை செயலாக விழித்தெழுந்து ஒரு மட்டையில் வைத்திருக்கும் சாம்பலை அள்ளிக் கையில் எடுத்துப் பல் துலக்கியபடியே நடக்கத் தொடங்கி வழியில் எதிர்ப்படும் ஓடையிலோ வேறு நீர் நிலையிலோ வாய் கொப்புளித்து விட்டு முகத்தைக் கழுவிக் கொண்டு வயலில் போய் இறங்குவார்கள். புலர்ந்தது காலை….என்று அவர்கள் தங்களுக்கு முடிந்த அளவு உரக்கக் குரலெடுத்துப் பாடுவார்கள். தூரத்தில் இருக்கும் தனது பங்களா வீட்டில் இருந்தபடி இந்தப் பாடலைக் கேட்கும் பண்ணையாரின் காதுகளுக்குத் தேனிசையாக ஒலிக்குமாம். நிம்மதியாக மேலும் தூக்கம் போடுவாராம். அடுத்து மற்றுமொரு மாட்டுக் கொம்பு ஊதும் சத்தம். இப்போது பெண்கள் எல்லோரும் எழுந்து வந்து வீட்டு ஆண்களுக்கும் சேர்த்துப் பழஞ்சோற்றை ஒரு தூக்கில் போட்டு விட்டு கடிப்பதற்கு மிளகாய் தேடி இருப்பதை எடுத்துக் கொள்வார்களாம். பச்சை மிளகாய் எடுத்துக் கொள்ளும் அளவு விவரமோ, வாய்ப்போ வசதியோ இல்லையாம், கையில் கிடைக்கும் காய்ந்த மிளகாய்த் துண்டுகளை எடுத்துப் போட்டுக் கொண்டு போவார்களாம்.
பண்ணையார் இந்த உழைப்பாளிகளுக்கு அவர்கள் தங்களது பண்ணை வேலைக்கு வருவதற்கு உயிர் தரித்திருக்கும் அளவுக்கு உணவு அனுமதித்தால் போதும் என்பது மாதிரி தான் நடந்து கொள்வார்களாம். ஏராளமான கெடுபிடிகள், கட்டுப்பாடுகள். மானத்தை மறைப்பதற்கு ஓர் ஆடை அவ்வளவு தான். அப்படியென்றால் கணுக்கால் தெரிய வேண்டும். இடுப்பை மறைத்தால் ஆடையின் வேலை முடிந்தது, மேலாடை தேவை இல்லை. துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு போகக் கூடாது. சாதிமார் தெருவில் ஒடுக்கப்பட்ட சாதியினர் நுழையக் கூடாது.
சாணிப்பால், சவுக்கடி
பண்ணை அடிமைகளுக்குத் தண்டனை, சாணிப்பால், சவுக்கடி. இதைக் கூட எளிமையாகப் புரிந்து கொண்டு விடுகிறோம். சாணிப்பால் என்றால் சாணியைக் கரைத்துக் குடிப்பது அல்ல. மிகப் பெரிய கலயத்தில் சாணியைக் கரைத்து வைப்பார்கள். தண்டனைக்கு உட்பட்டவரது தொண்டையில் இறங்கும் அளவு மாட்டுக் கொம்பைச் செருகி மேலிருந்து சாணிப்பால் ஊற்றிக் குடிக்க நிர்ப்பந்தம் செய்வார்கள். மொத்தக் கரைசலையும் குடித்து முடிக்க வேண்டும் என்றால், வயிறு வீங்கித் துடிதுடித்துப் பாதியிலேயே செத்துப் போனவர்கள் ஏராளம். சவுக்கடியும் எப்படி இருக்கும், சவுக்கின் நுனியைப் பிரித்து, அதைக் கொண்டு அடித்தால் ஆழமான காயம் ஏற்படுத்தும் அளவு தயார் செய்வார்கள். மரத்தில் கட்டிவைத்து நகரவிடாமல் செய்துதான் அடிக்கவே ஆரம்பிப்பார்கள். அடி தாங்க மாட்டாது சரிந்து விழுகிற வரை அடி விழும். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் எதிராகத் தான் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மாபெரும் இயக்கங்களைக் கட்டி எழுப்பினர்.
தோழர் பி சீனிவாச ராவ் ஆற்றிய அரிய பணிகளைப் பேசுகிறோம். சாதாரணமான வாழ்க்கை அல்ல, கடும் சவால்களுக்கு எதிராகத் துணிந்து நின்று போராடிய வாழ்க்கை. இப்போதுள்ள நவீன தொடர்பு சாதனங்கள் அற்ற காலத்தில், எளிய உழைப்பாளி மக்கள் மூச்சுக் காற்று சுவாசிக்கக் கூட அனுமதியற்ற அளவு ஒடுக்குமுறை மலிந்திருந்த சூழலில் அவர்களை உறுதி மிக்க போராட்டங்களில் அணி திரட்டியவர் சீனிவாச ராவ். அடித்தால் திருப்பி அடி என்பது எப்பேற்பட்ட முழக்கம் என்பது அந்தக் காலத்தில் நின்று பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.
சமூக நிகழ்வுகளில் குறுக்கீடு
இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். மூத்த தலைவர் சங்கரய்யா அவர்களோடு நெருக்கமாகப் பழகியவர்களுக்குத் தெரிந்திருக்கும், எப்போது பார்க்கும்போதும், சமூக நிகழ்வுகளில் குறுக்கீடு செய்கிறீர்களா என்று தான் முதல் கேள்வியே கேட்பார். கடும் ஏற்றத்தாழ்வுகள் விஞ்சி இருக்கும் ஒரு சமூகத்தில் அதில் தலையீடு செய்யாமல் கம்யூனிஸ்ட் இயக்கம் எப்படி வளர முடியும். ஒரு முறை திருத்துறைப்பூண்டி கட்சி அலுவலகத்தில் வந்து உட்காருகிறார் சீனிவாசராவ். ஊரில் தேர்த்திருவிழா. என்ன ஏதென்று கேட்கிறார். தேர்த்திருவிழா என்று அறிவிப்பு வந்துவிட்டால் ஒடுக்கப்பட்ட இனத்தவர்கள் யாரும் தேர் செல்லும் தெருக்கள் எதிலும் நுழையக் கூடாது. கடுமையான கட்டுப்பாடு அது. சரி, அடுத்த கமிட்டி கூட்டத்தில் பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிடவில்லை சீனிவாசராவ். உடனே சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்து உழைப்பாளி மக்களை உடனே இங்கே வரும்படி தகவல் கொடுங்கள் என்று சொல்கிறார். அலைபேசியோ, வாட்ஸ் அப் தொடர்போ, மின்னஞ்சலோ எந்த சாதனமும் அற்ற காலம். யாரும் என்ன விஷயம் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. சீனிவாசராவ் அழைத்துவிட்டார், அவ்வளவு தான் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து கட்சி அலுவலகத்தில் சூழ்ந்து நிற்கின்றனர். தேராவது ஒன்றாவது, அது பத்திரமான இடத்திற்கு இழுத்துச் சென்று பூட்டி வைக்கப்பட்டாயிற்று….அது தான் சீனிவாசராவ் போராட்ட அணுகுமுறை. அவர் மறைந்தபோது எப்படியெப்படி தகவல்கள் பரவியது தெரியாது, அறுபதினாயிரம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தினர் என்று சொல்கின்றனர்.
களப்பால் குப்பு எப்பேற்பட்ட புரட்சியாளர். நாட்டுக்கு நாடு ஒப்பந்தம் போடுகிறார்களாம். எங்கெங்கோ உடன்பாடுகள் எட்டப்படுகின்றன. ஆனால், அன்றைய காலத்தில் குப்பு அவர்கள் போட்ட ஒப்பந்தம் ஆகச் சிறந்தது என்று நாம் உணரவேண்டும். பண்ணை ஆட்களுக்கு சாணிப்பால் சாட்டையடி கூடாது. களத்திலேயே அறுவடையில் இருந்து நெல் அளந்து கொடுக்க வேண்டும். ஓட்டை மரக்கால் கூடாது, எந்தக் கலத்தில் அளந்தாலும் முக்கால் பங்கு பண்ணை ஆளுக்கு, மேற்கொண்டு ஒரு கலம் என்றெல்லாம் போடப்பட்ட ஒப்பந்தம் அது. இப்படியான போராளியை விடுவார்களா, வர்க்க எதிரிகள், பொய் வழக்கு ஜோடித்துச் சிறையில் அடைக்கின்றனர். எதையும் நிரூபிக்க முடியாமல் விடுதலைக்கும் நாள் குறிக்கப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் உணவில் விஷம் கலந்து கொடுத்து சிறைக்குள்ளேயே அவரைச் சாய்த்து விடுகின்றனர். இப்படியான தியாக வாழ்க்கை அது.

செங்கொடிக்கு ஜே
வாட்டாக்குடி இரணியன் வாழ்க்கை திரைப்படமாகவே வந்தது. வர்த்தகப் படங்களை எல்லாம் பார்க்கும் நாம் இப்படியான திரைப்படங்களைப் பார்ப்பதில்லை. உழைக்கும் மக்களுக்கான கடுமையான போராளிகள் இரணியன் போன்றோர். சிவராமன், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு இருந்த காலத்தில் தலைமறைவாக இருந்த தோழர்களுக்கு இடையே கடிதப் போக்குவரத்துக்கு தூதுவராக இருந்தவர். அவரையும் காவல் துறை தேடுகிறது, கண்ட இடத்தில் சுடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மாற்று வேடத்தில் திரிகிற அவர் நாட்கணக்கில் உணவு கிடைக்காது அலைந்தவர், ஒருநாள் சாப்பாட்டுக்காக ஒரு கடைத்தெருவில் நுழைந்தபோது அடையாளம் காணப்பட்டு அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்படுகிறார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் திருவிடைமருதூர் மூத்த தோழர் கலியமூர்த்தி பங்கேற்றுத் தான் பேசவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். மகத்தான போராட்ட நினைவுகளை உணர்ச்சிபூர்வமாக அங்கே நினைவில் இருந்து எடுத்துரைத்தார். தங்களது ஆரியச் சேரி ஊரில் தாலுகா கட்சி தலைவரை செங்கொடி ஏற்றிவைக்க அழைத்தபோது அவர் மூன்று நிபந்தனைகளை விதித்தாராம். நிலவுடைமைக்கு எதிரான போரில் நீங்கள் யாரும் ஒதுங்கி இருக்கக் கூடாது என்பது முதல் நிபந்தனை. பெண்களை சமதையாக நடத்த வேண்டும் என்பது மற்றொன்று. மூன்றாவது நிபந்தனை, தீண்டாமைக் கொடுமை எங்கே நடந்தாலும் உடனே தலையிட்டு எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்பது. அவர்கள் ஏற்றுக் கொண்டு தலைவரும் கொடியேற்றி வைத்துவிட்டுச் சென்றாராம். அடுத்த சில நாட்களில் ஊரில் தாழ்த்தபட்ட வகுப்பைச் சார்ந்த மனிதர் ஒருவர் மரித்தபோது வழக்கப்படி அந்தக் குடும்பத்தார் சடலத்தைத் தனிப்பாதை வழியே எடுத்துச் செல்ல இருக்கையில் தோழர்கள் சென்று தலையிட்டு, பொதுப்பாதை வழியே தாங்களே தோளில் சுமந்து சென்றிருக்கின்றனர். சாதி இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டு எப்படி இதை அனுமதிப்பது, இத்தனை நாள் இல்லாத வழக்கம் என்று கொதித்து எதிரே வந்தபோது, தோழர்கள் எல்லோரும் செங்கொடிக்கு ஜே செங்கொடிக்கு ஜே என்று முழக்கம் எழுப்பி இருக்கின்றனர். அந்த முழக்கம் எல்லோரையும் ஒருமித்து நடக்க வைக்க அந்நாளில் தங்களூரில் நடந்த புரட்சி அது என்று குறிப்பிட்டார் கலியமூர்த்தி.
வெண்மணி போராட்டம் கூலிக்காக அல்ல, கொடியைக் காக்க
வெண்மணியின் வரலாறு, கூலி உயர்வுக்கான போராட்டமாக மட்டும் சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது. அவர்கள் செங்கொடி சங்கம் அமைத்துப் போராடினர். அவர்களை எதிர்கொள்ள முடியாது திணறிய நிலவுடைமையாளர்கள் தாங்களும் நெல் உற்பத்தியாளர் சங்கம் என்று ஒன்றைத் தொடங்கி மஞ்சள் கொடியை ஏற்றினர். கேட்ட கூலியை ஒரு கட்டத்தில் தருவதற்கு கோபாலகிருஷ்ண நாயுடு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஒரே நிபந்தனை, செங்கொடியைக் கீழிறக்குங்கள் என்றார். ஆனால் அந்த மக்கள் சொன்னார்கள், எங்களோடு நீ இறங்கிவந்து பேச வைத்ததே இந்தச் செங்கொடி தான், அதை ஒரு போதும் கீழிறக்க மாட்டோம் என்று தீர்மானமாகக் குரல் எழுப்பினர். அதன் காரணமாகவே வெறியோடு துரத்திக் குடிசையை எரித்து 44 பேரைக் கொன்றனர்.
சீனிவாசராவ் நிழல் போலவாவது….
ஆனாலும் குடிசைகள் தோறும், கிராமங்கள் தோறும் செங்கொடி இன்னும் கம்பீரமாகப் பறக்க ஆரம்பித்தது. அச்சப்படாது திரண்டனர் மக்கள். எங்கெல்லாம் அநீதி நிலவுகிறதோ அங்கே சாதீய, வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராகச் செங்கொடி துணிந்து போராடும் என்பதை இந்த வரலாறுகள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. நமக்கு நம்பிக்கையை விதைக்கின்றன. சீனிவாசராவ் அவர்களது தியாகத்தைப் பேசுவது என்பது நம்மால் அப்படி உருக்கொள்ள முடியவில்லை என்றாலும், சீனிவாசராவ் நிழல் போலவாவது நாம் இயக்கப் பணிகளை முன்னெடுக்க வேண்டாமா என்பதற்கான உந்துதல் தான் தேவை.
இன்னும் ஆயிரம் ஆண்டானாலும் யாரேனும் ஒருவர் வெண்மணி தியாக வரலாறை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டுதான் இருப்பார். இவை வெறும் கதைகள் அல்ல. மாற்றத்திற்கான உறுதி மிக்க களப்போராட்டங்களுக்கு அர்ப்பணிப்போடு தொடர்ந்து மேலும் மேலும் மக்களை ஈர்த்துக் கொண்டுவரும் கடமையை நாம் ஆற்றுவதற்கான உத்வேகம் அளிக்கும் வரலாறுகள்.
**************
டிசம்பர் 23 தீண்டாமை ஒழிப்பு முன்னணி மத்திய சென்னை நடத்திய
கீழ் வெண்மணி நினைவு சிறப்புக் கருத்தரங்கில் மாநில பொதுச்செயலாளர்
கே.சாமுவேல் ராஜ் ஆற்றிய சிறப்புரை
தொகுப்பு: எஸ் வி வேணுகோபாலன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

