நாக் அவுட் | உ. வாசுகி

Knock out
Knock out

அன்பான வாக்காளப் பெருமக்களே,
17வது மக்களவை தேர்தல் நெருங்கி விட்டது. அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் எனத் தேர்வு செய்யும் பெரும் உரிமை நமது கைகளில் தான் இருக்கிறது. யாருக்கு வாக்களிக்கப் போகிறோம்? இவர் சொன்னார், அவர் சொன்னார் என்பதன் அடிப்படையில் வாக்கு அளிக்கப் போகிறோமா? அருமையாகப் பேசுகிறார், பாசிட்டிவாகப் பேசுகிறார் என்பது தான் அளவுகோலா? வளர்ச்சி, தேச பக்தி பற்றி அழுத்தமாக உரையாற்றுகிறார் என்பது குறியீடா? எத்தனை நாள் உலகம் சுற்றினார் என்பது முக்கியமா? ஊழலின் ஊற்றுக் கண் குறித்துக் கவலைப்படாமலே ஊழலற்ற நிர்வாகம் தருவேன் என்று ஒருவர் வாயால் வடை சுடுவதைக் கேட்டு வியந்து போய் வாக்களிக்கப் போகிறோமா? புதிதாக அரசியலுக்கு வந்த ஒரே காரணத்தாலேயே தூய்மையானவர் என்ற முடிவுக்கு வந்து விட முடியுமா? மின்னணு வாக்கு எந்திரத்தின் பொத்தானை ஒரு முறை அழுத்தி விட்டால், அதை 5 ஆண்டுகளுக்கு அழிக்கவோ திருத்தவோ முடியாது. எனவே கவனம் கவனம் கவனம்!

கூடை நிறைய வாக்குறுதி! அம்புட்டும் இலவசம்!
ஒரு பிளாஷ் பேக் போவோமா? 2014…. கடந்த தேர்தலின் போது! முத்து முத்தான வாக்குறுதிகள், சொக்க வைக்கும் உணர்வோடு மோடி அவர்களால் வழங்கப்பட்டது. ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. உள்ளதும் போச்சு என்பது தான் நிலைமை. மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி குட்டை உடைத்து விட்டார். “சென்ற முறை தேர்தலின் போது நாங்கள் ஜெயிப்போம் என்று நினைக்கவில்லை. எனவே பெரிது பெரிதாக வாக்குறுதியைக் கொடுங்கள் என்று சொன்னார்கள். நாங்களும் கொடுத்தோம். தோற்றிருந்தால் நீங்கள் கேட்கவா போகிறீர்கள்? ஜெயித்து ஆட்சியில் இருப்பதால் தான் நினைவு படுத்துகிறீர்கள். நாங்களும் சிரித்துக் கொண்டே கடந்து போகிறோம்” என அவர் மராத்தி டெலிவிஷன் பேட்டியில் கூறினார் என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா பிரசுரித்துள்ளது (ஹஃபிங்டன் போஸ்ட் 10.10.2018). வாக்குறுதிகளில் குறிப்பாக, கருப்பு பணத்தைக் கைப்பற்றி ஒவ்வொரு ஏழையில் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சத்தைப் போடுவோம் என மோடி அவர்கள் சொன்னது பற்றிக் கேட்ட போது, பாஜக தலைவர் அமித் ஷா , “இதுவெல்லாம் தேர்தல் ஜும்லா” என்று சிரித்துக் கொண்டே சொன்னதை அனைவரும் டிவியில் பார்த்தோம். வாக்குறுதிக்கு இது தான் மரியாதை, இவ்வளவு தான் முக்கியத்துவம்.
தேர்தல் என்பது ஜனநாயகத்தின், மக்கள் ஆட்சியின் ஒரு முக்கிய அம்சம். தேர்தல் அறிக்கை என்பது ஒவ்வொரு கட்சியின் கொள்கை பிரகடனம்.

தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்கு என்ன செய்வோம் என்ற உறுதி மொழி…. மிக உயர்வாக மதிக்க வேண்டிய வாக்குறுதி. அதையா இத்தனை மலிவாக நடத்துவது? இதை நம்பிக்கை துரோகம் என சொன்னால் என்ன தவறு? இதைக் களவாடல் என்று சொன்னாலும் தப்பில்லை. பொய்களை அள்ளி வீசி, நம் வாக்குகளைக் களவாடுவது தான் நடந்திருக்கிறது. மீண்டும் களவு கொடுக்கப்போகிறோமா? யோக்கியர் வாராரு, சொம்பெடுத்து உள்ள வை என்ற பழமொழி இன்றைய சூழலுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

நம்பிக்கை துரோகம் 1: ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை:
இந்த வாக்குறுதி மோடி அவர்களால் சென்ற தேர்தலின் போது கொடுக்கப் பட்ட உடனேயே, இடதுசாரிகள் கேட்டார்கள், எப்படி செய்வதாக உத்தேசம் என்று. வேலை என்ன மரத்திலா காய்க்கிறது பறித்துக் கொள்ள அல்லது பறித்துக் கொடுக்க? வேலை வாய்ப்புகளை உருவாக்க சில அடிப்படை திட்டங்கள் வேண்டும். அதற்கான கொள்கை நிலை வேண்டும். அது பாஜகவிடம் இல்லை. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான நவீன தாராளமய கொள்கை அமலாக்க அனுபவம் ஏற்கனவே நமக்குத் தெரியும். வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி (Jobless growth) என்றும், பின்னர் வேலை வாய்ப்பை இழக்கிற வளர்ச்சி (Job loss growth) என்றும் பெயர் சூட்டப்பட்டது. அந்தக் கொள்கைகளைத் தீவிரமாக பின்பற்றும் ஓர் அரசாங்கத்தால் வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்க முடியும்? வாய் தான் வேலை வாய்ப்பு என்று பேசியதே ஒழிய, எடுக்கும் நடவடிக்கைகள் அதற்கு நேர் எதிர் திசையைத் தான் இயல்பாகவே வழி மொழிந்துள்ளன. எனவே, இப்போது கசிய விடப்பட்ட தேசிய மாதிரி ஆய்வு நிறுவன அறிக்கை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை மோடி ஆட்சிக்காலத்தில் உருவாகியிருக்கிறது என்று கூறுவது முற்றிலும் எதிர்பாராதது அல்ல. எது நடந்ததோ அது ‘நன்றாகவே’ நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது தான். வார்த்தை ஜாலங்களில் மறைக்கப்பட்ட உண்மை யதார்த்த வாழ்க்கையிலும், கசிய விடப்பட்ட இந்தப் புள்ளி விவரங்களிலும் விசுவரூபம் எடுத்து நிற்கிறது. எழுந்தால் இந்திரஜித் படுத்தால் கும்பகர்ணன் என்பதைப் போல் பேசுவது வீர வசனம், செய்வது ஜீரோ என்பது தான் நிலை.

வேலை இல்லாமல் இப்ப யார் இருக்கா என்ற எதிர் கேள்வி ஆளும் கட்சி ஆதரவாளர்களால் எழுப்பப் படுகிறது. டாஸ்மாக் கடைகளில் முது நிலை பட்டதாரிகள் ஊற்றிக் கொடுக்கும் வேலையைப் பார்க்கிறார்கள் என்பது படிப்புக்குத் தகுந்த வேலையா? கையால் மலம் அள்ளுவது ஒழிக்கப்பட வேண்டும் என்று சட்டம் சொன்ன பிறகும் அந்த வேலையில் ஈடுபடுவது வேலை வாய்ப்பில் சேர்த்தியா? எவ்வளவோ படித்து விட்டு, மாதம் ரூ.5000, 6000 சம்பளத்துக்கு உழைப்பதற்கு பெயர் வேலை கிடையாது. அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு அறிக்கை, உழைப்பு படையில் ஆண்களில் 82% பேரும், பெண்களில் 92% பேரும் மாதம் ரூ.10000க்குக் குறைவாக வருமானம் ஈட்டுகின்றனர் எனக் கூறியிருக்கிறது.

வேலை கிடைத்து விட்டது என்றால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவைத் தொடர்வது ஏன்? காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கும் எண்ணிக்கைக்கும் அவ்வளவு பெரிய வேறுபாடு ஏன்? உதாரணமாக, ரயில்வேயில் 62907 (பிரிவு டி) காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட போது, 2 கோடி விண்ணப்பங்கள் குவிந்தன. கலாசி, ரயில்பாதை பராமரிப்பாளர், காங்கிமென், பாயிண்ட்ஸ்மென் பணிக்கான அடிப்படை கல்வித் தகுதி 10வது வகுப்பு. ஆனால் ஏராளமான பொறியியல் பட்டதாரிகள், பல துறை முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பித்தவர்களில் அடங்குவர். (டெய்லி ஹண்ட் 19.03.19). தமிழகத்தில் 9500 கிராம நிர்வாக அலுவலர்கள்/தட்டச்சர்கள் பணிக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால், வேலையின்மை குறித்த 2016-17 ஆண்டறிக்கையை வெளியிட ஏன் அரசு மறுக்க வேண்டும்? 2017-18, 2018-19 அறிக்கைகளைத் தயாரிக்க ஏன் ஆர்வமின்மையுடன் இருக்க வேண்டும்? வேலையின்மை பற்றிய தேசிய மாதிரி ஆய்வறிக்கையை வெளியிட அனுமதி மறுத்து, அந்நிறுவனத்தின் தலைவரும், உறுப்பினரும் ஏன் பதவி விலகும் நிலை ஏற்பட வேண்டும்?

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம்(NSSO), இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்(CMIE) என்று அனைத்தும் வெடித்துக் கிளம்பும் வேலையின்மைக்கு சாட்சியங்களாக உள்ளன. CMIEயின் படி 2017-18ல் மட்டும் 1,10,00,000 வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்தப் பறிக்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் 88 லட்சம் பெண்களுக்கானது. தேசிய மாதிரி ஆய்வு நிறுவன அறிக்கையின் படி, கிராமப்புற ஆண்களின் வேலையின்மையும் சரி பெண்களின் வேலையின்மையும் சரி, 2012-13ஐ விட, 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. இதன் உழைப்பு படை பற்றிய ஆய்வு (PLFS 2017-18), 1993-94க்கு பிறகு முதன் முறையாக ஆண் உழைப்பாளர்களின் எண்ணிக்கை சுருங்கியிருக்கிறது எனத் தெரிவிக்கிறது. 2011-12 முதல் 2017-18 வரை கிராமப்புறங்களில் 3 கோடி தினக்கூலிகள் வேலை இழந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

வேலை வாய்ப்புகளை அதிகம் கொடுக்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டு, தனியார்மயம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பொதுத்துறை பங்கு விற்பனைக்கென்றே ஒரு தனி துறை துவக்கப்பட்டது முந்தைய பாஜக ஆட்சியில் என்பதை மறந்து விட முடியாது.

அடுத்த படியாக சிறு குறு நடுத்தர தொழில்கள் வேலை வாய்ப்புகளைப் பல்லாயிரக் கணக்கானோருக்கு அளிக்கக் கூடியவை. ஆனால் திட்டமிட்டு இவை நசுக்கப்பட்டன. அப்பளம் போடுவது, ஊறுகாய் தயாரிப்பு, ஊதுபத்தி செய்வது உட்பட, சிறு தொழிலுக்கு என்று ஒதுக்கப்பட்டவற்றில் மீதம் இருந்த அனைத்தும் பெரு நிறுவனங்களுக்குத் திறந்து விடப்பட்டது மோடி ஆட்சியில் தான். இது போதாதென்று உயர்பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்ற தவறான பொருளாதார நடவடிக்கைகள் முறைசாரா தொழில்களை சீர்குலைத்து, சிறு குறு நடுத்தர தொழில்களையும் பாதித்தன. தமிழக அரசு, சட்டமன்றத்தில் சமர்ப்பித்த கொள்கை குறிப்பில், 2017-18ல் மட்டும் 50000 சிறு குறு நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு, சுமார் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டன எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

புள்ளிவிவரங்களைத் தள்ளி வைத்து விட்டு, உழைப்பாளிகளின் வாழ்க்கையைப் பார்ப்போம். ஸ்குரோல்.இன் என்ற ஊடகம், மும்பை தினக்கூலிகள் மத்தியில் செய்த ஆய்வில், உயர்பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, தினக்கூலி வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு, மாத வருமானம் ரூ.6000த்திலிருந்து ரூ.2000மாகக் குறைந்து, அதன் விளைவாக உணவு 4 சப்பாத்தியிலிருந்து 2 சப்பாத்தியாக சுருங்கிப் போனது; மாதம் ரூ.1000 கூட வாடகைக்குக் கொடுக்க முடியாமல் வீதியில் தூங்கும் நிலை வந்தது என்று விவரிக்கிறது. குழந்தைகளின் படிப்பும் இதர விஷயங்களும் என்ன ஆகியிருக்கும் என்று ஊகிப்பது கடினமில்லை. அதே போல் இந்தியாஸ்பெண்டு.காம் (ரஜ்னீஷ் மிஸ்ரா 21.03.19) குஜராத் கட்டுமான தொழிலாளிகளிடையே செய்த ஆய்வில், மாதம் ரூ.12000 வரை கிடைத்த வருமானம், செல்லாக்காசு பிரச்னைக்குப் பிறகு ரூ.3000-5000ஆகக் குறைந்து விட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

கிராமப்புறங்களில் ஏழைகள் கண்ணியமாக வாழ்க்கை நடத்த உதவுவது ஊரக வேலை உறுதி சட்டம் தான். இது ஐ.மு.கூ. அரசு (1)ன் போது இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்த போது, அழுத்தம் கொடுத்து பெற்றது. அதன் நிலை தற்போது என்ன? கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, அதற்கான ஒதுக்கீடு குறைந்தது, அல்லது தேவைக்கேற்ற படி உயரவில்லை, அதன் பலனை நீர்த்துப் போக வைக்கும் வகையில் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்த உடனேயே, மோடி அவர்கள், ஐமுகூ அரசின் தோல்விக்கு வாழும் உதாரணம் ஊரக வேலை உறுதி சட்டம் தான் என்று இத்திட்டத்தைப் பழித்தார். அதனால் தான் மோடி ஆட்சியில் இது திட்டமிட்டே சிதைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு கிராமப்புற நெருக்கடி முற்றியிருப்பதாகவும், அதன் காரணமாக 100 நாள் வேலை கோருவோர் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ்(ஷாலினி நாயர், 26.03.19) கூறுகிறது. கிராமப்புற பொருளாதாரம் தகர்ந்து போயிருக்கும் இவ்வேளையில் நூறு நாள் வேலைக்கு உலை வைக்கும் நடைமுறை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கிறது.

நம்பிக்கை துரோகம் 2: கருப்பு பணத்தைக் கைப்பற்றி, ஒவ்வொரு ஏழையின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம்:
இப்படி மோடி சொல்லவே இல்லை என்று தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரான ‘ஆன்டி இந்தியன்’ புகழ் எச்.ராஜா சவால் விட்டு, சொன்னதாக நிரூபித்தால் அரசியலிலிருந்தே தான் விலகி விடுவதாகக் கூறினார். வலைத்தள வாசிகள் பலர், மோடி பேசிய லிங்கை வெளியிட்டார்கள், அரசியலிலிருந்து விலகுவதற்கு பதிலாக, தற்போதைய தேர்தலில் சிவகங்கை தொகுதியில் எச்.ராஜா போட்டியிடுகிறார். என்னத்த சொல்ல? அமித் ஷாவாவது ஜும்லா என்றார். எச்.ராஜா, அப்படி சொல்லவே இல்லை என்கிறார். அவரது ’அட்மின்’ இதையெல்லாம் கூகிள் செய்து பார்க்கவில்லை போலிருக்கிறது!

மோடி அவர்கள் பேசிய வேகத்தைப் பார்க்க வேண்டும். பிரமாண்ட மேடையில், தனி ஆளாய் நின்று கைகளை விரித்து, உரத்த குரலில், வெளிநாட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பணம் நமது பணம், ஒரு பைசா பாக்கியில்லாமல் கைப்பற்றி ஏழைகளின் வங்கிக் கணக்கில் ஏற்றுவேன் என்றார். ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்த போது, இது கருப்பு பணத்தைக் கைப்பற்ற என்று விளக்கமும் கொடுத்தார். ஆனால் அச்சடித்த நோட்டுகளில் 99% திரும்ப வங்கிகளுக்கே வந்து விட்டது. கருப்பு பணம் என்ன ஆனது என்ற கேள்விக்கு பதில் இல்லை. கணக்கில் வராத கருப்பு பணத்தை யாரும் கட்டுக்கட்டாக வீட்டில் வைத்துக் கொள்வது கிடையாது. அது வெளிநாட்டு வங்கிகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும், நகைகளாக, தங்கக்கட்டிகளாக உரு மாறியிருக்கும். மொரிஷியஸ் ரூட்டில் இந்தியாவுக்கே நல்ல பணமாகத் திரும்பி வந்திருக்கும். இதற்கான நடவடிக்கைகள் எங்கே?

நம்பிக்கை துரோகம் 3 ஊழலை ஒழிப்போம்:
ஊழலை ஒழிப்போம் என்று அருள் வாக்கு சொன்னால் ஊழல் ஒழிந்து விடுமா? இயற்கை வளங்களைத் தனியாருக்குக் குத்தகை விடுவதில் தான் உயர் மட்ட ஊழல் ஏராளமாய் நடக்கிறது. பெரிய சைஸ் ஊழல் எல்லாமே 90களுக்குப் பிறகு தான். இது தற்செயலானதல்ல. உலகமய கொள்கைகள் அமலாக்கத்துக்குப் பிறகே பிரம்மாண்ட உயர்மட்ட ஊழல் தொடங்கியது. இயற்கை வளங்களைத் தனியாருக்குக் கொடுப்பது அக்கொள்கையின் ஒரு பகுதி. எனவே உயர் மட்ட ஊழலுக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு. இயற்கை வளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் நல்லது, தனியாருக்குக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை, இதன் மூலம் ஊழலை ஒழிக்க முடியும் என்று சொல்வது இடதுசாரிகள் மட்டும் தான்.

ஆளும் அரசியல்வாதிகள், கார்ப்பரேட்டுகள், அதிகார வர்க்கம் மூன்றுக்கும் இடையே கட்டமைக்கப் படும் கள்ளக் கூட்டணி, விதிகளை வளைத்து, வளங்களைத் தனியாருக்கு தாரை வார்த்து, உயர்மட்ட ஊழலின் ஊற்றுக்கண்ணாய் செயல்படுகின்றது. இது நீடிக்கும் வரை உயர்மட்ட ஊழல் நீடிக்கும். இதனை நிறுத்தாமல், ஊழலை ஒழிப்போம் என்பது வாய் ஜாலம் மட்டுமே. அடுத்து, மோடி அரசு இக்காலத்தில் எடுத்த நடவடிக்கைகள், ஊழலை உருவாக்க உதவுவதாகவே இருந்திருக்கின்றன. அதாவது, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்குக் கொல்லைப்புற வழியாக நன்கொடை கொடுக்க சட்டத்திருத்தம் முன் தேதியிட்டு கொண்டு வரப்பட்டது. அடுத்து, இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், தம் மூன்றாண்டு நிகர லாபத்தில் 7.5%க்கு மிகாமல் நன்கொடை அளிக்கலாம் என்று இருந்த சட்டம், உச்சவரம்பே இல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று திருத்தப்பட்டது.

ரூ.2000க்கு மேல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்கள் தம் முழு விவரங்களைக் கொடுக்க வேண்டும் என்ற விதியைக் கொண்டு வந்து விட்டு, ஊழலை ஒழிக்கவே இந்நடவடிக்கை என்று கொக்கரித்தனர். ஆனால் மறு பக்கம் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் எத்தனை கோடி நன்கொடை கொடுத்தாலும், கொடுப்பவர், வாங்குபவர் குறித்த தகவலை வெளியிட வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படுத்தினர். ரூ.2000க்கும் மேல் பணமாக எந்தக் கட்சிகளுக்குக் கிடைக்கும், தேர்தல் பத்திரம் மூலம் கோடி கோடியாக எந்தக் கட்சிகளுக்குக் கிடைக்கும் என்று யோசித்தாலே, இந்த நடவடிக்கை யாருக்கு சாதகமானது என்பது புரிந்து விடும். கார்ப்பரேட்டுகள் சும்மாவா கொடுப்பார்கள்? பெரும் நன்கொடை கொடுத்து விட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு தங்களுக்கு வேண்டியவற்றைப் பெறுவதற்குத் தான் இது. சொல்லப்போனால் கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது இடதுசாரிகள் மட்டுமே. சென்ற வருடத்தில் தேர்தல் பத்திரத்தின் மூலம் வந்த நன்கொடையில் 94% பாஜகவுக்கே கிடைத்தது. ஆனால் யார் கொடுத்தார் என்பதைத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. ஊகிக்கலாம்…. ரஃபேல் ஒப்பந்தத்தில் பெரும் பங்கு அனில் அம்பானிக்குப் பெற்றுக் கொடுத்ததற்கு நன்றிக்

கடன் தேர்தல் பத்திரத்தில் தானே பிரதிபலிக்க முடியும்?
உண்மையில் யார் யாருக்குக் கொடுத்தார் என்ற விவரம் முக்கியமானது. உதாரணமாக வேதாந்தா குழுமம் நன்கொடை கொடுத்த பட்டியலில், முதல் இடத்தில் இருந்தது பாஜக. ஸ்டெர்லைட் விவகாரத்தை இந்தக் கண்ணோட்டத்துடன் பார்த்தால் உண்மை புலப்படும். தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற மாட்டோம் என்ற நிலை எடுத்ததுடன், தேர்தல் பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது குறிப்பிடத் தக்கது.
தற்போது ரஃபேல் ஊழல் உலகமே பரிகசிக்கும் அளவு பேசப்படுகிறது. பாதுகாப்பு துறைக்கு தெரியாமல் பிரதமர் அலுவலகம் பேச்சு வார்த்தை நடத்தியதிலிருந்து, ஊழல் எதிர்ப்பு நிபந்தனைகளை ஒப்பந்தத்திலிருந்து இந்தியா நீக்கியது என்பது வரை அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 3 மடங்கு அதிக விலை, பொதுத்துறையை வெளியே தள்ளி அனில் அம்பானிக்கு அடித்த யோகம் இப்படியான தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. பத்திரிகையாளர் என்.ராம் வெளியிட்ட தகவல்கள், பாதுகாப்பு துறையிலிருந்து திருடப் பட்டன என்று அரசு கூறுகிறது. போலி என்றோ மோசடி என்றோ கூறவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

அப்படியானால் என்.ராம் வெளியிட்ட தகவல்கள் உண்மை என்று அரசே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறது, அதாவது குற்றத்தை ஒப்புக்கொள்கிறது. யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்? குற்றத்தை செய்தவர் மீதா? அல்லது குற்றத்தைக் கண்டு பிடித்தவர் மீதா?

நம்பிக்கை துரோகம் 4 – வேளாண் பொருட்களுக்கு உற்பத்தி செலவை விடக் கூடுதல் 50% விலை கொடுப்போம், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வோம்:
நியாய விலை பற்றிய கோரிக்கை எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையாகும். பதவி ஏற்று ஓர் ஆண்டுக்குள்ளாகவே, உச்சநீதிமன்றத்தில் இவ்வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஒருவர் வழக்கு போட, அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் என்ன தெரியுமா? இது சாத்தியமே இல்லை, உயர்த்திக் கொடுத்தால் சந்தை நிலவரம் சீர்குலைந்து விடும் என்பது தான். விவசாயிகளின் உயிரை விட சந்தை மீதே அக்கறை!

பின்னர், போராட்டங்கள் வலுத்த பின், உற்பத்தி செலவு என்பதைத் தில்லுமுல்லு செய்து மதிப்பீடு செய்தார்கள். உற்பத்தி செலவு என்றால், இடுபொருட்கள் செலவு, குடும்பத்தினர் செலுத்தும் உழைப்பின் மதிப்பு, நில வாடகை, சொந்த நிலம் மற்றும் முதலீட்டின் மீதான வட்டி அனைத்தும் சேர்ந்தது தான். இதை அரைகுறையாக மதிப்பீடு செய்து, அதன் மீது 50% ஏற்றி கொடுப்பது வாக்குறுதியை நிறைவேற்றியதற்கு சமமல்ல.

இடுபொருட்களின் விலைகள் உயர்ந்துகொண்டே போகின்றன. ஆராய்ச்சிகளின் மூலம் உற்பத்தித் திறனை அதிகரித்து, செலவைக் குறைப்பதற்கு பதிலாக, பன்னாட்டு நிறுவனங்களின் இடுபொருள் வணிகத்தை நம் விவசாயிகள் சார்ந்திருக்கும் நிலையை அரசின் கொள்கைகள் ஏற்படுத்துகின்றன.

கார்ப்பரேட் சவுக்கிதார்:
”அறுக்க மாட்டாதவர் இடுப்பில் 58 அரிவாளாம்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. பாதுகாக்கப்பட வேண்டிய அனைத்தையும் தொலைத்து விட்டு, அல்லது விற்று விட்டு வேறு எதைக் காக்க நாட்டின் சவுக்கிதாராக தன்னை முன்மொழிந்து கொண்டார் மோடி? உடனே அமைச்சர்கள், தலைவர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் தம் பெயருக்கு முன்னே சவுக்கிதார் என இணைத்துக் கொண்டனர். சிஐடியு துணை தலைவர் ஜே.எஸ்.மஜூம்தார், தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், சவுக்கிதார் என்பது தொழில்முறை பெயர், அதைத் தேர்தல் ஆதாயத்துக்கு, பெருமைக்குரியதாகவோ, சிறுமை படுத்தும் தொனியிலோ பயன்படுத்தக் கூடாது, தேர்தல் நடத்தை விதியின் படி அதைத் தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வளர்ச்சி என்று மோடி மார் தட்டும் போதே, யாருக்கான வளர்ச்சி என்ற கேள்வியை கவனமாக எழுப்பியவர்கள் இடதுசாரிகள் தான். அதே போல், காவலாளி என்றால் யாருக்கு என்ற கேள்வியை முன்வைக்க வேண்டியிருக்கிறது. விளை பொருளுக்கு நியாய விலை கேட்டு விவசாயிகள் நாடு தழுவிய நெடும் பயணம் இரண்டு முறை நடத்தியிருக்கிறார்கள், பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் பெரும் போராட்டம், பொதுத்துறையைப் பாதுகாக்க நடந்திருக்கிறது, அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து ஜனவரி 8,9 இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள், பெண்கள் குழந்தைகளுக்கு அறவே பாதுகாப்பு இல்லை, எங்கே என் வேலை என்று லட்சக் கணக்கான வாலிபர்கள் வீதிக்கு வந்தார்கள். ரஃபேல் பிரச்னையில் பாதுகாப்பு ஆவணங்களையே பாதுகாக்க முடியவில்லை. தீவிரவாத தாக்குதல் 176%ம், அதனால் கொல்லப்பட்ட பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை 93%ம் அதிகரித்துள்ளது, இவர்களையும் காப்பாற்ற முடியவில்லை. விஜய் மல்லையாவும், நீரவ்மோடியும் கோடிக்கணக்கில் கடன் வாங்கி விட்டு, வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியதைத் தடுக்க முடியவில்லை.

மறு பக்கம், 2018க்கான ஸ்விட்சர்லாந்து முதலீட்டு வங்கி கிரெடிட் ஸ்வீஸின் அறிக்கை, இந்தியாவில் 7000 கோடிக்கு அதிகமான சொத்து வைத்திருக்கும் டாலர் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 343 ஆக உயர்ந்து விட்டது என்கிறது. இந்த வருடம் முகேஷ் அம்பானி, உலக பணக்காரர்களில் 13வது இடத்துக்குள் நுழைந்தார், ஒரே ஆண்டில் அவரது சொத்து ரூ.70000 கோடி அதிகரித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் மேல் மட்ட 1%, நாட்டின் வளங்களில் 52%ஐ வைத்திருக்கிறார்கள். அதானி குழுமத்தின் சொத்து 2017 ஒரே ஆண்டில் 124.6% அதிகரித்திருக்கிறது. பொருளாதார சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான செயல்பாட்டில் 157 நாடுகளில் 147ல் இந்தியா இருக்கிறது என ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறுகிறது. அப்படியானால் பொருளாதார ஏற்றத்தாழ்வை ஊக்குவிக்கிறது என்று பொருள். இதே ரீதியில் போனால் இந்தியாவில் ஒரு கிராமப்புற குறைந்தபட்ச கூலி வாங்கும் தொழிலாளி, ஒரு பின்னலாடை நிறுவனத்தின் உயர்ந்த இடத்தில் உள்ள அதிகாரியின் சம்பளத்துக்கு வரவே 941 வருடங்கள் பிடிக்குமாம். எளிய மக்கள் தலையில் காசு ஏறி மிதிக்க, அதை எண்ணி எண்ணி மக்களின் மனம் கொதிக்க, வளர்ச்சி மிகத் தெளிவாக பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தான் போயிருக்கிறது.

அப்படியானால், பிரதமர் மோடி, தேசத்துக்கு அல்ல, சாமானிய மக்களுக்கு அல்ல, பெரும் பணக்காரர்களின் காவலாளியாகத் தான் செயல்பட்டிருக்கிறார்.
இதில் விவசாயிகளின் தற்கொலையை எப்படி எதிர்கொண்டார்கள் என்று பாருங்கள். மோடி ஆட்சியின் முதல் 4 ஆண்டு காலத்தில் வருடத்துக்கு 12000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள், ஆட்சியின் முதலாம் ஆண்டிலேயே தற்கொலை விகிதம் அதற்கு முந்தைய ஆண்டை விட 42% உயர்ந்தது. அதன் பிறகு விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையை வெளியிட அரசு மறுத்து விட்டது. புள்ளி விவரங்களை மறைப்பதன் மூலம் கஷ்டங்களை எல்லாம் ஜமுக்காளத்துக்கு அடியில் தள்ளி விடலாம் என்று இந்த அரசு யோசிக்கிறது.

மதத்தின் பெயரால்…
மத நம்பிக்கை இருப்பதும், எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதும், மத நம்பிக்கை அற்றவர்களாக இருப்பதும் அவரவர் சொந்த விருப்பம். இந்தியா அதற்கு இடம் கொடுத்திருக்கிறது என்பது விடுதலை போராட்டத்தின் தாக்கம். தொன்று தொட்டு இதன் மீதான வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. லோகாயுதவாதிகள், சார்வாகர்கள் போன்றோர் உலகைப் பற்றியும், கடவுள் பற்றியும் கேட்காத கேள்விகள் இல்லை. பவுத்தம் கேட்டிருக்கிறது. சித்தர்கள் கேட்டிருக்கிறார்கள். தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, இந்திய தத்துவத்தின் இழைகளாக இவை அனைத்தும் இருந்தன என்பதைப் பல சாட்சியங்கள் மூலம் நிறுவியிருக்கிறார். வாதங்கள் தொடர்வதில் ஆட்சேபணையில்லை. ஆனால் இதில் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதம்/அதில் குறிப்பிட்ட பிரிவு சார்ந்த நிலை எடுத்து, அதில் உடன்படாதவர்களை, உடன்பட முடியாதவர்களை வேட்டையாடுவது எப்படி நியாயம்? ஒரு நாகரீக சமூகத்தில் இப்படி நடப்பதை விட்டு விட முடியுமா?
தலித் மக்கள் சாதியின் பெயராலும், சிறுபான்மையினர் குறிப்பாக இசுலாமியர்கள் மதத்தின் பெயராலும் படு மோசமாகத் தாக்கப்படுவதை மனிதத்தின் குறைந்த பட்ச தகுதி உள்ளோர் ஒரு கணமாவது பொறுத்துக் கொள்ள முடியுமா? சம்பவங்களையே பொறுத்துக் கொள்ளக் கூடாது என்றால், இத்தகைய தாக்குதலை நியாயப் படுத்துகிற சித்தாந்தத்தை சகித்துக் கொள்ள முடியுமா? அதை முன்மொழிகிற அரசியல் கட்சியை ஆதரிக்க முடியுமா? அது நடத்தும் ஆட்சியில் ஜிடிபியே உயர்ந்தாலும் கூட, மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்கள் வர வேண்டும் என்று விரும்பலாமா? எவ்வளவு மூளை சலவை செய்யப்பட்டிருந்தால், இந்த அக்கிரமங்களை ஊடகங்களில் வெறும் செய்தியாகக் கேட்டு விட்டு, அடுத்த வேலையைப் பார்க்க புறப்பட்டிருப்போம்?

தலித் பெண்கள் உடைகள் களையப்பட்டு அடித்து நொறுக்கப்படுவதை, இசுலாமியர்கள் அடித்தே சாகடிக்கப்படுவதை மனம் கலங்காமல் பார்க்க முடிகிறது என்றால், நமது மூளை நம் வசம் இல்லை என்று பொருள். மதவெறி என்ற போதைப் பொருளின் கட்டுப்பாட்டில் அது இருக்கிறது. புகை பிடிக்காதீர்கள், நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு….. மது அருந்தாதீர்கள், குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதி வைக்கிற இடங்களில் இனி, சாதி வெறி, மதவெறி கொள்ளாதீர், நாட்டுக்கும் வீட்டுக்கும் சமூகத்துக்கும் உலகத்துக்கும் கேடு என்று எழுதி வைக்க வேண்டும். வெல்ல பிள்ளையார் என்று தமிழகப் பெண்கள் கொஞ்சும் பிள்ளையாரின் கையிலேயே ஏகே 47 ரக துப்பாக்கி கொடுத்து அழகு பார்த்தவர்கள் வேறு எதைத் தான் செய்ய மாட்டார்கள்? இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, மக்கள் மத வெறியின் உச்சத்தை அனுபவித்தார்கள். அதன் வேதனைகள் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நவீன இந்தியாவில், மதவெறி பின்னுக்குப் போவதற்கு பதிலாக, ஆட்சியில் அமர வைக்கப்பட்டது. அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இனியும் அதே தவறை செய்யலாமா?

மதவெறியோ, தேசிய வெறியோ, இன வெறியோ ஏன் கிளப்பி விடப்படுகிறது, இதனால் யாருக்கு ஆதாயம் என்று சிந்திக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் ஆட்சியில் இருக்கும் முதலாளித்துவ அரசுகள் அல்லது முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசுகள், முன்னுக்கு வரும் மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு வக்கற்றவை. ஏனெனில், நெருக்கடிகள் முதலாளித்துவ கட்டமைப்புக்குள்ளேயே பிறந்து வளர்கின்றன. முதலாளித்துக் கட்டமைப்பை நீடித்து கொண்டு, அதற்குள் நின்று நெருக்கடிகளை மட்டும் தீர்க்க முடியாது. நெருக்கடிகள் மக்களைக் கொதிநிலைக்கு கொண்டு செல்கின்றன. மக்களின் கோபத்தை, அதிருப்தியை திசை திருப்ப, ஏதாவது ஒரு வெறியைக் கிளப்ப வேண்டிய நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். ஒன்று சேர்ந்து போராட வேண்டிய மக்கள், சாதி, மதம், இனம் என்ற பெயரில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டால், பரஸ்பரம் வெறுப்பு தக்க வைக்கப்பட்டால் பொது எதிரிக்கல்லவா லாபம்?

பணியாற்றும் இடத்தில் நிலவும் ஒற்றுமை, நான் தொழிலாளி என்ற பெருமிதம், வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டும் என்ற உணர்வு துரதிர்ஷ்டவசமாக, வேலை முடிந்து போகும் போது, பணித்தளத்திலேயே கழட்டி வைக்கப்படுகின்றன. நிராயுதபாணியாகவே வீடு திரும்புகிறோம். வர்க்க ஒற்றுமை என்ற ஆயுதம் இல்லாத போது சாதி, மதம், உள்ளூர் வெளியூர், ஆண் பெண் என்ற சகல அம்சங்களும் நம் உள்ளேயே நின்று தாக்குதல் தொடுக்கின்றன. இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டால் பிரச்னை வராது. எனவே தான் புரிய வைக்க முயல்பவர்களை இந்த அரசுக்குப் பிடிக்கவில்லை. சிந்தனைக்கு சிக்கின்குனியா நோய் வர வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அவர்கள். யோசிக்கவே கூடாது, பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷத்தில் மதி மயங்கி மோடி வாழ்க என்று குடை பிடிக்க வேண்டும். இன்குலாப் ஜிந்தாபாத், ஜெய் பீம், மக்கள் ஒற்றுமை வாழ்க என்ற கோஷங்கள் ஆகவே ஆகாது. முற்போக்குவாதிகள், அறிவு ஜீவிகள், கம்யூனிஸ்டுகள் குறி வைத்துத் தாக்கப்படுவதன் மர்மம் இது தான். பாசிஸ முசோலினி ஆட்சியில் மார்க்சிய சிந்தனையாளர் கிராம்சியின் மூளையை 20 ஆண்டுகளுக்கு முடக்க வேண்டும் என்று இத்தாலிய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதை இணைத்துப் பார்க்க வேண்டும். இந்த சூழலில் தான், ஒரு மதச்சார்பற்ற அரசை ஆட்சிக்குக் கொண்டு வருவது கண்டிப்பாக அவசியம் என்று பார்க்க வேண்டும்.

ஜனநாயக உரிமைகள்:
இந்தியாவின் வருண / சாதியமைப்பில் ஜனநாயகத்துக்கு இடம் இருந்ததே கிடையாது. படி நிலையின் விதிகளே ஆதிக்கம் செலுத்தின. சுதந்திரத்துக்குப் பிறகு ஜனநாயக கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டன. ஆனால் அப்போதே அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட பொழுதில், மனு ஸ்மிருதியே போதுமே, எதற்கு அரசியல் சாசனம் என்று கேட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். ஜனநாயகம் என்பது மேற்கத்திய கருத்தியல், அது இந்தியாவுக்கு பொருத்தமற்றது என்றவர் அதன் தலைவராக நீண்ட காலம் இருந்த கோல்வால்கர். அந்த அமைப்பின் முழு நேர பிரச்சாரகர் தான் மோடி. ஆனால் இன்றைய ஜனநாயக சூழலில், கோல்வால்கர் சொன்னதை அடி பிறழாமல் சொல்ல முடியாது. எனவே, 2014ல் நாடாளுமன்றத்தை ஜனநாயகத்தின் கோயில் என்று மோடி வர்ணித்தார். ஆனால் 4 ஆண்டுகளில் 19 நாட்கள் தான் ’கோயிலுக்கு’ வந்தார். அவ்வளவு தான் மரியாதை. வந்தும் பெரிதாக விவாதங்களில் பங்கேற்கவில்லை என்பதெல்லாம் விமர்சனத்துக்கு உள்ளானது. நாடாளுமன்றத்தை ஓரம் கட்டியே பல முடிவுகள் எடுக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக 2018ல் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு விடப்படாமலே நிறைவேற்றப் பட்டது. அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் விதிமுறைகளுக்குப் புறம்பாக அவைத் தலைவரால் அனுமதி மறுக்கப்பட்டு, அவை ஒத்தி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதிக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம், மாநிலங்களவை தலைவரால், எவ்வித நியாயமும் இன்றி நிராகரிக்கப்பட்டது. பண மசோதா என்ற வேஷம் கட்டி ஆதார் மசோதா தந்திரமாக நிறைவேற்றப்பட்டது. அதில் இருக்கும் தனி மனித விவரங்களைத் தனியார் பயன்படுத்தாமல் இருக்க தனி சட்டம் கொண்டு வருவோம் என்று அரசு உறுதி கூறியது கிடப்பில் போடப்பட்டு, தற்போது அதற்கு நேர்மாறாகத் தனியார் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் ஜனநாயகத்தின் அடையாளமான நாடாளுமன்றம் ஓரம் கட்டப்பட்டது.

2018ல் ஊடக சுதந்திர குறியீட்டில் 180 நாடுகளில் 138வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்து பத்திரிகை என்.ராம் உட்பட, அரசாங்கத்தை விமர்சிப்போர், அம்பலப்படுத்துவோர் கடுமையாக மிரட்டப்பட்டனர். ஜனநாயக சூழல் இருந்தால் தான் கோரிக்கைகளை வைக்க முடியும், போராட முடியும், ஆலோசனைகளைக் கூற முடியும், கேள்வி கேட்க முடியும். “உன் கருத்தோடு 100% நான் உடன்பட முடியாது. ஆனாலும் அக்கருத்தைச் சொல்வதற்கு உனக்கு உரிமை வேண்டும் என்பதற்காக உயிரைக் கொடுத்தும் போராடுவேன்” என்று பிரெஞ்சு சிந்தனையாளர் வால்டேர் சொல்லியிருக்கும் பின்னணியில், ஜனநாயக சூழலுக்கு விமர்சனமும், கேள்விகளும், மாற்றுக் கருத்தும் எவ்வளவு முக்கியமானது என்பது புரியும். கருத்து வேறுபட்டாலே, விவாதம் செய்தாலே தாக்குவதும், மிரட்டுவதும், அச்சுறுத்துவதும், கைது செய்வதும், மாவோயிஸ்டுகள், அர்பன் நக்ஸல்கள் என்று பெயர் சூட்டுவதும், கொலை செய்வதும் மிகவும் மோசமானது. அதை அனுமதிக்கக் கூடாது.

அரசியல் நெறி அதளபாதாளத்தில்:
இலக்கணம் மாறுதோ….தீர்ப்பாய் ஆனதோ!
2014 அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் இரண்டே வருடங்களில் அதன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 48ஆக உயர்ந்தது. 2017 கோவா சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்தது 40ல் 13, ஜார்க்கண்டில் 81ல் 35. ஆனாலும் ஆட்சி அமைத்தார்கள். ஒரு புறம் குதிரை பேரம், மறுபுறம் ஆளுநரைப் பயன்படுத்துவது என்ற வகையிலேயே இது நடந்தது. சிபிஐ, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், மத்திய தணிக்கை அதிகாரி, ரிசர்வ் வங்கி என்று அனைத்து நிறுவனங்களும் அரசியல் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன.

அருணாச்சல பிரதேசம் துவங்கி, தமிழகம், புதுச்சேரி வரை ஆளுநரை இந்த அரசு எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பார்க்கிறோம். ரஃபேல் பிரச்னையில், மத்திய தணிக்கை அதிகாரி அறிக்கை கொடுப்பதற்கு முன்பே, அவர் கொடுத்து விட்டார், நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகி விட்டது என உச்சநீதிமன்றத்திலேயே அரசு தரப்பில் கூறினர். இதனை அடிப்படையாக வைத்து நீதிமன்றமும் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பைக் கொடுத்து விட்டது. ஆனால் இவர்களின் பொய் வெளிவரவே, ஓர் இலக்கண பிழை நிகழ்ந்து விட்டது, மத்திய தணிக்கை அதிகாரி அறிக்கை கொடுப்பார் என்று எதிர்கால பயன்பாட்டுக்கு பதிலாக, கொடுத்து விட்டார் என இறந்த காலத்தைப் பயன்படுத்தி விட்டோம் என்று கூசாமல் சொன்னவர்கள் தான் இன்றைய அரசினர். பாஜக அகராதியில் பொய் = இலக்கண பிழை! சாதாரண பொய் அல்ல, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாக்கும்!

பழங்குடியினர் மற்றும் வன நிலங்களில் பாரம்பரியமாகக் குடியிருப்போர் சுமார் 25 லட்சம் பேரை, 21 மாநிலங்களில் அவர்கள் குடியிருப்புகளிலிருந்து, பட்டா இல்லை என்ற காரணத்துக்காக வெளியேற்றுமாறு உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. ஒயில்ட் லைஃப் ஃபாரஸ்ட் என்ற அமைப்பு, வன உரிமை சட்டத்துக்கு எதிராக போட்ட வழக்கு இது. இதை எதிர்கொள்ளும் பொறுப்பு, வன உரிமைச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்புள்ள பழங்குடியினர் விவகாரத் துறையிடம் கொடுக்கப் படாமல், துவக்கம் முதலே இதற்கு எதிராக இருந்த வனத்துறையிடம் கொடுக்கப்பட்டது. 3 வாய்தாக்களில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடவே இல்லை, 4வது முறை போகவே இல்லை. தீர்ப்பு இப்படி வந்ததில் ஆச்சரியப் பட என்ன இருக்கிறது? 100 நாள் வேலை திட்டம் எங்களுக்குப் பிடிக்காது, நிதி கொடுக்காமல் அதைக்கொல்லுவோம்; வன உரிமை பாதுகாப்பு சட்டம் பிடிக்காது, வக்கீலை அனுப்பாமல், பேச விடாமல் அதை காலி செய்வோம் என்பதே இந்த ஆட்சியின் நியதி போலும்.

பிரதமரின் கல்வித் தகுதியும், அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித்தகுதியும் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றன. நமது நாட்டில் தேர்ந்தெடுக்கப்படுவதற்குக் கல்வித் தகுதி கிடையாது. எனவே, அதைப் பற்றி உண்மைக்குப் புறம்பாகக் கதை கட்டுவது ஏன்? திருமணமானதைப் பிரதமர் மறைத்ததும் இந்த ரகம் தான். தங்களின் பிம்பத்தை அதிக கவனத்துடன் கட்டமைக்கும் ஏற்பாடே இது. பிம்ப அரசியலின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்க வேண்டும்.

’பிரதமர் நரேந்திர மோதி’ (100 கோடி பேரின் கதை) என்று சினிமா எடுப்பதால் கடந்த 5 ஆண்டுகளை அழித்து விட முடியாது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கதையைப் படமெடுத்தவர்கள் இதையும் எடுக்கிறார்கள் என்பது நகை முரண்.
பொதுத்துறை:

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், பொதுத்துறையான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தைக் கழட்டி விட்டு விட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் என்ற அனுபவமே இல்லாத நிறுவனத்துக்கு ரூ.30000 கோடி பெறுமானமுள்ள ஒப்பந்தம் கிடைக்க ஏற்பாடு செய்தது தற்போதைய பாஜக ஆட்சி. எரிக்ஸன் நிறுவனம் அனில் அம்பானி தமக்குத் தர வேண்டிய ரூ460 கோடி நிலுவைக்காக வழக்கு போட்டு, கடைசி நேரத்தில் அவர் சகோதரர் முகேஷ் அம்பானி அதனைக் கட்டி விட்டதால், சிறைக்கு செல்லாமல் தப்பித்தார். அதே சமயம், பி.எஸ்.என்.எல்.லுக்கு அனில் அம்பானியின் அதே நிறுவனம் பாக்கி வைத்திருக்கும் தொகை ரூ.770 கோடி. இதை வசூலிக்க என்ன ஏற்பாடு? பி.எஸ்.என்.எல். நீதிமன்றத்துக்குப் போக என்ன தடை? ஜெட் விமான சேவை நிறுவனத்துக்கு நிதிச் சிக்கல் வந்தால் அரசு தலையிட்டு மத்தியஸ்தம் பேசுகிறது. பி.எஸ்.என்.எல். தடுமாறிக் கொண்டிருக்கிறது, ஏன் தலையீடு இல்லை? அரசும் பிரதமரும் யாருக்கு சௌகிதாராக இருக்கிறார்கள் என்று தெளிவாகி விட்டதல்லவா?

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இன்று தடுமாறும் நிலை ஏன் ஏற்பட்டது? பெரும்பணக்காரர்கள், கார்ப்பரேட்டுகள் கோடிக் கணக்கில் கடன் வாங்கி, திருப்பிக் கட்டாமல் ஏமாற்றுகிறார்கள். அவர்களிடம் வசூல் செய்யத் திராணியில்லை. அதையெல்லாம் ரத்து செய்து விட்டு, அல்லது வாராக் கடன் பட்டியலில் எழுதி வைத்துக் கொண்டு, கிடைத்த அப்பாவி மக்கள் மீது பாய்ந்து என்ன பயன்? 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படி வெளியே கடனாகப் போன பணம் திரும்பி வராத போது, வங்கிகளின் ஸ்திரத் தன்மை பாதிக்கப் படுகிறது. பெருமுதலாளிகள் கடனை வசூல் செய்வதற்கு பதிலாக, ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் அவசர கால வைப்புத் தொகையைப் பிடுங்கப் பார்க்கிறது மத்திய அரசு. குறைந்த பட்சத் தொகை வங்கிக் கணக்கில் இல்லை என்றால் அதற்கு சாமானியர்கள் தண்டம் கட்ட வேண்டும். கல்விக் கடனை வசூலிக்க, பாரத ஸ்டேட் வங்கி தனியார் படையை அனுப்புமாம், கார்ப்பரேட் கடனை வசூலிக்க ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாதாம். இந்த நடவடிக்கைகளைத் தனித்தனியாகப் பார்த்தால் ஒன்றும் தோன்றாது. இணைத்துப் பார்த்தால் தான் கார்ப்பரேட் ஆதரவு ’கொண்டை’ தெரியும்.

ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலாக்கும் பாஜக அரசு:
அரசாங்கம் வரும் போகும், ஆனால் ராணுவம் அரசுக் கட்டமைப்பின் ஒரு பகுதி. அதற்கென்று ஓர் அதிகார மையம் உண்டு. அதன் படி வேலைகள் நடந்து கொண்டே இருக்கும். எந்த அரசும், இதற்கு முன், ராணுவத்தை இயக்குவது நாங்கள் தான், நாங்கள் தான் என்று மார் தட்டிக் கொள்வது கிடையாது. ஒரு வேளை 54 அங்குல நெஞ்சு என்பதால் டார்ஜான் போல் நடந்து கொள்ளத் தோன்றுகிறதோ என்னவோ! துல்லிய தாக்குதல் நாங்கள் தான் நடத்தினோம், தீவிரவாதிகள் தாக்குதலுக்கு வட்டியும் முதலுமாய் நாங்கள் தான் திருப்பிக் கொடுத்தோம் என்று பீற்றுவதைப் பார்த்தால், ராணுவ வீரர்களுக்குத் துப்பாக்கி பிடிக்கக் கூட நாங்கள் தான் கற்றுக் கொடுத்தோம் என்று சங் பக்தகோடிகள் சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

என்ன கேள்வி கேட்டாலும், என்ன கோரிக்கை வைத்தாலும், பனிச்சரிவில், பனிப்பொழிவில் நிற்கும் ராணுவத்தைப் பற்றி யோசித்தீர்களா என்று ஒரே போல் தான் பேசுவார்கள். செல்லாக்காசு நேரத்தில், மக்கள் தமது பணத்தை எடுப்பதற்காக, கால் கடுக்க வங்கியின் வாசலில் நிற்கும் நிலையில் சலித்துக் கொண்ட போது, கோபப்பட்ட போது, ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைத்துக் கொள்ளுங்கள், அவர்களை விட நீங்கள் என்ன என்று அரசு தரப்பில் கேட்கப்பட்டது. பலருக்கு அது குற்ற உணர்வைக் கூட ஏற்படுத்தியது. அபிநந்தன் கைது பிரச்னைக்குப் பிறகு இந்திய விமானப் படை பாலக்கோட்டில் நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற கேள்விக்கு, ஒரு டிவி நிகழ்ச்சியில் அமைச்சர் பியூஷ் கோயல் பொங்கி எழுந்தார், விமான படையை சந்தேகப்படுகிறீர்களா, பாகிஸ்தான் தகவலை வைத்துக் கொண்டு நிகழ்ச்சி நடத்துகிறீர்களா, வெட்கமாக இல்லையா, ராணுவ வீரரின் கஷ்டம் தெரியுமா உங்களுக்கு என்று திட்டித்தீர்த்தார்.

தொகுப்பாளர் அமைதியாக, தன் அப்பா கூட ராணுவ வீரர் தான் என்றும், அமைச்சரைக் கேட்பது ஆர்மியைக் கேட்பதாக எப்படி ஆகும் என்றும் கேட்ட பின்னர், அமைச்சரின் குரல் கொஞ்சம் தளர்ந்து தான் போனது.
ஆனால் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து வந்த புகார்கள் எல்லாம் பெரிதாக அரசின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஒரு ரேங்க் ஒரு பென்ஷன் (OROP) கோரிக்கை வைத்து வலுவான இயக்கம் முன்னாள் ராணுவ வீரர்களால் நடத்தப்பட்ட போது, அரசு செவி கொடுத்துக் கேட்க மறுத்தது. கார்கில் வீரர்களுக்குக் காலணி வாங்கும் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக செய்தி வந்தது. ராணுவத்திடம் இருக்கும் ஆயுதங்களில் 68% தற்கால அளவுக்கு நவீனமானது அல்ல என்ற பலவீனம் நீடிக்கிறது. அது குறித்து அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிரச்னையில், உளவுத்துறை தகவல்கள் ஏன் சீரியசாக எடுத்துக் கொள்ளப்படவில்லை, 2500 துருப்புகளும், 76 வாகனங்களும் ஒரே நேரத்தில் ஏன் கொண்டு செல்லப்பட்டன, தாக்குதல் நடந்த உடன், ஜம்மு காஷ்மீர் ஆளுநரும், சிஆர்பிஎஃப் ஊடக தொடர்பாளரும் இது ‘பாதுகாப்பு ஏற்பாட்டு குறைபாடு’ என்று சொன்னார்களே அது ஏன், 300 கிலோ வெடி மருந்து ஏற்றிய வாகனம் யார் கண்ணிலும் படாமல் எப்படித் தற்கொலைத் தாக்குதலை நடத்த முடிந்தது என்று பல கேள்விகள் விடை காணாமலே நிற்கின்றன. எல்லாம் அவன்(பாஜக அரசு) செயல் என்றால், இந்த பலவீனம் யார் செயல்? நல்லது என்றால் நான் தான் காரணம், கெட்டது என்றால் நான் அவனில்லை என்பதற்கு பெயர் தான் மோடி உத்தி!

நமது விமானப்படை துணிச்சலாக பாலாகோட் வரை சென்று குண்டுபோட்ட போது எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற எண்ணிக்கையில் எக்கச்சக்க முரண்பாடு. அமித் ஷா 250 என்று பேசிக்கொண்டே இருக்க, அலுவாலியா, ஒருவர் கூட கொல்லப்படவில்லை, கொல்வது எங்கள் நோக்கம் அல்ல என்கிறார். அரசியல் ஆதாயம் தேடுகிற அவசரத்தில் தடுமாறுகின்றனர்.

கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து வந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி விட்டு ஓடுவது போய், காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் தீவிரவாத கும்பலில் இணைவது அதிகரித்திருக்கிறதே, 90% காஷ்மீர மக்கள் இந்திய அரசிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறார்களே… இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தாமல், சுற்றுலா வற்றிப் போய், பொருளாதாரம் நொடிந்து போய், வேலையின்மை முற்றிப் போய் இருக்கும் சூழலைச் சரி செய்யாமல், பெரியதோ சின்னதோ, நல்லதோ கெட்டதோ அனைத்துக் கட்சிகள், குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண முன்வராமல், போர் போர் என்று வெறியூட்டுவதால் பிரச்னை தீர்ந்து விடாது, மாறாக பிரச்னை வெடிக்கும் என்பது தான் யதார்த்தம். பாஜக அரசு இதைத் தான் விரும்புகிறது. ஒரே இந்தியாவாக, எதிர் கட்சிகள் உட்பட ஒன்று சேர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்கும் போது, பாஜக அரசு, அதை இந்தியாவுக்கும் காஷ்மீர மக்களுக்கும் இடையிலான போராக, இந்தியாவுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையிலான சண்டையாக முன்னிறுத்துவது அவர்களின் சொந்த நிகழ்ச்சி நிரல் குறித்து நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பாகிஸ்தானோடு யுத்தம் என்பது கூட எளிதானது இல்லை, புத்திசாலித்தனமானதும் இல்லை. இரண்டு அணுசக்தி நாடுகள் யுத்தத்தில் ஈடுபட்டால் சாம்பல் கூட மிஞ்சாது. சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் உத்தியை ராஜிய ரீதியாகக் கையாள வேண்டும். இப்படி ஆலோசிப்பது கோழைத்தனம் அல்ல, இதற்குத் தான் துணிச்சல் வேண்டும்.

எல்லையில் நம் ராணுவ வீரர்கள் அடிக்கடி கொல்லப்படுகிறார்கள். இது நாட்டுக்கான தியாகம் தான். இவர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பும் போது, பல்வேறு இடங்களில் இறக்கி மரியாதை செய்வதோ, மக்களுக்கு உணர்ச்சியூட்டுவதோ கிடையாது. புல்வாமாவில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை, சொந்த ஊருக்குப் போகும் வழியில் 10 இடங்களில் இறக்கி வைத்து, மக்கள் இயல்பாக உணர்ச்சிவசப்படுவதைக் கொதிநிலைக்குக் கொண்டு போகும் அளவுக்கு உரையாற்றும் சங் பரிவாரங்கள், எல்லையில் கொல்லப்படும் மற்ற வீரர்களுக்கு இதே மரியாதை ஏன் கொடுப்பதில்லை? நோக்கம் மரியாதை பற்றியது அல்ல.. தேர்தல் தான். டெல்லி பாஜக தலைவர் ராணுவ உடையணிந்து கொண்டு வாக்கு சேகரிக்கப்போகிறார். மோடி பேசும் கூட்டங்களில் எல்லாம் கொல்லப்பட்டவர்களின் படங்கள் பின் திரையில் இடம் பெறுகின்றன. இது தேச பக்தி அல்ல, தேர்தல் பக்தி என்றே குற்றம் சாட்ட வேண்டியிருக்கிறது. நாட்டுக்கே சொந்தமான ராணுவ வீரர்களின் தியாகத்தை வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்துவதைக் காட்டிலும் வேறு என்ன இழிவை அவர்களுக்கு செய்து விடப் போகிறோம்?

இவ்வளவு உருகும் திருவாளர் மோடி, புல்வாமா தாக்குதல் குறித்து செய்தி வந்த போதும், அதற்குப் பின்னும் என்ன செய்தார் என்று ‘த ஒயர்’ பத்திரிகை விளக்குகிறது. பிப் 14 மதியம் 3.15க்குப் புல்வாமா தாக்குதல் பற்றிய செய்தி வருகிறது. ஓர் ஆவண படத்துக்கான ஷூட்டிங்கில் இருந்த மோடி அவர்கள் மாலை 6.40க்குத் தான், அதாவது செய்தி கேட்டு 3 மணி நேரம் கழித்து, படப்பிடிப்பை முடித்துக் கொண்டே ஜிம் கார்பெட் பூங்காவை விட்டு வெளியேறினார் என்று அந்த பத்திரிகை (05.03.2019) எழுதுகிறது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் தேர்தல் கூட்டங்கள் எதையும் அவர் விட்டுக் கொடுக்கவில்லை. பிப் 16, 17ம் தேதியிட்ட அவரது ட்வீட்டுகள் அதைத் தெளிவுபடுத்துகின்றன. இதற்கு மேலும் இவர்களின் (இது வரை விருது பெறாத) உலகமகா நடிப்பைப் புரிந்து கொள்ளவில்லை என்றால்….கேழ்வரகில் நெய் வடிகிறது, எலி ஏரோப்ளேன் ஓட்டியது போன்ற அபத்தங்களை நம்புகிறோம் என்பது தான் அர்த்தம்.

மகள்களைப் பாதுகாப்போம்?
ஆண்டுக்காண்டு பெண்கள், சிறுமியர் மீதான வன்முறை, பாலியல் வல்லுறவு குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அவற்றின் குரூரம் தடி கொண்டு நம் மனதைத் தாக்குகிறது. தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் ஆண்டறிக்கை 2016க்குப் பிறகு வெளியிடப்படவில்லை. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? அறிக்கையை ஒளித்து வைத்தால் உண்மை மறைந்து விடுமா? சுமார் 39000 பேர் 2016ல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளனர். முந்தைய ஆண்டை விட 12.4% அதிகம். அதாவது, ஒரு நாளைக்கு 108 பெண்கள் (அதாவது 15 நிமிடங்களுக்கு ஒரு பெண்) பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 34.4% அதிகரித்துள்ளது. தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் 2018ல் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. இரையைப் பார்த்தால் தாவி வரும் தவளையின் நாக்கைப் போல், பேசும் போது நீளுகிற நாக்கைக் கொண்டவர்கள் நம் ஆட்சியாளர்கள். நடக்கிற குரூரங்கள் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்வது கிடையாது.

பாதுகாப்பு என்று எழுச்சி உரையாற்றினால் நிலைமை மாறி விடுமா? அதற்கான சிறப்பு திட்டம் என்ன? முதலில் பெண்கள் பற்றி பாஜக தலைவர்களின் கருத்து என்னவென்று பார்த்தாலே, நீலச் சாயம் வெளுத்து நரியின் வேஷம் கலைந்து விடும்.
 “பெண்ணாக இருந்தாலும் பங்களாதேஷ் பிரதமர் தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டேன் என்று பிரகடனம் செய்திருக்கிறார்” என மோடி அவர்கள் ‘புகழ்ந்து’ பேசியிருக்கிறார். தீவிரவாதத்தை எதிர்க்க ஆணாகத் தான் இருக்க வேண்டுமா என்ன?
 குஜராத்தில் ஊட்டச்சத்து குறைவு பிரச்னை, பெண்கள் தம் உடல் குறித்துக் கவலைப்படுவதால் தான் ஏற்படுகிறது என்றதும் சாட்சாத் பிரதமர் தான். சொந்த மாநிலத்தில் பெண்களின் ஏழ்மை குறித்து சிந்தனை கூட இல்லாத மனிதராக இருந்திருக்கிறார். அவரது தொகுதியான வாரணாசியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 43%. (தேசிய சராசரியை விட அதிகம்) குழந்தைகள் என்ன மெலிந்த உடல் வேண்டும் என்று பட்டினி கிடக்கிறார்களா?

 “ஒரு சின்ன பாலியல் வல்லுறவு சம்பவம், சர்வதேச அளவில் விளம்பரப்படுத்தப் பட்டு, அதன் விளைவாக கோடிக்கணக்கான டாலர் சுற்றுலா வருமானம் பாதிக்கப்பட்டது” என மொத்த இந்தியாவையும் வீதிக்கு வரவைத்த நிர்பயா வழக்கு குறித்து நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி வாய் கூசாமல் பேசினார்.
 “சுதந்திரமாக இருப்பதற்கு பெண்களுக்குத் தகுதி இல்லை, அவர்களின் ஆற்றல் ஒழுங்குபடுத்தப் படவில்லை என்றால் நாசகர விளைவுகளை ஏற்படுத்தும்” என யோகி ஆதித்யநாத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
 ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், “திருமணம் ஒரு ஒப்பந்தம். இதில் பெண்ணின் வேலை, வீட்டைப் பராமரிப்பதும், கணவனை மகிழ்விப்பதுமே ஆகும்” என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.
 அமைச்சர் மகேஷ் சர்மா, ”வெளிநாட்டவர் இந்தியா வந்து இறங்கும் போது, செய்யக் கூடியது, செய்யக்கூடாதது போன்றவை அடங்கிய பட்டியல் கொடுக்கப்படும்… இரவு நேரத்தில் வெளியே போகாதீர்கள், ஸ்கர்ட் அணியாதீர்கள் என்று ஆலோசனை கூறியிருக்கிறோம்” என்று கூற, சுதந்திரம் சுதந்திரம் என்று பேசும் பெண்கள் நிர்வாணமாக சுற்ற வேண்டியது தானே என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், அதிகரித்து வரும் பாலியல் வல்லுறவுக்குக் காரணம் சொல்ல, ஆண் நண்பர்களை வைத்துக் கொள்ளாமல் இருந்தாலே பாலியல் வல்லுறவு நடக்காது என்று மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ. விளக்க…. ஐயகோ, நாடு எப்படி உருப்படும்? உடை தான் காரணம் என்ற இற்றுப் போன பொய்யையே இன்னும் எத்தனை முறை விதம் விதமாய் சொல்லுவார்கள்? நிர்பயா நிதியைக் கூட முறையாகப்பயன்படுத்தாத அரசு இது.

தேச பக்தியாவது எது?
தேச விடுதலைப் போராட்டத்தின் வாசலையே மிதிக்காத கூட்டம் தான் தேச பக்தி குறித்து வாய் கிழிய பேசிக்கொண்டிருக்கிறது. தேச பக்தி என்பது எது? தேசத்தின் எல்லையைப் பாதுகாக்க வேண்டும், அதை ராணுவம் பார்த்துக் கொள்ளும். தேசத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும், வளங்களைப் பாதுகாக்க வேண்டும், மக்களைப் பாதுகாக்க வேண்டும், இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பது தேச பக்தியின் முக்கிய அம்சங்கள். ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாறிய பிறகு, தேசத்தை எப்படி பாதுகாக்க முடியும்? ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று கூக்குரல் இடுபவர்களால் ஒருமைப்பாட்டை எப்படிக் காக்க முடியும்? அரசியல் சாசனத்தின் படி செயல்படுவது தேசத்தின் மாண்புகளைக் காக்கத் தேவையான நடவடிக்கை. அரசியல் சாசனத்தையே தம் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் எப்படி மாண்புகளைக் காப்பார்கள்? சமத்துவம், சமச்சீரான வளர்ச்சி, ஜனநாயகம், சமூக நீதியின் அடிப்படையில் ஆட்சி நடக்க வேண்டும். புவியை நடத்து அதை பொதுவில் நடத்து என்ற பாரதிதாசனின் வைர வரிகள் உண்மையாக வேண்டும். அதற்குக் கொள்கை வேண்டும், கோட்பாடு வேண்டும், திட்டம் வேண்டும், நெறி பிறழாத அரசியல் வேண்டும். இதில் ஒன்றில் கூட பாஸ் மார்க் வாங்க முடியாத பாஜக ஆட்சிக்கு மீண்டும் வருவது யாருக்கு நன்மை தரும்?

முகேஷ் அம்பானிக்கு இருக்கும் சொத்தைக் கணக்கிட்டால் ஒரு மணி நேரத்துக்கு ரூ.8 கோடி என்றாகிறது. அதே இந்தியாவில் தான் மாதம் குறைந்த பட்ச ஊதியம் ரூ.18000 என்று கோரிக்கை வைத்துப்போராட வேண்டியிருக்கிறது. குரோனி கேபிடலிசம் என்று சொல்லக் கூடிய கூட்டுக் களவாணி முதலாளித்துவம் தலைவிரித்தாடுகிறது. அதன் சமீபத்திய உதாரணம், ரூ.30000 கோடி கடன் வைத்திருந்த அலோக் இண்டஸ்ட்ரீசை வெறும் ரூ.5000 கோடிக்கு விதிகளை வளைத்து அம்பானிக்கு விற்றது!
மலக்குழிக்குள் தினம் தினம் தலித்துகள் சாகிறார்கள். அவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அமல் படுத்த வக்கற்ற அரசு, தொழிலாளிகளைப் பாதுகாக்க இருந்த 44 சட்டங்களை நான்கே நான்கு கோட்பாடாக மாற்றுகிறது. துப்புறவு தொழிலாளர்களுக்கு பாத பூசை செய்தால், நடத்திய அட்டூழியங்கள் எல்லாம் மறைந்து விடுமா?

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்கு என்ற கோரிக்கைகள் ஒரு பக்கம் இருக்க, குறிப்பிட்ட கால வேலை (Fixed term employment) என்ற பெயரில் ஒப்பந்த தொழில் நீடிப்பது முழுமையாக சட்டரீதியாக்கப் படுகிறது, அவுட் சோர்சிங் மூலம் நிரந்தர வேலைகளை காலி செய்யப் படுகிறது.

அபூர்வ சகோதர்கள்:

அதிமுகவும் பாஜகவும் அபூர்வ சகோதரர்கள். ஒரே கூட்டணி என்பதால் சகோதரர்கள். திராவிட சித்தாந்தமும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமும் ஏணி வைத்தால் கூட எட்டாது. இவர்கள் கூட்டணி வைத்திருப்பது விந்தையானது, சம்பந்தமே இல்லாதது. எனவே ’அபூர்வ’ சகோதரர்கள். வருமான வரி ரெய்டு, சிபிஐ விசாரணையிலிருந்து தப்ப வேண்டுமென்றால் கூட்டணி சேருவது தான் வழி என பாஜகவானது, அதிமுகவின் கையை முறுக்கி எலும்பை நொறுக்கியதில் உருவான கூட்டணி இது. திமுக அதிமுக இரண்டுடனும், “கடல் நீர் உள்ளளவும் பார் உள்ளளவும்” கூட்டணி கிடையாது என்று அறிவித்த பாமக, இரண்டு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் பேச்சு வார்த்தை நடத்தியது அரசியல் அசிங்கம். தமிழக நலனுக்காக உருக்கு போன்ற கொள்கையை நாணல் போன்று வளைக்கிறோம் என்று கூறிய பாமகவின் விளக்கம், அதிக சீட்டு அதிக நோட்டு என்ற சூத்திரத்தின் பின்னணியில் அடி பட்டுப் போய் விட்டது. தேமுதிகவும் இந்தப் பாதையைத் தான் தேர்வு செய்தது. இது ஓர் அவியல் கூட்டணியாகவே உருவாகியிருக்கிறது.

ஆனால் திமுக, மதச்சார்பற்ற கட்சிகள், இடதுசாரி கட்சிகள் இந்தக் காலத்தில் விவசாயிகள், காவிரி, நீட், ஜல்லிக்கட்டு, மாட்டுக்கறி அரசியல், தலித், இசுலாமியர்கள் பாதுகாப்பு, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காக கூட்டு இயக்கம் நடத்தியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில், பாஜக-அதிமுக கூட்டணியைத் தோற்கடித்து வெளிச்சத்தின் கீற்று தமிழகத்தில் விழுவதற்கு ஏதுவாக தொகுதி உடன்பாடு கண்டிருக்கிறார்கள். இரண்டு கூட்டணியின் அடிப்படையே வேறு.

அதிமுக அரசு கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. ஆடம்பரமாக திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றனவே ஒழிய முழுமையாக நிறைவேறியதாக ஒரே ஒரு திட்டத்தைக் கூட சொல்ல முடியாது. சத்துணவு முட்டை வாங்குவதில் ஊழல், கிரானைட் ஊழல், மணல் கொள்ளை, குட்கா ஊழல் என பெரும் பட்டியல் உள்ளது. சட்டம் ஒழுங்கைக் காணவில்லை. பெண் பத்திரிகையாளரை ஓர் அமைச்சர், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, உங்க கண்ணாடி நல்லா இருக்கு என்பதும், அருப்புக்கோட்டை மாணவிகளைப் பாலியல் சேவைக்கு பேராசிரியர் நிர்மலா தேவி அழைத்த வழக்கில் உயர்மட்டத்தினர் பெயர்கள் அடிபட்டதும், ஆளுநர் ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தைத் தட்டியதும் என்பதிலிருந்து மீ டூ இயக்கத்தின் பகுதியாகப் பலர் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களைப் பட்டியலிடுவது வரை, 8 மாத கைக்குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் வல்லுறவு செய்யப்படுவது, கும்பல் பாலியல் வல்லுறவு அதிகரிப்பது, கொன்று போடுவது போன்றவையே தமிழகத்தின் களங்க அடையாளமாக மாறிப்போயின.

தகுதியிருந்தாலும் பணம் கொடுத்தால் தான் எதுவும் கிடைக்கும் என்பதே நிலைத்து விட்டது. சாதிய வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. விளை நிலங்கள் வரைமுறையற்று கையகப்படுத்தப் படுகின்றன. போராட வருபவர்கள் ஒடுக்கப்படுகின்றனர். ஸ்டெர்லை எதிர்ப்பு போராட்டத்தில் சொந்த மக்களின் உயிரை எடுக்கவும் அஞ்சாத அரசு இது. பாஜக அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. நீட் தேர்வு திணிக்கப்பட்டது; சமீபத்திய கஜா புயல் வரை எவ்வித இயற்கைப் பேரிடருக்கும் உரிய நிவாரணம் தர மறுக்கப் பட்டது, தமிழகத்துக்குப் பல்வேறு வகைகளில் தர வேண்டிய தொகையை நிலுவை வைத்தது; ஜி.எஸ்.டி. வகையில் வர வேண்டிய ரூ.5000 கோடி இன்னும் பாக்கி நிற்கிறது.

அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் தனியாக மோதுகின்றன. தினகரன் அவர்கள் டிவியில் தெளிவாக அமைதியாகப் பேசுகிறார் என்று சிலர் பாராட்டுவதில், அவர்களது கட்சியின் பொது செயலாளராக இன்னும் சசிகலா தான் இருக்கிறார் என்பது மறைந்து விடும் அபாயம் உண்டு. தியாகம் செய்து அவர் சிறை செல்லவில்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஊழல் குற்றச்சாட்டு உச்சநீதிமன்றம் வரை நிரூபிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட கைதி. மக்கள் நீதி மய்யம் புதிதாக உருவானதால், ஏற்கனவே உள்ள பல அரசியல் கட்சிகளுக்கான எதிர்மறை அடையாளம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், மற்ற கட்சிகளிடமிருந்து வித்தியாசமாக இருக்கிறோம் என்று சொல்பவர்களுக்கு, நாட்டின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஒரு திட்டம் வேண்டாமா? பத்திரிகையாளர்கள் சில மாதங்களுக்கு முன் கேட்ட போது, மய்யத்தின் தலைவர், இன்னும் 6 மாதங்களில் சொல்வதாக சொன்னாராம். திட்டமே இல்லாமல், தத்துவமே இல்லாமல் கட்சி ஆரம்பித்து, தேர்தல் களத்துக்கும் வந்தாகிவிட்டதா என்று கேள்விகள் எழுவதை மறுப்பதற்கில்லை. நாம் தமிழர் கட்சிக்கு அடிப்படை பிரச்னைகளிலேயே நேரத்துக்கு நேரம் கருத்து வேறு வேறாக வருகிறது. பெரியார் வழி வந்தவர் என்று துவங்கி முருகன் என் முப்பாட்டன் என்று முடியும் நிலையில் இருக்கிறது.

தமிழர் என்ற வார்த்தைக்குள் ஏழையையும் பெரும் நிலவுடமையாளர்கள், பெரும் தொழிலதிபர்களையும் அடக்கி விட்டால் எப்படி? வர்க்க பிரச்னைகள் வந்தால் இவர்கள் யார் பக்கம்? தீண்டாமை கொடுமைகளில் யார் பக்கம்?
பிரச்னைகளை நபர்களின் அடிப்படையில் இல்லாமல் கொள்கையின் அடிப்படையில் பார்க்க கற்றுக் கொண்டால், போக வேண்டிய வழி புலப்படும். இடதுசாரிகள் முன்வைக்கும் சில மாற்றுக் கொள்கைகள் – நேர்முக வரியை அதிகரிப்பது, அத்தியாவசியப் பொருட்களில் முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்வது, பெட்ரோலியப் பொருட்களின் மீது வரிச் சீரமைப்பு, ஜி.எஸ்.டி.யைச் சீரமைப்பது, இயற்கை வளங்களை அரசே நிர்வகிப்பது, ஊழல் பேர்வழிகளின் சொத்துக்களை முடக்குவது, கல்வி, மருத்துவத்தில் தனியாரின் பங்கை ஒழுங்குபடுத்துவது, கல்வி, மருத்துவம், வேலை அடிப்படை உரிமையாவது, உள்நாட்டு சந்தையை பலப்படுத்தி மக்கள் கையில் வாங்கும் சக்தியை அதிகரிப்பது, அதன் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது, மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% அளிப்பது, தனியார் துறைக்கும் இட ஒதுக்கீட்டை விரிவாக்குவது, பொதுத்துறையை பலப்படுத்துவது, பொது விநியோக முறையை பலப்படுத்துவது, மானியத்தை நேரடிப் பணப்பட்டுவாடாவாக செய்வதை மாற்றி மானிய விலையில் பொருட்களை அளிப்பது, சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாத்து, அதிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது போன்றவையாகும். சில அடிப்படை மாற்றங்களை இவை ஏற்படுத்தும்.

ஏப்ரல் 18ம் தேதி பொது தேர்தல். இந்தியாவின் இருள் சூழ்ந்த அத்தியாயத்தை மாற்றி எழுத வேண்டிய நேரம் வந்து விட்டது. 5 ஆண்டுகள் அடி வாங்கியிருக்கிறோம். வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்க வேண்டாமா? அனைவரும் மேரி கோமாக மாற வேண்டிய காலம் இது. மேரி கோம், குத்துச்சண்டை களத்தில் எதிரிகளை நாக் அவுட் செய்தார். நாம் தேர்தல் களத்தில், வாக்குச்சீட்டு என்ற ஆயுதத்தை வைத்து அதிமுக பாஜக கூட்டணியை நாக் அவுட் செய்ய வேண்டும். பாஜகவும் அதிமுகவும் விழுந்தால் எழவே கூடாது. அப்போது தான் வீழ்ந்திருக்கிற நம் வாழ்க்கையைத் தூக்கி நிறுத்த முடியும்.