ஜிமாவின் கைபேசி – சிறார் நாவல் | அறிவியல் புனைகதை – கொ.மா.கோ.இளங்கோ – ஒரு பார்வை – பொன். குமார்
“கொ.மா.கோ.இளங்கோ நம் சிறார் இலக்கியத்தின் ஒளி வரவுகளுள் ஒருவர். எந்த நிலையிலும் படைப்பின் ஊக்கம் கொண்டிருப்பவர். இவரால் நம் சிறார் இலக்கிய உலகில் மேம்பட்ட சாத்தியங்கள் உருவாகும் என்பது என் நம்பிக்கை. இந்த நூலில் அதை நீங்களும் உணர்வீர்கள்.
‘ஜிமாவின் கைபேசி’ – ஓர் அழகிய அறிவியல் புனைவு. குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்புகொண்ட மனதிலிருந்து வந்திருப்பது. நன்மையின் சரடில் அன்பையும் அறிவியலையும் தொடுத்து அவர்களுக்கு சூட்டி மகிழ்கிறது ” என எழுத்தாளர் யூமா வாசுகி மகிழ்ந்த தொகுப்பு ஜிமாவின் கைபேசி. இச்சிறார் அறிவியல் புனைகதையை எழுதியவர் கொ.மா.கோ.இளங்கோ. சிறுவர்களுக்காக சிறப்பு கவனம் எடுத்து தொடர்ந்து எழுதி வருகிறார்.
சிறார் புனைகதை எழுதுவது ஒருவகை. அறிவியல் புனைகதை எழுதுவது ஒருவகை. இவ்விரண்டையும் இணைத்து ஒரு சிறார் அறிவியல் புனைகதையைத் தந்துள்ளார் கொ. மா. இளங்கோ.
அறிவியல் புனைகதைகள் என்பவை நவீன அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி, விண்வெளிப் பயணம், காலப் பயணம் மற்றும் எதிர்கால சமூக மாற்றங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனை இலக்கியங்களாகும். இவை நிஜ அறிவியல் கோட்பாடுகளைக் கொண்டு, கற்பனையுடன் கலந்து மனித வாழ்க்கை மற்றும் பிரபஞ்சத்தின் சாத்தியக்கூறுகளை ஆராய்கின்றன. ஜிமாவின் கைபேசி மூலம் மேற்கண்டவாறு ஓர் அறிவியல் புனைகதையை எழுதியுள்ளார்.
நாவலின் நாயகி சிறுமி. மானஸா கங்காதரன் என்று அறியப்பட்ட சிறுமி ஜி. மானஸா என்றாகி அதுவும் சுருங்கி ஜிமா என்றாகிவிட்டாள். சிறுமிகளுக்கு சுருக்கப்பெயர்களே செல்லப்பெயர்களகாகி விடுகின்றன. ஜிமாவின் அண்ணன் அப்பாவின் கைபேசியைக் கைப்பற்றிக் கொண்டதால் ஜிமாவிற்கென்று சிறுவர்களுக்கான லோ ரேடியேஷன் கைபேசியை வாங்கித் தருகிறார். கைபேசியை வைத்தே கதை நகர்கிறது. அத்தனை அறிவியல் நிகழ்வுகளையும் நடத்திக் காட்டுகிறார். ஆச்சரியப்படுத்துகிறார்.
சிறுமி ஜிமா ஒரு பெண்ணின் புகைப்படத்தை விளையாட்டுத்தனமாக வெட்டி கைபேசியின் பின்பக்க உறையில் வைக்க கைபேசி தன் வேலையைக் காட்டத் தொடங்குகிறது. வெல்கம் டூ ஜிமாடெல் நெட்வொர்க் என்று ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அதுமுதல் கைபேசியின் பணி தொடங்குகிறது. ஜிமாவுடன் தொடர்ந்து உரையாடுகிறது. கைபேசிக்கும் ஒரு செல்ல பெயர் டிப்பி.
” நான் ஒரு ரகசியப் பெண். என் புகைப்படத்தை நீ வெட்டியெடுத்து கைபேசியில் வைத்து மூடியதும் அதிலுள்ள மின்காந்த கதிர்கள் பாய்ந்து நான் உயிர் பெற்றேன்” என டிப்பியே தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்கிறது. உயிர் தந்ததால் உதவி செய்வதாக கூறுகிறது. பட்டணத்தில் பூதம் திரைப்படத்தை நினைவூட்டுகிறது.
கொசுக்களை விரட்டியடிக்க 20khz திறன் வாய்ந்த ஒலி அதிர்வைத் தரும் மென்பொருளை (Anti-mosquito repellent software) கைபேசி ஜிமாவிற்கு தருகிறது. மழை வருவதை முன்கூட்டியே தெரிவிக்கிறது.
கைபேசியை மருத்துவமனையுடன் இணைத்து மாணவர்களின் எண்களில் அவரவருக்குத் தேவையான சிகிச்சைகளும் மருந்துகளும் schoolbased Telemedicine அடிப்படையில் பதிவு செய்யப்படும் என்கிறார். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்புதிய முறை பரிசோதனையை ஆசிரியரும் ஏற்பாடு செய்கிறார். செய்தித்தாள்களிலும் வெளியாகிறது.
ஒரு சொட்டு தண்ணீரை வைத்தால் தண்ணீரில் ப்ளூரைடு உப்பின் அளவு அதிகமாக இருப்பதால் குழந்தைகள் பற்கள், கண்கள் எல்லாம் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கிறது.
டிப்பி ஜிமாவிற்கு மட்டுமின்றி அவள் பள்ளித்தோழிகளுக்கும் அறிவியல் கண்காட்சியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவியுள்ளன. அவை
1. அவசர அவசரமாக வீட்டைவிட்டு வெளியே கிளம்பும் பல பெண்கள், கேஸ் சிலிண்டரை முறையாக மூடி வைப்பதில்லை. இதனால் கேஸ் கசிவு ஏற்படலாம். சிறுமிகள் உருவாக்கிய மென்பொருளின் உதவியால் நாம் எங்கிருந்தாலும் கைபேசியின் மூலம் ரெகுலேட்டரை மூட முடியும்.
2. பொது இடங்களில் பெண்களை கேலி செய்பவர்கள், நகை பறிப்பவர்கள் என தொல்லை தருபவர்கள் அதிகம். அதுபோன்று சிரமத்திற்குள்ளாகும் நேரத்தில் பெண்கள், தங்கள் கைபேசிக்கு பின்புறம் உள்ள பொத்தானை அழுத்தினால் போதும். ஒரே நேரத்தில் காவல்துறைக்கு தகவல் போய்விடும். இருக்கும் இடத்தை குறுஞ்செய்தி அறிவித்துவிடும். அருகில் உள்ளவர்கள் கேட்கும்படி உரத்து ஒலியெழுப்பி அறிவிக்கும். இந்த மூன்று செயலும் ஒரே நேரத்தில் நிகழ்வதால் பெண்கள் சுலபமாகத் தப்பிக்கலாம்.
3. நகைக் கடைகளின் பூட்டையும் வீட்டு அலமாரியில் நகை பெட்டகத்தையும் கைபேசி உதவியுடன் மட்டுமே திறக்க முடியும்.
4. குழந்தைகள் ஏறிய பள்ளி வாகனம் இருக்கும் இடம், ஜி.பி.எஸ். வசதி மூலம் பெற்றோரின் கைபேசிக்கு அனுப்பப்படும்.
5. குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிக்கான அட்டவணை கைபேசியில் கிடைக்கும். தேவையான நேரத்தில் அதுவே பெற்றோருக்கு தகவல் தந்து உதவும்.
6. கைபேசிகளை பெண்கள் வளையல்களாக பயன்படுத்தலாம்.
இவை தவிர டிப்பி மற்ற கிரகங்களில் ஒருவருடைய வயது, எடை எவ்வளவு என்றும் கூறுகிறது.
டிப்பியின் உதவியுடன் ஜிமா Microwave Air Vehicle என்னும் ஓர் இயந்திர குருவியை பாதுகாப்பு பணிக்காக கண்டுபிடித்து மந்திரியிடம் பாராட்டும் பெறுகிறாள்.
எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ அறிவியல் தகவல்களை வைத்து ஒரு புனைகதையை சிறார்களுக்காக எழுதியுள்ளார். அறிவியல் ஒருபுறம் வியக்கத்தக்கது எனினும் இளங்கோ ஒரு கைபேசியை வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு ஏற்ப பல அரிய கண்டுபிடிப்புகள் குறித்து பேசியுள்ளார். பல புது அறிவியல் சொற்களை அறிமுகப்படுத்தியுள்ளார். புனைவு எனினும் அத்தனை தகவல்களும் சுவாரஸ்யமானவை. மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமானவை. ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சிறுவர்களை வாசிப்புக்கு தூண்டுகின்றன. சிறுவர்களையும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குத் தூண்டுகின்றன. எழுத்தாளர் சுஜாதா, எழுத்தாளர் ஜெயமோகன் வரிசையில் எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோவும் ஒரு புனைகதை ஆசிரியர் என நிரூபித்துள்ளார்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “ஜிம்மாவின் கைப்பேசி” சிறார் நாவல் |
| ஆசிரியர்: | |
| வெளியீடு: | |
| விலை: | ₹.60 (10% சலுகை விலையில் ரூ.54 மட்டுமே) |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 பொன். குமார் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

