கோ.சசிகலாவின் "அய்யன் சமூகம்: தோற்றமும் வளர்ச்சியும்" புத்தகம் | Ko Sasikala's Ayyan Samoogam - Thottramum Valarchiyum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

கோ.சசிகலாவின் “அய்யன் சமூகம்: தோற்றமும் வளர்ச்சியும்” – நூல் அறிமுகம்

“அய்யன் சமூகம்: தோற்றமும் வளர்ச்சியும்” என்கிற இந்த நூலைக் கோ.சசிகலா எழுதியுள்ளார். “தொல்லியல் நோக்கில் சங்ககாலச் சமூகம்” என்கிற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதனை நூலாகவும் வெளியிட்டுள்ளார். இதுவரை பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். “அய்யன் சமூகம்: தோற்றமும் வளர்ச்சியும்” என்கிற இந்த நூல் அவர் எழுதியதில் ஆறாவதாக வெளிவந்துள்ளது.

இன்றுவரை காணப்படும் அய்யனார் வழிபாட்டின் தோற்றம் வளர்ச்சி பற்றி இந்த நூல் விவரிக்கிறது. பதிமூன்று இயல்களில் அய்யனாரைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலுக்கு ர.பூங்குன்றன் அணிந்துரையும், ஆ.பத்மாவதி வாழ்த்துரையும் வழங்கியுள்ளனர். ஆ.பத்மாவதி தமது வாழ்த்துரையில், இந்த நூலில் கூறப்பட்டதை ரத்தினச் சுருக்கமாகக் கூறியுள்ளார்.

“காலப்போக்கில் மருத நிலத் தலைவனாக, கால்நடை சமூகத்தின் பாதுகாவலரும், சாத்து வணிகர்களின் பொருட்களைக் காக்கும் வீரனாகத் திகழ்ந்து, மொத்தத்தில் தெய்வமாக ஆக்கப்பட்டு அனைத்துச் சமூக வளர்ச்சியிலும் பங்குகொண்டவராகக் காட்டப்பட்டிருக்கின்றார் என்பதைத்தான் இந்நூலாசிரியர் விவரிக்கிறார். குறிஞ்சி நிலத்தில் வேட்டுவத் தலைவனாக, முல்லை நிலத்தில் காடுகிழாள் மகனாக, மருத நிலத்தில் நீர்நிலைகள் மற்றும் நிலவுரிமைகளைக் காக்கும் கிழவனாக, நெய்தல் நிலத்தில் நீர்த்துறைகளின் தலைவனாக, பாலை நிலத்தில் வணிகப் பெருவழிகளின் சாத்தானாகத் திகழ்கிறார் அய்யனார் என்கிறார் இந்நூலாசிரியர்.”

இந்தக் கூற்று இந்த நூலில் கோ.சசிகலா ஆய்வு செய்து வந்த முடிவை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் இந்த நூலைப் பற்றிய குறிப்பில் உள்ளதையும் படித்துவிட்டு நூலுக்குள் சென்றால் நூலாசிரியரின் ஆய்வையும் முடிவையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

“அய்யனார் வழிபாடு வீரக்கடவுள் என்ற மூலத்திலிருந்து தொடங்கி, வீரர் வழிபாடு, வணிகச் சாத்துகளின் கடவுள், வேளாண் மக்களின் நீர்நிலை கடவுள், கால்நடை மேய்ப்பாளர்களின் காவல் தெய்வம் ஆகிய நிலையிலும், ஆகமத்திலும், சைவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களின் தாக்கத்திலும் பல்வேறு இணைப்புகளைப் பெற்று வைதீக வடிவமாக அய்யப்பனாகவும், பழமைவடிவாக அய்யனார் என்ற கிராமப்புறக் காவல் தெய்வமாகவும் இன்று திகழ்கின்றது.”

இந்த நூல் 220 பக்கங்களைக் கொண்டதாக இருந்தாலும் அய்யனாரைப் பற்றிய தோற்றத்தையும் வளர்ச்சியையும் முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.

அய்யன் என்பவர் தாய்வழிச் சமூகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தோன்றியவர் என்றும் இனக்குழுவின் தலைவனே அய்யனார் வழிபாடாகத் தோற்றம் பெற்றதால் அய்யனார் ஒருவரல்ல பலர் என்றும் வேள், வேந்தன் ஆகியவற்றுக்கு முன்னோடி என்றும் முன்னுரையில் கூறியுள்ளது. இதனைப் படிக்கும் போது தாய்வழிச் சமூகம் ஆதி பொதுவுடை கொண்டதாகவும் தந்தை வழி சமூகம் அதனிலிருந்து விலகுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

“தாய்வழிச் சமூகத்தின் கொடிச்சியின் முறை முறை பகுக்கும் செயல்கள் இப்போது தந்தைவழிச் சமூகத்தில் அய்யன் செய்கிறான். மன்றில் அமர்ந்து கவர்ந்து வந்த செல்வங்களை அவரவர் தகுதி மற்றும் செயலுக்கேற்ப பாதீடு செய்கிறான். இது தொல் மரபில் இருந்து சற்று மாறுபட்டது. தலைவனின் பங்கீடானது குடிகளின் தகுதி, செயல், உற்பத்தி அளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தந்தை வழிச் சமூகத்தில் நடைபெற்றது. நிலைபெற்ற சிறப்பைப் பெற்ற இத்தலைவன் சீறூரின் கிழவனாக, மூத்தோனாக, மன்னனாக விளங்கப்பெற்று அவ்வூரின் மன்றின் அதாவது அந்தச் சபையின் தலைவனாக ஏற்றம் பெற்றான். அவனைப் போற்றுதலே அய்யன் வழிபாடு. எனவே அய்யன் ஒருவரல்ல. பலர். ஏனெனில் குடிகள் பற்பல. ஊர்கள் தோறும் அய்யன் வாழ்ந்தான், சிறப்பு பெற்றான். வீரமகத்துவம் அடைந்தான். தமிழகத்தின் அரசுருவாக்க முகிழ்த்தல் நிலையில் தோன்றிய இத்தலைவன் வேள். வேந்தன் ஆகிய பரிணாமங்களின் முன்னோடி ஆவான்.”

தமிழ்நாட்டில் இருந்த இனக்குழுக்களின் பல்வேறு தலைவர்கள் வெற்றி பெற்று அய்யனார் என்னும் வீரக் கடவுளர்களாக நிலைபெற்றுள்ளனர். அவரது வழிபாட்டு மரபு என்பது அந்தந்தப் பகுதியின் வாழ்வியலோடும் நிகழ்வோடும் உள்ளூர் மரபுகளோடும் இணைந்து காணப்படுகிறது. பொதுவாக அய்யனார் வழிபாட்டில் காண்பது வீரம், அறம், வளமை ஆகியவையே ஆகும். அய்யனார் வழிபாட்டில் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்நூல் அய்யனார் வழிபாட்டு வளர்ச்சி ஐந்து நிலைகொண்டதாக விளக்குகிறது.

அய்யனார் வழிபாட்டின் முதல் நிலை வேட்டுவக் கடவுள். வேட்டையாடிய நிலையில் வழிபாட்டு தொடங்கியதால், இந்த வழிபாட்டில் இன்றும் பன்றி, எருமை, கிடாய் பலியிடப்படுகிறது. இந்த வேட்டுவக் கடவுள் இன்று ஊர்க் காவல் பணி செய்யும் நிலையில் நாட்டார் வழிபாடாக நிலை பெற்றுள்ளது.

இரண்டாம் நிலையில், வேட்டை வீரக் கடவுள் வளர்ச்சி பெற்றுக் கால்நடைச் சமூகத்திற்குத் தலைவனாகிறார். கால்நடை வளர்ப்பு சமூகத்தை வெளிப்படுத்தும் முகமாக அய்யனாரின் கையில் செண்டாயுதம் காணப்படுகிறது. செண்டாயுதம் என்பது இலை, தழைகள் மரங்களில் இருந்து பறிப்பதற்கு இடையனின் கையில் உள்ள தொரட்டுக்குச்சி ஆகும்.

மூன்றாம் நிலையில், அரசு தோற்றத்துக்கு முன்பு நிலையான வேள் என்கிற ஆட்சி ஏற்படுகிறது. வேளிர் ஆட்சியின் வளர்ச்சியில் அய்யனார் வேளிராகக் காணப்படவில்லை, ஊரின் தலைவராக இருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் அய்யன் மன்றில் அமர்ந்துள்ளார், அவ்வாறு அமர்ந்துள்ள அய்யனார் அறத்தையும் பாதீட்டையும் கவனிக்கிறார்.

நான்காம் நிலையில் அய்யனார் வணிகர்களின் பெருவழி தெய்வமாக வளர்ச்சி பெறுகிறார், வணிகர்களின் தலையாய கடவுளாக நிலைபெறும் போது அய்யனார் சாத்தன் என்கிற பெயரைப் பெறுகிறார். இன்றைய சாத்தன் வழிபாடு அனைத்தும் இதன் தொடர்ச்சியே என்கிறது இந்நூல். வணிகர்களின் கடவுளாக அய்யனார் மாறிய பிறகு, வணிகர்களைச் சார்ந்த சமயங்களாகக் கருதப்படும் சமணம், பௌத்தம் ஆகிய மதங்கள் இத்தெய்வத்தைத் தங்கள் மதத்தில் உள்வாங்கிக் கொண்டது. உள்ளூர் தாய்த்தெய்வத்தையும் இவ்வாறே தம்முடைய சமயங்களின் இயக்கிகளாக உருவகித்து ஏற்றுக் கொண்டனர்.

ஐந்தாவது நிலையில் பழங்குடித் தன்மையில் இருந்து வேறுபட்ட கொள்கைகளை உடையச் சமயம் சார்ந்த தெய்வமாக அய்யனார் மாற்றம் பெறுகிறார். சமணம், பௌத்தம், ஆசீவகம், வைதீகம் ஆகிய சமயங்களில் அய்யனார் முழுமையாகத் தம்முள் இணைத்துக் கொள்ளப்படுகிறார்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், சமண, பௌத்த, ஆசீவகத் தாக்கம் பெற்று மாற்றம் பெற்றதும் சமூகத்தில் மேலோர் வணங்கும் தெய்வமாக மாறிய சாத்தனை வைதீக மதம் தம்முள் இணைத்துக் கொண்டது. நூலாசிரியரின் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானதாகும். வைதீக மதம் உள்ளூர் தெய்வங்களை நேரடியாக உள்வாங்கவில்லை, சமணம், பௌத்தம், ஆசீவகம் போன்ற மதங்கள் ஏற்கெனவே உள்வாங்கி விட்டது, வைதீகம் மாறிய நிலையினையே தம்முள் உள்வாங்கிக் கொண்டது. இதுதான் வரலாற்றின் கால வரிசையாகும். பலர் தமிழகத்தில் காணப்படும் தெய்வங்களை வைதீகம் தான் முதலில் உள்வாங்கியதாகக் கருதுகின்றனர். இது தவறானக் கண்ணோட்டமாகும். வைதீகம் பக்தி இலக்கியத்துக்குப் பிறகே தமிழகத்தில் பெரும் வழக்காக மாறியுள்ளது, அதற்கு முன்பாகச் சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய மதங்களே தமிழகத்தில் மேலோங்கியிருந்தது. திருஞானசம்பந்தரின் சம்பந்தரின் தேவாரத்தில் காணப்படும் சமணம் பௌத்தம் மீதான வசைச் சொல்லே இதனை மெய்ப்பிக்கிறது. வளர்ச்சி பெற்றிருந்த சமண, பௌத்தச் சமயங்களை எதிர்த்தே சைவம் நிலைபெற்றது.

அய்யனாரைப் பெரும் சமயங்கள் உள்வாங்கிக் கொண்டாலும் பல மக்கள் பிரிவுகளுக்குக் குலதெய்வமாக இன்றும் காணப்படுகிறது. அய்யனார் பெரும் சமயங்களில் எந்த வகையில் உள் இழுக்கப்பட்டுக் காணப்படுகிறது என்பதையும் அதன் நிலையினையும் நூல் சுருக்கமாக வெளிப்படுத்துகிறது.

“பல ஊர்களில் தனிச் சிற்பங்களாக அய்யனார் சிலைகள் காணப்படுகின்றன அவ்வாறான பல அய்யனார்கள் பல குடிகளுக்குக் குலதெய்வங்களாக இன்றுவரை விளங்குகிறார்கள். அய்யனார் பெருந்தெய்வ சமயக் கோட்பாட்டில் பரிவாரத் தெய்வமாக மாற்றப்பட்டார். எனவே அய்யனார் தலைவனாக வீற்றிருந்த மன்று-சபை-கோயில் பெருஞ்சமயக் கடவுளரின் கூடாரமாகின. எனவே, அய்யனார் பெருங்கோயில்களின் கருவறைத் திருச்சுற்றில் வடகிழக்கு பெருஞ்சமயங்களான சைவ, மூலைக்கு இடம்பெயர்ந்தார். வைணவம் அய்யனாரை உள்வாங்கும் முன்னரே முருகனைத் தத்தெடுத்துக் கொண்டது. எனவே, அய்யனாரின் வடகிழக்கு மூலை முருகனுக்கு வழங்கப்பட்டு, அய்யனார் அன்னையர் எழுவருடன் திருச்சுற்றின் தென்பகுதியில் அமரவைக்கப்பட்டார். அன்னையர் எழுவரும் பழையோர். நீரோடு தொடர்புடையவர்கள். அவர்களோடு நீர்த்துறைகளின் பழம்பெரும் தலைவனாகிய அய்யன் பொருந்தி அமர்ந்ததும் சரியே.” (பக்கம்-60-61)

சங்கக் காலம் தொட்டுச் சைவச் சமயம் பெரும் வழக்காக இருந்ததாகச் சைவமயமாதல் கருதுகிறது, ஆனால் சிவன் என்கிற சொல் சங்க இலக்கியத்தில் நேரடியாக ஓர் இடத்தில்கூட இடம்பெறவில்லை. பரிபாடல் பிற்காலத்தவை என்றாலும் திருமால் பற்றிய பாடலில் வைதீக வைணவம் பற்றிய பாடல் காணப்படுகிறது. இருந்தாலும் சைவம் தமது மேலாதிக்கமாகச் சைவத்தை நிலைநிறுத்த முயல்கிறது. இந்த நூல் சிவனின் முன்னோடியாக அய்யனாரைப் பார்க்கிறது. அய்யனாரைச் சைவம் உள்வாங்கிக் கொண்டது என்பதே உண்மை ஆகும், அய்யனாரும் சிவனும் ஒன்றல்ல.

“சைவச் சமயத்தின் முதற்பெருங்கடவுள் சிவ வழிபாட்டின் முன்னோடியாகத் தமிழகத்தில் அய்யனார் வழிபாடு விளங்கியுள்ளது. சிவனுக்குக் கூறப்பட்ட அனைத்துத் தன்மைகளும் கொண்டவராய் அய்யனார் திகழ்வது உற்றுநோக்கத்தக்கது. அய்யனாருக்கு நந்தி வாகனமாய்க் காட்டப்படும் மரபும் இருந்துள்ளது. அதுவும் குறிப்பாகத் தமிழகத்தின் முல்லைத் திணை நிலமான பாண்டிய மண்டலத்தில் காணப்படும் அய்யனார் கோயில்களில் யானை, குதிரை மட்டுமின்றி, காளைகளும் வாகனமாய்க் காட்டப் படுகின்றன. இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மதுரை மாவட்டம் விராட்டிப்பத்து கோயிலில் அய்யனார் கருவறைக்கு முன்பாக நந்தி வாகனம் இடம்பெற்றுள்ளது.” (பக்கம்-85)

பழங்குடி தலைவனுக்குத் திறை கொடுத்து மகிழ்விப்பது போலவே இறைவனுக்குப் பலி கொடுக்கப்பட்டது. தெய்வங்களுக்குப் பலிகொடுத்தல் என்பது இதன் வழியில்தான் வந்தது. இத்தெய்வம் படைப்புக் கடவுளாகப் படிநிலை வளர்ச்சி பெற்ற பிறகும் படைக்கும் கடவுளுக்குப் பலி கொடுக்கும் பழக்கம், வழக்கமாகத் தொடர்கிறது. இதனடிப்படையில் பழங்குடி தலைவனே தெய்வமாக மாறியதை அறிய முடிகிறது என்பதை இந்நூல் சிறப்பாகவே வெளிப்படுத்துகிறது.

“பொதுவாக நாட்டார் தெய்வக் கோயில்களில் ஆண்டுதோறும் கொடை நிகழ்வு எனப்படும் பூசை நடைபெறும். இரத்த உறவுள்ள குடிகள் ஒன்றுசேர்ந்து தங்கள் கடவுளர்க்குப் பலி கொடுத்துப் படையலிடுவர். ஏற்றத்தாழ்வின்றிப் பொருளாதார வேறுபாடின்றி இப்பலியும் படையலும் அனைவராலும் உவந்து இடப்படும். இதுவே கொடை எனப்படும். இக்கொடையானது பழங்குடி மரபில் தம் கடவுளர்க்குப் பரிசில் அளித்தலும், அவ்வாறு அளிப்பதன் மூலம் அத்தெய்வத்தை மகிழ்வித்து வேண்டுவன பெறுதலுமாம். அதாவது தலைவனுக்குத் திறை, இறை, செலுத்தி அவனிடமிருந்து சலுகைகளைப் பெறும் முறையாம். அரசர்களின் காலத்தில் நடைபெற்றதும் இதுவே. முறையாகப் பெருவேந்தர்களுக்கு இறை, வரிக் கடமைகளைச் செலுத்தி வரும் வணிகர், வேளாளர், சீறூர் மன்னர், வேள் ஆகியோர் உள்ளிட்ட மக்கள் குழாம் பல சலுகைகளைப் பேரரசனிடமிருந்து பெற்றனர் என்பது வரலாற்று காலக் கல்வெட்டுகள் மூலம் நாம் அறியத் தகுந்தது. இவ்வாறு அனைவருக்கும் வேண்டுவன அளித்தலினாலேயே அவன் தலைமையிடத்தில் தகுதி பெறுகிறான். மேலும் எவ்வித எதிர்ப்புமின்றி மக்களால் விரும்பப்படுகிறான். இந்நிலையே குடிகளின் தலைவனாகி நின்ற அய்யன் தெய்வமாகிப் போன நிலையில் வழிபாட்டிலும் தொடர்கிறது.” (பக்கம்-140)

முருகனையும் அய்யனாராக இந்நூலாசிரியர் பார்க்கிறார். அய்யன் என்றால் தலைவன் என்று பொருள், அய்யனார் அந்த வகையில் குழுவின் தலைவராக இருந்ததில் இருந்து தோன்றியது. முருகனையும் குழுத் தலைவனாகப் பார்க்க முடிகிறது, ஆனால் இன்று பழங்குடிகள் தங்களது தலைவர்களை மூப்பன் போன்ற சொல்லின் மூலம் அழைக்கின்றனர், அவர்களின் சொந்தப் பெயரில் அழைப்பதில்லை, அய்யனார் என்பதும் சொந்தப் பெயர் கிடையாது, அது தலைமையினைக் குறிக்கும் சொல். ஆனால் முருகன் என்பது தலைமையினைக் குறிக்கும் சொல் கிடையாது, அது வீரத்தைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது, அது மட்டுமல்லாது அது ஒரு தனிநபரின் பெயராகவும் இருக்கின்றது. இதுதான் அய்யனாருக்கும் முருகனுக்கும் உள்ள வேறுபாடு.

இந்நூல் குறிப்பிடுவது போல, முருகனும் அய்யனும் தொல்பழங்காலத்தில் இருந்து கடவுளர்களாகத் தமிழ்நிலத்தில் பயணிக்கின்றனர் என்பது உண்மைதான், ஆனால் முருகன் என்கிற பெயர், பழங்குடிக்குத் தலைவனாகப் பார்ப்பதற்கு முன்பு ஒரு சிறு குழுவில் சிறந்த வேட்டையாடியாக இருந்திருப்பான் என்று தோன்றுகிறது. வேட்டைத்திறன் சிறந்த வீரனுக்கு உரியதாகவும் பலருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வழிகாட்டியாகவும் முருகன் இருக்கிறான். பழங்குடிக்கு முன்பான குலங்களில் உள்ள ஒரு குழுவில் சிறந்த வேட்டையாடியாக, இருந்த வீரனாக முருகனைக் கருத இடம் உண்டு. அதுமட்டுமல்லாது முருகன் இனக்குழுவின் வேளாக, வேளீராக எழுச்சி பெற்றதைக் காண முடிகிறது. அய்யனார் ஊரில் உள்ள மன்றத்தின் தலைவராக உள்ளார். முருகனுக்கும் அய்யனாருக்கும் இடையே உள்ள வேறுபாடு இதில்தான் அடங்கியுள்ளது, அதனால் முருகனையும் அய்யனாரையும் ஒரே தளத்தில் வைத்துப் பார்க்க முடியாது என்று தோன்றுகிறது.

அய்யனாரைப் பற்றி பேசும் போது இன்றைய நிலையில் ஒன்றைக் குறிப்பிட்டுப் பேசாமல் இருக்க முடியாது. ஆசீவகம் தமிழர் மதம் என்று அண்மைக் காலமாகக் கூறப்பட்டு வருகிறது. இதனை ஏற்றுக் கொள்பவர்கள் பலர் தமிழகத்தில் இருக்கின்றனர், இதில் பேராசிரியர்களும் அடங்கும். இருந்தாலும் தமிழ் உலகம் குறிப்பாகத் தமிழாய்வு உலகம் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. ஏனென்றால் அதற்கான ஆதாரம் போதுமானதாக இல்லை. ஆதாரம் போதாமைக் காரணமாக ஆசீவகம் தமிழர் மதம் என்று கூறுவதைப் பல ஆய்வாளர்கள் மறுக்கவே செய்கிறார்கள். ஆசீவகத்தைத் தமிழர் மதம் என்று ஏற்றுக் கொண்டவர்கள் இப்பிரச்சினையை ஆதாரத்தின் அடிப்படையிலும் ஆய்வு அடிப்படையிலும் சந்திக்க வேண்டும் அதைவிடுத்து, எதிர்ப்பவர்களை இழிவாகப் பேசி எந்தப் பயனும் இல்லை. ஆதாரத்தைத் தருவதே தர்க்க வழிப்பட்டதாக இருக்க முடியும்.

விமர்சனங்கள் ஆய்வை வலுப்படுத்தும், அவதூறு செய்தல், இழிவுபடுத்துதல் என்பது ஆய்வுலகத்துக்கு எந்தப் பயனையும் தராது. விமர்சனத்தால் ஆய்வை வளப்படுத்துவோம், அவதூறைக் கடந்து செல்வோம்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: அய்யன் சமூகம்: தோற்றமும் வளர்ச்சியும்
ஆசிரியர்: கோ.சசிகலா
வெளியீடு:
தடாகம் பதிப்பகம்
விலை: ₹.250
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அ.கா.ஈஸ்வரன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *